Tuesday, February 12, 2013

நான் ஒருஓவியம் வரைந்தேன்




பறக்கும் அந்த ஜோடிப்புறாக்களில்
ஒன்று நான் எனில் மற்றொன்று யார்
என்ற ஆர்வம் உங்களுக்கு

மூடிய அந்தக் கதவுக்குப் பின்னால் இருப்பது
நான் தான் என்பதை
உறுதி செய்துகொள்ளும் பதற்றம் உங்களுக்கு

அடித்துப் பெய்யும் அம்மழைக்காட்சி
என் சோகமா வெறுமையா காமத்தின் சாயலா
பெருத்த ஐயம் உங்களுக்கு

ஒரு மோப்பநாயினை ஒத்து
என் ஓவியத்தைக் கலைத்திருக்கிறீர்கள்

நானொரு கவிதை எழுத விளைகிறேன்
அதிலேனும் என்னைத் தேடாதிருங்கள்
****
நன்றி:மலைகள்.காம் 


ஒவ்வாமையின் வாசனை



சர்ப்பம் போன்ற உனது வருகையால்
சலசலத்துக் கைமாறும் என் தேசம்
கரை ஒதுங்கும்
கடல் தின்ற மிச்சமென

வால் முளைத்த வலிகள்
குருதியின் வாசனை பொங்க
நீந்தத்தொடங்கும் அதன் பாதையெங்கும்

நனைந்த தீபத்தின் திணறும் ஒளியினூடே
கருகிப்புகையும் மௌனகாலத்தில்
மனம் சுரண்டி
ஒற்றை அச்சில் சுழன்று அடங்கும்
சர்ப்ப வருகை

நன்றி:மலைகள்.காம் 

Thursday, February 7, 2013

நதி இலை எறும்பு



  
உன் வார்த்தைகளின் தடம் பற்றி
நான் நடந்துகொண்டிருக்கிறேன் 

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறாய் 
அன்பை 

காதலை
நம்பிக்கையை
துரோகத்தை
கோபத்தை
வன்மத்தை
வெறுமையை
நிறைவை 

கொழுத்த உன் கன்னத்தில் 
திரண்டிருக்கும் அம்மச்சம் 
என் கண்களில் விழுந்து உறுத்துவதை 
அறியாமலேயே..!

*****
நன்றி:நவீன விருட்சம்.

தடயங்கள் சுமந்து வெளியேறும் கண்கள்



அன்பின் வழித்தடத்தை
தேடி தோற்று உறையும்
வாழ்ந்து கெட்ட வீட்டில்
சலனமற்று வழியும் கண்ணீர்

கண்மூடிக்கிடப்பதங்கே
தோற்ற வாழ்வென்று
ஈக்கள் ஆர்ப்பரித்து அறிவிக்கும்

கிசுகிசுத்து கசியும் நமட்டுச் சிரிப்பொலியில் 
மரணித்த மனிதம் அழுகிப்பரப்பும்
சகிக்க முடியா துர்நாற்றம் ஒன்றை

மழை ஓய்ந்த காலைப் பொழுதொன்று
மரணத்தின் சாயல் அற்று 
மௌனமாய்ச் சொட்டிக்கொண்டிருந்தது

****

நன்றி: வல்லினம்

ஆசுவாசம்



இருள் அப்பிப்பிசுபிசுக்கும் 
என் இருப்பெங்கும் 
அலறி ஓடும் ஓர் அம்மணம் 

உன் கால் பற்றி இரைஞ்சும் 
என் உயிரின் ஒற்றைச் சுடரை 
அகப்படுத்திக்கொண்டு 
மன்னிப்பை முகத்தில் வீசுகிறாய் 

கண்ணனின் கருணையாய் ரட்சிக்கவரும் 
கவிதைக்குள் ஒளிய முயன்று 
பாடுபொருள் எங்கெங்கும் 
உன் முகம் கண்ட அயர்ச்சியில், 
சற்று தலை சாய்க்கிறேன்
வானம் அறியா குயில் குஞ்சு ஒன்றின் 
ஈரம் உலரா சிறகின் அடியில்

*****

நன்றி:உயிரோசை.

உணர் ஈரம்



குமிழ் பிளந்துக் கோப்பை நிறைக்கும் 
செந்நிற உன் நினைவுகளை 
சிற்றெறும்பின் அலைக்கழிப்புடன்
சுற்றிச் சுற்றி வருகிறேன் 

ஒரு தோணியின் தாளத்தோடு 
நாம் இணைந்துக் கடந்த வாழ்வை
தக்கையென உடைத்து வீசிவிட்டுச் சென்றிருக்கிறாய் 

தளர்ந்துத் தள்ளாடும் எனதிருப்பை
உன் மீள்தலுக்கென நகர்த்துகிறது
வேர் பற்றி விரிந்தாடும் மகா காதல்!  

