Saturday, March 28, 2020

ஓடை

இது ஸ்ரீனிவாச வைத்யா அவர்கள் எழுதிய ,சாகித்திய அகாடமி பரிசு பெற்ற கன்னட நாவல் .தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் நம் பெங்களூர் நண்பர்களுக்கு நன்கு அறிமுகமான  கே. நல்லதம்பி அவர்கள்.

இந்த நாவலில் கதைக் களம் சுதந்திரத்திற்கு முன்னான காலகட்டத்தில் ஆரம்பித்து சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் முடிகிறது.

ஒரு பெரும் ஆலமரத்தின் வேரைப்பற்றி, மரத்தைப் பற்றி, அதன் விழுதுகள் ஒவ்வொன்றைப் பற்றி, அங்கு தங்கி வாழும் பறவைகள் பற்றி, அந்தப் பெருவாழ்வைப் பற்றி ஒரு நாளில் சொல்லிவிடமுடியுமா?! இந்த நாவலை நான் சொல்ல நினைப்பதுவும் அப்படியான ஒரு சவால் தான்.

எப்படி எங்கோ வடக்கே கான்பூரிலிருந்து வந்த கமலநாப பந்தன் தெற்கே கன்னட நாட்டில் நவலகுந்தா மண்ணில் வேர் ஊன்றினார் என்பது விதி. காலம் எங்கோ தின்ற பழத்தின் விதையை எங்கோ ஒரு மண்ணில் துப்பிவிட்டுப் பறக்கிறது. எங்கு விழுந்தபோதிலும் விதை முட்டி முளைத்து விடிகிறது. இந்தக் கதையின் நாயகன் விதையல்ல.
ஆணிவேரான கமலாச்சாரியின் மூத்தமகன் வாசண்ணா. அவர் வாசுதேவாச்சாரியாராக மூன்று தலைமுறை கண்டு மக்கி உதிரும் வரையிலான காலநதியின் நிற்காத ஓட்டமே இந்த நாவல்.

இங்கே பிள்ளைகள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். பெண்களின் கருப்பை நிரம்பியே இருக்கிறது. பிறந்தது எத்தனையோ வளர்த்தது எத்தனையோ என்பதாக சில பிள்ளைகளே எஞ்சுகிறார்கள். கமலய்யா, சாவித்திரி தம்பதிக்கு 9ல் 4 எஞ்சுகிறது.

வாசண்ணாவின் தங்கை அம்பக்கா பத்து வயதில் திருமணம் செய்து கொண்டு பன்னிரெண்டு வயதில் வயதிற்கு வந்து பதிமூன்று வயதிலேயே விதவையாகி தலையை மழித்துக் கொண்டு தாய் வீடு வந்துவிடுகிறாள். கணவன், குழந்தை, சொத்து என்று எந்த பிடியும் இல்லாத பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும்? வீட்டையே தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவர நினைக்கிறாள். ஆச்சாரம் மடி என்று அனைவரிலும் தான் மேன்மையானவள் என்று காட்ட எந்த துன்பத்தையும் தாங்குகிறாள். கதை முழுதும் ஆண்களுக்கு பெண் உடல் தேவையாக இருக்கையில் அம்பக்காவின் காமம்  ஒற்றை வரியில் கூட பேசப்படவில்லை. ஒரு இடத்தில் அவள் சொல்கிறாள் ,  'ஒவ்வொரு ஈரமான முடியிலிருந்தும் நீர்த்துளி நிலத்தில் விழுந்தால் கணவன் உயிர் நூறு வருடம் நரகத்தில் விழுந்து தவிக்குமாம்.அதற்குத்தான் மனைவியின் தலையை மொட்டை அடிக்கிறார்களாம். இவன் என் தலைமுடியிலதான் தொங்கிக் கிடக்கிறானா தொடப்பக்கட்டை சொந்தமா எதுவும் புண்ணியம் செஞ்சிருப்பானா பாவிப்பய ' என்று.. அத்தனை விதவைப் பெண்களின் குரலாக இதை நான் பார்க்கிறேன். ஆனாலும் ஆச்சாரத்தை கடைசிவரை கடைப்பிடிக்கிறாள். அந்த வீட்டில் நடக்கும் அத்தனை பிரசவமும் அவள் கையால் நடக்கிறது. தண்ணிக்காய வைத்து,குளிப்பாட்டி, தொட்டில் கட்டி, தாலாட்டு பாடி என்று ஓயாது உழைக்கும் அவள் தலையில் தியாகத்தின் புழுக்கல் நெளிந்து கொண்டே இருக்கிறது. தனிமை, தியாகம், அவள் கைமீறி காலம் ஓடும் வேகம், பிடிப்பற்ற வாழ்வு என்று சுழலில் சிக்கி ஓயாது சுழன்று இறுதியில் மனம் பிறழ்ந்து மரிக்கிறாள் அம்பக்கா.

