Thursday, December 24, 2015

பெரு உதட்டுக்காரி

முன்னேற முன்னேற தீராமல் நீளும் பெருவனம்
சிற்றோடைகள் பின்னிக்கசியும் ஈரநிலம்
நெகிழ்ந்து உள்ளிழுக்கும் ஆற்று மணல்
வண்டுகள் தள்ளாடும் மகரந்தப்படுக்கை

நீங்கள்
என்றேனும்
எரிமலையின் வாசல் நெருங்கியதுண்டா?
ஒளி தீண்டா கடல் அடி நிலம் அறிவீரா?

சிற்றெறும்புகள் மண்டியிட்டு
அருந்திச்சாகும் தேன் குளம்
என்பதாக
இப்பெரு உதட்டுக்காரியின் வரலாறு தேசம் தாண்டுகிறது

' மெனிஞ்சியோமா'



கணேசகுமாரன் அவர்களின் ' மெனிஞ்சியோமா' . வாசித்து வாரங்கள் ஆகியும் இன்னும் நாசியில் உறுத்தும் மருந்து வாடை. சந்துரு என்ற 25 வயது வாலிபனின் நோய்மையை, வலியை ,பாடுகளை சொல்லி நகரும் வரிகள் நம் ஒவ்வொருவரின் காய்ந்து ,ஆறத்தொடங்கிவிட்ட புண்ணின் பொருக்கை பெயர்த்து எடுத்து செந்நிறம் காட்டி பதற வைக்கிறது.

இவரு தலைவலி, காச்சல்னு ஒரு நாளும் ஆஸ்பத்திரி பக்கம் போனதில்ல என்று அதிசயத்திலும் அதிசயமாக நாம் வியந்து பார்க்க ஊருக்கு ஒரு பாட்டியோ, தாத்தாவோ மட்டுமே இன்று நமக்கு மிச்சம் இருக்கின்றனர். நோய் நம் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட வாழ்க்கை முறை நம் சாபக்கேடு.

ஆக , இந்தக்கதையில் காணும் வலியும், வேதனையும் நம்மால் நெருக்கமாக உணரமுடிந்த ஒன்று தான். அதனாலேயே தப்பி ஓட வழியற்று அத்தனை காட்சிகளும் அதனதன் உணர்சிகளை இரக்கமின்றி நம்மீது கொட்டிக் கவிழ்த்துநம்மை மூடுகிறது. திணறித் தவிக்க விடுகிறது.

'மூளை' . இந்த வார்த்தையை எழுதும்போதே தலை சிலிர்த்து அடங்குவதை உணர்கிறேன். சந்துருவின் மூளையில் உண்டாகியிருக்கும் கட்டியும், அது தரும் வலியும், வலிப்பும், தொடரும் சிகிச்சையும், வேதனையும் என கதை நெடுக சற்றும் கண்ணயர விடாத பதற்றம்.

சந்துருவின் ஆபரேஷனுக்கு முந்தைய பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ ஸ்கேன், படிவங்களில் ஒப்புதல் கையெழுத்துகள் இன்ன பிற...

நோயின் சதிராட்டத்தை நானறிவேன். அது தரும் வலியும், வேதனையும் நானறிவேன். 'டேய் ,ஆட்டுக்குட்டி ஒன்னு காலுக்கு குறுக்கால குறுக்கால ஓடுதுடா' என்று சொல்லியபடி துள்ளிக் குதித்த மனிதரது மூளையின் தடுமாற்றத்தை நான் கண்டிருக்கிறேன். ஒரு அரைமணி நேர தூக்கத்தை பிச்சையாக யாசித்தபடி மூளையின் முன் மண்டியிட்டுத் தவித்த கண்களுக்கு ஒரு சாட்சியாக நான் இருந்திருக்கிறேன். குறைந்தபடி இருக்கும் பிளேட்லெட்ஸ் களின் எண்ணிக்கையை கணக்கிட்டபடி அல்லாடித்தவித்திருக்கிறேன். என் குழந்தைத் தனம் மொத்தத்தையும் காவு வாங்கும் ஒரே இடம் மருத்துவமனை மட்டுமே என்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த நாவலை நான் ஏன் வாசிக்கதொடங்கினேன்?புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ஆசிரியரை கெட்டவார்த்தையில் கொஞ்சநேரம் திட்டினேன். பின் மீண்டும் படிக்கத்தொடங்கினேன்.

ஆபரேஷன் அன்று காலையில் சந்துருவுக்கு வயிற்றை சுத்தம் செய்ய இனிமா கொடுக்கப்படுகிறது.மல துவாரத்தில் ரப்பர் டியூப் மூலம் சோப்புத் தண்ணீர் செலுத்தப்படுகிறது. வலி தாங்கமுடியாமல் அப்பா.. என்று அலறுகிறான். தந்தையின் முன் நிர்வாணத்திலும், வலியிலும் குறுகிப்போகிறான்.

எவ்வளவு அடக்கினாலும் கட்டுப்பாட்டை மீறி சிறுநீர் வெளியாவதைக் கண்டு பதறி ,சிஸ்டர் சிஸ்டர் என்று கூப்பிடுகையில்,' பனிக்கொடம் உடஞ்சு நீர் வருதே இந்த டிரெஸ்ஸ கொஞ்சம் மேல சுருட்டிக்ககூடாதாம்மா?, பார் பூரா நனைஞ்சு போச்சு ' என்று சலித்தபடி உடுத்தியிருந்த ஒற்றை மருத்துவமனை ஆடையையும் சர்வ சாதாரணமாக உருவி எடுத்துக்கொண்டு நர்ஸ் சென்றபோது தான் முதல் முறையாக அழுதேன். அவர் வேறு உடை எடுத்து வரும்வரை அந்த அறைக்குள் யாரும் வந்துவிடக் கூடாதே என்று பதறியபடி கிடந்த கணம் நினைவில் இருந்து என்று, எப்படி அழியும் ? மருத்துவமனையின் கண்கள் வெறித்து நிலைத்தவை. அவைகளில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை.

சந்துருவின் மண்டை திறக்கப்படுகிறது. இந்த மூளையை அடையத்தான் எத்தனை அடுக்குகளைத்தாண்டவேண்டியிருக்கிறது!! தலையின் தோலைக் கிழிக்கையில் ரத்தம்பீறிட்டுக்கொண்டு டாக்டரின் முகத்தில் அடிக்கிறது. ஐயோ... பிறகு எங்கும் ரத்தம் ,ரத்தம்,ரத்தம்.. என் அடிவயிற்றுக்கு தன்னிச்சையாக கை செல்கிறது. ஒரு ஒரு இன்ச் கிழிச்சிருப்பாங்களாம்மா?அப்பா கேட்கிறார்.. இல்லப்பா உள்ளங்கை நீளத்துக்கும் அதிகமா கிழிச்சிருக்காங்கப்பாஎன்று நான் சொன்னபோது ஐயோ சாமி என்று சொன்னவர் அதற்குப்பின் ஒன்றுமே பேசாமல் திண்ணையில் வெய்யிலை வெறித்தபடி அமர்ந்திருந்தது நினைவில் வருகிறது. பிரசவம் ஒரு நோய் அல்ல என்றபோதும் வலியும் அவமானமும் குறைந்ததல்ல. இந்த சந்துருவின் வலியில் என் கடந்த காலம் திறந்துகொண்டு விட்டதே..இனி இந்தப் புத்தகத்தை எப்படி மூடி வைப்பது ?

