Sunday, April 28, 2019

மௌனத்தைச்
சிதையிலேற்றுகிறேன்
சொற் சுள்ளிகளை வீசி எரி

உறைந்த வானில்
சிறு புள்ளியெனப் பற

குருடனின் திருவோட்டில்
சிற்றொலியாய் வீழ்

மூளிச் சிலையின் மேல்
கதிரவனாய் பொழி

ஊமைக் குயிலை
வெறித்திருத்தல் துயரம்

Tuesday, April 23, 2019

பாலைத்தீயிது
தீட்டு வாளை

உதிரம் தெறிக்க
எனை உருவி எடு

உதடுகள் சிம்மாசனம்
ராணியை ஏற்றி அமர்த்து

நா புரவி

குளம்பொலி
அண்டம் அதிரட்டும்

முதுகில் சர்ப்பத்தடம்
காதுமடல் தணல்

பாத விரல்முலைகள்
முதுவேனில் நனைக்கட்டும்

நிமிரும் இருபறைகள்
அதிர முழங்கு
புவி பிளந்துப் பீறிடட்டும்

Sunday, April 21, 2019

இதயம் இடம்பெயர்ந்தாயிற்று
மணிக்கட்டு நரம்புகள்
கண்திறந்து சிரிக்கின்றன
மூளையின் பின்மேட்டில்
அருவி பீறிடுகிறது

உடல் வெறும் கூடென்று
சொன்னவன் எங்கே

இரவு ஒரு இடுகாட்டு நாய்

நடுங்கும் என் நெற்றியில்
எச்சில் இடு
சுரவா முலையைத் தின்னக்கொடு
வியர்வையால் போர்த்து
நிலாவைச் சுருட்டி இசை

மெல்லப்பரவும் பாடலுக்கு
நீலநிறம்
மௌனத்தைச்   
சிதையிலிடுகிறேன்
நரம்புகள் வெடித்துச் சிதறுகையில்
நூறு முடசூரியன்கள்

Saturday, April 20, 2019

பெரும் கோட்டையென இறுமாந்திருந்தேன்
விரல் கொண்டு சுண்டும்
என் ஆதியந்தமே
நடுங்கும் அதன் அஸ்திவாரம் பாராய்
கதறும் என் இதயத்தின்
ஒலி கேட்கிறதா
இறைஞ்சும்
இக்கண்களைப் பொசுக்குங்கள்
என் கூந்தல் கொண்டு
குரல்வளையை முடிச்சிடுங்கள்
பால்மறவா சிறு நாயிது
ஊர்தாண்டிய சாலையில்
கைவிடமாட்டீரா


Sunday, April 14, 2019



ஒரு எளிய சிறுமி
காலத்தின் சக்கரத்திற்கு
கூழாங்கற்களை தடையாக இட முயல்கிறாள்
அரைத்து நகரும் சக்கரத்தில்
 ஈரமில்லை

விரும்பி வந்து சேர்ந்த பாதை
திரும்பிப்போகும் எண்ணமில்லை

பருவம் தப்பி மலரும் மலர் தான்
தனித்து மணக்கிறது

தொலி உடைத்து வெளியேறும்
மென் அலகின் வலி
ஏற்கக்கடவது


Monday, April 1, 2019

கண்கள்
இருளுக்கு பழகிவிட்ட போதிலும்
இதயத்தில்
அணையாத விளக்கொன்று சுடர்விட்டபடி இருக்கிறது.

மரணம் ஒரு ஞானம் நுரைக்கும் போத்தல் எனில்
நுரைத்து அடங்கிவிடும் ஞானம் ஞானமே அல்ல.அது வெறும் சலனம்.

வரிசையாக நம் கண்முன்னே மரணம் ஒரு பைத்தியம் பிடித்தக் குரங்கென முதிராக் கனிகளைப் பறித்து வீசிக் கொண்டிருக்கிறது. வாரம், மாதம் என்று அவரவர்க்கு தக்கபடி துயரமும், ஞானமும் கருமேகமென அப்பிக்கொள்கிறது.பின் கலைந்து காணாமல் போகிறது.

