Thursday, January 11, 2024

 அதோ

வெகு தொலைவில் 

என் வயது சென்று கொண்டு இருக்கிறது


நான் 

என் பால்யத்தின் வீதிகளில் சைக்கிள்

ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்


என் உள்ளங்கையில்

தேன் மிட்டாயின் பிசுபிசுப்பு

இன்னும் இருக்கிறது பாருங்கள்


தீப்பெட்டியில் வளர்க்கும்

பொன் வண்டுக்கு

ஒரு இலையை பறித்துப் போட்டிருக்கிறேன் 


பாவாடையில் வைத்துக் கடித்துப் பகிர்ந்த 

மிட்டாயின் துணுக்குகளை 

எறும்புகள் தின்னும் 


இந்த

உச்சிப் பொழுதில் 

கண் சுருக்கி அண்ணாந்து

நான் வானவில் தேடுகிறேன் 


என் வயது 

என்னை அதட்டி

அழைக்கிறது


தானிய கப்பலுக்கும்

கரைக்குமாக பறக்கும் 

பறவை ஒன்றின்

நிழல் கடந்து போகிறது 


பாப்பா பாப்பா என்று அப்பா அழைக்கும் குரல்

இரு வேறு திசைகளிலும்

கேட்கிறது

Wednesday, October 26, 2022

பண்டிகைக்கு வந்து திரும்பும் மகளுக்கு 

பலகாரங்களை பையில் அடுக்குகிறாள்

அம்மா

பொறந்த வீட்டையே அள்ளி பைக்குள் போடும்

 அவள்

நிரப்பவே முடியாத வெற்றிடம் ஒன்றை நிரப்ப முயன்று

தோற்றுக் கொண்டிருக்கிறாள்

Monday, October 10, 2022

ஞாபகங்களின் ஊஞ்சல்

 எங்கிருந்தோ மிதந்து வரும் 

தாளித்த வாசனை 

ரவிக்கை இல்லா வெள்ளைசீலைக்காரியின் 

சுருக்கம் நிறைந்த கைகளை 

நினைவுபடுத்தும் 


கறந்த பாலின் வாசனை 

என் மார் முட்டியவளின் 

வாயோர சுளிப்பை 

நினைவுபடுத்தும்

எப்போதும் 


இரும்பின் வாசனை உதிரத்திற்கு 

என்று சொன்ன கவி  

தூமைக் காலம் தோறும் 

நினைவில் வருகிறான் 


மழைத்த மண்ணின் வாசனை 

தாய் வீட்டை தவறாமல் 

கொண்டுவந்து சேர்க்கும் 


மல்லிகையின் வாசனை 

ஏனோ அக்காளின் 

கல்யாணத்தையே நினைவுபடுத்தும் 


சாராய வாடைக்கும் 

மூத்திர வாடைக்கும்  கூட 

கொஞ்சம் நினைவுகள் 

மிச்சம்


உன்  வியர்வையின் வாசனையை

நினைவுபடுத்த

வாசனைகள் தோற்று 

மண்டியிட்டுக் கிடக்குமந்த 

ஒற்றைப் பின் அந்தி மட்டுமே   

கைவசம் 


****

Saturday, April 30, 2022

 பிடித்தமான அப்பா தான் 

பிடித்தமான கணவனாக

இருக்கத் தவறியவர்


பிடித்தமான நண்பன்

காதலனாகி

பிடிக்காமல் போகிறான்


பிடித்தமான காதலன் தான்

கணவனாகி 

நிறம் மாறுகிறான்


பிடித்தத்தின் காரணிகள்

அவரவர் பட்டியலில்

வேறு வேறு


பிடிக்காதவைகளை

ஏற்கப் பழகியவளையே

பிடித்துப் போகிறது 

ஆணுக்கு

Wednesday, March 31, 2021

காதல் மச்சம்

 விவரம் தெரிந்த நாள்முதலாய்

கூடவே வந்த மச்சம் ஒன்று

விரலை விட்டு நழுவிச் சென்றது

பார்க்கப் பார்க்கவே கரைந்து

காணாமல் போனது

அத்தனைப் பிடிவாதமாய்


நரை கூடத்தொடங்கிவிட்ட தேய்பிறைப் பொழுதில்

கன்னத்தில் வந்து சிந்தியிருக்கிறது புதியதொரு மச்சம்

கிள்ளக் கிள்ளத் திமிரி 

அடர்ந்து வருகிறது

அத்தனை தீர்க்கமாய் 


மச்சங்களுக்கு 

காதலின் சாயல் 

என்பேன் நான்

பாதியில் இறங்கும் திரை

 செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளின் 

குதூகலத்தை ஒத்தது

கனவுகளை நிஜமாக்கிப் பார்க்கும்

இந்த நாடகம்


அடுப்பு போலவே ஒரு அடுப்பு

சோறு போலவே ஒரு பிடிசோறு

அம்மா போலவே ஒரு அம்மா