ஆபரேஷன் முடிந்து ஐ .சி .யூ விற்கு இடம் மாற்றப்படும் சந்துரு தாகத்தில் தவிக்கிறான். தண்ணீர் கடுமையாக மறுக்கப்படுகிறது. இறுதியில் ரப்பர் டியூப் சொருகப்பட்ட தனது ஆணுறுப்பின் நுனியில் லேசாகக் கசியும் சிறுநீரை விரல்களில் சேகரித்து உதடுகளில் தடவுகிறான், நாவால் உதடுகளை தடவுகிறான். பெரும் ஆசுவாசம் கொள்கிறான். தாகித்த உதடுகளில் பாலைத் தீயின் புணர்வு எனவும், சிறுநீர் அத்தீயின் காமத்தை தணிப்பதாகவும் ஆசிரியர் சொல்லுகையில் சந்துருவோடு சேர்ந்து நானும் கண்களை மூடி சற்று ஆசுவசித்தேன்.

சந்துருவின் தந்தை காளிதாஸ் அவர்களின் தவிப்பும், அல்லாட்டமும் எழுத்தின் வழி அப்படியே வாசகனுக்கு கடத்தப்படுகிறது. என்னையறியாமல் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நோயாளியைக் காட்டிலும் அவனுக்கு அருகே மௌன சாட்சியாக கையறு நிலையில் நிற்கும் பிரியத்திற்கு உரியவர்களின் வேதனையும், அவஸ்தையும் பெரிது.

சந்துருவின் தையல் பிரிக்கப்படுகிறது.முதல் முடிச்சு பிரிக்கப்படுகையில் அப்ப்ப்பா... என அலறுகிறான். ரத்தம் தலையிலிருந்து முகத்தில் வழிகிறது. அவன் தந்தை தாளமாட்டாமல் அறையை விட்டு வெளியேறிச்சென்று அழுகிறார்.
முதல் தையல் வெடுக்கென்று பிரிக்கப்படுகையில் அம்ம்மா என்று நான் அலறினேன். பிரசவ வலி தெரியாது. ஆனால் தையல் பிரிக்கப்படும் வலி அதைக்காட்டிலும் பெரிதா ? தெரியாது. ஆனால் மரண வலி . நீங்க கொஞ்சம் வெளிய நில்லுங்கம்மா என்று அம்மாவை சிஸ்டர் வெளியேற்றி விட்டார். வலி, சொல்லில் அடங்காத வலி.உடல் மொத்தமும் நடுங்குகிறது. கண்ணீர் இருபுறமும் விடாது இறங்குகிறது. ஒவ்வொரு தையல் பிரித்தபின்னும் சிஸ்டர் ப்ளீஸ் ஒரு நிமிஷம் என்று கெஞ்சுகிறேன். அவர் கையையே பிடித்துக்கொண்டு கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொள்கிறேன். பின் அடுத்த தையல் அதே மரண வலி. ஐயோ அம்மா ... தப்பிக்க வழியின்றி அந்த வலிக்கே என்னை பலியாக்குகின்றேன்.

மருத்துவமனை எப்போதும் ஒருவித பதற்றத்தில் நம்மை வைத்திருக்கிறது. பல நூறு வலிகளின் கூட்டுக் கூடாரம் அது . நாம் அமைதியுற நினைத்தாலும் சுற்றி உள்ள வலியும் ஓலமும் நம்மை விடாது துரத்தும். சந்துரு வீட்டிற்கு திரும்பிய நாளில் சொல்லமுடியாத நிம்மதி நமக்கு வருகிறது. வீட்டிலும் அவன் வலிப்பு வந்து விழுகிறான், ஒரு கைவராமல் போகிறது. பார்க்குக்கு சென்று வலிப்பு கண்டு யாருமற்று விழுந்து கிடந்து சேரும், ரத்தமுமாக வீடு வருகிறான். என்றபோதும் மருத்துவமனை தந்த பதற்றம் இங்கே எனக்கு இல்லை. என்னவோ மனம் கொஞ்சம் தைரியமாக இருந்தது.

இறுதியில் சந்துரு முற்றிலும் குணமாகும் அல்லது அப்படி நம்பிக்கை ஏற்படும் நாளில் பெண் ஒருத்தி காதலுடன் வருகிறாள். அங்கே குறிப்புக்காக என்று சிலபக்கங்களை காலியாக விட்டுவிட்டு கதையை முடிக்கிறார் ஆசிரியர். இந்த ஆசிரியரை என்னசெய்யலாம்?? வலியை மட்டும் அணுஅணுவாக வாசகனுக்கு நிதானமாகக் கடத்தும் ஆசிரியர் சந்தோசத்தை நம் கற்பனைக்கே விட்டுவிட்டு போவது என்ன ஒரு வில்லத்தனம் ? அதுவும் வெறும் நான்கே பக்கம். சொல்லாட்டிப்போங்க.. நேசமும், கருணையும்,காதலும், தாய்மையும் பொங்கிப்பூரிக்கும் சந்துருவின் வாழ்வை வாசகர்கள் நாங்கள் செதுக்குவோம். மெல்லிய மலர்கள் கொண்டு வண்ணமயமான ஒரு உலகத்தை அவனுக்காய் நாங்கள் உண்டாக்குவோம். அங்கு வலிகளே இல்லை...

பின் குறிப்பு :
(இந்த நாவலில் முன் பக்கத்தில் ஆசிரியர், நாவல் உருவாக தன்னோடு உழைத்தவர்கள், தோள் கொடுத்தவர்கள், உற்சாகமூட்டியவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். அதுவும் எப்படி ? முத்தங்களாக smile emoticon வேறு வேறு சுவைகளில் முத்தங்கள். வாசிக்கையில் மனம் மிகுந்த சந்தோசம் கொண்டது. இந்த முத்தம் தான் எத்தனை அற்புதமான மொழி!! )

ஒரு துண்டு வானம்



வேட்டு அதிரும் பூமியிலும்
சுள்ளியுடன் பறக்கும் பறவையை
வானம் காண்கிறது

காடு பற்றி எரிகையிலும்
எங்கோ சில மொட்டுகள்
மணத்துடன் அவிழ்கின்றன

உயிர் பதுங்கும் இருளுக்குள்ளும்
ஒரு மெல்லிய முத்தம்
பகிரப்படுகிறது

சப்பாத்துக்கள் நெரியும் நிலத்திலும்
ஒரு மண்புழு
சிரத்தையுடன்
மண்ணைப் புரட்டிக்கொண்டுதான் இருக்கிறது

ஒரு சொல்லின் நெற்றியில்
குண்டு துளைக்கையில்
எங்கோ ஒரு வாக்கியம்
உருவாகிவருகிறது
****
சுஜாதா செல்வராஜ் ,
பெங்களூர் .

