Thursday, February 7, 2013

"மீனா என்று அழைக்கப்படும் மீனாட்சி "மீனா வீடு வந்து சேரும் போது மணி இரவு 1.30 ஆகி இருந்தது. ஆட்டோ விற்கு பணம் கொடுத்துவிட்டு அந்த சந்துவழியே தன் வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினாள். வீட்டு வாசல்களில்  கட்டில் போட்டு படுத்திருந்த சிலர்  அந்த நள்ளிரவிலும் தூங்காமல் பேசிக்கொண்டிருந்தனர். மின்சாரம் இல்லாமல் புழுக்கத்திலும்,கொசு கடியிலும் வீடுகளில் அங்கங்கே பிள்ளைகள் சிணுங்கிக்கொண்டிருந்தன.

அவள் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு கைப்பையில் இருந்த வீட்டு சாவியை துலாவி எடுத்தாள். சாவி ஒன்று அவளிடமும் இன்னொன்று அவள் மகன் பாபுவிடமும் இருக்கும். பாபுவுக்கு எட்டு வயது தான் ஆகிறது. ஆனாலும் மிகுந்த பொறுப்போடு நடந்துகொள்வான். அந்தவீட்டின் நிலை அவனை அப்படி ஆக்கியிருந்தது. பாபு திண்ணையில் நன்றாக தலையோடு போத்தி தூங்கிக்கொண்டிருந்தான். எதிர் வீட்டு கற்பகம் அக்கா அந்த நேரத்திலும் வாசலில் உட்கார்ந்து வெற்றிலை மென்றுகொண்டிருந்தாள். அவள் அப்படிதான் எந்த நேரமும் வெற்றிலை வாயோடு தான் இருப்பாள். அவள் கணவன் தெளிவாக இருக்கும் நேரத்தில் 'இவ மீனு வித்து கொண்டுவர காசை எல்லாம் மென்னே துப்பிடறா'!!என்று  கிண்டல் செய்வான். ஆமாம்..நீ குடிச்சு ஒழிச்சதவிடவா??..என்று இவளும் பதிலுக்கு சத்தம் போடுவாள். மீனா கற்பகத்தை பார்த்து புன்னகைத்தாள். சாப்டியா?என்று கேட்ட கற்பகத்திற்கு தலையை மட்டும் ஆடிவிட்டு பாபுவை தூக்கிக்கொண்டு வீட்டிற்க்குள் போனாள்.

 இந்த ஏரியாவிற்கு வந்த புதிதில் இந்த தெரு ஜனங்கள் இவளை ஏளனமாக பேசியதுண்டு. இவளை குறிப்பிடும் போதெல்லாம் கேசு ,கிராக்கி,அய்ட்டம் என்றே அடையாளப்படுத்துவர். நேரம் கெட்ட வேளையில் இவள் வீடுவந்து சேரும் போது சிரிப்பொலியும்,தூ...சனியன் என்ற வசைகளும் கட்டாயம் கேட்கும். இவள் எதற்கும் கோபமோ,எதிர்சொல்லோ சொல்லமாட்டாள். மௌனமாய் கடந்து போவாள். கற்பகம் அக்கா தான் ஒருநாள் அவளை வீட்டிற்க்கு கூப்பிட்டு பேசினாள். அவள் அம்மா,அப்பா,கணவன் பற்றி எல்லாம் விசாரித்தாள். நீ கவலை படாத,இங்க பேசறவங்க எல்லார் யோக்யதையும் எனக்கு தெரியும். அவனவன் முதுகுலயும் ஆயிரம் அழுக்கு. இவங்க பேசறத எல்லாம் கண்டுகாத. .பையன நல்லா படிக்கவை..என்று கையை பிடித்துக்கொண்டு ரொம்பநேரம் பேசினாள். இதுவரை எந்த பெண்ணும் கையை பிடித்துக்கொண்டு பேசியதே இல்லை. அவள் தினம் சந்திக்கும் ஆண்கள் கூட கையை பிடித்து பேசிக்கொண்டிருந்ததில்லை. அவர்கள் அதற்காக அங்கு வருவதும் இல்லை.