நன்றி:வல்லினம்.காம் 

"மீனா என்று அழைக்கப்படும் மீனாட்சி "



மீனா வீடு வந்து சேரும் போது மணி இரவு 1.30 ஆகி இருந்தது. ஆட்டோ விற்கு பணம் கொடுத்துவிட்டு அந்த சந்துவழியே தன் வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினாள். வீட்டு வாசல்களில்  கட்டில் போட்டு படுத்திருந்த சிலர்  அந்த நள்ளிரவிலும் தூங்காமல் பேசிக்கொண்டிருந்தனர். மின்சாரம் இல்லாமல் புழுக்கத்திலும்,கொசு கடியிலும் வீடுகளில் அங்கங்கே பிள்ளைகள் சிணுங்கிக்கொண்டிருந்தன.

அவள் வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு கைப்பையில் இருந்த வீட்டு சாவியை துலாவி எடுத்தாள். சாவி ஒன்று அவளிடமும் இன்னொன்று அவள் மகன் பாபுவிடமும் இருக்கும். பாபுவுக்கு எட்டு வயது தான் ஆகிறது. ஆனாலும் மிகுந்த பொறுப்போடு நடந்துகொள்வான். அந்தவீட்டின் நிலை அவனை அப்படி ஆக்கியிருந்தது. பாபு திண்ணையில் நன்றாக தலையோடு போத்தி தூங்கிக்கொண்டிருந்தான். எதிர் வீட்டு கற்பகம் அக்கா அந்த நேரத்திலும் வாசலில் உட்கார்ந்து வெற்றிலை மென்றுகொண்டிருந்தாள். அவள் அப்படிதான் எந்த நேரமும் வெற்றிலை வாயோடு தான் இருப்பாள். அவள் கணவன் தெளிவாக இருக்கும் நேரத்தில் 'இவ மீனு வித்து கொண்டுவர காசை எல்லாம் மென்னே துப்பிடறா'!!என்று  கிண்டல் செய்வான். ஆமாம்..நீ குடிச்சு ஒழிச்சதவிடவா??..என்று இவளும் பதிலுக்கு சத்தம் போடுவாள். மீனா கற்பகத்தை பார்த்து புன்னகைத்தாள். சாப்டியா?என்று கேட்ட கற்பகத்திற்கு தலையை மட்டும் ஆடிவிட்டு பாபுவை தூக்கிக்கொண்டு வீட்டிற்க்குள் போனாள்.

 இந்த ஏரியாவிற்கு வந்த புதிதில் இந்த தெரு ஜனங்கள் இவளை ஏளனமாக பேசியதுண்டு. இவளை குறிப்பிடும் போதெல்லாம் கேசு ,கிராக்கி,அய்ட்டம் என்றே அடையாளப்படுத்துவர். நேரம் கெட்ட வேளையில் இவள் வீடுவந்து சேரும் போது சிரிப்பொலியும்,தூ...சனியன் என்ற வசைகளும் கட்டாயம் கேட்கும். இவள் எதற்கும் கோபமோ,எதிர்சொல்லோ சொல்லமாட்டாள். மௌனமாய் கடந்து போவாள். கற்பகம் அக்கா தான் ஒருநாள் அவளை வீட்டிற்க்கு கூப்பிட்டு பேசினாள். அவள் அம்மா,அப்பா,கணவன் பற்றி எல்லாம் விசாரித்தாள். நீ கவலை படாத,இங்க பேசறவங்க எல்லார் யோக்யதையும் எனக்கு தெரியும். அவனவன் முதுகுலயும் ஆயிரம் அழுக்கு. இவங்க பேசறத எல்லாம் கண்டுகாத. .பையன நல்லா படிக்கவை..என்று கையை பிடித்துக்கொண்டு ரொம்பநேரம் பேசினாள். இதுவரை எந்த பெண்ணும் கையை பிடித்துக்கொண்டு பேசியதே இல்லை. அவள் தினம் சந்திக்கும் ஆண்கள் கூட கையை பிடித்து பேசிக்கொண்டிருந்ததில்லை. அவர்கள் அதற்காக அங்கு வருவதும் இல்லை.

இன்றுகூட அப்படிதான் அந்த ஆள் மூக்கு முட்ட குடித்திருந்தான். இங்கு வருபவர்கள் முக்கால்வாசிபேர் குடித்துவிட்டு தான் வருவார்கள் என்றாலும்,இன்று வந்த அந்த ஆள் ஒரு குப்பை மேடு போல் இருந்தான். ஓயாத இருமல் வேறு. இந்த சேகர் எப்பவும் இப்படிதான். அவன் அழைத்துவரும் ஆட்கள் பற்றி ஒன்றுமே சொல்லமுடியாது. வாயில் வந்ததை பேசிவிடுவான். அவனுக்கு பணம் மட்டும் தான் முக்கியம்..மற்ற பெண்கள் தான் அவனோடு சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். மீனா எப்போதும் எதுவும் சொல்வதில்லை. அவளை பொறுத்தவரை 'பிணத்தை தழுவ வருபவன் அரசனாக இருந்தால் என்ன?அகோரியாக இருந்தால் என்ன? என்பது தான்.

