Monday, February 23, 2015

அம்மா நிலா
அது இன்வெர்டெர்கள் அறிமுகம் இல்லாத கிராமம். தொலைக்காட்சிப் பெட்டியையோ, மிக்சி,  க்ரைண்டரையோ நம்பி வாழாத வாழ்க்கைமுறை. ஆகையால், எங்களுக்கு மின்சாரத்தடை என்பது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்ததில்லை. வயலுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டி பெரியவர்கள் கவலை கொண்டிருக்கலாம், அது நாங்கள் அறியாதது.
இரவு 7-மணி வாக்கில் மின்சாரம் போய்விடும். பிறகு அரைமணிநேரமோ, ஒரு மணி நேரமோ கழிந்து வரும். அந்த நேரத்தில் அநேகமாக நான் சமையற்கட்டில் அம்மாவுடன் பேசிக்கொண்டோ, அங்கே விளையாடிக்கொண்டோ தான் இருப்பேன். மின்சாரம்போன மறுநொடியில்  பயம் வயிற்றைக்கவ்வும். அப்போது அம்மா அருகில் இருந்தாலும் நம்புவதற்கில்லை. அவரே, எரிந்துகொண்டிருக்கும் அடுப்பின் ஒளி முகத்தில் பட்டு பேய் போலத்தான் தெரிவார். எனவே மின்சாரம்போன மறு நொடியில் தெருவில் தெரியும் சொற்ப ஒளியை பார்வையால் பற்றியபடி ஒரே ஓட்டம் தான். 

அது நீண்ட பழங்காலத்து வீடு. வாசலில் இருந்து கடைசி சமையலறை வரை கதவுகள் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். சமையலறைக்கு முன் இருக்கும் அறையின் ஓரத்தில் தான் மாடிப்படி இருக்கிறது. அதை ஒட்டி ஒரு சிறு அறையும். அந்த அறையில் மண்வெட்டி, கடப்பாரை, பைப்புகள், முறம் இன்னபிற இரும்பு சாமான்கள் போடப்பட்டு அதிக புழக்கமில்லால் இருக்கும். வெளிச்சத்தில் சாதாரணமாக தெரியும் அந்த மாடிப்படி இருளில் பெரும் திகில் கிளப்புவதாக இருக்கும். போதாதக் குறைக்கு அந்த உடைசல்கள் கிடக்கும் அறைவேறு கூடுதல் திகில்.

மின்சாரம் போனால் உடனடியாக எங்கள் வீட்டு திண்ணை அரட்டைக் கச்சேரிக்கு தயாராகிவிடும். பக்கத்து வீட்டு விஜயாக்கா, சித்தி, அம்மா, எதிர்வீட்டு செட்டியாரம்மா [அந்த அம்மா பெயர் இன்றுவரைத் தெரியாது :) ] ஆகியோர் கூடிப் பேசத்தொடங்கிவிடுவார்கள். நானும் என் தங்கையும் தெருவில் விளையாடுவோம். அப்போது தான் அவசரமாக ஒன்றுக்கு போகவேண்டிவரும். அம்மாவைக் கூப்பிட்டால் இத்தசோடு புள்ள இருட்டுக்கு என்னபயம்? உள்ள போய் வெளக்கு எடுத்துக்கிட்டு போ என்பார். விளக்கு ஹாலில் எரிந்துகொண்டிருக்கும். பாத்ரூம்க்கு செல்ல மாடிப்படிக்கு நேர் எதிரே சென்றுதான் திரும்பவேண்டும். அந்த இருட்டில் விளக்கை ஏந்திக் கொண்டு மாடிப்படி முதுகில் வெறிக்க சென்று திரும்புவதை எண்ணினாலே காலோடு வந்துவிடும். நீ வாம்மா நீ வாம்மா என்று நச்சரிக்கத்தொடங்குகையில் சித்தி அந்த சந்துபக்கம் போயிட்டு வாங்களேன் என்று குரலுயர்த்துவார். அங்கமட்டும் இருட்டு இல்லையா ? ஆனாலும் வேற வழியில்லை. தங்கையும் நானுமாக போய் நிலாவைப் பார்த்தபடி அமர்ந்துவிட்டு யார் முதலில் எழுந்து ஓடிவருவது என்பதான பதற்றத்துடன் ஓடிவருவோம். தங்கை உள்ளாடை கூட சரியாக அணிந்துகொள்ளாமல் திட்டிக்கொண்டே பின்னால் ஓடி வருவாள். 