Tuesday, September 1, 2015

வழிகாட்டி வெளிச்சம்


அடுத்த திருவிழாவுக்கு வருவதாக 
சொல்லிச்  செல்லும்
ராட்டினக்காரனின் வண்டிச்சக்கரத்தில்
நெரிபட்டுச் சிதைகிறது
சிறுமியின் வானம் 

கனக்கும் பாடல் ஒன்றை
உரக்கப்பாடியபடி
ஒற்றையடிப் பாதையில்
வண்டியை திருப்பும்அவன்
போய்சேரும் இடம் வரை
நிலாக்களை கணக்கெடுப்பான் 

'களுக்' என்ற ஒலியுடன்
விழுந்து
மூழ்கும் கூழாங்கல்
தரை தட்டி வெறிக்கிறது 

தனது சிறகுகளைப் பிடுங்கி
தினம் ஒன்றெனெ
நாட்காட்டியில் சொருகத்தொடங்குபவளின்
வானம் கரைந்து புள்ளியாகிறது  

கிளிகள் கீச்சிடத் தொடங்கும்
மற்றுமொரு விழாநாளில்
பசிய சிறகுகள் ஏந்தி
இங்கு வந்து சேரும்
அந்நீண்ட பாதை

***
நன்றி : கணையாழி இதழ் 

சொற்கள் உறங்கும் காடு


ப்ரொபசர் கடத்தப்பட்டதோடு
புத்தகத்தை மூடிவைக்கிறேன் 

பரபரப்பு நிமிடத்தில்
வாகனம்
உறைந்து நின்றுவிட
பதற்றம் கொள்கின்றனர்
கடத்தல்காரர்கள் 

ப்ரொபசர்
நிதானமாக
புகை இழுக்கிறார் 

அவரின் குறுந்தாடி
மெள்ள கன்னம் ஏறுகிறது 

அடிவயிற்றில்
மின்னலொன்று முட்டுகிறது
கடத்தல்காரர்களுக்கு 

வாரம் கடந்து
புத்தகத்தை திறக்கிறேன் 
'ஒரு சிகரெட் கிடைக்குமா ?'
என்கிறார் ப்ரொபசர் 

வாகனத்தின் கதவு திறந்து
அவசரமாய் ஓடுகின்றனர்
கடத்தல்காரர்கள்
ஒரு சின்ன முறைப்புடன்

ரத்தினக்கற்கள் பற்றிய
ரகசியங்கள்
ஒரு மூலையில் கிடக்கின்றன
கேட்பாரற்று 

****
நன்றி : சிலேட்டு இதழ் 

*தப்புத் தாளங்கள்*


வேற்று கிரகம் 
அங்கு
நீல உடலுடன் 
வால்முளைத்த மனிதர்கள் இல்லை
உன்னைப்போல் தான் அவர்கள்
அல்லது
அவர்களைப் போல்  நீ 

இருண்ட தேசம் அது 

கிளர்ச்சி மிகுந்தது
இருள் தரும் துணிச்சல் 

அங்கு
காதல் கனி அழுகி மிதிபடும்
வழியெங்கும் 

நடுச்சாலையில்
கரமைதுனம் மிக சகஜம் 

உடனடி ஒப்பாரியும்
உடனடி ஆரவாரமும் கூட 

கருணை மழை
சொட்டுச் சொட்டாய்
வழிந்தபடியே இருக்கும் அங்கு 

புஜம் புடைக்க
கண் சிவக்க
கர்ஜிக்கையில்
உங்கள் மயிரும்
வீறிட்டுக்கொண்டு நிற்கும் அறிவீரா?!

கண் விழித்ததும் காட்சி மாறும்
கனவு லோகம் அது 

பச்சை நிறத்தில்
மின்னும் விழிகளை 
பார்க்கும் வேளையில்
உன் விழி நிறமும்
அதுவே என்பதறிவாய்  

அத்தனையும் வெளிச்சமிட்டுக் காட்டும்
அற்புத இருள் அது 

***
நன்றி :திணை இதழ் 

* தோகை மயில் *

முத்தங்கள் சொரியும் 
அடர் மேகம்
நான்

உறங்கும் பிள்ளையின் தலை கோதி
வழங்கும் முத்தம்
மழைநீரின் நிறம் 

நெடுநாள் பிரிவில்
ப்ரிய நண்பனை அணைத்துத் தரும் முத்தம்
மாலை வெயிலின் நிறம்

சிற்பத்தில் மனம் லயித்து
சிற்பியின் காய்ப்பேறிய கைகளில்
முகம் புதைத்துத் தரும் முத்தம்
புரளும் காட்டாறின் நிறம்

காதலனை
மடிசாய்த்து
புருவம் நீவி
நாசி நுனியில் கோர்க்கும் முத்தம்
முன்னிரவுக் கடலின் நிறம் 

இதழ் மென்று
நா தின்று
சுவாசம் உண்ணும் நீள் முத்தம்
அலையாடும்
அடர் பாசி நிறம் 

வர்ணங்கள் சிந்தித் தெறிக்கும்
முத்த மழை நான் 

நிறக்குருட்டு நிலத்தின் மேல்
தினமும்
பெய்து மரிக்கும்
மாரியும்
நான் 

***
நன்றி :திணை இதழ் .

Thursday, August 27, 2015

பிதாவே!!
கண்களைத் தவிர்த்துவிட்டு
தங்கள் காதுகளில் கோரப்படும்
பாவமன்னிப்பு வாக்கியங்களுக்கிடையே 
ஒளிந்திருக்கும் பாவங்களையும்
சேர்த்தே மன்னிப்பீராக!


****

Thursday, June 18, 2015


ஜெயமோகனின் 'வெண் கடல்' சிறுகதை வாசித்தேன். ஒரு வைத்தியசாலையின் தினசரி காட்சியில் தொடங்கும் கதை சட்டென்று சரிவில் உருண்டோடும் சக்கரமென வேகம் கொள்கிறது. 'மரணித்த மழலை கைவிட்ட முலைகள்' என்று என்றோ நான் எழுதிய வரிகள் இன்று பெருவலியை சுமந்துகொண்டு என்னிடமே திரும்பி வந்திருக்கின்றன. பிறக்கும்போதே குழந்தை இறந்துபோகிற ஒரு தாயின் மார்பில் பால் கட்டிக்கொண்டு படும் வேதனையும், தீர்வுமே கதை.

வெண் கடல் எத்தனைப் பொருத்தமான பெயர்! ஆம், ஒரு தாயின் முலைகள் வெறும் சதையும், உதிரமும் அல்ல. அது பல நூறு ஜீவநதிகள் பாய்ந்தோடி ஒற்றைப் புள்ளியில் சங்கமிக்கும் பெருங்கடல். இரவெல்லாம், அழும் குழந்தையுடன் போராடுவாள் தாய். பகலில் பிள்ளை களைத்து உறங்கும். பட்டன் போடாத மேலாடையுடன் தாயும் உறங்கிப்போவாள். ஆனால் முலைகள் உறங்காது. பிள்ளைக்கு புகட்டுவது ஒன்றே இப்பிறவி நோக்கமென சதா இயங்கிக்கொண்டிருக்கும்.அவைகள் தனி மனுஷிகள்.