ருக்குமா..அனாதையாக சிறு பிராயத்திலேயே இந்த அக்ரஹார வீட்டிற்கு வந்து சேர்ந்த தாழ்ந்த சாதிப் பெண். அந்த வீட்டின் பிள்ளைகளோடே வளரும் அவளுக்கு வயசு 28 ஐ தாண்டுகிறது. பெண் பிள்ளைகள் 10 வயதை அடையும் போதே திருமணம் செய்ய அவசரப்படும் பெரியவர்கள், 40 வயதில் மனைவியை இழந்த வெங்கண்ணாவுக்கு உப்புத் திங்கற உடம்பு, அவனும் மனுசன் தானே என்று பெண் தேடும் பெரியவர்கள், 13,14 வயதில் கரதண்டு தின்றபடி பருத்தி சுமந்து செல்லும் பெண்களை கண்களால் பருகும் பிள்ளைகளின் பசி அறிந்து அவசரமாக திருமணம் முடிப்பவர்கள் ருக்குமாவை ஏனோ மறக்கிறார்கள். சின்ன வயதில் கணவன் மனைவி விளையாட்டில் தன் கணவனாக இருந்த வாசண்ணாவை அவள் மனம் விரும்புகிறது. அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாறி பின் சுதாரிக்கிறார். அந்த 2 நிமிடத்தொடுகை மட்டுமே அவள் மொத்த வாழ்க்கைக்கும்
சுகம் என்றாகிறது. வேறு யாருக்கும் அசைந்து கொடுக்க மறுக்கிறாள். பெண் அப்படித்தான் பிடித்தவனுக்காக ஆசையை இறுக்கிக் கட்டிக் கொண்டு காத்திருப்பாள். இறுதி மூச்சு வரைக்கூட
அவள் காத்திருப்பை மட்டுமே சுகமென இறுமாந்து இருப்பாள். இறுதியில் அவள் அந்த வீட்டில் அன்னியமாக உணரும் காலமும் வருகிறது. வாசண்ணா தம்பதியினர் காலில் விழுந்து வணங்கி விடைப் பெற்றுச் செல்லும் அவள் பின் எப்போதும் அவ்வீடு திரும்பவில்லை.

நாரயணனும் அவ்வாறே. அனாதையாக வந்தவர்க்கு அடைக்கலம் தரும் அந்த வீடு அவர்களை ஒருக்கட்டத்தில் கைவிடுகிறது. அவர்கள் அனாதையாக வெளியேறுவதை வேடிக்கைப் பார்க்கிறது.

