Wednesday, June 25, 2014

அதுவே



அத்தனை அசிரத்தையுடன்
நீ விட்டெறிந்து கடக்கும்
எச்சில் சிகரெட்டின்
துளி கங்கு
இவ்வனத்தையே பற்றி எரியவிடுகிறது

நீ நடந்துகொண்டிருக்கிறாய்
சடசடத்து எரியும்
பச்சையத்தின் கருகல்நெடி
உன் நாசி எட்டும்
தொலைவைத்தாண்டி


****


Monday, June 23, 2014

நன்நீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி


தன் ஆதி வனத்தின் 
கடைசி மூங்கில் குருத்தை துழாவும் 
தளர்ந்த தும்பிக்கையின்
பசியாக இருந்திருக்கிறது
அது !

மலை உச்சியில் ஊறும் 
ஒற்றை கொம்புத்தேனின் ருசி தேடி 
வியர்க்க முன்னேறிக்கொண்டிருக்கிறேன் 

உச்சந்தலை மயிரை சுண்டி இழுக்கும் 
மலை தேனின் முதல் துளியை 
ஏந்தும் தருணம்

வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க 
கள் வெறி கொள்கிறேன் 

மகரந்தத்தில் சிக்குண்ட கருவண்டின் சிறகடிப்பாய் 
எனது உயிர்பறவை
நம்பவியலா படபடத்து 
வானம் நீங்கியது

***
நன்றி :யாவரும்.காம்.

இந்த வெயிலுக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை.





 மஞ்சள் வெயில் ஒரு தலைக் காதல் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு நகரமுடியாத நாவல். அது கதிரவன் என்ற ஒருவனின் கை அளவு காதல் அல்ல. அது ஒரு கடல்ஒரு வானம். இப்பிரபஞ்சம் முழுவதையும் நிறைத்துக்கொண்டு பாடும் பாடல். காணும் உயிரை எல்லாம் வாரிச்சுருட்டித் தன்னுள் கரைத்துவிடும் சுழல்.

கதிரவன் அதிகம் பேசாதவன். தனிமையின் மௌனத்திற்குள் தன்னைச் சுருட்டிக்கொள்பவன். இலக்குகள் அற்றவன். வாழ்வை அதன் போக்கில் நகர அனுமதித்திருப்பவன். இப்படியானவர்கள் பற்றுகொடி அற்று தள்ளாடிக்கொண்டிருப்பவர்கள். கலைஞன் சின்னதொரு பாராட்டுக்கு ஏங்கிக்கொண்டிருப்பவன். அவனுக்குத் தேவை பரிசுப்பொருள் அல்ல. ஒரு சொல்ஒரு கவனிப்புஒரு புருவம் உயர்த்தல்ஒரு கைதட்டல் அவ்வளவே. கதிரவனும் அப்படியே. அவனின் கலைக்கு கிடைக்கும் பாராட்டு அவனை சந்தோசம் கொள்ளச் செய்கிறது. 

ஆண் எப்போதும் தன்னைப் பெண்ணிடம் ஒப்புக்கொடுக்க ஆயத்தமாகவே இருக்கிறான். அவனுக்கு எப்போதும் ஒரு தாய் தேவையாய் இருக்கிறாள். அந்த தாயை அக்காவிடம், தங்கையிடம், தோழியிடம் என்று எங்காவது கண்டுவிடத் தவிக்கிறான். நான்கு நாள் நன்றாகப் பேசிவிட்ட ஒருபெண்ணைத் தனக்கானவள் என்று எண்ணிக்கொள்ளத் தோன்றுவதும் அதனால் தான். கதிரவனும் அப்படியே. முன் பின் அறிந்திடாத ஒரு பெண் தனது ஓவியங்கள், கவிதைகளை ரசிக்கிறாள் என்று கேள்விப்பட்ட கணம் முதல் தவிக்கத்தொடங்கிவிடுகிறான். தள்ளாடும் கொடிபோன்ற அவன் மனம் அந்தப் பெண்ணைப் பற்றிக்கொள்ளத் தொடங்கிவிடுகிறது.

ஜீவிதா என்ற அந்தப் பெண்ணை முதன் முதலில் சந்திக்கப்போகும் நாள், அப்பப்பா என்ன ஒரு தவிப்பு!! இரவெல்லாம் உண்ணாமல், உறங்காமல்,  நாளை ஜீவிதாவைக் காணப்போகும்போது போட்டுக்கொள்ள சட்டையைத் தேர்ந்தெடுத்து, அதை நள்ளிரவில் துவைத்து உலர்த்தி... ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ரகசியமாய் ஊடாடியபடியே இருக்கும் மின்னலையின் அதிர்வுகள் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாதவை .

இவ்வளவு முன்தயாரிப்புகளோடு அலுவலகம் சென்று, அவள் அவனைக் காண அறைக்கு வந்து, முதுகுக்குப் பின்னே காத்திருக்கிறாள் என்று உணர்ந்தும் திரும்பி அவளிடம் பேச துணிவற்றுத் தடுமாறும் நிமிடங்கள் அவ்வளவு அற்புதம்,  மிகத் தீர்க்கமாக. “அற்புதம்” என்ற சொல் இங்கு மிகை அல்ல .