.அந்த தெரு ஜனங்களும் மெல்ல மெல்ல வசை பாடுவதை விட்டுவிட்டனர். சிலர் நட்பாக புன்னகைக்கவும்,ஒன்றிரண்டு வார்த்தை பேசவும் கூட ஆரம்பித்துவிட்டிருந்தனர். கற்பகம் அக்கா நட்பாக இருப்பது அனைவர் இறுக்கத்தையும் சற்று தளர்த்தி இருந்தது. அன்றாடம் சாப்பாட்டுக்கே அல்லாடும் அவர்களுக்கு தூக்கிச்சுமக்க ஆயிரம் கவலைகள் இருந்தன.

மீனா ,பாபுவை பாயில் படுக்கவைத்துவிட்டு கொல்லைப்பக்கம் குளிக்க போனாள். அவள் எப்போதும் அப்படி  தான் எவ்வளவு நேரம் ஆனாலும்,மழை ,பனி,என்று எதுவாயினும் சரி குளித்துவிட்டு சாமி கும்பிட்டுவிட்டு தான் தூங்க போவாள். குளித்து முடித்து நைட்டி அணிந்துகொண்டு வந்தவள் நேராக சாமி படத்திற்கு முன்பு வந்து நின்றாள். மதுரை மீனாட்சி அம்மன் படம் அது. மீனாவின் அம்மாவிற்கு மதுரைமீனாட்சி அம்மன் மேல் மிகுந்த பக்தி உண்டு. அதனால் தான் மகளுக்கு மீனாட்சி என்று ஆசையாய்  பெயர் வைத்தாள்.  சின்னவயதில் வருடம் இரண்டுமுறையேனும் அவள் அம்மா மீனாவை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுவிடுவாள். மீனாவின் அப்பா இவர்களை நிர்கதியாய் விட்டுவிட்டு  வேறு ஒரு பெண்ணோடு ஓடிப்போனபின் அவள் அம்மா கோவிலுக்கு போவதையே நிறுத்திவிட்டாள். அம்மா நோயில் தவித்து இறந்தபின் ,அயோக்யன் ஒருவனை நம்பி ஏமாந்து,கையில் பிள்ளையோடு இந்த சாக்கடைக்குள் நுழைந்த பிறகு  இவளும் கோவிலுக்கு போவதை நிறுத்திக்கொண்டாள். மீனாட்சி என்று யாரேனும் அழைத்தால் சாட்டையால் அடித்தது போல துடித்துப்போவாள்,ஆகவே தான் இந்த ஊருக்கு வந்தபின் தன் பெயரை மீனா என்று சுருக்கிகொண்டாள்.


சாமிகும்பிட்டுவிட்டு பாபுவின் அருகே படுக்கபோனவள் ஞாபகம் வந்தவளாக சாப்பாடு வைத்திருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தாள். ம்ம்..அவள் சந்தேகப்பட்டது சரிதான். சாப்பாடு அப்படியே இருந்தது. பாபு இந்த ஒருவிசயத்தில் மட்டும் தான் குழந்தையாய் அடம் பிடிப்பான். வெள்ளிக்கிழமை காலையிலேயே ஆரம்பித்துவிடுவான். சனி,ஞாயிறு கிழமைகளில் அம்மா  அவனோடு இருக்கவேண்டும் என்பது ஒன்று தான் அவன் ஆசை. ஆனால் எப்போதும் அது முடிவதே இல்லை. மற்ற நாட்களில்  பள்ளியில் அவன் நேரம் கழிந்துவிடும். இந்த இரு விடுமுறை தினங்களில் தான் அவன் தனிமையோடு போராடவேண்டி இருக்கிறது. தெருவில் மற்ற பிள்ளைகளோடு விளையாடலாம் என்றாலும் அவன் அதிகம் அவ்வாறு செல்வதில்லை. எப்போதும் ஒரு தயக்கமும்,எச்சரிக்கை உணர்வும் அவனுக்கு இருந்துகொண்டே இருக்கும். அவள்  உடன் இருந்தால் சந்தோசமாக அந்த நாட்களை களிக்கலாம் என்று அவனுக்கு ஆசை. காலையிலேயே கேட்டான். அவள் ஏதேதோ சமாதானம் சொல்லிவிட்டு சென்றாள். ஆனாலும் இப்படி சாப்பிடாமல் படுத்துவிட்டான். தன் இயலாமையை நொந்தபடி அவனுக்கு போர்த்தி விட்டுவிட்டு அவளும் கண் அசந்தாள்.