இன்றுகூட அப்படிதான் அந்த ஆள் மூக்கு முட்ட குடித்திருந்தான். இங்கு வருபவர்கள் முக்கால்வாசிபேர் குடித்துவிட்டு தான் வருவார்கள் என்றாலும்,இன்று வந்த அந்த ஆள் ஒரு குப்பை மேடு போல் இருந்தான். ஓயாத இருமல் வேறு. இந்த சேகர் எப்பவும் இப்படிதான். அவன் அழைத்துவரும் ஆட்கள் பற்றி ஒன்றுமே சொல்லமுடியாது. வாயில் வந்ததை பேசிவிடுவான். அவனுக்கு பணம் மட்டும் தான் முக்கியம்..மற்ற பெண்கள் தான் அவனோடு சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். மீனா எப்போதும் எதுவும் சொல்வதில்லை. அவளை பொறுத்தவரை 'பிணத்தை தழுவ வருபவன் அரசனாக இருந்தால் என்ன?அகோரியாக இருந்தால் என்ன? என்பது தான்.

.அந்த தெரு ஜனங்களும் மெல்ல மெல்ல வசை பாடுவதை விட்டுவிட்டனர். சிலர் நட்பாக புன்னகைக்கவும்,ஒன்றிரண்டு வார்த்தை பேசவும் கூட ஆரம்பித்துவிட்டிருந்தனர். கற்பகம் அக்கா நட்பாக இருப்பது அனைவர் இறுக்கத்தையும் சற்று தளர்த்தி இருந்தது. அன்றாடம் சாப்பாட்டுக்கே அல்லாடும் அவர்களுக்கு தூக்கிச்சுமக்க ஆயிரம் கவலைகள் இருந்தன.

மீனா ,பாபுவை பாயில் படுக்கவைத்துவிட்டு கொல்லைப்பக்கம் குளிக்க போனாள். அவள் எப்போதும் அப்படி  தான் எவ்வளவு நேரம் ஆனாலும்,மழை ,பனி,என்று எதுவாயினும் சரி குளித்துவிட்டு சாமி கும்பிட்டுவிட்டு தான் தூங்க போவாள். குளித்து முடித்து நைட்டி அணிந்துகொண்டு வந்தவள் நேராக சாமி படத்திற்கு முன்பு வந்து நின்றாள். மதுரை மீனாட்சி அம்மன் படம் அது. மீனாவின் அம்மாவிற்கு மதுரைமீனாட்சி அம்மன் மேல் மிகுந்த பக்தி உண்டு. அதனால் தான் மகளுக்கு மீனாட்சி என்று ஆசையாய்  பெயர் வைத்தாள்.  சின்னவயதில் வருடம் இரண்டுமுறையேனும் அவள் அம்மா மீனாவை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுவிடுவாள். மீனாவின் அப்பா இவர்களை நிர்கதியாய் விட்டுவிட்டு  வேறு ஒரு பெண்ணோடு ஓடிப்போனபின் அவள் அம்மா கோவிலுக்கு போவதையே நிறுத்திவிட்டாள். அம்மா நோயில் தவித்து இறந்தபின் ,அயோக்யன் ஒருவனை நம்பி ஏமாந்து,கையில் பிள்ளையோடு இந்த சாக்கடைக்குள் நுழைந்த பிறகு  இவளும் கோவிலுக்கு போவதை நிறுத்திக்கொண்டாள். மீனாட்சி என்று யாரேனும் அழைத்தால் சாட்டையால் அடித்தது போல துடித்துப்போவாள்,ஆகவே தான் இந்த ஊருக்கு வந்தபின் தன் பெயரை மீனா என்று சுருக்கிகொண்டாள்.


சாமிகும்பிட்டுவிட்டு பாபுவின் அருகே படுக்கபோனவள் ஞாபகம் வந்தவளாக சாப்பாடு வைத்திருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தாள். ம்ம்..அவள் சந்தேகப்பட்டது சரிதான். சாப்பாடு அப்படியே இருந்தது. பாபு இந்த ஒருவிசயத்தில் மட்டும் தான் குழந்தையாய் அடம் பிடிப்பான். வெள்ளிக்கிழமை காலையிலேயே ஆரம்பித்துவிடுவான். சனி,ஞாயிறு கிழமைகளில் அம்மா  அவனோடு இருக்கவேண்டும் என்பது ஒன்று தான் அவன் ஆசை. ஆனால் எப்போதும் அது முடிவதே இல்லை. மற்ற நாட்களில்  பள்ளியில் அவன் நேரம் கழிந்துவிடும். இந்த இரு விடுமுறை தினங்களில் தான் அவன் தனிமையோடு போராடவேண்டி இருக்கிறது. தெருவில் மற்ற பிள்ளைகளோடு விளையாடலாம் என்றாலும் அவன் அதிகம் அவ்வாறு செல்வதில்லை. எப்போதும் ஒரு தயக்கமும்,எச்சரிக்கை உணர்வும் அவனுக்கு இருந்துகொண்டே இருக்கும். அவள்  உடன் இருந்தால் சந்தோசமாக அந்த நாட்களை களிக்கலாம் என்று அவனுக்கு ஆசை. காலையிலேயே கேட்டான். அவள் ஏதேதோ சமாதானம் சொல்லிவிட்டு சென்றாள். ஆனாலும் இப்படி சாப்பிடாமல் படுத்துவிட்டான். தன் இயலாமையை நொந்தபடி அவனுக்கு போர்த்தி விட்டுவிட்டு அவளும் கண் அசந்தாள்.

