Friday, August 30, 2013

அத்தனை ஆதூரமாய் என்னை அணைக்கும் இரவு 

என் முகமூடியைக் கழற்றி எறிகிறாய்
நான் நிர்வாணம் தரித்துக்கொள்கிறேன்
என் கூந்தல் கட்டவிழ்க்கிறாய் 
இனி மின்மினிகள் நுழைந்தாடட்டுமென  
அத்தோடு தென்றலையும் கொணர்கிறாய் 
பெரும் அமைதியிழக்கிறேன்

மேலும் தனித்த வனம் தருகிறாய் 
பசியைப் பறித்துக்கொள்கிறாய்

நான்
ஆப்பிள் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டுகிறேன்
இரவே,  
புரவி ஏறி வருகிறான் நிலாக்காதலன்
இனி 
என் பாடு அவன் பாடல்!

*****
செ.சுஜாதா,
நன்றி: உயிரோசை.காம் .

Monday, August 26, 2013

அங்கிருந்த காட்சிப்பிழை
வலிய உன் கரங்கள் 
மேகத்தை உருட்டி இறுக்குகின்றன 

மற்றுமொரு
இரவை
அடிவயிற்றில் எத்தி முடுக்குகிறாய் 

அழுந்தும் உன் ஆள்காட்டி விரலில்
கசியத்தொடங்குகின்றன
நட்சத்திரங்கள் 

கங்காரு நடையின் தோற்றமுடைய
உனது 
இப்பயணத்தில்
சிதைகின்றன
பறவையின் வழித்தடங்கள் 

மருண்டு தேயும் பிறைநிலவை 
நீ நிமிர்ந்து காண எத்தனிக்காதே 

எறும்புகள் ஊரும்
விறைத்த  காட்டு மானின் 
விழிகளை அங்கே நீ காணக்கூடும்

***
செ.சுஜாதா,
நன்றி: நவீனவிருட்சம் .

Friday, August 23, 2013

மழைக்காதலனின் தேசம் அடைந்தப் பாலைவனக்காரி

அவள் இப்பொழுதெல்லாம் அவனை அடிக்கடிப் பார்க்கிறாள். அவன் வரும்போதெல்லாம் அவளுக்குப் பரவசம் தொற்றிக்கொள்ளும். ஜன்னல் திரைச்சீலை விலக்கி அவனை இமை கொட்டாமல் ரசித்துக்கொண்டிருப்பாள். சிலநேரம் துணிந்து வாசல் படிக்கட்டுவரை வந்துப் பார்ப்பாள். அவனின் முதல் தீண்டலின் சிலிர்ப்பை,நெஞ்சுக்குழி வரை நீளும் அவன் அத்துமீறலை அவள் மிகவும் விரும்பினாள். அந்த நாளுக்காக கற்பனையில் உருகி சிரித்துக்கொள்வாள்.

அவளின் மனதை அவன் முழுவதாய் அறிந்திருந்தான். அவள் கண்களின் வரிகளில் அவனுக்கான சேதி இருந்தது. ஒரு சில முறை அவளை வழியில் பார்த்துப் பேச முற்பட்டான். ஆனால் அவள்தான் பதறிக்கொண்டு வீட்டிற்குள் ஓடி விட்டாள். அவன் பொறுமை இழந்திருந்தான். எத்தனைக் காலம்தான் இப்படி எட்டி நின்று காதல் கொள்வது என்று??

அன்று காலையிலேயே அவன் ஒரு முடிவெடுத்திருந்தான். அவள் வெளியில் செல்லும் நேரம் எப்போது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இன்று மாலை அவளையும் அவனையும் இணைக்கும் என்று ஒருமுறை சொல்லிக்கொண்டான்,  சின்னதாய் புன்னகைத்துக்கொண்டான்.

அவள் வழக்கம்போல அன்றும் மாலை வெளியே வந்தாள். அவன் வருகிறானா என்று ஒரு முறை திசை எங்கும் பார்வையைச் சுழற்றினாள். அவன் இல்லை, கொஞ்சம் ஆசுவாசம் கொண்டவளாக நடக்கத்தொடங்கினாள். அவனற்ற வீதியில் நடப்பது அவளுக்குப் பாரமாக இருந்தது. வெறுமையை முதுகில் சுமந்துகொண்டு நடப்பது மிக கொடுமை. அவன் வந்திருக்கக்கூடாதா ?  இல்லை இல்லை அவன் வராமல் இருப்பதே நல்லது. மனம் இங்கும் அங்கும் ஊஞ்சல் ஆடியது!!