பிள்ளை பசிமறந்து உறங்குகிறது. தாய்க்கு, கிடைத்த நேரத்தில் உறங்கிக்கொள்ளும் ஆசை. பிள்ளையின் உணவு நேரத்தில் மிகச்சரியாக வெண் நதி வேகம் கொள்ளும். கரைபுரண்டோடி ஒற்றைப்புள்ளியில் மோதிக் கசியும். அது ஒரு மின்னல் வலி. தாய் பதறி எழுவாள். எழுப்பினாலும் எழாமல் உறங்குகிறது குழந்தை. காம்பை அதன் வாயில் பொருத்திப் பார்க்கின்றாள். அது ஒரு வேண்டுதல், கோரிக்கை. உன் சின்ன இதழ் பொருத்தி எனக்கு மோட்சம் கொடு என்னும் தவம். பிள்ளை மனமிரங்கவில்லை. அது ஆழ் சயனத்தில். வலி வேகமெடுக்கிறது. மின்னல் சாட்டையை சொடுக்கத்தொடங்குகிறாள் முலை என்னும் அந்த தனி மனுஷி. வார்த்தைகளுக்குள் பொருத்தமுடியாத ஆவேச வலி.

பெண், வலி தாங்கவென விதிக்கப்பட்டவள். கண்ணீர் கசிய முலைகளை பற்றியபடி பரிதவிக்கிறாள். நேரம் தாண்டிக் கொண்டிருக்கிறது. வெண் நதி குணம் மாறுகிறது. புளித்த பால் பின்பு இறுகத்தொடங்குகிறது. நூறாயிரம் தேள் முலைகளை உள்ளிருந்து கொட்டத் தொடங்குகிறது. பெண் கடந்துவரும் உச்சபட்ச வலியில் மேலும் ஒரு எண்ணிக்கை.
இப்போது என்ன செய்ய?! சுடு நீரில் ஒத்தடம் கொடுக்கிறாள். காம்புகளை மெல்ல நீவி பீய்ச்சத் தொடங்குகிறாள். வலியுடன் வெண் நதி சுரந்துவழிகிறது. இங்கு அவசரம் காட்ட முடியாது. மெல்ல மெல்ல வலி இறங்கி வருகிறது. அது ஒரு விடுபடல் , ஆசுவாசம். கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிற்றை மெல்ல மெல்ல தளர்த்தும் கணம். இன்னுமொரு எளிய வழி உண்டு. யாரேனும் காம்பை சப்பி உறிஞ்சி பாலை துப்பிவிடவேண்டும். இந்த உதவியை செய்யக் கடமைப்பட்டவன் கணவன். ஆனால் பல நேசமிகு ஆண்கள் கூட தயங்கும் இடம் இது தான்.
வெண் கடல் கதையிலும் அவ்வாறே. குழந்தையின் இதழ் பட்டு கண் திறக்க வழியில்லாதக் காம்புகள் அடைபட்டுக் கிடக்கின்றன. பால் புளித்து, இறுகி, பின் சலம் கட்டிப் போகிறது. வலியில் அலறித் தவிக்கிறாள் மனைவி. கணவன் நடுங்கி அழுகிறான். தன்னால் தான் இவளுக்கிந்த துன்பம் என்று மருகுகிறான். முலைகளை அரிந்து வீசியேனும் என் மனைவியை காப்பாற்றுங்கள் என்கிறான்.

'அபின்' மயக்கத்தில் இருக்குமவள் மயக்கம் தெளியும்போதேல்லாம் துடி துடிக்கிறாள் . எதிர்பட்டவர் தலைமயிரை பற்றி உலுக்குகிறாள். 'ஐயோ இந்த வலியை நானும் அறிவேன்.' அவள் வலி எழுத்துவழி என்னைத்தாக்குகிறது. என் முலைகளில் வலி பரவுகிறது. நானும் அவளுடன் துடிக்கின்றேன். வைத்தியர், கொளவட்டைகளை சேகரித்துவர கணவனையும், பணியாளையும் அனுப்புகிறார். வலி நீக்கும் வழி எனக்குத் தெரிந்துவிட்டது. அவ்விருவரும் மாடுகளை அட்டைகள் மொய்க்கும் குளத்திற்கு இட்டுச்செல்கிறார்கள். மாடுகளை நீரில் இறக்குகிறார்கள். பேசிக்கொண்டே மாடுகளின் அடிவயிற்றில் ஒட்டியிருக்கும் அட்டைகளை எடுத்து பாத்திரத்தில் சேகரிக்கிறார்கள். மீண்டும் மீண்டும் சேகரிப்பு. எனக்கு வலி தாளவில்லை. உனக்கு புரியவில்லையா ?எதற்கு இத்தனை நிதானமாக  கதையை நகர்த்துகின்றாய் ?! நீ ஆண் என்பதாலா ? மெல்ல நகரும் இக்காட்சிகளை நான் வெறுக்கிறேன்.  குளத்தின் வர்ணனையும், குளக்கரை தெய்வமும் யாருக்குவேண்டும்? ஆத்திரத்துடன் கதாசிரியரின் தலைமயிரை பற்றி உலுக்குகிறேன். அவசரம் அவசரம். விரட்டு இவர்களை. வலியுடன் நான் வைத்திய சாலைக்கும் குளத்திற்குமாக ஓடிக்கொண்டிருக்கிறேன்.

அட்டைகள் துண்டில் வைத்து மார்பில் கட்டப்படுகிறது. அட்டைகள் பால்,உதிரம், சலம் என பாகுபாடின்றி உறிஞ்சுகின்றன. பிள்ளையற்றவளுக்கு ஒரு நூறு பிள்ளைகள். அவள் சத்தம் அடங்குகிறது. வலி குறைகிறது. கழுத்தை நெரித்த முடிச்சு மெல்ல விலகுகிறது. அயர்ந்து கண் மூடுகிறாள். பிரளயமே எழுந்து அடங்கிய அமைதி. வைத்தியர் அட்டைகளை அள்ளிச்சென்று  கோழிக்கு போடுமாறு சொல்கிறார். கண்மூடிக்கிடந்தவள் பதறி எழுகிறாள். 'கொல்லவேண்டாம் அய்யனே, என் பாலு குடிச்ச ஜீவன்கள் அவை ' என்கிறாள். அட்டைகள் குளத்தில் மீண்டும் விடப்படுகின்றன.

இக்கதையில் ஒரு வரி இருக்கிறது 
"ஸ்திரீ ஜென்மத்துக்குண்டான வலியிலே பாதி கூட ஆம்பிளைக்கு இல்லை..."