வயிறு காலியானதும் ரோஷம் வந்துவிடும். பாக்கலாமா யாரு தைரியசாலின்னு என்று வாதம் செய்துகொண்டு, சரி யாரு போய் தைரியமா மாடிப்படிய பாத்துட்டு வராங்களோ அவங்கதான் தைரியசாலி என்ற பந்தயத்தில் வந்து நிற்போம். உள் திண்ணைத் தாண்டி, ஹால் தாண்டி....! ரோசப்பட்டிருக்கக் கூடாதோ?! அடுத்த அறைக்கு படி இறங்குகையில் மின்னல் ஒன்று வயிற்றைத் தாக்கும். படியிறங்கி நின்று மாடிப்படியை பார்க்கும் கணம் மொத்த நரம்புகளும் சொடுக்கி இழுக்கும். மாடிப்படி தன் கரியநிற வாயைப் பிளந்தபடி உறைந்திருக்கும் . மேலே முதல் படியில் கால்வழிய நீளமான அங்கி அணிந்த உருவம் தலை புகைய நின்றிருக்கும். ஐயோ நான் செத்தேன் .ஒரே பாய்ச்சலாக திரும்பி ஓடிவருகையில் அது முதுகுக்குப் பின்னால் துரத்திக்கொண்டு வரும். ஓடிவந்து வாசலில் குதிக்கையில் அந்த உருவம் காணாமல் போயிருக்கும். போயிட்டு வந்துட்டேன் பாத்தியா என்று சொல்லியபடி போய் அம்மா அருகில் பொட்டாட்டம் அமர்ந்துகொள்வேன். இதயம் படபடவென அடித்துக்கொள்ளும். நிலாவெளிச்சத்தில் என் பீதி அடைந்த முகத்தை யாரும் பார்க்கும் முன் அம்மா மடியில் படுத்துக்கொள்வேன். அம்மா மீண்டும் எழுப்புகையில் எங்கும் ஒளி வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கும்.
***
செ.சுஜாதா
பெங்களூர்.

Friday, February 13, 2015நாளைக் காதலர் தினம் . நண்பர் ஒருவர் பேசும்போது கேட்டார் நீங்க இதுவரை யாரையும் காதலித்ததே இல்லையா?! ச்சே வாழ்க்கையே வீண் என்றார். என்னைப்பொறுத்தவரை நேசிக்கத் தெரிந்த யாருக்கும் வாழ்க்கை வீண் இல்லை.

 நேசம் என்பது என்ன ? நீ எட்டி உதைத்தாலும் உன் காலடியில் கிடப்பேன் என்னும் அடிமைத்தனமா அல்லது நீ எனக்கானவன், என் சொல் தாண்டி நீ யோசிக்கக் கூடாது என்று தலைமேல் அமர்ந்துகொண்டு ஆட்டிவைக்கும் திமிரா? கையை கிழித்துக்கொள்வதும், சூடுபோட்டுக்கொள்வதும், நெஞ்சில் பசைக்குத்திக்கொள்வதும், தொலைபேசியில் துரத்துவதும் அல்ல நேசம்.

 சுய கவுரவத்தை, விருப்பத்தை, தனித்தன்மையை இழந்துவிடாமல் ஒருவரின் நேசத்தைப்  பெறமுடிந்தால் அங்கே வாழ்வு அர்த்தப்படுகிறது. நேசம் நிரூபணங்களைக் கோராதது. நிபந்தனைகள் அற்றது. அது ஒரு பட்டாம்பூச்சி.நாம்  அனைவரையும் நேசிப்போம். எதிர்படும் அத்தனை உயிர்களுக்கும் புன்னகையை பரிசளிக்க நாம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நேசம் என்பது நேசித்திருத்தல் மட்டுமே. 

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். 