திப்பக்கா..வாசுதேவாச்சாரியாரின் இளைய தங்கை. நான்கு வருடத்தில்
மூன்று முறை பிரசவத்திற்கு தாய் வீடு வருபவள்.பதினோராம் பிரசவத்திற்கு அவள் நிறைமாதமாக தாய் வீடு வருகையில் ஏற்கனவே கடன் சுமையில் தவிக்கும் வாசண்ணா ' பத்து பிள்ளையைப் பெத்த பிறகும் படுக்கையில் பத்தியமாக இருக்கவில்லை என்று கண்டபடி பேசுகிறார். அதற்கு பெண்களின் எதிர்வினை சமையலறையிலோ, பின்புறத்திலோ இப்படியாக வருகிறது' படுக்கை பத்தியம் பெண்களால் மட்டுமே கடைபிடிக்கக்கூடியதா என்ன? பத்தியம் இருக்கச்சொல்லு..யாருக்கு வேணும் ஒவ்வொரு வருஷமும் பிரசவம்..நமக்கா தேவை?.கழுதை மாதிரி உடம்பு மேல விழுகறானுங்க'..கழுதை மாதிரி மேலே விழும் ஆண்களை இன்று வரை காலம் உடன் அழைத்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

சோனி..வாசண்ணாவின் மகள். பதினொன்றில் திருமணமாகி பனிரெண்டில் வயதிற்கு வந்து கணவன் வீடு சென்று அடுத்த ஆறேழு மாதத்தில் கிணற்றில் பிணமாகிறாள். அவள் கணவன் வீட்டிற்குச் செல்லும் முன் கடைசி நாள் இரவு அவள் தாய், மகளை அருகில் படுக்கவைத்துக் கொண்டு தலையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டும், உடலை தடவியபடியும் மகளுக்கு கணவன் வீட்டில் எப்படி இருக்கவேண்டும் என்று அறிவுரைகளைக் கூறுகிறாள். நம்மை அறியாமல் வயிறு பதறுகிறது. அய்யோ என்ன வாழ்வு இந்த பெண் ஜென்மத்திற்கு!!  உண்டு, உறங்கி, பெற்று, வளர்த்துச் சாகத்தானா? சமையலறையும், படுக்கையறையும், புழக்கடையும் தாண்டி பெண்ணிற்கு உலகம் உண்டா?

நாம் நின்றிருக்கும் காலத்திலிருந்து பின்னோக்கி பெண் வாழ்வை ஆராய்ந்தால் எத்தனை அவலங்களிலிருந்து, கீழ்மையிலிருந்து முட்டி மோதி இதுவரை வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற எண்ணம் பதற வைக்கிறது. இன்று நாம் அவலங்களைக் கடந்துவிட்டோமா, மேலானதொரு நிலமையை அடைந்து விட்டோமா..நீ இடத்தை வந்து சேரவில்லை இன்னும் தூரம் தொலைவு..நிற்காதே ஓடு, ஓடு..ஓடி ஓடி இளைத்துச் சாகு. ஆனால் அசந்து நிற்காதே.

வாசண்ணா பொறுப்பான தலைவனாக குடும்ப பாரத்தை அயராது சுமக்கிறார். யாருக்கு எதுவெது தேவையென்று கண்டு, பிள்ளைகளை இடம் பார்த்து சேர்கிறார். கடைசிவரை ஆச்சாரங்களை கைவிடாதவராக, மாறும் உலகத்தோடு ஒட்டமுடியாதவராக தவிக்கிறார். சுதந்திர ப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்குகையில் ஒரு சராசரி குடும்பத் தலைவனாக கவலை அடைகிறார். அவர் பிள்ளைகள் எல்லாம் காந்திக் குல்லாப் போட்டுக் கொண்டு ஊர்வலம், போராட்டம் என்று சுற்றுவதைக் கண்டு அஞ்சுகிறார். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்தை நிலம் உள்ள பிராமணனாக பதற்றத்துடன் எதிர்கிறார். சுதந்திர வேட்கை எல்லாம் இல்லை, பிள்ளைகள் வம்புதும்புக்குப் போகாமல் இருந்தால் போதும் என்றிருக்கிறார். ஆனால் அவர் மகன் ராமன் போராட்டக்குழுவோடு அலைகிறான். அரசாங்கத்திற்கு எதிராக உப்பு காய்ச்சுகிறான். மேடையில் முழங்குகிறான். கடைசியில் குண்டடி பட்டு இறக்கிறான். மற்ற பிள்ளைகளில் சிலர் படிக்காமல் ஊரில் எதையோ ஒன்றைச் செய்கிறார்கள், சிலர் தாரவாடா போய் படித்து பட்டம் பெற்று வசதியான வாழ்வுக்கு நகர்கிறார்கள்.
வாசண்ணாவின் மனைவி துளசக்கா உற்ற துணையாக அவர் இன்ப துன்பங்களில் கடைசி வரை உடன் நிற்கிறாள். மகன் கேசவனின் மனைவி உட்பட பல தாரவாடா பெண்கள் சுதந்திப்  போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள். நலகுந்தா பெண்களைப் போல் அல்லாமல் சுதந்திர தாகத்துடன் இருக்கிறார்கள். ஆச்சாரமான வாசுதேவாச்சாரியார் குடும்பத்தில் கலப்புத் திருமணமும் நடக்கிறது. காலம் எதற்காகவும் ,எவர் பொருட்டும் காத்திருப்பதில்லை. அது நதி போல ஓடிக்கொண்டே இருக்கிறது. சில இன்பமான, துன்பமான நினைவுகள் மட்டும் பாறை இடுக்கில் மாட்டிய
நாணல் புற்களாகவோ, அழுக்குச் சகதியாகவோ அங்கேயே தங்கிவிடுகிறது.

ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம்,முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ரேஷன் முறை,கிரிப்ஸா மிஷன், க்விட் இண்டியா,
ஈஸ்ட் இண்டியா கம்பெனி வெளியேறி பிரிட்டிஷ் ராணி ஆட்சிப் பொறுப்பேற்றது என்று நாம் பாடப்புத்தகத்தில் வாசித்த நிகழ்வுகள் கதையின் ஊடே வந்தபடியே இருக்கிறது. சிறிய கிராமத்திலும் மக்கள் சுதந்திர தாகத்துடன் இருக்கிறார்கள். பெண்கள் சுதேசி உப்பு விற்க வருபவர்களுக்கு ஆரத்தி எடுக்கிறார்கள்.
ஆகஸ்ட் 14 காலையில் இருந்தே ஊரே சேர்ந்து கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. நம் மனதிலும் அந்தக் குதூகலம் சேர்ந்துவிடுகிறது.அன்று மாலை மழை பொழிகிறது. அந்த மழை உற்சாகத்தை அதிகமாக்க வந்தது போல தாரவாடா மக்கள் கூவிக் கும்மாளமிடுகிறார்கள். நாவலை வாசிக்கும் நாமும் தான். நாடு சுதந்திரம் பெறுகிறது. நம் பாரதக்கொடி ஏற்றப்படுகிறது. சில நாளில் தன் பழுத்த வயதில் வாசுதேவாச்சாரியார் மரணிக்கிறார். நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைப் போலவே ஒரு சராசரி குடும்ப வாழ்வில் மனிதர்களின் போராட்டமும்.. அது அத்தனை எளிதானதல்ல.


இந்த நாவலில் இன்னொரு சம்பவம். நவலகுந்தாவில் பிளேக் நோய் பரவுகிறது. பிளேக், காலரா எல்லாம் சில ஆண்டுகளாக பண்டிகை திருவிழாக்கள் போல வருடாவருடம் வரும் என்ற போதும் அந்த ஆண்டு மட்டும் எப்போதோ வரும் முழு சூரிய கிரகணம் போல வருகிறது. மக்கள் ஆங்காங்கே செத்து மடிகிறார்கள். எந்தத்தெருவில் யார் இறந்தார் என்பதே பேச்சாக இருக்கிறது. அரசாங்கம் பிளேக் கேம்பிற்கு மக்களை இடம் பெயர்த்துகிறது. போதிய உணவின்றி, சுகாதாரம் இன்றி மக்கள் அவதியுறுகிறார்கள். செய்வதற்கு வேலை இன்றி கேப்பிலேயை முடங்கிக்கிடக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்தப் பகுதியை வாசிக்கையில் கொரோனாவிற்கு அஞ்சி வீட்டில் கண்டுண்டு இருக்கும் நம் இன்றைய நிலையோடு ஒத்துப் போகிறது. நிலையற்ற வாழ்வில் துன்பமும் கடந்து போகும். நோய் தீர்ந்து மக்கள் தன் அன்றாடங்களுக்குத் திரும்புகிறார்கள் நாளை நாம் அன்றாடங்களுக்குத் திரும்பப்போவதைப் போலவே..





