Sunday, February 23, 2014

பரிசுத்தம்:



சில இடங்கள், சில நிகழ்வுகள், சில பொருட்கள் நமக்கு யாரையாவது நினைவு படுத்திவிடும். மழை பெய்தால் எனக்கு உடனே என் அம்மா வீடு ஞாபகத்திற்கு வரும். சிறு பிள்ளையாய் நான் விடுதியில் தங்கி படிக்கச் சென்ற நாள் முதல் எனக்கு மழை, வீட்டின் நினைவையும்,அம்மாவின் அருகாமையை தேடிப் பதறும் ஒரு பாதுகாப்பற்ற மனநிலையையும் உண்டு பண்ணும். அதே போல இப்போது சில காலமாக நான் ஆம்லெட் செய்யும் பொழுதுகளில் எல்லாம் எனக்கு அப்பாவின் ஞாபகம் தவறாமல் வந்துவிடுகிறது.

அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அன்று அப்பா நல்ல போதையில் இருந்தார். அம்மா தோட்டத்திற்கு போயிருந்தார்கள். அப்பா ப்ரிட்ஜில் இருந்து இரண்டு முட்டைகளை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் ஆம்லெட் போட்டுத் தரும்படி சொன்னார். எனக்கு அவர் மேல் கடும் கோபம். குடிச்சுட்டு வந்து எவ்ளோ திமிர் இருந்தா என்னை ஆம்லெட் போட்டுத் தர சொல்லுவார்? என்னை என்ன நினைச்சார் அவர் என்று கோபத்தில் அவரை திட்டினேன். அவர் 'சுஜி கண்ணு தயவு செஞ்சி போட்டு தா கண்ணு, அம்மா வேற காட்டுக்கு போய்ட்டா இல்லைனா அவளயாவது கேட்பேன்' என்று கிட்டத்தட்ட என்னிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

சொந்தமாக தண்ணியை கூட எடுத்து குடிக்கமாட்டார் அவர், எனவே அவராக போட்டுச் சாப்பிடவும் வழி இல்லை. சின்ன கிராமத்தில் நினைத்த நேரத்தில் எந்த கடையில் ஆம்லெட் கிடைக்கும்? ஆகையால் வேறு வழியும் இல்லாமல் ஒரு குழந்தையைப் போல் என்னிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். நான் கொஞ்சமும் இறங்கி வராமல் அவரை மீண்டும் மீண்டும் திட்டிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 10 நிமிடமாக என்னிடம் போராடிப் பார்த்துவிட்டு கடைசியில், 'சீ ..நீயெல்லாம் ஒரு பிள்ளையா' என்று திட்டிவிட்டு முட்டையை அப்படியே உடைத்து கீழ மேல எல்லாம் சிந்திக்கொண்டு குடித்துவிட்டு எழுந்து போய் விட்டார்.

என் திருமணத்திற்கு பிறகு அவர் குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவரின் நினைவு வெகுவாக தப்பிப்போன தருணத்தில் பிராந்தி என்று சொல்லி அவரிடம் ஆப்பிள் ஜூசை கொடுத்தபோது அவர் எவ்வளவு ஆசையாக குடித்தார்!! குடிப்பவர்களுக்கு சிகரெட், குட்கா என்று மற்ற கெட்ட பழக்கங்கள் சிலவும் இலவச இணைப்பாக சேர்ந்திருக்கும். ஆனால் அப்பா குடியை தவிர வேறு எதையும் தொடாதவர். குடிப்பவர்களைக் கண்டால் நின்றுகூட பேசாதவர் எப்படி அதில் மீளமுடியாமல் விழுந்தார் என்பது விதி.

குடியை வெல்ல நினைத்து மீண்டும் மீண்டும் பரிதாபமாக தோற்றுப்போன அவரிடம் எனக்கு ஒரு நொடிப்பொழுதும் வெறுப்பு வந்ததே இல்லை. இன்றும் குடித்துவிட்டு தள்ளாடி நடப்பவர்களை பார்த்தால் சொல்லமுடியாத இரக்கமும், பரிதாபமுமே எனக்கு தோன்றுகிறது.

இப்பொழுதெல்லாம், அந்த ஆம்லெட்டை தான் நான் போட்டுக் கொடுத்திருக்கக்கூடாதா? என்ன எனக்கு அப்படி ஒரு பிடிவாதம்? அதனால் என்ன சாதித்தேன் நான்? என்று மனம் ரொம்பவும் வேதனைப் படுகிறது. அவரின் சின்ன அந்த நேர சந்தோசத்தை உடைத்துவிடுவதில் எனக்கு அப்படி என்ன ஒரு குரூர மன திருப்தி? அவர் சொன்னதுபோல நானெல்லாம் ஒரு பிள்ளையா ?

