ஒற்றையடிப்பாதை ஒன்றில்
ரகசியங்கள் சுமந்தவாறு
நடக்கிறேன்
பாரம் சற்று அதிகம்தான் எனினும்
நடையில் தெரியும் துள்ளல்
வியப்பூட்டுவதாய் இருக்கிறது
உனக்கான வழித்துணையும்
நமதிந்த ரகசியம் தான்
என்பதறிவேன்
ரகசியங்களை உரசிச்செல்லும்
சம்பவங்களும் சம்பாசனைகளும்
ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது நமக்கு
இருவருக்கான ரகசியங்கள்
தனித்த பொழுதுகளில்
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்
துள்ளத்தொடங்கிவிடுகின்றன
வாசல் வரை வரமுடியா அவைகள்
கொல்லைப்புறத் தோட்டமெங்கும்
நமக்கான உலகத்தை
ஸ்ருஷ்டித்தபடியே இருக்கின்றன
நன்றி:கல்கி.
No comments:
Post a Comment