Wednesday, February 4, 2015இன்றைய நாள்
வழக்கமானதொரு நாளாக தொடங்க எத்தனித்து கொஞ்சம் விசித்திரம் காட்டி ஆரம்பித்தது .
எல்லா நாட்களையும் போல இன்றைய நாளும் பரபரப்பாகவே தொடங்கியது .பரபரக்கும் நாளை மெலடிப் பாடல்களுடன் தொடங்குவது என் வழக்கம் .இன்றும் அப்படியே இளையராஜாவின் இன்னிசை சாம்பிராணிப் புகை போல வீடெங்கும் மெல்லியதாய் பரவி
நெகிழ்த்திக் கொண்டிருந்தது .
நேரம் 7 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது .இன்னும் அரை மணியில் பள்ளி வேன் வந்துவிடும் .சாம்பார் பொடி பொட்டலத்தைக் கத்தரிக்க கத்தரிக்கோலை தேடுகிறேன் .வழக்கம் போல கிடைக்கவில்லை .இந்த பிள்ளைகள் இப்படித்தான் எடுத்த பொருளை அதனிடத்தில் வைப்பதில்லை .சரி தேடிக்கொண்டிருக்க நேரம் இல்லை .காய் நறுக்கும் கத்தியை எடுக்கிறேன் .பொட்டலத்தை ஓரத்தில் அறுக்க முயல்கிறேன். அவசரம். சுருக்கென்று ஒரு வலியுடன் விரலை கீறித்திறந்திருக்கிறது கத்தி .
கொஞ்சமும் பதற்றத்தை தந்துவிடாத செந்நிற உதிரம் . விரலை அழுத்திப்பிடித்தபடி திரும்புகிறேன் . சமையல் மேடையில் ஓரத்தில் கத்தரிக்கோல் அமைதியாக சாய்ந்திருக்கிறது .ஒரு நிமிடம் முன்பு என் கண்ணிலிருந்து மறைந்த அது அடுத்த நிமிடத்தில் உருப்பெற்றிருக்கிறது . அப்படி என்றால் நடந்தது ஏற்கனவே முடிவான ஒன்றா ? நடப்பது அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றால் நம் செயல்கள் அனைத்தும் அதை நோக்கித்தானா ?!
கத்தியை எடுத்துப்பார்த்தேன் . எந்தவித தடயமும் இன்றி மௌனமாக இருந்தது அது . சமரசம் ஏதும் இன்றி தன் கடமை ஒன்றே குறி என்றிருக்கும் அதன் நிலையும் ஜென் நிலை தானா ? மெல்லிதாய் புன்னகைத்தேன் .கத்தியை எடுத்து முத்தமிட்டேன் . சில்லென்ற அதன் உடலில் வெங்காய வாசனை . முத்தம் வெறும் முத்தமாக ஒருபோதும் இருப்பதில்லை . கண் லேசாக கலங்கியது . அப்பா முகம் நொடியில் தோன்றி மறைந்தது .
விரலை அழுத்திப்பிடித்தபடி சமையலை தொடர்கிறேன் . விரல்கள் ஒரு பரத நாட்டிய முத்திரையுடன் இருக்கிறது . சிறு வயதில் நாட்டியம் கற்கும் ஆசை இருந்தது . அதற்கான சூழல் இல்லை . சித்தப்பா மகள் கற்றுத்தந்த ஒரு சில அசைவுகள் மட்டுமே இன்று வரை அறிந்தது . மற்றபடி சினிமா பாடல்களுக்கு ஆடுவதை யார் தடுக்க இயலும் ?! நான் நன்றாக ஆடுவேன் என்பது கடைசி வரை அப்பாவுக்கு தெரியாது . அம்மா என்னை உள்ளும் புறமும் அறிந்தவள் .
அழுத்திப்பிடித்திருந்த விரலை மெல்ல திறந்து பார்த்தேன் . இரத்தம் நின்றிருந்தது .கோபம் கொண்ட காதலனை அல்லது கதறி அழும் குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அழுத்துகையில் மெல்ல இயல்பு நிலை திரும்புமே அப்படி என் கட்டை விரலின் சமாதானத்தில் ஆள்காட்டி விரல் அமைதிகொண்டு உதிரம் நிறுத்தியிருந்தது .
சஞ்சுவின் குரல் என்னை மீண்டும் கொண்டுவந்து சமையலறையில் இறக்குகிறது . அடுப்பைப் பார்க்கிறேன். சாம்பார் தயாராகிவிட்டிருக்கிறது . சாம்பாரில் சேர்ப்பதற்காக நறுக்கி வைத்த கேரட்டும் ,பீன்சும் அப்படியே தட்டில் இருக்கிறது . கத்தரிக்காய் மட்டும் தன்னந்தனியாக சாம்பாரில் மிதந்தபடி அலுத்துக்கொள்கிறது அப்படி எங்கதான் நினைப்பு போகுமோ உனக்கு!? என்று.மீண்டும் புன்னகை.
ஒரு துண்டு மாமிசத்திற்கு சுற்றி மொய்த்துத் தீர்க்கும் எலிகளென ஒரு நிகழ்வைச் சுற்றி மொய்த்துக் கிடக்கும் இந்த நினைவுகளை எப்படி விரட்ட ? பேக்பைப்பர்க்காரனைப் போல் இசைத்தபடி அழைத்துச்சென்று பள்ளத்தில் தள்ளி விடலாமா ?!

