Friday, November 27, 2020

திரை

 முகமூடியைத்தாண்டி 

முகத்தைக் காணும் கண்கள் வாய்த்தபின்


நெகிழ்ச்சியூட்டும் நாடகங்கள்

சிரிப்பை வரவழைப்பதாய் இருக்கின்றன


காதலி தேகமெங்கும் பன்னீர் சிந்தி

கரம் பற்றுகிறான் காதலன்

எனக்கு மலநாற்றம்

குடலை அறுக்கிறது


மெல்ல அணைத்து முத்துகையில்

நான் வாயைப்பொத்திக் கொண்டு

கழிவறைக்கு ஓடி ஓங்காரிக்கிறேன்


நாடகம் இளகி இளகி

நீண்டுகொண்டே

போகிறது


****



அம்மணம்

 ஊரின் மத்தியில் இருக்கும்

பெரிய வீடு

தன்னை மறைத்துக் கொள்ள

பெரும்பாடு படுகின்றது


ஒரு சிறிய அழுகை

ஊர் எல்லைவரை கேட்டுவிடுகிறது


ஐந்துநிமிட விவாதம்

பொது கிணற்றில் அலசலுக்கு 

ஆட்பட்டு விடுகிறது


மெல்லிய சாராய நெடியை

எட்டுத்திசையிலும் பறக்கவிட்டு விடுகின்றன பெரிய சன்னல்கள்


அவிழ்ந்து விழும் வேட்டியை

தடுமாறி பிடிப்பதற்குள்

பத்து பேர் பார்த்துவிடுகிறார்கள்


ஊர் மத்தியில் நிற்கும்

உயர்ந்த வீடு

நிராயுதபாணியாக  நடுங்கி கொண்டிருக்கிறது


முப்பாட்டன் பெருமையை

காலிப் பெட்டகத்திற்குள்

வைத்து மூடுகையில்

அவ்வீட்டின் சுவர்கள் 

நாளாப்புறம் திறந்துகொண்டு விழுகின்றன


****

தேசாந்திரியின் பை

 தேசாந்திரியின் பைக்குள் என்ன இருக்கும்

கிளர்ச்சியூட்டும் அவன் பெயரைப் போலவே

ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது

அவன் பயணப் பையும்


உடைகள் 

தண்ணீர் புட்டி

கைவிளக்கு

கொஞ்சம் சில்லறைகள்


எத்தனை யோசித்தும் 

அதற்குமேல் சிக்கவில்லை

அவன் பை ரகசியம்


கண்டிராத அமெரிக்காவை

கனவில் கண்டபோது

எங்கள் ஊர் போலவே இருந்தது

இப்படித் தான்


தேசாந்திரிக்குப் பெண்பால் உண்டா


உண்டெனில் 

அவள் பை ரகசியம்

சொல்லட்டுமா


உடைகள்

தண்ணீர் புட்டி

கைவிளக்கு

பணப்பை

அணையாடை


அட

விலக்கு நாட்களில் 

எங்கு துணி மாற்றுவாள்


யாருமற்ற பாதையில்

துணிந்து நடப்பாளா


மரத்தடி உறக்கத்திற்கு

உத்திரவாதம் உண்டா


கேள்விகள் பை நிறைய 

சேரச்சேர

சுமைகூடி அமர்ந்துவிட்டாள்

தேசாந்திரியின் பெண்பால்


நிற்காமல் போய்க்கொண்டே

இருக்கிறான்

தேசாந்திரி எனும் ஆண்பால்


****

பேயாட்டம்

 கொடுமைக்கு வாக்கப்பட்டவள்

நெருப்பை பொங்கித்தின்பவள்

மஞ்சள் குளியலில் காயம் ஆற்றுபவள்


பொறந்தவீடும் கதவடைத்துக்கொண்ட

பாதம் பழுக்கும் உச்சி வெயில் 

பொழுதொன்றில்

குத்துப்பட்டு செத்துப்போன முனியாண்டியைக் கூட்டிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள்


கெட்டவார்த்தையைக் காறி உமிழுமவள்

தலைவிரித்து பேயாட்டம் போடுகிறாள்


நெஞ்சை நசுக்கும் பாரங்களை எல்லாம்

திசைகள் தோறும் தெறிக்கவிடுமவள்

வீடு அதிர நடந்து பார்க்கிறாள்


கைநிறைய சோறு வாரித்திங்கவும்

கால் பரப்பி கூடத்தில் தூங்கவும்

முனியாண்டியைத் தான் 

துணைக்கு நிறுத்துகிறாள்


சுருட்டும் கருவாடும் சாராயமும் 

தட்சணையாய் கேட்கும்

பூசாரியைக் கூட்டிக்கொண்டு

புறப்பட்டு வருகிறானாம்

அவள் பொறந்தவன் 


அடிபட்டுச் சாகத்தான் பொறப்பெடுத்தேனா

உங்கக் கோடித்துணிக்குத்தான்

உயிர் வளர்த்தேனா

சங்கறுத்து மாலையா போடுவேன்டா

சாத்திரத்தில் மூத்திரத்தப் பெய்வேன்டா


தூக்கிக்கட்டிய சேலையும்

சிவந்து தெறிக்கும் விழிகளுமாய்

வானம் அதிர முழங்குகிறான்

முனியாண்டி


அடங்கி அமிழ்கிறது வீடு

புலர்ந்து வருகிறது பொழுது



****



Saturday, November 14, 2020

மழை

 பொழியப் பொழிய அடங்காமல் திமிரும் பெருந்தீ ஒன்றை வளர்த்துக்கொண்டிருக்கிறது

இந்தப் பைத்திய மழை