Thursday, February 7, 2013

"இன்னுமா இருக்கிறது காதல்"



காதல் பற்றிப் பேசுவது எப்போதும் மனதுக்குப் பிடித்தமான ஒன்று . "இன்னுமா இருக்கிறது காதல்"என்ற  கேள்வியும்,  சந்தேகமும் எழும் சூழ்நிலைக்கு 'காதல்' தள்ளப்படிருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. காதல் எப்போதும் அதன் அத்தனை அம்சங்களையும் தக்கவைத்துக்கொண்டு உயிர்ப்புடன் தான் இருக்கிறது. காதல் பற்றிய நம் பார்வையில் தான் மாற்றங்கள் வந்தவண்ணம் இருக்கிறது. 

காதல் என்றதும் நம் நினைவுக்கு வருபவர்கள் கல்லூரி மாணவ,மாணவியர் தான். நாகரீகம் என்ற பெயரில் மாறிவரும் சமூகக் கட்டமைப்பில் இவர்களில் பங்கு மிகவும் கவனிப்புக்குரியதாக இருப்பதால் இவர்களோடு சேர்ந்து காதலும் சந்தேகத்துக்குரியதாக மாறிவருகிறது.உலகமயமாக்கலில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போன நம் வாழ்க்கைமுறை நம் பிள்ளைகளை வெகுவாக மாற்றி இருக்கிறது என்பது நிதர்சனம். அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல், பகிர்தல் மனப்பான்மை, பிரச்சனைகளைப் பேசித்தெளியும் பொறுமை போன்ற அடிப்படைப் பண்புகளைக் கற்றுகொடுக்கவேண்டிய பெற்றோர்கள் அவசரமாக ரொட்டியைத் தின்றுவிட்டு அலுவலகம் ஓடுபவர்களாக மாறி இருக்கின்றனர். அனுபவக்கதைச் சொல்லும் பாட்டியும், தாத்தாவும் கிராமத்து திண்ணையிலோ, நல விடுதியின் அறைகளிலோ முடங்கிவிட்டிருக்கின்றனர்.

பள்ளிப் பருவத்திலேயே அவசரமாக முளைத்துவிடுகின்ற காதல் அடிப்படைப் பண்புகள் கற்றறியா இத்தலைமுறையின் கைகளில் சிக்கி வெகுசீக்கிரம் தன் உயிரை இழக்கிறது. எனினும் இன்றைய  இளைஞர்கள் தோற்றக் காதலை எண்ணி அழுதுப் புலம்புவது, தண்டவாளத்தில் தலையைக் கொடுப்பது, தாடி வளர்த்து வெட்டியாய் திரிவது போன்ற முட்டாள் தனங்களைச் செய்வதில்லை என்பது வேப்பம் பூவில் தேன்துளி போலக் கசப்பிற்குள்ளும் ஓர் இனிய செய்தியே. பெண்களும் தங்கள் எல்லைகளை விசாலப்படுத்தியுள்ளனர். அவர்கள் பார்வையிலும் மாற்றங்கள் வந்துவிட்டது. காதலைப் பொழுதுபோக்காகக் கொள்கிறார்கள் இளைஞர்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன். அது மிகக் குறைந்த சதவிகிதத்தில் எல்லாக் காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

குற்றம் சொல்லும் இந்தச் சமூகம் எந்த விசயத்தில் முழு அர்ப்பணிப்போடு இருந்திருக்கிறது?? ரோட்டில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கு குறைந்தபட்ச முதலுதவிச் செய்யவோ, ஆம்புலன்சுக்குத் தொலைபேசவோ நேரமற்று  அலுவலகம் ஓடும் ஆட்களுக்கு மத்தியில் கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தும் மாணவர்களும், சேவைக் குழுக்களை அமைத்துக்கொண்டு உதவ ஓடும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சாக்கடை ஆகும் அரசியல் பற்றியோ, சீரழிந்து கொண்டிருக்கும் சுகாதாரம் பற்றியோ, புழுக்களைவிடக் கேவலமாக நடத்தப்படும் அடித்தட்டு மக்கள் பற்றியோ கவலைப்படாத இச்சமூகம் காதல் பற்றி விமர்சிக்கும் தகுதி அற்றது.

மேலும் காதல் என்பது கல்லூரி மாணவர்களின் சொத்து என்ற எண்ணத்தைக்  கைவிடவேண்டும். காதல் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருகிறது. மாடி வீட்டில் ஏ.சி குளிரில் தூங்குபவனுக்கும், பிளாட்பாரத்தில் பனியைப் போர்த்திக்கொண்டு உறங்குபவனுக்கும் காதல் ஒன்றுபோலவே தன் நியாயங்களைச் செய்து வருகிறது. மனைவி தலையில் சிந்தி இருக்கும் மணலைத் தட்டிவிட்டுக்கொண்டே மசால் வடையைப் பகிர்ந்துத் தரும் சித்தாள் கணவனின் காதலை நாம் அறிவதோ, அலசுவதோ இல்லை. விடலை காதலின் வீக்கங்கள் மட்டுமே நம் கண்ணை உறுத்துவதாக இருக்கிறது.