***
மலைகள்.காம் .

அப்பா
உன் சொற்களை
திரும்பப் பெற்றுக்கொள்
ஒரு பூங்கொத்தைத் தருவதென
நீ அவைகளை கை சேர்த்தாய்
அவை பூக்கள் அல்ல
உன் சொற்கள்
விலங்கிடப்பட்ட
வெள்ளை மூளியாய்
தரை தேய விட்டிருக்கிறது
என் தாயை
எனக்கு ஒரு சொல் தந்தாய்
அது என்னையே
காவு கேட்கிறது
செதில் செதிலாய்
துண்டாடுகிறது
கசக்கும் எச்சில் பாலை
சப்பத் தந்துவிட்டு
எங்கு போய் தொலைந்தாய்
திரும்பி வா
உன் கன்னம் பழுக்கும்படி
மீண்டும்
ஒரு அறை கொடுக்கவேண்டும்
உன் கைகளுக்குள்
முகம் புதைக்கவேண்டும்
உனக்கு மிகப்பிடித்த
நானொரு ராசியில்லா ராஜாவை
பாட வேண்டும்
அவசரம்
ஒரு போத்தல்
சாராயம் வாங்கி வா
எரிந்து சாவோம்
கூடவே
எனக்கு பிரியமான
மசால் வடையும்
*****


கோடைக் கால
மதியப் பொழுதொன்றில்
ஒரு சொல்லை முறித்து
வடகிழக்காக வீசிவிட்டு
நாம் பிரிந்துசென்றோம்
நறுமணத் தைலம் வீசும்
பொன்னிறப் பெட்டியை
ஏந்தியபடி
நீ திரும்பி
வந்திருக்கிறாய்
இவ்வசந்த கால அந்தியில்
என்னிடம் இருப்பதெல்லாம்
பதப்படுத்தப்பட்ட
உடைந்த
அச்சொல் மட்டுமே
***

Monday, June 8, 2015




அதிர்வின் வாசனை

பத்திரமாக கொண்டுசேர்க்கும்படி
தளும்பும் முத்தத்தை
பரிசுப்பெட்டியில் இட்டு 
அவனிடம் கையளித்திருக்கிறாள்
அவனது பயணம்
சற்று நீண்டது 
இரைச்சல்கள் அற்ற
தனித்த
பாதையில்
செல்ல நேர்கையில்
மெல்லிய தித்திப்பு மணம்
அவனைத் தழுவுகிறது
பெட்டிக்குள் தளும்பும்
முத்தத்தின் வாசனை
என்பதை அறிகிறான்
பெட்டியில் கவனம் குவிகிறது
கனம் அதிகரிக்கிறது
நடை தப்புகிறது
உரக்கச் சொல்கிறான்
நான் வெறும் தூதுவன்.
சந்தடி நிறைந்த பாதையை
தேர்ந்தெடுத்துக்கொள்கிறான்
இப்போது
சற்று புளித்த வாசனை
நாசி ஏறுகிறது
கிளர்த்தும் அவ்வாசனை
அவனறிவான்
மிடறு மிடறாய்
உறிஞ்சக் கிடைக்கும்
ஒரு முத்தம்
சற்றே கசந்து இறங்கும்
குற்றம்
அலாதி சுகம்
பிரதி முத்தத்தை
பெட்டிக்குள் இடம் மாற்றும்
சாத்தியங்கள் எண்ணியபடி
மெல்ல நடுங்கும்
இக்குளிர் அந்தியில்
பரிசுப்பெட்டியின்
பொன்னிற ரிப்பனை
வருடுகிறான்
***
நன்றி : சிலேட்டு இதழ்

Wednesday, April 22, 2015





இன்று தான் அதைப் பார்த்தேன். ஓவியத்தில் தவறி விழுந்த ஒரு சிறு தீற்றல் போல , தூரத்து மலைச்சரிவில் வழிந்து இறங்கும் சிற்றோடைப் போல , முன் தலையில் சரிந்து விழும் ஒற்றை வெண் மயிர். ஒரே நொடியில் கண்ணாடியில் என் பிம்பம் மறைந்து என் தாயின் , பாட்டியின் முகம் தோன்றி மறைகிறது . பின் சட்டென்று காலம் பின்னோக்கி ஓடி ரிப்பன் இறுக்கிக் கட்டப்பட்ட ரெட்டை ஜடைக்காரியின் பிம்பம். மலை உச்சி விளிம்பில் நிற்கும் ஒற்றை மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுகிறேன். ஊஞ்சல் முன்னோக்கிப் போகையில் கால் கூசிச் சிலிர்க்கிறது ,கீழே ஊன்ற நிலமில்லா பள்ளத்தாக்கு. ஊஞ்சல் பின்னோக்கி வருகையில் நிலம் கண்ட நிம்மதி ஆசுவசிக்கிறது.
இப்போது பார்த்தேனே ! எங்கே அதற்குள் ஓடி மறைந்தது அது ?! வியப்பும் பதற்றமுமாக விரல்கள் கூந்தலுக்குள் அலைபாய்கின்றன. என்ன இது கண்ணாமூச்சி விளையாட்டு? என் முதுமைக்கான வருகைசீட்டு ஒரு குறும்புக்கார குழந்தைபோல ஒளிந்து விளையாடுகிறதே! இதோ பிடித்துவிட்டேன். பாதி நிறம் மாறிய ஒற்றை மயிர். மீனாக மாறிக்கொண்டிருந்தவளை பாதியில் கண்டுவிட்டது போன்ற திகைப்பும் ,எழுச்சியும் எனக்கு. மெல்லிதாகப் புன்னகைக்கிறேன் , துள்ளும் முதுமை!! ஹா ஹா .
இந்தக் கண்ணாடி இத்தனை ஞானம் பெற்றது எப்போது ?! கொஞ்சமும் உணர்ச்சி கலவாமல் , சலனமற்று காலத்தை கண்முன்னே காட்டுகிறதே ?! உன்னைவிட உண்மையானவர் யார் இங்கே ? நீ என் செல்லம். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ? ஒரு நரைமுடியை பிடுங்கினால் நிறைய முளைக்கும் எனச் சொல்வார்களே அப்படியா ? இயற்கைக்கு எதிராக நாம் இயங்க முயன்றால் அது வெகுண்டெழுந்து நம்மை தாக்கி வெல்லும் என்பது போலவா ? அந்த ஒற்றை முடியை நான் ஏற்றுக்கொண்டால் இயற்கை என்னிடம் கொஞ்சம் இணக்கமாக இருக்குமோ ?!
இந்த ஒற்றை முடி ஒரு அற்புத தரிசனம். இனி நான் என்னவாக இருக்கவேண்டும் என்ற கேள்வியை எனக்குத் தருகிறது இது. விடையையும் என்னிடமே கோருகிறது. இனி என் ஆட்டம், பாட்டம் எல்லாம் நிறுத்திக் கொண்டு சற்று நிதானமாக வாழ்க்கையை அணுகவேண்டுமா ? அல்லது தீர்ந்துகொண்டிருக்கும் வாழ்வை இன்னும் ஆர்ப்பாட்டமாக ,துள்ளலுடன் கொண்டாட வேண்டுமா ?
நான் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். எனது ஆசைகள் கூடைக்குள் இட்டு மூடப்பட்ட ஆமைக் குஞ்சுகளாய் உள்ளே முண்டிக்கொண்டிருக்கின்றன . சில, நெரிசலில் செத்துப்போய்விட்டன. அதன் அழுகல் வாடை என்னை இம்சித்தபடியே இருக்கின்றது. சில குற்றுயிராய் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. சில வளர்சியற்றுப் போயின. சில தன் இயல்பை மீறி வளர்ந்து நிற்கின்றன.
என் தலையே பிளந்துபோகும்படி கொட்டும் அருவின் கீழ் சலனமின்றி நிற்கவேண்டும். மொத்தமாக கரைந்து காணாமல் போகவேண்டும். அடைமழை முன்னிரவொன்றில் சாலையோர டீக்கடையில் தேநீர் அருந்தியபடி புகைக்கவேண்டும். என் அத்துனை அடையாளங்களையும் தொலைத்துவிட்ட ஒரே ஒரு நாளில் இலக்கில்லாப் பயணம் வேண்டும். சத்தமாக சிரிக்கவேண்டும். சாலையற்ற வெளியில் வேண்டும் மட்டும் ஓடவேண்டும். ஊரே தேர் முன் ஆடும் ஆண்களை ரசித்திருந்த ஒரு திருவிழா நாளில் வீட்டுக்குள் அப்பாவின் துண்டை வைத்துக்கொண்டு இசைக்கு தக்கபடி ஆடி மகிழ்ந்த அந்த ஆட்டத்தை அவர்களோடு சேர்ந்து ஆடவேண்டும். இதையெல்லாம் என்று நான் நிகழ்த்திப் பார்ப்பேன்!?
இந்த ஒற்றை முடி என் மகளுக்கும் ஒரு சேதி வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் என் அம்மாவின் நரை முடிகள் என்னை அச்சம் கொள்ளச் செய்தது. என்னையும் அம்மாவையும் பிரிக்கவந்த பெருங்கோடு அது . அது எங்களை இருபுறமும் நகர்த்தியபடி போகிறது. கோட்டிற்கு இந்தப்பக்கம் அம்மாவைப் பற்றி இழுத்துக் காப்பாற்றிவிடவேண்டும். பின் இருவரும் அந்தக் கோடு அறிந்திடாத உலகிற்குள் ஓடி ஒளிந்துகொள்ளவேண்டும். அம்மாவின் மார் சூடு எவ்வளவு சுகம்!!
ஆனால் இன்று நான் அறிவேன் ஓடி ஒழிய முடியாதக் கோடு இது . என் மகள் என்னைப் பற்றி இழுக்கமுடியாது. எங்கள் இருவரிடையே இக்கோடு ஒற்றையாக விழுந்திருக்கிறது. இனி ஒன்று இரண்டாகி ,மூன்றாகிப் பெருகிப் பெருகி இறுதியில் கண் கூசும் பெருவெளிச்சமாய் , வெள்ளை வெளியாய் மாறும். அவ்வொளியில் நான் காணாமல் போவேன். கண் கூசி நீர் வழிய வழிய என் மகள் என்னைத் தேடுவாள். பின் கண்களைத் துடைத்துக் கொள்வாள் , சற்றுக்காலம் அங்கேயே நிற்பாள், பின் நகர்ந்து எதிர் திசையில் நடந்துசெல்வாள். கலையும் மேகம் காட்சிகளை மாற்றியபடியே இருக்கும். அலுப்பு தட்டாத அற்புத காட்சிகள் அவை.