இப்போது அவன் தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அவளைப் பின்தொடரத் தொடங்கினான். அவள் உள்ளுணர்வு விழித்துக்கொண்டது. அவன் வருகிறான்.. திரும்பிப்பார்க்காமலே அவன் வருகையை அவள் முதுகில் உணர்ந்தாள். உடலில் குளுமை பரவி, மயிர்கால்கள் சிலிர்த்துக்கொண்டன. 

அவளைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. நடையின் வேகத்தைக் கூட்டினாள் . அவனும் வேக வேகமாக நடக்கத்தொடங்கினான். ரோட்டில் ஓடினால் அசிங்கமாக இருக்கும், ஆனாலும் வேறு வழியில்லை. அவள் ஓட்டம் கலந்த நடைக்கு மாறியிருந்தாள். ம்ம்..வேகம் கூட்டக் கூட்ட அவனும் வெறிகொண்டான். இன்று அவளை அடைந்தே தீருவது என்ற விளிம்பிற்கு அவன் வந்திருந்தான்.

அவள் பதறி ஓடிக்கொண்டிருந்தாள். அவன் கோபத்தோடு துரத்திக்கொண்டிருந்தான். அவனின் மூச்சுக்காற்று அவள் புறங்கழுத்தை சில்லென்று தொட்டது. அவள் கால்கள் தளர்ந்தன.. இதயம் குழையத்தொடங்கவும் ஓட்டத்தின் தாளம் மாறிஇருந்தது . ஓடுவதைப் போல் பாசாங்குச் செய்தபடி அவள் நடக்கத்தொடங்கி இருந்தாள்.

அவள் முதுகுப்புறம் மொத்தமும் அவன் பரவத்தொடங்கியிருந்தான்.
அவன் முத்தத்தின் ஈரத்தில் அவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக்கொள்ளத் தொடங்கினாள் .இவ்வாறாக அந்த மழைக்காதலனின் தேசம் அடைந்தாள் அந்தப் பாலைவனக்காரி.

செ.சுஜாதா.

Tuesday, August 20, 2013

கண்ணாடி மீன்கள்
கொஞ்சம் இமைகளை இலகுவாக்கு 

பெண்ணின் முதுகுத்தண்டாய் சரிந்து இறங்கும்
இந்த ஒற்றையடிப்பாதை
அழகிய தாமரைத் தடாகத்திற்கு
உன்னை அழைத்துச்செல்லும்

கொழுத்த செந்நாரைகள்
நீந்தப்பழகும் கண்ணாடி மீன்களை
தின்று திளைத்தபடி இருக்கின்றன

கண்டுகளிக்கலாம்
முடிந்தால்
உன் தூண்டிலையும் உடன் எடுத்து வா

ஆளற்ற வீட்டின்முன்
எத்தனைநேரம் தான் வெறித்திருப்பாய்

****
செ .சுஜாதா.
நன்றி: நவீன விருட்சம்.

கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து புள்ளியாகியத் தருணம்

பயணங்கள் என்றும் சுகமானது. ஒரு புத்தகம் நமக்குத் தரும் அத்தனை அனுபவத்தையும், அறிதலையும் ஒரு பயணம் நமக்கு கற்றுத்தரும். என்னஒன்று நம் கண்களையும், மனதையும் திறந்துவைத்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.

பயணத்தை விரும்பாத மனிதர் உண்டா? ஜன்னலோர சீட்டுக்கு அடித்துக்கொள்ளாமல் பால்யத்தைக் கடந்துவிடுதல் சாத்தியமா? எனக்கு பயணங்கள் மிகப்பிடிக்கும். ஆனாலும் நான் எப்போதும் துணையுடனேயே பயணிக்கிறேன். அப்பா, அண்ணன், அக்கா, கணவர் என்று யாரேனும் என் பயணத்தைப் பங்கிட்டுக்கொள்கிறார்கள். தனித்த பயணம் எனக்கு வாய்ப்பது மிகமிக அரிது. பலவருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் நான் தனியாகப் பயணித்தேன்.

முன்பதிவு செய்யப்படாத பாசஞ்சர் ரயில்.. மூட்டை முடிச்சுக்களோடு அரட்டை அடித்தபடி பிளாட்பாரத்தில் அமர்ந்திருக்கும் எளிய மக்கள். பாசஞ்செரில் எப்போதும் கூட்டம் முண்டியடிக்கும். பலவருடங்களுக்குப் பிறகு அதே ரயில் பயணம். அதே திருவிழாக்கூட்டம். மூச்சிரைக்க ஓடிவரும் தாய்நாயைப்போல ரயில் வந்துசேரவும் நாங்களெல்லாம் முலைதேடி முண்டும் குட்டி நாய்களென ரயில்பெட்டியின் வாசல் தேடி ஓடினோம். ஏற்கெனவே நிற்க இடமின்றி நிரம்பி இருந்த கூட்டத்தில் நாங்களும் நுழைந்து ஐக்கியமானோம். நான் இருந்த பெட்டி முழுவதும் முஸ்லிம் பெண்கள் நிறைந்து இருந்தார்கள்.. வழியில் ஒரு தர்க்கா இருப்பதாகவும் அவர்கள் அங்கு இறங்கியவுடன் உட்கார இடம்கிடைத்துவிடும் என்று வழியனுப்ப வந்த கணவர் சமாதானம் சொன்னார்.