நாளெல்லாம் நாயாய் பாடுபடும் அவள் உடல் படுத்த அடுத்த நொடி பெரும் ஆசுவாசம் கொண்டு உறக்கத்தில் விழுந்தது. நன்கு உறங்கிக்கொண்டிருந்த அவளை அடிவயிற்றில் வலி ஒன்று பிசைந்து எழுப்பியது. கஷ்டப்பட்டு கண்விழித்த அவள் எழுந்து உட்கார்ந்தாள். தூக்கம் களைந்து நிதானத்திற்கு வந்தபோது அவள் ஆடை நனைந்து ,கால்களுக்கிடையே பிசுபிசுப்பை அறிந்தாள். அட!!அதற்குள் 25 நாள் ஆகிவிட்டதா?!!வலியை மீறி ஒரு சந்தோசம் அவளை முத்தமிட்டு சிரித்தது. சரியாக சனி,ஞாயிறுகளில் அவள் வீட்டுக்கு விலக்காவது எப்போதாவது மட்டுமே வாய்க்கும் அதிர்ஷ்டம். சட்டென்று கண்கள் பாபுவை பார்த்து சிரித்தது. மூன்று நாள் வேலைக்கு போக வேண்டாம். அவளுக்கு சந்தோசமாக இருந்தது. பாபுவை அவன் விரும்பும் இடத்திற்கெல்லாம் அழைத்துப்போகவேண்டும். அவன் குதூகலத்தை இந்த ரெண்டு நாளும் ஆசை தீர பார்க்கலாம். கறி எடுத்து சமைக்கவேண்டும்.
அவன் பாடப்புத்தகத்தை எடுத்து பார்க்கவேண்டும். அவன் பள்ளியில் நடந்த விசயங்களை கேட்கவேண்டும். விழி விரிய அவன் சொல்லும் சுவாரஸ்யக்கதைகளை நாளெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம்.

சேகரை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது. தெரிந்தால் கண்டபடி கத்துவான். நல்ல பசையான பார்ட்டி வரும்போது ஏண்டி இப்படி தாலி அறுக்குறீங்க?? அந்த சனியன பேசாம அறுத்து ஏறுஞ்சுட வேண்டியது தான?  இப்படி ஏக வசனத்தில் ஏசுவான். அவனை பொறுத்தவரை அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை என்பது ஒரு சுமை. அவர்களின் பாதையில் அது பெரும் தடை கல். ஒன்றுக்கும் உதவாத குப்பை. கழற்றி வீசப்பட  வேண்டிய கஷ்டம். ஆனால் அந்த பெண்களை பொறுத்தவரை  அது தான் அவர்களின் கடைசி நம்பிக்கை. அது சுமை அல்ல. அவர்களின் சுமைகளை இறக்கிவைக்கும் சுமை தாங்கி. தன்னை காக்க வரும் தெய்வம் குடிகொள்ளப்போகும் கருவறை. அது புனிதமானது. போற்றிப்பாதுகாக்கப்படவேண்டியது. மீனா அந்த பேறுபெற்றவள். அவள் பாபுவின் தலையை வாஞ்சையோடு கோதினாள். அவன் தூக்கத்தில் புன்னகைத்தான். அவளுக்கு சந்தோசமாக இருந்தது. அப்படி புன்னகைக்கும் படி என்ன இனிமையான கனவு கண்டிருப்பான்?!! மீனா திரும்பி மதுரைமீனாட்சியின் படத்தை பார்த்தாள். இரவு விளக்கின் வெளிச்சத்தில் அம்மனின் இதழில் புன்னகை நெளிவது போல் தெரிந்தது. அது பாபுவின் புன்னகையை ஒத்ததாய் இருந்தது.

******

வா.மணிகண்டன் அவர்களின் 'என்னைக் கடவுளாக்கியத் தவிட்டுக் குருவி' கவிதை நூல் வெளியீடு ஒருஇனிய அனுபவமாக அமைந்திருந்தது.





துணைக்கு யாரும் இன்றித் தனியாக நிகழ்ச்சி நடக்கும் இடம் தேடி கப்பன் பார்க்கில் அலைந்ததில் தொடங்கியது எனக்கான சுவாரஸ்யம்.. வந்திருந்தவர்கள் அனைவரிடமும் வருகைப் பதிவேடு போல் பெயர், தொலைபேசி எண், மின் அஞ்சல் முகவரி எழுதி வாங்கியது காரணம் வேறாக இருப்பினும் ஒருவருக்கொருவர் அறிமுகம் அற்று அசௌகர்யமாக அமர்ந்திருந்தவர்களைச் சற்று ரிலாக்ஸ் செய்ய அதுஉதவியது..