Sunday, March 22, 2020

வாடி வாசல்

இந்தத் தனித்திருத்தல் மீண்டும் என்னை புத்தகங்களின் பக்கம் திருப்பி இருக்கிறது.

சி.சு.செல்லாப்பாவின் 'வாடி வாசல்'.
பதினெட்டு பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்தக் குறுநாவல் இன்னும் என் போன்ற சோம்பேறிக்காக காத்துக் கொண்டுதான் இருக்கிறது.

பாதியில்விட்டிருந்த நாவலை இன்று மீண்டும் முதலில் இருந்து தொடங்கினேன்.

சிறுவயதில் எங்கள் வீட்டு வாசலில் தான் வாடிவாசல் கட்டப்படும். அனுமதியை மீறி பக்கத்து வீட்டிலிருந்து தாவி ஏறி மாடி நிறைய திமிரும் மக்கள் கூட்டமும், ஆறிப்போன பொங்கலைத் தின்றபடி என் வீட்டில் எனக்கே நின்று வேடிக்கைப் பார்க்க இடமில்லையா என்ற பெருமிதம் கலந்த அங்கலாய்ப்பும் என்று என் நினைவில் சேகரமாகியுள்ள ஜல்லிக் கட்டு வேறு. அசலான ஜல்லிக்கட்டு இந்த வாடி வாசல் நாவலில் இருக்கிறது.

அத்தனை அருமையான விவரணைகள். அந்தக் கூட்ட நெரிசலும், வெயிலும், மனிதக்குரல்களும், வியர்வை மணமும், புழுதி நெடியும் அசலான ஒரு வாடிவாசலில் நம்மைக் கொண்டு வந்து இறக்கிவிடுகிறது. காளைகள் வரத்தொடங்குகையில் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து நம்மையும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. வெறுமனே உடல் பலமும் துணிச்சலும் மட்டுமல்ல , ஒரு மாடுபிடி வீரனின் வெற்றி எதிர்வரும் காளையின் இயல்பை, அதன் மனவோட்டத்தைக் கணித்து இயங்குவதில் இருக்கிறது. பிச்சி அத்தகைய ஒரு அசலான வீரன். தளபதி போல அவனுடன் கூட நிற்கும் மருதனும் சளைத்தவன் அல்ல.

ஜல்லிக்கட்டைப் பற்றியே அதிகப் பக்கங்களுக்கு விவரணைகள் உள்ள இந்நாவலில் ஆசிரியர் போகிற போக்கில் மனித மனங்களின் இயங்கு திசையை,அதன் நிறங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார்.

வெற்றி.. அதை நோக்கித் தான் அத்தனை மனிதனும் இயங்கிக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் வெற்றவர்களுக்கானது. தோல்வியுற்றவனின் மனம் அவனை தூங்கவிடுவதில்லை. குப்பற விழுந்தவன் மீண்டும் எழுந்து ஓடியே ஆகவேண்டும். தோல்வியில் நின்று விட்டவன் பிணத்திற்குச் சமம்.