கதிரவன் தனது மனதை ஜீவிதாவிடம் திறந்துகாட்டத் துணிவற்றவானாகவே இருக்கிறான். சின்னச் சின்ன வார்த்தைகள், மோதி நகரும் பார்வைகள், அவளைக் கால்கடுக்க காத்திருந்துக் காணும் நிமிடங்கள், பூக்காரி மூலம் அவன் தினம் தரும் பூக்கள் இவைகளே போதுமானதாக இருக்கிறது கதிரவனின் காதல் விதை வேர் பிடித்துக் கிளைபரப்ப.

ஆசை எனும் பச்சைக்கிளி கதிரவனின் மனச்சிறையில் கிடந்து ஓயாமல் கத்துகிறது, வேகம் கொண்டு மனக்கதவைக் கீறித்தவிக்கிறது, றெக்கைகளை அடித்து அடித்து ஓய்கிறது. தாளமுடியாத அவனது காதல் பாரத்தை மதுக்கடைகளும், கடல் அலைகளுமே தாங்கிக்கொள்கின்றன. 

நாடோடி உருதுப்பாடகன் 'கான் முகமது ' ஒரு கைவிடப்பட்டவன்.அல்லது இவ்வுலகை ஏதோ ஒரு தருணத்தில் கைவிட்டவன். அழுக்கன், கிறுக்கன். எப்போதும் தன்னை விட்டு நீங்காதிருக்கும் பெரிய சிம்னி விளக்கும், முகம் பார்க்கும் கண்ணாடியுமே அவன் துணை. மனதை உலுக்கும் பாடல்களில் தனது உலகை ஸ்ருஷ்டித்துக்கொண்டவன். அவனும் கதிரவனும் வேறு வேறா என்ன? பசித்த வயிற்றோடு தனது சிம்னி விளக்கை ஒரு தவம் போல அதீதக் கவனத்தோடு ஒரு மணிநேரமாகத் துடைத்து சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும் அவனே தான் கதிரவனும். தனது பசி, தூக்கம் அனைத்தும் மறந்து தனது காதலை ரசித்து ரசித்து வரைந்துகொண்டிருக்கிறான் கதிரவன். ஒரு கட்டத்தில் ஜீவிதா ஒரு புள்ளியாக மறைந்து, இப்பிரபஞ்சம் முழுதும் கதிரவனின் காதல் மட்டுமே ஒருஒளிக்கோளமாக மஞ்சள் வண்ணம் தளும்ப பொன்னாக ஜொலிக்கத்தொடங்குகிறது. 

தனது இறந்த மகள் நஜ்மாவைத் தேடி அலையும் சுலைமான் சேட், பச்சை வர்ணக் கதவை ஏதோ தாவரம் என்றெண்ணி மொய்க்கும் ஊசித்தட்டான்கள் என குறியீடுகள் இக்கதை நெடுகிலும் ஊடாடுகின்றன. எளிய மனிதர்கள் மேல் இந்நகரம் குப்பைகளைக் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அதனூடே வாழப்பழகிவிட்ட மனிதர்கள் அரிதாய் நல்லவைகளைப் பொறுக்கி எடுக்கின்றனர். உள்ளங்கைகளில் வரையப்பட்ட ஓவியமென அவைகளைப் பெற்றுக்கொண்டு குழந்தையாய் மகிழ்ந்து ஓடுகின்றனர்.

கதிரவனின் அறைக்குச் செல்லும் மரத்தாலான மாடிப்படி ஒருஅருமையான சித்தரிப்பு. ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் பிள்ளையைக் கடிந்தபடி  லேசாகத் தலையில் கொட்டி, அப்பாவுக்குத் தெரியாமல் பூனை நடை நடந்து உள்ளே அழைத்துச்சென்று சோறு போடும் தாயைப்போலக் கிசுகிசுக்கிறது சில வேளை. மகிழ் தருணங்களில் பிள்ளைகளோடு ஓடிப்பிடித்து விளையாடும் தாயாகி சப்திக்கிறது சிலவேளை. கதிரவனின் மனவோட்டத்துக்குத் தக்கபடி இசைகிறது அம்மரப்படி.

சப் எடிட்டர் சந்திரன், இரவுக்காவலாளி பாலகிருஷ்ணன், நண்பன் டேனியல் என்று கதிரவனைச் சுற்றி இருக்கும் அனைவரும் அவன் மேல் அன்பு செலுத்துபவர்களாக, நலம் விரும்பிகளாகவே இருக்கின்றனர். ஆனாலும் அவன் எப்போதும் தனிமையில் இருக்கிறான், துன்பத்தில் உழல்கிறான். காதல் அவன் நடுமனதில் சம்மணமிட்டு அமர்ந்து அவனைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. எப்போதும் தன் அறைக்கதவைத் திறந்தே வைக்கும் கதிரவன் தன் உள்ளத்தை மட்டும் இறுகப்பூட்டி வைக்கிறான்.