நேரம் குறைவு, அலைச்சல் குறைவு, வீட்டுவாசலிலேயே சென்று இறங்கிவிடலாம் என்று ஒரு கார் பயணத்தில் நிறைய வசதிகள் உண்டு என்றபோதும்  மக்களோடு மக்களாக செல்லும்போது பயணம் தரும் அனுபவம் பெரியது. தொட்டிமீனுக்கும் , ஆற்றுமீனுக்கும் உள்ள அனுபவ வித்தியாசம் அது என்று சொல்லலாம்.

ரயிலில் ஏறியாகிவிட்டது. நகரத்தொடங்கிவிட்ட ரயிலில் ஏறக்குறைய அனைவரும் தாங்கள் உட்கார்வதற்கு இடத்தை தேடிக்கொண்டுவிட்டனர். எல்லோரும் கீழேயே பாய் விரித்தோ, செய்தித்தாள் விரித்தோ, அல்லது எதுவும் இல்லாமலோ அப்படியே உட்கார்ந்து அரட்டையைத் தொடங்கிவிட்டிருந்தனர். நான் மட்டும் நின்றுகொண்டிருந்தேன்.
 கல்வி மூலம் நம் அறிவை செம்மை படுத்திக்கொள்கிறோமோ  இல்லையோ,முதலில் நாகரீகத்தை கற்றுக்கொண்டு விடுகிறோம். நமக்கு உணவளிக்கும் இந்த மண் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் எந்தக் கையில் கத்தி , எந்தக் கையில் முள்கரண்டி பிடித்து உண்ணவேண்டும் என்று நன்றாக அறிந்துவைத்திருக்கிறோம். நம் கழுத்தை சுற்றி கட்டப்பட்டிருக்கும் இந்த நாகரீக கயிறு  நம்மை அதன் வட்டம் தாண்டி இயங்கவிடுவதில்லை. அதே கயிறுதான் என்னை எல்லோரோடும் கீழே அமரவிடாமல் செய்தது. நான் நின்றுகொண்டே இருந்தேன், கிரி என்றொரு பையன் எழுந்து எனக்கு இடம் கொடுக்கும் வரை.  

ரயில் நகரத் தொடங்கிய அடுத்த அரைமணி நேரத்தில் அந்த முஸ்லிம் பெண்கள் அந்த ரயில்பெட்டியை தங்கள் வீடாக மாற்றத்தொடங்கியிருந்தனர். ரகசியங்கள் மேல் எப்போதும் நமக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. நாம் அறிந்திடாத விஷயங்கள், நமக்கு மறுக்கப்பட்ட விஷயங்கள் எப்போதும் நம் ஆர்வத்தை தூண்டுவதாய் இருக்கின்றன. அப்படித்தான் அந்தப் பெண்கள் தங்கள் தலையில் சுற்றியிருந்த முக்காட்டை கழற்றி வைத்தபோது எனக்கு மிகுந்த பரவசமாக இருந்தது. அவர்கள் அத்தனைபேர் முகமும் வேறாக தெரிந்தது. அவர்கள் கூந்தல் கலைத்து, காது மடல் தீண்டி, புறங்கழுத்தை குறுகுறுக்கச்செய்த அந்தக் காற்றும் பரவசப்பட்டிருக்கக்கூடும்.

அவர்கள் வேறுமொழி பேசிக்கொண்டிருந்தனர். கன்னடமும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. பெண்கள் கூட்டத்தில் அமர்ந்திருக்க அசௌகர்யப்பட்டு, தன் இடத்தை எனக்குத் தந்துவிட்டுப்போன அந்த கிரி என்கிற பையனும்  தன் தமிழை தன்னோடு கொண்டு சென்றுவிட்டான். நான் என் தமிழோடு தனியானேன்.
தடதடத்து ஓடும் ரயில், முகம்உரசி முத்தமிடும் காற்று, ஜன்னலோர ஒற்றை இருக்கை இதைவிட ஏகாந்தமானத் தருணம் வாய்க்குமா? நான் ஹெட்போனை காதுகளில் பொருத்திக்கொண்டேன். “...பேசக்கூடாது.... வெறும் பேச்சில் சுகம் ஏதும் இல்லை” என்று SPB என்னை சமாதானம் செய்யத்தொடங்கினார்..