உண்மையில் எந்த மரணமும் இதயத்தை சுத்திகரிப்பதில்லை. குளத்தில் வீசப்பட்ட கூழாங்களென அல்லது மிகக்குறைந்த ரிக்டரில் வரும் நிலநடுக்கமென ஒரு அலையை, அதிர்வை உண்டாக்கிவிட்டு பின் இந்த மனித ஜென்மத்திடம் அது தோற்று நிற்கிறது.

மரணிப்பான் என்று தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேசித்திருப்பேன், இன்னும் கொஞ்சம் பேசியிருப்பேன், புன்னகைத்திருப்பேன், மன்னித்திருப்பேன்..இப்படி எண்ணாத மனமுண்டா?! அப்படியெனில் நாம் மரணமற்றவர்கள் என்று இத்தனை நாளும் நம்பிக்கொண்டிருந்தோமா? அல்லது அகால மரணங்களுக்கு மட்டுமே நம் மனம் தரும் சலுகையா இந்த நேசமும் மன்னிப்பும்?!

மரணத்தை நிதமும் கடந்தபடியே இருக்கும் நாம் ஒருபோதும் நிபந்தனைகளற்று நேசிப்பதில்லை, புன்னகைப்பதில்லை, மன்னிப்பதில்லை. கோவம், வன்பம், பொறாமை அற்ற இதயத்தை நாம் ஒருபோதும் கைகொள்வதில்லை.எவரின் மரணமும் அந்த வேலையைச் செய்துவிட்டுப் போவதில்லை.

பன்னீர் நிலா

வானம் முழுமைக்குமாய்
ஒரு கறுப்பு நிலா
தொட்டுக் கண்களில் எழுதிக்கொள்கிறேன்
இன்றென்
கனவின் மேனியெங்கும்
பொழியட்டும்
பன்னீரின் வாசம்.

பவளம் சொட்டும் பிரிய கவிதை

வர்ணங்களை ப்ரசவிக்கமுடியா
என் கவிதைகள்
சாம்பல் பூத்தவை

அவை எப்போதும்
எனை இட்டுச்செல்ல
பாதையற்ற பாதையையே
தேர்ந்தெடுக்கின்றன

உதிரமும் நெருப்பும்
மறுக்கமுடியாத
வழித்துணையாகி
உடன் வருகையில்

வறளும் உதடுகளைக்
கண்ணீர் நனைக்கிறது

மண்ணில் சொட்டும் உதிரம்
அழகியதொரு ஓவியம்

அந்தரங்கத்தை மறைக்க முயலும்
கந்தலில் புழுதி மணம்

கொப்புளங்கள் முத்தமிடும் பாதை
காலடியில் நழுவுகையில்
முள் கிரீடம் ஒன்றை
அணிவித்து நிமிர்க்கிறது
எனது பிரிய கவிதை

இமை மயிரில் உதிரம்
பவளமென மின்ன
நானோ
அரசியாகி கர்ஜிக்கிறேன்

அவனற்ற ஞாயிறுகள்
சபிக்கப்பட்டவை

கன்றுக்குட்டி இழந்த
கட்டுத் தரையின்
மடிநிறை முனகல்

எச்சில் மணக்கும்
அவன் பசிய சொற்கள்
சுவரெங்கும் ஊரும்
திங்களை நோக்கி
என் விரல்கள்
நீள்கின்றன

தட்டான் வாலில் கட்டப்பட்ட நூல்
சொடுக்கி விளையாடுகிறது
ஞாயிறின் மணித்துளிகளை.

பைத்தியக்காரியின் அழுக்கு மூட்டையெனக் கேள்விகளைத் தலைக்கு வைத்துப்படுப்பவள்
கூந்தலைத் தட்டி உதறி முடிந்து கொண்டு
திசையைத் தீர்மானித்து திரும்புகையில்,
இருளைத் தின்னத் தொடங்குகிறது கதிர்.