சம்பிரதாயமான அனைவரின் சுய அறிமுகம் முடிந்ததும் பா.வெங்கடேசன் அவர்கள் நூல் வெளியிட தூரன் குணா அவர்கள் பெற்றுக்கொண்டார். முதலில் பா.வெங்கடேசன் அவர்கள் பேசினார். மேடையில் நின்று பேசுபவர்களுக்கு இல்லாத ஒரு சௌகர்யம் புல் தரையில் வட்டமாக அமர்ந்து பேசுவதில் உண்டு. தனித்த உடல் மொழி ஏதும் அற்றுப் புற்களைக் கிள்ளியபடி மிக casual லாக அவர் பேசினார். இந்தக் கவிதைத் தொகுப்பில் 'மரணம்' பற்றிய கவிதைகள் அதிகம் இருப்பதாக, மரணம் சார்ந்த மனநிலை அதிகம் கையாளபட்டிருப்பதாக அவர் சொன்னார். மேலும் கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்கையில் sick ஆன, தோற்று அமரும் ஓர்மனநிலையை அடைந்ததாகக் கூறினார். அதே நேரம் இந்தக் கவிதைகள் அதன் உணர்வுகளைச் சரியாக வாசகனுக்குக் கடத்தியிருப்பதனால் உண்டான சந்தோசம் என்று இரு வேறு மனநிலையை ஒரே நேரத்தில் அடைந்ததாகவும்சொன்னார். நமக்குக் கிடைக்கும் சொற்ப அனுபவத்தை வைத்துக்கொண்டு கவிதைகளில் அதன் உணர்வுகளைப்  பிளந்து புனைவை அதில் இட்டு நிரப்பிக் கவிதை பல தளங்களைத் தொட்டு விரியும் ஓர்பேரனுபவமாக வாசகனை உணரச்செய்வது ஒரு வகை.. புனைவுகள் ஏதும் அற்று அனுபவத்தில் இருந்து உருவாகும் மொழி, அம்மொழியில் இருந்து நாம் பெரும் அனுபவம் என்பது ஒரு வகை.. மணிகண்டன் இரண்டாம் வகையைத் தெரிவு செய்துள்ளார்.. தன் கவிதைக்கு மிக நேர்மையாக நடந்துள்ளார் என்று வெங்கடேசன் கருத்துத் தெரிவித்தார். குறிப்பிட சில கவிதைகளை தேர்ந்தெடுத்து  அலசாமல் அந்தத்  தொகுப்பு பற்றிய ஒரு பொதுப் பார்வையாகத் தன் கருத்தைச்  சொன்னார்.

அடுத்து பேசிய தூரன் அவர்களும் இதே கருத்தை எடுத்துரைத்தார்.. அவர் தனக்குப் பிடித்த சில கவிதைகளையும் வாசித்து அதில் தான் உணர்ந்ததை விவரித்தார்.. ஒரு கவிதையானது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒருஅனுபவத்தைத் தரும்.. அதுஒருவழிப் பாதை அல்ல.. அது ஒரு விளக்கு மட்டுமே.. பாதை நாம் கண்டுகொள்ள வேண்டியது..ஆகவே தூரனின் அனுபவம் அவருக்கானதே..

சுட்டிக்காட்டப்பட்ட குறைகளுக்கும், பாராட்டுகளுக்கும் ஒரே மாதிரியான முகபாவனையோடு மணிகண்டன் அமர்ந்திருந்தார்.. தொகுப்பு வெளியிடும் முன் முதலில் இதைக் கற்க வேண்டும் போல!!! மணிகண்டன் இவருடன் கொஞ்ச நேரம், அவருடன் கொஞ்சநேரம் என்று இடம் மாற்றி மாற்றி அமர்ந்துக்கொண்டிருந்தார்.. "கொல கொலயா முந்திரிகா" விளையாட்டு ஞாபகம் வந்தது எனக்கு..

ந.பெரியசாமி, ராம லக்ஷ்மி , ராம் ஆகியோருடன் உரையாடினேன்.. இனிமையானவர்கள்.. குறிப்பாகப் பெரியசாமி அவர்கள் வெகு நாள் பழகிய எங்கள் ஊர்க்காரர் போன்றதொரு உணர்வைத் தந்தார்.. மிகச் சந்தோசமாக இருந்தது..


 மிக ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்த பா.வெங்கடேசன் அவர்களிடம் அழைக்காமலேயே நுழைந்து டீ யை நீட்டிய டீ விற்கும் பையன், கொஞ்சமாக எழுந்த கோபத்தை அமிழ்த்திவிட்டு டீயை வாங்கி அருகில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்த வெங்கடேசன் மற்றும் முன் அறிமுகம் அற்ற பெண் அருகில் அமரத் தயங்கி ஒருவர் பின்னால் ஒருவராக அமர்ந்து வட்டத்தைத் தலைபிரட்டையின் வடிவத்திற்கு மாற்றிய நபர்கள் என்று கவிதை தாண்டி சுவாரஸ்யங்கள் ரசிப்பதற்கு ஏராளம் இருந்தது..