                                                       *********************

Thursday, April 9, 2015



தாளாமல் தள்ளாடும் 
இவ்எளிய வீட்டினை 
பெரும் பாரமாய்
மௌனம் அழுத்திக்கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் வருவதாகச் சொல்லி கையசைத்துச் சென்றுவிட்ட அவள் ஒலிகளின் இளவரசி. வீணையின் தந்திகளை கவனமாக கவர்ந்து சென்றுவிட்ட சிறு மலரே, பேரலையே, மின்னிவரும் இடிமுழக்கமே இந்த அமைதி அச்சமூட்டுவதாய் இருக்கிறது. உன் ஒலி தந்த ஒளியில் மட்டுமே சுடரும் கருவறை தீபம் இது. உன் ஒற்றைச் சொல்லொலிக்கு துலாவுகிறது இருள் வழுக்கும் இவ்விருப்பு. பறவைகளுக்குச் சிறகசைப்பைக் கற்றுத்தருபவளே! பூனையின் பாதங்களை பயிற்றுவிப்பவளே!நிமிடங்களை விரட்டி ஓடும் சிறுமுயலே! விரைந்து வா. உன் ஒலிகளை அள்ளி வீசு. என் நெஞ்சு உலர்ந்து கொண்டிருக்கிறது.

                                         *************************



அவள் பெயர் அம்மு

இந்த நகர வாழ்க்கை விசித்திரமானது. தாமரை இலைத் தண்ணீர் போல யாருடனும் யாருக்கும் ஒட்டுதல் இல்லை. என் பக்கத்துக்கு வீட்டு மனிதர்கள் எனக்கு அறிமுகம் அற்றவர்கள். என் வீட்டு நிகழ்வுகள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. ஒரு வீட்டுக்குள் அலறும் சத்தம் கேட்டாலும் அவரவர் ஜன்னல் வழியாக கவலையுடன் பார்ப்பார்களேயன்றி என்ன ஆச்சு என்று வந்து கதவைத் தட்டமாட்டார்கள். ஆனால் எல்லோர்க்கும் நல்ல நண்பர்கள் உண்டு .ஆபத்தில் ஓடிவர ஆட்கள் உண்டு. ஆனால் அவர்கள் பக்கத்துக்கு, எதிர்வீட்டு ஆட்கள் அல்ல.

எங்கள் வீட்டிற்குப் பக்கத்துக்கு வீடு வாடகைக் குடியிருப்புகள் நிறைந்த அடுக்குமாடி. வருவோர் போவோர் அறிமுகமற்றவர்கள். எங்கள் வீட்டு யுடிலிட்டி ஏரியா அதாவது பாத்திரம் கழுவும், வாஷிங் மெஷின் இருக்கும் பின்கட்டு பகுதியிலிருந்து பார்த்தால் பக்கத்துக்கு வீட்டு பின்கட்டு தெரியும். அன்றொரு நாள் ஒரு நல்ல சிவந்த நிறம் கொண்ட வடிவான பெண்பிள்ளை ஒருத்தி அங்கு துணிகளை அலசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவளுக்கு 10, 11 வயது இருக்கும். நான் ஸ்ருதியிடம் வந்து சொன்னேன், பக்கத்து வீட்ல பார் உன்னவிட சின்ன பொண்ணு எப்படி வேல செய்யுது. செல்வா சொன்னார் அந்த பொண்ணு கையில குழந்தையோட வாசல்ல நிக்கறத பாத்தேன், அந்த வீட்ல வேலைசெய்யற பொண்ணு போல என்று. என்னால் நம்பவே முடியவில்லை அவளை அலங்கரித்தால் நிச்சயம் இளவரசி போல இருப்பாள். வேலைக்காரிக்கென்று ஒரு அடையாளத்தைப் பதிவு செய்து வைத்திருக்கும் மனம் எவ்வளவு மலினமானது ?!

மறுநாள் அவளை மீண்டும் பின்கட்டில் பார்த்தேன். புன்னகைத்து உன் பேர் என்ன என்றேன். அவள் மலையாளி. தமிழ் புரிந்தது அவளுக்கு. அம்மு என்று புன்னகைத்தாள். சஞ்சுவைப் பார்த்து யார் என்று கேட்டாள், பின் கையசைத்துவிட்டு உள்ளே போய்விட்டாள். அன்று மாலையே அவளைக் குழந்தையுடன் வாசலில் பார்க்கையில் புன்னகைத்துக் கையசைத்தேன். அவள் பதற்றமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் . அந்த ஒரே செய்கையில் அந்த வீட்டில் அவளது இருப்பு எப்படியானது என்று புரிந்துபோனது எனக்கு.