                                                           ******

Sunday, February 1, 2015திருவிழாக் கூட்டத்தில்
குழந்தைகளின்
கூச்சலுக்கு இடையே
பஞ்சுமிட்டாய்காரனின் 
மணியோசைக்கு நடுவே
மலர்மணக்கும்
வீதியில்
சிரிப்பொலிக்கும்
வளையல்களின் சிணுங்களுக்கும்
செவிமடுத்தபடி
மௌனித்துக் கிடக்கிறது
அச்சு முறிந்த
அழகியதொரு
ராட்டினம்
***


தொலைக்காட்சியில் 'மண் வாசனை' பட பாடல் பொத்தி வச்ச மல்லிக மொட்டு போய்க்கொண்டிருக்கிறது. வகிடெடுத்து படிய வாரிய தலையும், முழங்கை வரை நீளும் சட்டையும், வெள்ளை வேட்டியுமாக பாண்டியன் என் மாமன்களை நினைவு படுத்துகிறார். அப்பாவுடைய தங்கைகள் 3 பேர்க்கும் சேர்த்து மொத்தம் பிள்ளைகள் 7. ஆக 7முறை மாமன்கள். தாய்மாமன்கள் 3.
இரண்டு அத்தைகள் உள்ளூரிலேயே கட்டிக்கொண்டதால் முறை மாமன்கள் அன்றாடம் சந்திக்கக்கூடியவர்களாக இருந்தனர். அண்ணனின் நண்பர்கள் யாரையும் படி ஏற விடாத என் அப்பா மாமன்களுடன் மிகுந்த நட்போடு இருப்பார். சின்ன வயசில் திருவிழாவில் மஞ்சள் நீரை சொம்பில் எடுத்துக்கொண்டு மாமனை தேடி அலைந்ததும், ரவி மாமா, நீரை பிடுங்கி என் மேல் மொத்தமாக கொட்டி விட அழுதுகொண்டே நான் வீட்டுக்கு வந்ததும் இன்றும் மஞ்சள் மணம் மாறாமல் இருக்கிறது. கல்லூரி வரை படித்த ரவி மாமா ரொம்ப சாந்தம், அன்பு நிறைந்தது.
சூரி மாமா சைக்கிள் ரேஸில் எப்போதும் முதலில் வரும். வருடா வருடம் வெற்றி பெற்ற மாமனுக்கு சோடா வாங்கிக்கொண்டு பெருமையோடு நான் ஓடுவதும் தவறாது. மாநிறமும், முட்டை கண்ணும், சரிந்து விழும் அடர்ந்த தலை முடியும், அண்ணாந்து சிரிக்கும் போது தெரியும் வரிசையான பல்லுமாக சூரி மாமாவின் முகம் மிகவும் இணக்கமானது.
சந்திரன் மாமா ஒரு சிடு மூஞ்சி. சும்மா ஏதாவது மிரட்டிக்கொண்டே இருக்கும். சிவப்பாக,உயரமாக அழகாய் இருக்கும் அது முகத்தில் சிரிப்பை பார்ப்பதே அபூர்வம். முகத்தை எப்போதும் சீரியசாக, பெரிய மனுஷ தோரணையில் வைத்துக்கொண்டே திரியும்.
ராஜா மாமா எல்லோருக்கும் கடைசி. படபடவென்று பேசும். என் அப்பாவோடு பஞ்சாயத்து வேலைகளுக்கு கூட அலைவது அது தான். ஜடையை ஏன் இப்படி தூக்கி கட்டி இருக்க? நல்லாவே இல்ல, சோறு சாபிடுறியா இல்லையா இவ்ளோ ஒல்லியா இருக்க, சமைக்க எப்போ கத்துக்குவ என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கும். பேசும்போது சுஜி சுஜி என்று 100 சுஜி சொல்லிவிடும்.
பெரிய அத்தை பிள்ளைகளும், தாய் மாமன்களும் வேறு ஊரில் இருந்தாலும் விடுமுறைகளில் அவர்கள் வீட்டில் கழியும் நாட்கள் மிக இனிமையானவை . பெரிய அத்தை பிள்ளைகளும், அம்மாவின் சகோதரர்களும் வயதில் ரொம்ப பெரியவர்கள். சினிமாவுக்கு கூட்டிப்போவது , தின்பண்டம் வாங்கி வருவது என்று அவர்களின் அன்பில் தந்தைமையை காண முடியும்.
இத்தனை மாமன்களிடையே வளர்ந்த என் வாழ்வு அவ்வளவு பாதுகாப்பானதாக இருந்திருக்கிறது. ஒரு நொடிப்பொழுதும் அவர்கள் எல்லை மீறியதில்லை. உரிமையை தவறாக பயன்படுத்தியத்தில்லை. கண்ணியம் தவறாத அவர்கள் அன்பு இன்று வரை மாறாதிருக்கிறது. உறவுகள் சூழ வாழ்ந்திருத்தல் சுகம். அதுவும் மண் வாசனை மணக்கும் கிராமத்தில்..
[ நான் பாடலை பார்த்து மேற்சொன்ன இவ்வளவும் நினைத்து feel பண்ணிக்கொண்டிருக்கிறேன், சஞ்சு, பாண்டியனைப் பார்த்து யாரும்மா இந்த அங்கிள் லூசு மாதிரி இருக்காங்கன்னு சொல்லி ஒரே நிமிடத்தில் என்னை தரை இறக்கிவிட்டாள் ]