கூட்டத்திற்கு என் மகளை உடன் அழைத்துச் செல்லவில்லை.. பேச்சைக்  கவனிக்கவிடாமல் தொந்தரவுச் செய்வாள் என எண்ணினேன்..அவள் வேலையைக் கப்பன் பார்க் கொசுக்கள் பார்த்துக்கொண்டன.. "மனிதர்களுக்குத் தான் மனிதர்களை நெருங்குவதில் ஆயிரம் தயக்கம்.." கொசுக்கள் சாலச் சிறந்தவைகள் ...

மணிகண்டன் வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, இனி இலக்கியக் கூட்டம் மாத மாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.. நான் கலந்துகொள்ளவில்லை என்றாலும் எங்கோ நால்வர் கூடி இலக்கியம் பேசுகிறார்கள் என்பதே எனக்கு மன மகிழ்வைத் தரும்.. அந்த வகையில் இந்த அறிவிப்பும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது..

மிக நல்லதொரு அனுபவம்..

பயணம்





நாம் கடக்கவேண்டிய தூரம்
நீண்டபடியே செல்கிறது

தகிக்கும் பாலையில்
கவனச்சிதறல்கள் அற்ற
துரிதப்பயணத்தின் சாத்தியங்கள் உரைக்கிறாய்

ஈச்சமர நிழல் ஒன்றை
கடக்கநேர்கையில் கூட வேகம் கூட்டுகிறாய்

காய்ந்து உதிரும் ஆவியின்
கடைசித் துளியை ஏந்திக்கொண்டு
உன் கால்தடம் பற்றி நடக்கிறேன்
அனைத்து அறிதல்களோடும்

நிச்சலனக்கானல் எங்கும்         
நிரம்பித்ததும்பும் பேரன்பின் துளிகள்

******
நன்றி:உயிரோசை.

கடலின் முடிவில் மறையும் வானம்



ஒற்றையடிப்பாதை ஒன்றில் 
ரகசியங்கள் சுமந்தவாறு
நடக்கிறேன் 

பாரம் சற்று அதிகம்தான் எனினும் 
நடையில் தெரியும் துள்ளல் 
வியப்பூட்டுவதாய் இருக்கிறது 

உனக்கான வழித்துணையும் 
நமதிந்த ரகசியம் தான்
என்பதறிவேன் 

ரகசியங்களை உரசிச்செல்லும்
சம்பவங்களும் சம்பாசனைகளும் 
ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது நமக்கு 

இருவருக்கான ரகசியங்கள் 
தனித்த பொழுதுகளில் 
ஒரு குழந்தையின் குதூகலத்துடன் 
துள்ளத்தொடங்கிவிடுகின்றன 

வாசல் வரை வரமுடியா அவைகள் 
கொல்லைப்புறத் தோட்டமெங்கும் 
நமக்கான உலகத்தை 
ஸ்ருஷ்டித்தபடியே இருக்கின்றன 

நன்றி:கல்கி.


"இன்னுமா இருக்கிறது காதல்"



காதல் பற்றிப் பேசுவது எப்போதும் மனதுக்குப் பிடித்தமான ஒன்று . "இன்னுமா இருக்கிறது காதல்"என்ற  கேள்வியும்,  சந்தேகமும் எழும் சூழ்நிலைக்கு 'காதல்' தள்ளப்படிருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. காதல் எப்போதும் அதன் அத்தனை அம்சங்களையும் தக்கவைத்துக்கொண்டு உயிர்ப்புடன் தான் இருக்கிறது. காதல் பற்றிய நம் பார்வையில் தான் மாற்றங்கள் வந்தவண்ணம் இருக்கிறது. 

காதல் என்றதும் நம் நினைவுக்கு வருபவர்கள் கல்லூரி மாணவ,மாணவியர் தான். நாகரீகம் என்ற பெயரில் மாறிவரும் சமூகக் கட்டமைப்பில் இவர்களில் பங்கு மிகவும் கவனிப்புக்குரியதாக இருப்பதால் இவர்களோடு சேர்ந்து காதலும் சந்தேகத்துக்குரியதாக மாறிவருகிறது.உலகமயமாக்கலில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிப்போன நம் வாழ்க்கைமுறை நம் பிள்ளைகளை வெகுவாக மாற்றி இருக்கிறது என்பது நிதர்சனம். அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல், பகிர்தல் மனப்பான்மை, பிரச்சனைகளைப் பேசித்தெளியும் பொறுமை போன்ற அடிப்படைப் பண்புகளைக் கற்றுகொடுக்கவேண்டிய பெற்றோர்கள் அவசரமாக ரொட்டியைத் தின்றுவிட்டு அலுவலகம் ஓடுபவர்களாக மாறி இருக்கின்றனர். அனுபவக்கதைச் சொல்லும் பாட்டியும், தாத்தாவும் கிராமத்து திண்ணையிலோ, நல விடுதியின் அறைகளிலோ முடங்கிவிட்டிருக்கின்றனர்.