அந்தபெண்கள் கூட்டத்தில் இருவர் மிக இளம் பெண்கள்.இருவரும்  திருமணம் ஆனவர்கள். குழந்தைமையை  இன்னும் கை நழுவவிடாத அந்த இருவரும் எனக்கு எதிரில் ஒற்றை இருக்கையில் நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். வழி நெடுக பின்னோக்கி நகரும் இயற்கை காட்சிகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தபடி வந்தனர். குதூகலமும்,மகிழ்ச்சியும் அவர்களை சுற்றி ஒரு பறவையைப் போல சிறகடித்துக்கொண்டிருந்தது. அந்த இருவரில் ஒரு பெண் ஏன் என் கண்களை சந்திக்கும்போதெல்லாம் மின்னல் போன்ற ஒரு புன்னகையை வீசுகிறாள்?! அவள் கண்களில் கொப்புளிக்கும் ஒளியின் வீச்சை அவள் அறிவாளா? அந்த ஒளியில் என் தொலைந்த பால்யத்தை அவள் நினைவூட்டுகிறாள் என்று அவளிடம் எப்படித் தெரிவிப்பது??..மின்மினிப்பூச்சியாய் உன் ஆயுள் உள்ளவரை நீ ஒளிர்ந்திருக்கவேண்டும் பெண்ணே!!.என் மனம் ஒரு முறை விம்மி அமிழ்ந்தது.
 கடலுக்கடியில் ஒளிந்திருக்கும் அற்புத உலகத்தை கண்ணாடித் தடுப்புக்குள் நின்று ரசிப்பதைப் போல அந்தப் பயணத்தின் குதூகலங்களை நான் வெறும் பார்வையாளனாக ரசித்துக்கொண்டிருந்தேன். நீருக்குள் சீறிப்பாய என்னால் இயலாது, நான் நீந்த மறந்து வருடங்கள் ஆகிறது.

ரயில் ஓமலூரை தாண்டுகையில் அந்த பட்டாம்பூச்சிப் பெண் 'குடிக்கத் தண்ணீர் இருக்கா?' என்று என்னைக் கேட்டாள். இருக்கு, ஆனா நான் வாய்வைத்து குடிச்சுட்டேன், எச்சில் ஆகிடுச்சு என்பதை கிட்டத்தட்ட ஒரு நாட்டியமே ஆடி விளக்கிச் சொன்னேன். அவள் புன்னகைத்தபடி பரவாயில்லை கொடுங்கள் என்று சைகை செய்தாள். தண்ணீர் பாட்டிலின் வாய் பகுதியை என் துப்பட்டாவால் நன்றாக துடைத்துவிட்டு அவளிடம் தந்தேன். ஓடையில், தன் கூட்டத்தோடு நீர் அருந்தும் காட்டு மானின் பாவனையை ஒத்ததாய் இருந்தது அவள் நீர் அருந்திய அழகு. நான் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து ஒரு புள்ளியாகிக்கொண்டிருந்தேன்..

பயணங்கள் இனிமையானது...

***


Saturday, August 3, 2013

கட்டமைப்பின் இசைவு


அறுந்து விழுதலின் சாத்தியங்கள் உரைக்கும் 
அந்தப் புராதன பாலத்தின் கிரீச் ஒலி தொட்டு 
உறைந்த என் ஐம்புலன்கள்
பயணத்தின் பாதைதோறும் கிடக்கின்றன 

துள்ளிச்சரியும் தூரத்து சிற்றருவி
தன் கூதல் ஒலி நீட்டி 
கன்னத்து ரோமத்தை நெருடுகிறது 

நீண்டு நெளியும் 
ஓர் புராதன தொங்குப் பாலத்தில் 
நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன்

புணர்தலை கலையாக்க முயலும் 
ஊமைக்கலைஞனின் உளிப்பேச்சு
அப்பாறையெங்கும் சரிந்து அசைகிறது 

முக்கி முக்கி
களைத்த தாய் மீன்கள் 
கொஞ்சம் சூரியனை பருகவெண்ணி
கூழாங்கல் ஏறுகின்றன 

கூட்டு நடனம் ஒன்றை 
இயற்றிக்காட்டியபடி பறவைக்கூட்டம் விண் வென்று 
கரையேகுகின்றன 

****
நன்றி: கீற்று இணைய இதழ்