பிறகு எப்பொழுதும் பின்கட்டில் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் பேசுவேன். அதற்குமேல் அவளுடன் என்ன பேசுவதென்று புரியவில்லை. ஒவ்வொரு முறையும் சொல்லிவைத்ததுபோல் ஒரு சில கேள்விகளையே அவள் திரும்பத் திரும்பக் கேட்பாள். சாப்டாச்சா ? பிள்ளைங்க என்ன பண்றாங்க ? இவைகள் தான் பெரும்பாலும். நீ சாப்டியா என்று கேட்பதில் பெரும் அச்சம் இருந்தது எனக்கு. பசங்க படிக்கறாங்க, டிவி பாக்கறாங்க , விளையாடுறாங்க என்று எந்தபதிலைச் சொல்லவும் நான் தயங்கினேன். எந்த பதிலும் அவள் குழந்தைப் பருவத்தின் மீது ஏவும் வன்முறையாக ஆகிவிடுமோ என்று பயந்தேன். எப்பவும், உள்ள இருக்காங்க என்ற பதிலைத் தவிர வேறு சொன்னதில்லை நான். அந்த இரும்பு கிரில் வழியாக அவளுக்கு என்னால் கொடுக்கமுடிந்ததெல்லாம் வெறும் சாக்லேட்டுகள் தான். பெரிய வெளிநாட்டு சாக்லேட்டை முன்பக்கம் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு அவள் தின்று முடிக்கும் வரை எனக்கு பதற்றமாக இருக்கும். அவள் துணி துவைக்க வருகையில் பின் கதவைப் பூட்டிவிடுவார்கள். அவள் துவைத்து முடித்துவிட்டு கதவைத் தட்டிவிட்டு காத்துக்கொண்டு நிற்பாள். கதவைப் பூட்டிவிட்டு உள்ளே என்னதான் செய்வார்கள் ? ஏதாவது
தின்றுகொண்டிருப்பார்களா ? இல்லை புணர்ந்துகொண்டிருப்பார்களா? அவள் கதவு திறக்கும்வரை கையில் பக்கெட்டோடு நின்றுகொண்டே இருப்பாள்.

அன்று அவள் குளித்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள் குளியலறை இருக்கையில் அவளை பின்கட்டில் குளிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் வழக்கம்போல அந்தபக்கம் பாத்திரங்களை எடுக்கச் சென்றேன். அவள் கீழே பாவாடை மட்டும் கட்டியிருந்தாள். மேல் சட்டை இல்லை. என்னைப் பார்த்ததும் சட்டென்று கைகளை நெஞ்சுக்கு குறுக்கே மறைத்தபடி அப்படியே குறுகி அமர்ந்துவிட்டாள். நான் நெருப்பை மிதித்தது போன்று துடித்துப் போனேன். அவளை நான் குழந்தையாகத் தான் எண்ணியிருந்தேன். இல்லையென்றால் ஒரு நொடி கூட நான் அங்கு நின்றிருக்கமாட்டேன். பெரும் குற்ற உணர்ச்சியோடு சாரி சொல்லி வீட்டுக்குள் வந்தேன். பின் ஒருபோதும் அவள் குளிக்கையில் நான் வேலை இருப்பினும் பின்கட்டுப்பக்கம் போவதில்லை. அந்தச் சின்னஞ்சிறுமியின் உலகம் அந்த பின்கட்டு மட்டுமே. அதில் ஒரு சிறு சஞ்சலத்தை உண்டாக்கவும் நமக்கு உரிமை இல்லை.


                                                            ******************

Wednesday, April 1, 2015

"உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால்
காலம் மொழியாகும் "
பெண்ணின் கேள்விகளுக்கான விடைகள் மட்டும் எப்போதும் காலத்தின் பொறுப்பில் விடப்படுகிறது. உண்மையில் காலம் பதில் சொல்லுமா?!! காலம் அவளுக்காக பேசுமா ? சினிமாவில் மட்டும் தான் காலம் எல்லாவற்றிற்குமான விடையை மூன்று மணி நேரத்திற்குள் சொல்லிவிடும்.
விடை தெரியாத கேள்விகளை, சொல்லப்படாத வார்த்தைகளைப் பெண், ஒரு தீச்சட்டியென கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறாள். காலம் பேசுமென வலி பொருத்து காத்திருக்கிறாள். இறுதியில் தீச்சட்டியை தலையோடு கவிழ்த்துக் கொண்டு எரிந்து சாம்பலாகிறாள்.
காலம் பதில் சொல்லும் என காலத்தின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது. காலம் கொட்டாவி விடக்கூட வாய்த் திறக்காது என்பது நம் ஆவி பிரியும்போது தான் நமக்குத் தெரியவரும். ஆக நம் கேள்விகளுக்கான பதிலை நாமே தான் தேடிப் பெறவேண்டும்.

                                                         ******************

Saturday, March 28, 2015



பாட்டன் ,பூட்டன் பெருமையை பறைசாற்றியபடி நிமிர்ந்து நிற்கிறது அந்த வீடு. வாசலில் அச்சிறுமி விளையாடிக்கொண்டிருக்கிறாள். அம்மாவும் விஜயாக்காவும் வெளித் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். விஜயாக்கா, விளையாடிக்கொண்டிருந்தவளிடம் சொல்கிறாள், அங்கபாரு உங்க அப்பா கடைக்குள்ள போறாரு. குடிக்கத்தான் போறாரு. அவள் பார்க்கிறாள். அங்கிருந்து பார்த்தால் பஸ் ஸ்டாப், கொடிக்கம்பம் ,அதை ஒட்டிய ஹோட்டல் எல்லாம் தெரியும்.அப்பா உள்ளே தான் போகிறார். முன்பக்கம் சாப்பாடு. பின் பக்கம் சாராயம். 

அவளுக்கு பதற்றம் தொற்றிக்கொள்கிறது. அப்பாவைக் குடிக்கவிடக்கூடாது. ஓடு ஓடு .. அவள் தன் அரைப்பாவாடை பறக்க ஓடுகிறாள்.ஓட்டத்தில் அத்துனை வெறி. வேங்கையெனப் பாய்ந்து கடைக்குள் நுழைகிறாள், கண்ணில் படும் யாரும் மனதில் பதியவில்லை. அப்பா எங்கே ? அப்பா எங்கே ? மனம் பரபரக்க மேசைகள் கடந்து , சமையலறை நுழைந்து , ஒரே மூச்சில் புழக்கடைக்கு வந்துவிட்டாள். அதோ அப்பா. 