கடற்கரையிலோ, காபி ஷாபிலோ மட்டும் வளரும் காதல், தொட்டியில் வளர்க்கப்படும் அலங்கார மீன்கள் போல நின்று ஆற அமர ரசிக்கலாம், குறைகளை ஆராயலாம், அலுத்து விலகி நடக்கலாம். ஆனால் ஓர் அம்மா அப்பாவிற்கோ, அண்ணன் அண்ணிக்கோ, தாத்தா பாட்டிக்கோ இருக்கும் காதல் கடல் நீரில் துள்ளும் மீன் போல. கடல் முழுதும் நிறைந்திருக்கும் என்ற போதும் அதை அத்தனை சுலபமாய்க்  கண்டுவிட முடியாது. அரிதாய் அது துள்ளிக்குதித்து வெளிப்படும் தருணம் அற்புதமானதாக, நெஞ்சை அள்ளும் காட்சியாக நிலைக்கும். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத  அந்தக் காதல் அங்கே மூச்சுக்காற்று போல அனைவரையும் தாங்கி நிற்கும்.

இப்படிக் குறை நிறைகள் பற்றிய அனைத்து  அறிதல்களுடனும் வளரும் காதலே நம் கலாசாரத்தின் ஆணிவேரை இன்னும் காத்துக்கொண்டு இருக்கிறது. எத்தனையோ துரோகங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் மத்தியில், ஜோடியில் ஆணோ பொண்ணோ யாரேனும் ஒருவர் அந்த உண்மைக்காதலை உடையாமல் தக்கவைத்தபடி இருக்கிறார்கள்.அதுவே குடும்பம் என்ற கட்டமைப்பைச்  சீர்குலையாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்த தலைமுறைக்கும் பெரியதொரு வழிகாட்டியாகவும் வாழ்ந்து காட்டுகிறது. குடிகாரக் கணவனின் இறுதிக் காலத்தில் அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் மனைவியையும், தன் பெற்றோரை விரட்டி அடித்த மனைவியின் மரணப்படுக்கையில் கைகளைக் கோர்த்துக்கொண்டு தைரியம் சொல்லும் கணவனையும் நாம் இன்னும் காணமுடிகிறதென்றால் அது "காதல்"என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் வலிமையே!!.

காதலுக்கு ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டாலும் அதன் அடிப்படை அர்த்தம் ஒன்றே ஒன்று தான், அது"அன்பு". புழு, பூச்சியில் இருந்து அத்துனை ஜீவராசிகளிடமும் நிறைந்திருக்கும் அந்தக் காதல், உலகில்  இல்லை என்ற ஒரு நிலை வருமாயின் அதை அறிந்துகொள்ளவோ, அதைப்பற்றிப் பேசவோ இந்த உலகில் ஓர் உயிரினம் கூட அப்போது மிஞ்சி இருக்காது. கால வெள்ளத்தில் மனிதன் மூளைக்கு முக்கியத்துவம் கொடுத்து முண்டி அடித்து முன்னேறிக்கொண்டிருந்தாலும் அடிஆழத்தில் மிச்சமிருக்கும் ஈரமாய் , கண் காணாது நிறைந்திருக்கும் காற்றாய் 'காதல்' அவனைக் காத்துக்கொண்டிருக்கிறது, இயக்கிக்கொண்டிருக்கிறது, வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

ஆகவே 'ஆம்பளைக்கும்,பொம்பளைக்கும் அவசரம்ம்' மாதிரியான உளறல் திரைப்பாடல்களைக்கொண்டு, காதல் சந்தேகத்திற்கு இடமானால், ஒற்றை சந்தேக வார்த்தைக்குத் தீக்குளித்த சீதையைப் போல, தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கும் அவசியம் காதலுக்கு என்றுமே இல்லை."காதல்"அதன் போக்கில் தன் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கும். அதன் இடம், காலம், குணம், நிறம் என்று அத்தனையிலும் மாற்றம் வந்த போதும் அதன் அடிப்படை ஜீவனை தாயின் முலைப்பால் போலக் களங்கம் இன்றிக் காத்துநிற்கும்.  

                                            " காதல் வாழ்கிறது.நம்மை வாழவைக்கிறது."

நன்றி:பண்புடன் படைப்புகள்.

No comments:

Post a Comment