இறுதியில் காதல் நிராகரிக்கப்பட்டது என்று தெரிந்தபின்னும் தனது காதலை கைவிடாமல் சுமக்கிறான். தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்ட கணவனின் குழந்தையைக் கண்ணுக்குள் வைத்துக்காப்பாற்றும் தாயைப்போல ஜீவிதா எங்கோ இருக்க அவள் மேல் கொண்ட காதலைப் பேணிப்பாதுகாக்கிறான். கொண்டாடுகிறான்.

இந்தக் கதைக்கு மஞ்சள் வெயில் என்ற தலைப்பு தான் எத்துனைப் பொருத்தமானது?!!  
ஆம்.. அந்த வெயிலுக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. கொஞ்சமும் சுணக்கம் இன்றி அதுஎல்லா உயிர்களிடத்தும் ஒன்றுபோலப் பொழிந்து பரவுகிறது. குப்பை மேட்டிலும், கோபுரக் கலசத்திலும் தனது மஞ்சள் நிற வெயிலை நீக்கமற நிறைத்துச்செல்கிறது. 
காதலும் அவ்வாறே ! 
கல் எறிபவனுக்கும், கரம் பற்றுகிறவனுக்கும் நேசத்தையே பரிசாகத்தருகிறது. 


குறிப்பு:

தளும்பிக்கொண்டிருக்கும் காதலை கணநேரமும் தனியே தவிக்கவிட முடியாது என்பது போல் யூமா வாசுகியின் “ மஞ்சள் வெயில் ” புத்தகத்தைச் சுமந்துகொண்டே அலைந்தேன். அதனோடு உண்டு, அதனோடு உறங்கி அக்காதல் பிரபஞ்சத்தை ஒரு முறை வலம்வந்து விட்டேன். எழுத்து நமக்குள் நடத்தும் மாயத்தை எத்தனை முறை கண்டாலும் அலுப்பதில்லை. நேசக்கரம் நோக்கி கயிரறுத்த கன்றுக்குட்டியாய் மனம் துள்ளிக்கொண்டு ஓடுவதை உணரும் தருணம் அற்புதம், அற்புதம், அற்புதம்.  
                       *****
செ.சுஜாதா.
நன்றி : மலைகள்.காம்    

Thursday, June 19, 2014

மருதாணிக் காடுகளின் உன்மத்தம்




ஆதிக்கனவுகளை 
திருத்தி எழுதிக்கொண்ட 
முனை மழுங்கிய பேனாக்கள் 
மைத்துடைக்கப்பணிக்கின்றன 
முந்தானைகளை 

கட்டிவைத்துப்புணரத்துடிக்கும் 
சாத்திரங்களை 
நான்காய் மடித்து 
தூமைத்துணிகளாக்கிக்கொண்ட நாளில் 
வலிகள் அற்றவர்களானோம் 

நாங்கள் 
துடுப்புகள் அற்று படகு செலுத்தும் 
கலை அறிந்தவர்கள் 

மேலும் 
உங்கள் செங்கோல் ஆட்சியின் 
கீழ் 
வராத குடிகள் நாங்கள் 


வவ்வால்களின் இரைச்சல்கள் அற்ற 
நீண்டு மிகுந்த  இரவுகளும் 
முதல் தாயின் மார் பற்றி  
வளரும் பகல்களும் 
சட்டகத்துக்குள் பொருந்தாத
வட்டங்களை 
வானவில்லின் வர்ணங்களில் 
வரைகின்றன 

சர்ப்பங்கள் நுழைய முடியா 
மருதாணிக்காட்டுக்குள் 
தோகை இல்லா மயிலினங்கள் 
மூக்குரசி 
அகவும் பொழுதுகளில் 

முகில்கள் மோதி நிறையும்  
பொய்கைகள் 
உன்மத்த வாசனை கொள்ளும் 

சன்னதம் கொண்டு  
மலை முகட்டு பட்சிகள் 
சிலிர்த்துச்சீறி 
வான் ஏகும் 

நன்றி : வலசை{ இதழ் 4}

Saturday, June 7, 2014

பூர்த்தி


வறண்ட
என் கர்ப்பச்சுவற்றுக்கு
கொஞ்சம் ஈரம் பூசி வைக்கிறேன்
 
ஒரு கவிதையை பிரசவிக்கும்
எத்தனிப்புடன்
 
கொஞ்சும் குழந்தை

108 சுற்று,
பலர் சுற்றி வந்த
பாதை தான்.
 
வெறுமை வானம் 
 
மேலும் இறுக மூடிக்கொள்கிறது
கருவறை
 
நிச்சலன பெருங்கூட்டில்
நான் தளர்ந்து வீழ்கையில்
கதவுடைத்து நுழைகிறது
முரட்டுத் தனிமை ஒன்று
 
***

நன்றி: யாவரும்.காம்