பள்ளிப் பருவத்திலேயே அவசரமாக முளைத்துவிடுகின்ற காதல் அடிப்படைப் பண்புகள் கற்றறியா இத்தலைமுறையின் கைகளில் சிக்கி வெகுசீக்கிரம் தன் உயிரை இழக்கிறது. எனினும் இன்றைய  இளைஞர்கள் தோற்றக் காதலை எண்ணி அழுதுப் புலம்புவது, தண்டவாளத்தில் தலையைக் கொடுப்பது, தாடி வளர்த்து வெட்டியாய் திரிவது போன்ற முட்டாள் தனங்களைச் செய்வதில்லை என்பது வேப்பம் பூவில் தேன்துளி போலக் கசப்பிற்குள்ளும் ஓர் இனிய செய்தியே. பெண்களும் தங்கள் எல்லைகளை விசாலப்படுத்தியுள்ளனர். அவர்கள் பார்வையிலும் மாற்றங்கள் வந்துவிட்டது. காதலைப் பொழுதுபோக்காகக் கொள்கிறார்கள் இளைஞர்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன். அது மிகக் குறைந்த சதவிகிதத்தில் எல்லாக் காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

குற்றம் சொல்லும் இந்தச் சமூகம் எந்த விசயத்தில் முழு அர்ப்பணிப்போடு இருந்திருக்கிறது?? ரோட்டில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கு குறைந்தபட்ச முதலுதவிச் செய்யவோ, ஆம்புலன்சுக்குத் தொலைபேசவோ நேரமற்று  அலுவலகம் ஓடும் ஆட்களுக்கு மத்தியில் கல்லூரியில் ரத்ததான முகாம் நடத்தும் மாணவர்களும், சேவைக் குழுக்களை அமைத்துக்கொண்டு உதவ ஓடும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சாக்கடை ஆகும் அரசியல் பற்றியோ, சீரழிந்து கொண்டிருக்கும் சுகாதாரம் பற்றியோ, புழுக்களைவிடக் கேவலமாக நடத்தப்படும் அடித்தட்டு மக்கள் பற்றியோ கவலைப்படாத இச்சமூகம் காதல் பற்றி விமர்சிக்கும் தகுதி அற்றது.

மேலும் காதல் என்பது கல்லூரி மாணவர்களின் சொத்து என்ற எண்ணத்தைக்  கைவிடவேண்டும். காதல் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருகிறது. மாடி வீட்டில் ஏ.சி குளிரில் தூங்குபவனுக்கும், பிளாட்பாரத்தில் பனியைப் போர்த்திக்கொண்டு உறங்குபவனுக்கும் காதல் ஒன்றுபோலவே தன் நியாயங்களைச் செய்து வருகிறது. மனைவி தலையில் சிந்தி இருக்கும் மணலைத் தட்டிவிட்டுக்கொண்டே மசால் வடையைப் பகிர்ந்துத் தரும் சித்தாள் கணவனின் காதலை நாம் அறிவதோ, அலசுவதோ இல்லை. விடலை காதலின் வீக்கங்கள் மட்டுமே நம் கண்ணை உறுத்துவதாக இருக்கிறது.

கடற்கரையிலோ, காபி ஷாபிலோ மட்டும் வளரும் காதல், தொட்டியில் வளர்க்கப்படும் அலங்கார மீன்கள் போல நின்று ஆற அமர ரசிக்கலாம், குறைகளை ஆராயலாம், அலுத்து விலகி நடக்கலாம். ஆனால் ஓர் அம்மா அப்பாவிற்கோ, அண்ணன் அண்ணிக்கோ, தாத்தா பாட்டிக்கோ இருக்கும் காதல் கடல் நீரில் துள்ளும் மீன் போல. கடல் முழுதும் நிறைந்திருக்கும் என்ற போதும் அதை அத்தனை சுலபமாய்க்  கண்டுவிட முடியாது. அரிதாய் அது துள்ளிக்குதித்து வெளிப்படும் தருணம் அற்புதமானதாக, நெஞ்சை அள்ளும் காட்சியாக நிலைக்கும். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாத  அந்தக் காதல் அங்கே மூச்சுக்காற்று போல அனைவரையும் தாங்கி நிற்கும்.