என் அப்பாவைப்போல என்னை நேசித்தவர்கள் இல்லை, அவரைப்போல நல்லவர்கள் இல்லை , என் மனதில் அவரது இடத்தை நிரப்பக்கூடியவர்களும் இல்லை. அவரது
குடியால் நாங்கள் இழந்தது ஏராளம் ஆனாலும் அனைவரையும் நேசிக்கும் இதயமும், எளியவர்களுக்காக இறங்கும் குணமும், எந்த நிலையிலும் நியாயம் தவறாத பண்பும் எல்லா இழப்புகளையும் புறம் தள்ளும். அவரை நாங்கள் இழந்துவிட்டதாக எண்ணவே இல்லை. அவரின் குருதி என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் கொஞ்சம் மதுவின் வாடை இருக்கிறது.


                                          **********************

Thursday, February 13, 2014

அக்காள்

அவள் என் அக்கா. சித்தப்பா மகள் என்றபோதும் அவள் என் அக்கா தான். சித்தப்பா வீடும் எங்கள் வீடும் அடுத்தடுத்த வீடுகள் ஆகையால் ஒன்றாக வளர்ந்தோம் என்று சொல்லலாம். எனக்கு ஒரு அண்ணனும் ,அக்காவுக்கு ஒரு தங்கை,ஒரு தம்பியும் உண்டு. அக்காவை என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். கிட்டத்தட்ட எல்லோருக்கும்.

அவள் ரொம்ப பொறுப்பானவள். திருவிழாவுக்கோ, வேறு விசேசங்களுக்கோ உறவினர் வீட்டுக்கு நாங்கள் செல்கையில் கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நானும்,என் தங்கையும் மாட்டு வண்டியிலோ, ட்ராக்டர் வண்டியிலோ இல்லை புளியமரத்தடியிலோ அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கையில் அவள் மட்டும் தேங்காய் துருவிக்கொண்டோ, குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டோ அலைந்து கொண்டிருப்பாள். உறவினர்களிடம் நலம் விசாரித்துக்கொண்டு,அரட்டை அடித்துக்கொண்டு அவர்களோடு வேலை செய்யும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும். பெரியத்தனமாக நடப்பதாக கூறி அவளை எங்களுடன் நாங்கள் சேர்க்கமாட்டோம்.

அதே போல் ரொம்ப சுத்தக்காரி. தினம் உடுத்தும் உடைகளை அன்றன்றைக்கு அயர்ன் செய்து தான் உடுத்துவாள். துணி துவைக்க ஆள் இருந்தாலும் அவள் துணிகளை அவளே தான் துவைத்துக்கொள்வாள். தரையில் உரசி அழுக்காகி இருக்கும் பாவாடை நுனியை பார்த்து பார்த்து தேய்த்து அலசுவாள்.

அடிக்கடி எங்களை திட்டிக்கொண்டே இருப்பாள். ஆனால் எங்கள் மேல் அக்கறையாக இருப்பாள். என் தங்கை அவளை மதிக்கமாட்டாள்.அக்கா என்று கூப்பிடவும் மாட்டாள். நான் அக்கா மேல் மரியாதை கொண்டிருந்தேன். அவளிடம் கொஞ்சம் பயம் வைத்திருந்தேன். அக்கா திருச்சியில் கல்லூரி முதல் வருடம் படிக்கையில் நான் அதே ஊரில் வேறு ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன். அவள் எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவாள். நல்லா படி, பொறுப்பா இரு, பெரியப்பா உன்னை கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறாங்க என்று முழுக்க முழுக்க அறிவுரைகள் தான் இருக்கும். எங்கள் ஐவரில் அவள் தான் நன்றாக படிப்பவள்.

அடுத்தவருடம்  நான் அக்கா படித்த அதே கல்லூரிக்கு வந்து சேர்ந்ததும் அவள் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் என்னை கொண்டுவந்தாள். என் செலவுக்கான பணத்தை அப்பா அவளிடம் தான் தருவார். தேவைப்படும்போது காரணத்தை சொல்லி அவளிடம் காசு வாங்கிக்கொள்ள வேண்டும். பணத்தை அவளிடம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். 