நாளெல்லாம் நாயாய் பாடுபடும் அவள் உடல் படுத்த அடுத்த நொடி பெரும் ஆசுவாசம் கொண்டு உறக்கத்தில் விழுந்தது. நன்கு உறங்கிக்கொண்டிருந்த அவளை அடிவயிற்றில் வலி ஒன்று பிசைந்து எழுப்பியது. கஷ்டப்பட்டு கண்விழித்த அவள் எழுந்து உட்கார்ந்தாள். தூக்கம் களைந்து நிதானத்திற்கு வந்தபோது அவள் ஆடை நனைந்து ,கால்களுக்கிடையே பிசுபிசுப்பை அறிந்தாள். அட!!அதற்குள் 25 நாள் ஆகிவிட்டதா?!!வலியை மீறி ஒரு சந்தோசம் அவளை முத்தமிட்டு சிரித்தது. சரியாக சனி,ஞாயிறுகளில் அவள் வீட்டுக்கு விலக்காவது எப்போதாவது மட்டுமே வாய்க்கும் அதிர்ஷ்டம். சட்டென்று கண்கள் பாபுவை பார்த்து சிரித்தது. மூன்று நாள் வேலைக்கு போக வேண்டாம். அவளுக்கு சந்தோசமாக இருந்தது. பாபுவை அவன் விரும்பும் இடத்திற்கெல்லாம் அழைத்துப்போகவேண்டும். அவன் குதூகலத்தை இந்த ரெண்டு நாளும் ஆசை தீர பார்க்கலாம். கறி எடுத்து சமைக்கவேண்டும்.
அவன் பாடப்புத்தகத்தை எடுத்து பார்க்கவேண்டும். அவன் பள்ளியில் நடந்த விசயங்களை கேட்கவேண்டும். விழி விரிய அவன் சொல்லும் சுவாரஸ்யக்கதைகளை நாளெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம்.

சேகரை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது. தெரிந்தால் கண்டபடி கத்துவான். நல்ல பசையான பார்ட்டி வரும்போது ஏண்டி இப்படி தாலி அறுக்குறீங்க?? அந்த சனியன பேசாம அறுத்து ஏறுஞ்சுட வேண்டியது தான?  இப்படி ஏக வசனத்தில் ஏசுவான். அவனை பொறுத்தவரை அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை என்பது ஒரு சுமை. அவர்களின் பாதையில் அது பெரும் தடை கல். ஒன்றுக்கும் உதவாத குப்பை. கழற்றி வீசப்பட  வேண்டிய கஷ்டம். ஆனால் அந்த பெண்களை பொறுத்தவரை  அது தான் அவர்களின் கடைசி நம்பிக்கை. அது சுமை அல்ல. அவர்களின் சுமைகளை இறக்கிவைக்கும் சுமை தாங்கி. தன்னை காக்க வரும் தெய்வம் குடிகொள்ளப்போகும் கருவறை. அது புனிதமானது. போற்றிப்பாதுகாக்கப்படவேண்டியது. மீனா அந்த பேறுபெற்றவள். அவள் பாபுவின் தலையை வாஞ்சையோடு கோதினாள். அவன் தூக்கத்தில் புன்னகைத்தான். அவளுக்கு சந்தோசமாக இருந்தது. அப்படி புன்னகைக்கும் படி என்ன இனிமையான கனவு கண்டிருப்பான்?!! மீனா திரும்பி மதுரைமீனாட்சியின் படத்தை பார்த்தாள். இரவு விளக்கின் வெளிச்சத்தில் அம்மனின் இதழில் புன்னகை நெளிவது போல் தெரிந்தது. அது பாபுவின் புன்னகையை ஒத்ததாய் இருந்தது.

******

No comments:

Post a Comment