இப்படிக் குறை நிறைகள் பற்றிய அனைத்து  அறிதல்களுடனும் வளரும் காதலே நம் கலாசாரத்தின் ஆணிவேரை இன்னும் காத்துக்கொண்டு இருக்கிறது. எத்தனையோ துரோகங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் மத்தியில், ஜோடியில் ஆணோ பொண்ணோ யாரேனும் ஒருவர் அந்த உண்மைக்காதலை உடையாமல் தக்கவைத்தபடி இருக்கிறார்கள்.அதுவே குடும்பம் என்ற கட்டமைப்பைச்  சீர்குலையாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்த தலைமுறைக்கும் பெரியதொரு வழிகாட்டியாகவும் வாழ்ந்து காட்டுகிறது. குடிகாரக் கணவனின் இறுதிக் காலத்தில் அக்கறையோடு கவனித்துக்கொள்ளும் மனைவியையும், தன் பெற்றோரை விரட்டி அடித்த மனைவியின் மரணப்படுக்கையில் கைகளைக் கோர்த்துக்கொண்டு தைரியம் சொல்லும் கணவனையும் நாம் இன்னும் காணமுடிகிறதென்றால் அது "காதல்"என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் வலிமையே!!.

காதலுக்கு ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டாலும் அதன் அடிப்படை அர்த்தம் ஒன்றே ஒன்று தான், அது"அன்பு". புழு, பூச்சியில் இருந்து அத்துனை ஜீவராசிகளிடமும் நிறைந்திருக்கும் அந்தக் காதல், உலகில்  இல்லை என்ற ஒரு நிலை வருமாயின் அதை அறிந்துகொள்ளவோ, அதைப்பற்றிப் பேசவோ இந்த உலகில் ஓர் உயிரினம் கூட அப்போது மிஞ்சி இருக்காது. கால வெள்ளத்தில் மனிதன் மூளைக்கு முக்கியத்துவம் கொடுத்து முண்டி அடித்து முன்னேறிக்கொண்டிருந்தாலும் அடிஆழத்தில் மிச்சமிருக்கும் ஈரமாய் , கண் காணாது நிறைந்திருக்கும் காற்றாய் 'காதல்' அவனைக் காத்துக்கொண்டிருக்கிறது, இயக்கிக்கொண்டிருக்கிறது, வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

ஆகவே 'ஆம்பளைக்கும்,பொம்பளைக்கும் அவசரம்ம்' மாதிரியான உளறல் திரைப்பாடல்களைக்கொண்டு, காதல் சந்தேகத்திற்கு இடமானால், ஒற்றை சந்தேக வார்த்தைக்குத் தீக்குளித்த சீதையைப் போல, தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கும் அவசியம் காதலுக்கு என்றுமே இல்லை."காதல்"அதன் போக்கில் தன் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருக்கும். அதன் இடம், காலம், குணம், நிறம் என்று அத்தனையிலும் மாற்றம் வந்த போதும் அதன் அடிப்படை ஜீவனை தாயின் முலைப்பால் போலக் களங்கம் இன்றிக் காத்துநிற்கும்.  

                                            " காதல் வாழ்கிறது.நம்மை வாழவைக்கிறது."

நன்றி:பண்புடன் படைப்புகள்.

நீலநிறக் கடலொன்றின் ஓயாத அலைகள்

















கனிந்தப் பொழுதொன்றில் 
நம்இருவரிடம் 
அந்தப் பூனைக்குட்டி வந்து சேர்ந்தது

மிருதுவான அதன் ரோமம்
கன்னம் உரச கிறங்கினேன் 
சோகம் கவிழும் அதன் குரல் 
கனவிலும் கேட்பதாய் சிலாகித்தாய் 
குறித்த நேரத்திற்கு உணவு என்பதில் 
அதுஎப்போதும் சமரசம் செய்துகொள்வதில்லை 

நீரோடையென நகர்ந்த நம் பொழுதுகளை 
ஒரு குடுவைக்குள் அடைத்துத் தனதாக்கியது
அது 

நீ நெஞ்சில் புரளும் தாடியுடன் அலைந்தாய்  
நான் என் பெயரையே மறந்துவிட்டிருந்தேன் 

நம் இரவை எரித்து ஒளி ஏற்றி 
பூனை உறங்கும்வரை விழித்திருந்தோம் 
தாளமுடியாச் சுமைக்கூடிய நாள் ஒன்றில் 
அதைக் காட்டில் விட்டுவிட நடக்கத்தொடங்கினோம்

மெல்லிய அதன் ரோமக்கதகதப்பில் 
என் உள்ளங்கையை அறிவதாய்க் கூறினாய் 
சோகம் கவிழும் அதன் குரல் 
உன் தாயை நினைவூட்டுவதாய்க் கூறினேன் 

மேகம் தூரலைத் தொடங்கியது..

பூனை நனைந்துவிடாமல் பொத்தியபடி 
வீடு நோக்கி விரையத்தொடங்கியிருந்தோம்  


நன்றி:கல்கி இதழ் [27/01/2013]