அடிக்கடி என் ரூமுக்கு வந்து என் பெட்டி, அலமாரி எல்லாவற்றையும் திறந்து பார்த்துவிட்டு ஒரு ரவுண்டு திட்டி முடித்துவிட்டு எல்லாவற்றையும் நீட்டாக அடுக்கி தந்துவிட்டு போவாள். துணி துவைக்க போனால் அங்கும் இருப்பாள். ஏன் இத்தனை துணி சேர்த்திருக்க? அன்றன்றைக்கு துவைக்கலாம்ல என்று ஒரு சுற்று வசை விழும். நான் எதிர்த்தே பேசமாட்டேன். வெளியில் இருந்து ஏதாவது தின்பண்டம் வாங்கினால் மறக்காமல் என்னை அழைத்து தருவாள். 

புடவை, நகைகளில் மிகுந்த விருப்பம் உள்ளவள். திருமணத்திற்கு பிறகு ஒருமுறை அவள் வீட்டிற்கு சென்றபோது ஒரு பீரோ நிறைய தினம் உடுத்தும் புடவைகள்,அதற்கு மேட்ச்சான ரவிக்கை,உள் பாவாடை என வரிசையாக ஒழுங்கு குலையாமல் அடுக்கி இருந்தாள். மற்றொரு பீரோ, வெளியில் போனால் உடுத்தும் புடவைக்காம். தோடுகள் கிட்டத்தட்ட ஒரு 20,25 செட் இருக்கும். பெரிய பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். மாமாவை ஆண்டி ஆக்கிவிடாதே என்று நான்கூட கிண்டல் பண்ணினேன். இப்பவும் எங்காவது என்னை சந்திக்கையில் முதலில் புடவையை தான் விசாரிப்பாள் எங்க வாங்கின, என்ன புடவை இது ?என்று .

நான் ஏன் இதை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ?! 

ஆறு மாதம் முன்பு என் தோழி ஒருத்தியின் அண்ணி விபத்தில் இறந்துபோனார். அவருக்கு 6 வது படிக்கும் பையனும் உண்டு. அண்ணன் இனி எப்படி மீதி வாழ்க்கையை வாழ்வாரோ என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தார். இதோ அவருக்கு நாளை மறு கல்யாணம். பையனை பார்த்துக்கொள்ள, அவரின் சுமைகளை தாங்கிக்கொள்ள என்று 6 மாதத்திற்குள் அலைந்து தேடி ஒரு பெண்ணை கண்டுவிட்டார்கள். ஏழை பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் எந்த ஆணுக்கும் துணை இன்றி வாழ அவசியம் நேர்வதில்லை. இந்த திருமணத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.ஏன் எனக்கும் கூட மிக்க மகிழ்ச்சியே. 

நான் ஏழு வருடம் பின்னோக்கி பார்க்கிறேன். என் பொறுப்பான, அன்பான, எல்லோருக்கும் பிடித்தமான என் அக்காவின் கணவர் ஒரு விபத்தில் இறந்தபோது அக்கா தன் இரண்டாவது பிள்ளையை இடுப்பில் சுமந்திருந்தாள். பெரியது மிட்டாய் தின்றுகொண்டு இழவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால் யாருமே அவளின் மறு மணத்தை பற்றி எண்ணிக்கூட பார்க்கவில்லை. மாறாக, தாலி ஒன்னு தான் கழட்டி இருக்கா, தோடு,வளையல் எல்லாம் போட்டுக்கிட்டு புருஷன் இல்லாதவ  மாதிரியே தெரியல என்று விமர்சிக்க தான் ஆள் இருந்தது. 

Bsc யோடு கல்யாணம் செய்துகொண்டவள் இந்த இழப்புக்கு பின் Msc B.Ed முடித்தாள். ரெஜிஸ்டர் பண்ணிருக்கேன் .விடோ கோட்டாவுல டீச்சர் வேலை கிடைக்கும் என்று அவள் சொன்ன போது சாட்டையை சொடுக்கியது போல மனம் துடித்தது. அவளுக்கு சம்பாதித்து தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சொந்தமாக பஸ், வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் என்று ஏராளம் உண்டு. ஆனாலும் ஏன் அவள் படித்து ,வேலைக்கு பதிந்துவிட்டு காத்திருக்கிறாள் ? 

உடலளவிலும்,மனதளவிலும் மிகுந்த திடம் கொண்டவர்கள் என்று எண்ணப்படும் ஆண்களால் துணை இல்லாமல் 6 மாதத்தை கூட கடக்க முடியாது எனும்போது பெண்ணால் மட்டும் அது முடியும் என்று நம்பும் இந்த சமூகம் என்று மாறும் ? பற்றுகோலாக பற்றிக்கொள்ள ஆண் பெண்ணையே நாடுகையில்,தனித்து விடப்பட்ட  பெண்ணுக்கு தன் இரு கால்களே போதுமானதாக இருக்கிறது . 

                               ********