அப்பா போலவே ஒரு அப்பா

பிள்ளை போலவே ஒரு பிள்ளை

வாழ்க்கை போலவே ஒரு வாழ்க்கை


நாடகம் முடிந்து

எழுந்து நகர்கையில்

வலியுடன் முறியும் கனவுகள் 

பாதியில் கைவிடப்பட்ட சிற்பங்கள்


பைத்தியக்காரி

 நளினத்தைக் கைவிட்டு

வெடித்துச் சிரித்து மகிழ்பவள்


கெட்டவார்த்தைகளை இனிப்பு போல 

மென்று சுவைப்பவள்


விலகும் மாராப்பில்

அக்கறையற்று  இருப்பவள்


குறுகுறுக்கும் கண்களுக்கு

அழுக்கேறிய யோனியைத் திறந்து காட்டி

அலறவிடுபவள்


அச்சத்தைத் துடைத்துவிட்ட

பீளை வடியும் கண் கொண்டவள்


இரைச்சல்களுக்கு நடுவே

தெருநாயை அணைத்தபடி

உறங்கிப் போகிறவள்


மரத்திலாடும் இலைகளை கண்கொட்டாமல் ரசித்துக்கிடப்பவள்


இரவின் வீதியில் அரசியென

நகர்வலம் வரும் 

அவள் மட்டுமே


கட்டுகளை உடைத்தெறிந்து

நெஞ்சு நிமிர்த்தி

வெளியேற முடிந்தவள்

பிழைகளின் உலகம்

 


அடுத்தவன் பங்கில்

அறியாமல் எடுத்த ஒரு விள்ளல்


இருட்டில் தரப்பட்ட அவசர முத்தம்


பட்டுச்சட்டையில் சிந்திய குங்குமம்


கூட்ட நெரிசலில் கோர்க்கும்

இரு கைகள்


மாற்றிப் போடப்பட்ட சட்டை பொத்தான்


திருத்தமான முகத்தின்

நெற்றித் தழும்பு


அம்மாவிற்கு தெரியாமல்

அட்டைப்பெட்டியில் வளர்க்கும்

எலிக் குஞ்சு


புதுசு என்று பீற்றிக் கொண்டவளின்

பையில் கொட்டிவிட்ட 

பேனா மை


இரவில் அவிழ்த்து வைக்கப்படும்

கொலுசுகள்


வருடங்களாய் உடன் வரும் 

ஒரு பரம ரகசியம்


உடைத்துவிட்டு ஒளித்து வைத்த

கண்ணாடிக் குருவிகள்


அப்பா சட்டையில் திருடி எடுக்கும்

சில்லறைக் காசுகள்


படிக்கச்செல்வதாய் சென்று பார்த்த

பதின்வயதுப் படங்கள்


நெருப்பில் விரல் நீட்டி

வெளியிழுக்கும் நிமிடங்கள்


பிழைகளின் அச்சில் சுழலும்

அழகியதோர் உலகம்


முன்னால் காதலி

 முன்னால் காதலிகள்

நினைவுகளின் பின் அடுக்கில்

கால் மேல் கால் போட்டு 

அமர்ந்திருக்கிறார்கள்


ஒரு வாசனையின் இழையில்

மிதக்கிறார்கள்


ஒரு பாடல் வரியில்

புரண்டு கண்சிமிட்டுகிறார்கள்


ஒரு சொல்லின் மீதேறி 

வந்து இறங்குகிறார்கள்


ஒரு செயலில்

நிறத்தில் 

இடத்தில்

பொருளிலென

ஓயாது

வந்தபடி இருக்கிறார்கள்


சூரியனைப்போல்

பின்னந்தலையில் ஒளிர்ந்திருக்கும் அவர்கள்

நினைவுகளை

கரும் நிழலென

நம்முன்னே நெளிய விடுகிறார்கள்


அவை கணம்தோறும்

நம் கால்களை இடறியபடியே இருக்கின்றன


கதிரேசன் என்றழைக்கப்பட்ட ராணி

 சிக்னலில் கையேந்துவதில்லை

உடலை வியாபாரமாக்கவில்லை

விஷேச வீடுகளில் விருந்தாளியாய்

போவதில்லை


உழைத்தே பிழைக்கும்

வீராப்பு ராணி


ஆண்கள் கழிப்பறையா

பெண்கள் கழிப்பறையா

இத்தனை பெரிய உலகில்

கொஞ்சம் மறைவிடம் கிடைக்காதா

குந்தி எழுந்தால் ஆச்சு


ஒரு முழம் பூவிற்கு ஒன்னேகாலாய்

தளர்த்தி விற்பவள்


சிநேகமாய் பேசுபவர்க்கும் சேர்த்தே

டீ வாங்குபவள்

 

அம்மைக்கு மணியார்டரில் 

அன்பை அனுப்புபவள்


பக்கத்தில் இருப்போருடன்

பகிர்ந்தே உண்பவள்


புகார்கள் அற்ற புன்னகைக்காரி


எஞ்சிய பூக்களோடு வீடு சேரும் அந்தியில்

வாலாட்டிக் காத்திருக்கும்

தன் தனித்த காமத்திற்கு

எதனை உணவாக இடுவாள்


தன் வீராப்பில் கொஞ்சத்தை 

பிய்த்து எடுத்து வீசுவாளா