பிச்சியும் அப்படித்தான். தகப்பன் தோற்ற இடத்தில் வெற்றியை நாட்ட வருகிறான். வருடங்கள் கடந்தபின்னும் அவன் தகப்பனின் தோல்வி அங்கே அழியாத கறையாக இருக்கிறது. அதைத் துடைத்தே ஆகவேண்டும் என்று அடுத்த தலைமுறை வருகிறது. ஆம் தோல்வி மனிதனை தூங்கவிடுவதில்லை. அவன் எளியவனோ வலியவனோ. அதனால் தான் தன் தகப்பனைக் கொன்ற ஜமீன் காளையை அடக்க பிச்சி வருகிறான். ஜமீன்தார் முன் நிமிர்ந்து நிற்க கூசும் உடல் தான், அவரிடம் யாசகம் வாங்கும் கைகள் தான், அவர் கண் நோக்கத் தாழும் விழிகள் தான், ஆனால் மனம் ஓயாது வெல்லத் துடிக்கும். வற்றிய வயிறும் தோல்வியை செரிக்க ஒப்பாது. ஜமீன் காளை, எதற்கு பொல்லாப்பு என்று ஒதுங்கும் மக்கள் மத்தியில் அவன் களமிறங்குகிறான். களத்தில் அவன் அத்தனையும் மறக்கிறான், சமூக அடுக்கில் அவன் நிலை, ஜமீன்தார், பின் விளைவுகள் அத்தனையும். அவன் கண்முன்னே தகப்பனின் தோல்வி மட்டுமே சீறிக் கொண்டு வருகிறது. அத்தனை நிதானமாக, அத்தனை தீர்க்கமாக இறங்கி அடிக்கிறான். உயிரை வெற்றிக்குப் பணயமாக வைத்து ஆடுகிறான். வெல்கிறான்..

தோல்வி மனிதனை தூங்கவிடுவதில்லை. எளியவனையே அமரவிடாத தோல்வி வலியவனை என்ன செய்யும்? பணம், செல்வாக்கு, அதிகாரம், திமிர் கொண்ட ஒரு மனிதனை தோல்வி என்ன செய்யும்? பிச்சியைப் போல் வருடங்கள் காத்திருக்க விடாது. அந்தக் கறையை அன்றே துடை. தோற்ற மனம் ஒரு மிருகமாக மாறிவிடுகிறது. அதற்கு எந்த நியாயங்களும் தேவை இல்லை. இரக்க மனம் தோற்றவனுக்கு ஆபத்து. ஜமீன்தார் வென்றவனுக்குப்  பரிசு தருகிறார். காயம் பட்ட அவனுக்கு உதவுகிறார். பின் மிக நிதானமாகத் தன் பெருமை மிகு காளையைத் தேடிப்போகிறார், பலரைக் குத்திக் கிழித்தும் ,இன்னும் ஆத்திரம் அடங்காமல் திமிரிக் கொண்டிருக்கும் காளையைப் பார்க்கிறார்,ஊரே அதன் ஆக்ரோஷம் கண்டு அஞ்சி நிற்கிறது, ஆனால் ஜமீன்தாருக்கு அது இப்போது ஒரு தோல்வியின் சின்னம் மட்டுமே. நேற்று வரை கௌரவத்தின் சின்னமாக இருந்த ஒன்று இன்று வெறும் ஒரு விலங்காக எஞ்சிவிடுகிறது. தூப்பாக்கியை எடுக்கிறார், இரண்டு முறை சுடுகிறார். அவர் கைகளில் நடுக்கமில்லை, அத்தனை உறுதி. இறந்து விழும் மிருகத்தின் குருதியில் தோல்வியை கழுவியதாய் ஒரு நிம்மதி. ஆம் தோற்றவன் வென்றே ஆகவேண்டும், வழிகள் தான் வெவ்வேறு. இந்த உலகம் இதைத்தான் கோருகிறாதா?! ஆம் அல்லது இல்லை அவரவர் விருப்பம்.

மனிதனின் இந்த ஆட்டத்தில் அந்த மிருகத்திற்கு என்ன சம்பந்தம்? அதற்கு இந்த விளையாட்டு பற்றி தெரியாது. ஊட்டப்பட்ட ரோசம் தான் அதற்கு. இல்லையெனில் அது ஒரு எளிய மிருகம். மனிதனுக்கு வரும் ரோசம் தான் ஆபத்தானது , அது தயவு தாட்சண்யம் பார்க்காது .