அங்கே ஒருவர் ஸ்டூலில் ஒரு குடம் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.அவரைத் தெரியும். அவர் பெயர் கணேசனோ, முருகேசனோ. அவர் மகன் அவள் படிக்கும் பள்ளியில் தான் படிக்கிறான். அருகில் ஓடி ,அப்பா வாங்க வீட்டுக்கு போகலாம் என்கிறாள் அவள். அவளை அவர்கள் இருவருமே அங்கே எதிர்பார்க்கவில்லை. நீ ஏம்மா இங்க வந்த ? போ வீட்டுக்கு போ.. இல்ல நீங்களும்  வாங்கப்பா போலாம் ,அவள் அப்பாவின் கையைப் பிடித்து இழுக்கிறாள். இப்போது அப்பாவுக்கு எரிச்சல் வரத் தொடங்குகிறது . நீ போ , நீ குடுப்பா என்று குடத்தில் கவனம் கொள்கிறார் அப்பா. இனி அப்பாவிடம் கெஞ்சிப் பிரயோஜனம் இல்லை. ஏங்க , அப்பாவுக்கு குடுத்தீங்கனா குடத்தை போட்டு உடைப்பேன், அப்பாவுக்கு குடுக்காதீங்க, சாராயம் வித்து எல்லாரையும் ஏன் இப்படி சாவடிக்கிறீங்க ? அவள் ஆத்திரத்துடன் ஏதேதோ பேசுகிறாள். வயசுக்கு மீறிய பேச்சு. ஆனால் அந்த குழந்தைமை வயதுதான் அவள் பலம் , தைரியம் அங்கே. அவர் பதில் தெரியாமல் தடுமாறுகிறார். அண்ணா , வீட்டுக்கு போண்ணா .. பிள்ள திட்டுதுல்ல .. பாப்பா நீ கூட்டிட்டு போ ..அவர் அப்பாவை அனுப்ப முயல்கிறார். அப்பாவுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. டேய் குடுடா ,பிள்ள கெடக்குது . அண்ணா வீட்டுக்கு போயிட்டு அப்புறமாச்சும் வாண்ணா. இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்க அவள் இருவரிடமும் மன்றாடிக் கொண்டிருக்கிறாள், எச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அந்த எளிய சிறுமி அவர்கள் இருவருக்குமிடையே ஒரு இரும்புச் சுவரை அவசரமாக எழுப்ப முயன்றுகொண்டிருக்கிறாள். இப்போது அப்பா அவள் கையை ஒரு கையால் இறுகப்பற்றுகிறார் , மறுகையால் அந்த சிகப்பு நிற பிளாஸ்டிக் டம்ளரை அந்த மனிதனிடமிருந்து வாங்குகிறார். அவள் கையை உதற முயல்கிறாள். பிடி இறுகுகிறது. அப்பா , அவளின் நேசத்திற்குரிய அப்பா, அவளின் பிஞ்சுக் கைகளை ஏந்தி கண்களில் ஒத்திக் கொண்டு ஒரு நாளில் நூறு முறை முத்தமிடும் அப்பா , தனது தடித்த உதடுகளை டம்ளரில் பொருத்தி ( அந்த உதடுகள் , இவள் கண்ணாடி பார்க்கும் தோறும் அப்பாவை நினைவூட்டுகின்ற தடித்த உதடுகள் )  அந்த மூத்திரத்தைக்  குடிக்கத் தொடங்குகிறார். அம்மா, சாராயத்தை எப்போதும் மூத்திரம் என்றே சொல்வாள். உண்மையில் அப்பா, மூத்திரத்தைக்  குடிக்கும் முகபாவனையுடன் தான் அதைக் குடித்து முடித்தார். கடைசி சொட்டு உதட்டிலிருந்து கீழே விழுகிறது.

அதள பாதாளத்தின் விளிம்பைப் பற்றியபடி தொங்கிக் கொண்டிருக்கும் அப்பாவின் கைகளைப் பற்றியபடி இச்சிறுமி தவித்திருக்கிறாள். அப்பா, அந்த மெல்லிய கைகளை நழுவவிட்டபடி அதள பாதாளத்தில் விழுந்து மெல்ல கீழ்நோக்கிப் போகிறார்..மீண்டும் மீண்டும் .. எப்போதும் தோற்று விழுகிறார் அப்பா, கூடவே அவளும். 

                                                           *******************

Friday, March 13, 2015


நாங்கள் இந்த ஏரியாவிற்கு வந்த புதிது. சஞ்சு அப்போது பிறந்திருக்கவில்லை. குப்பைகளை வீடுகளுக்கே வந்து சேகரிக்க வண்டி வரும் என்று வீட்டு ஓனர் சொல்லியிருந்தார். முதல் நாள் வாசலில் வண்டி வந்து ஹாரன் அடிக்கவும் கையில் கவரோடு வாசலுக்கு வந்தால் ஒரு சின்ன பையன் குப்பைகளுக்கு நடுவே நின்றிருந்தான். பார்த்தமாத்திரத்தில் பிடித்துப் போகும் திருத்தமான முகம்.ஒரு புன்னகையை மட்டும் கவரோடு சேர்த்து தந்துவிட்டு வந்தேன். வண்டியை ஒரு பெரியவர் ஒட்டிவந்திருந்தார். அது அவனது தாத்தா.
பின் தினம் அவர்களை பார்க்கநேர்கையில் மெல்ல ஓரிரு வார்த்தைகள் பேசத்தொடங்கினேன். முதல் முறை உன் பேர் என்ன என்று கேட்டபோது குபேரன் என்று அச்சிறுவன் சொன்னான். புருவம் உயர குபேரனா என்று கேட்டதும் ஆமாங்க ஆண்டி என்று புன்னகைத்தான் . பேருக்கு தகுந்தமாதிரி ஒரு நாள் குபேரன் ஆய்டுவ விடு என்று நான் சொன்னபோது உங்க ஆசிர்வாதம் ஆண்டி என்று பெரியமனுசன் மாதிரி சொல்லிவிட்டு மலர்ந்தான் அவன்.
மிக பொறுப்பானவன். அமைதியானவன். வெகு விரைவிலேயே எங்கள் ஏரியாவில் அனைவரது நன்மதிப்பையும் பெற்றுவிட்டவன். வீட்டுக்கு விலக்காகும் நாட்களில் குப்பைகளை அவன் கையில் தருகையில் மனம் பதறும். அன்று மட்டும் அவனிடம் பேசாமல் வேகமாக நகர்ந்துவிடுவேன். ஆனால் அந்த பிஞ்சுக்கைகளில் எல்லா குப்பைகளும் ஒரே மாதிரியாகக் கையாளப்படும்.
ஒரு நாள், ஆண்டி பழைய பேப்பர் வாங்கறேன். இருந்தா என்கிட்ட போடுங்க என்று வந்து நின்றான். எல்லோரையும் விட ஒரு ரூபாய் அதிகம் விலை வைத்துத் தருவான். டேய் இப்படி இருந்தா எப்படி பொழைக்கிறது என்று கேட்டால் இல்லங்க எனக்கு இந்த ரேட் கட்டுப்படி ஆகுது என்பான்.
தானே சம்பாதித்துத் தம்பியை படிக்கவைத்துக் கொண்டிருந்தான். அப்பா இறந்துவிட அம்மாவுடன் திருவண்ணாமலையிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவன். இங்கே அனேக அடிமட்ட வேலைகளில் இருப்பவர்கள் திருவண்ணாமலைக்காரர்கள் தான். நாமெல்லாம் அங்கே கிரிவலம் சென்றுகொண்டிருக்க அந்த ஊர்க்காரர்களை விதி வெளியே விரட்டிக் கொண்டிருக்கிறது.
அவன் வளர்ந்துகொண்டிருந்தான் . ஒரு நாள் வழியில் அவனை ஆட்டோவில் பார்த்தேன். என்னடா என்றதும் சாயங்காலத்துல ஆட்டோ ஓட்றேன் ஆண்டி என்றான். அன்று ஒருநாள் மாலையில் அம்மாவுடன் வந்திருந்தான். ஊர்ல வீடுகட்டியிருக்கோம் ஆண்டி நீங்க கட்டாயம் வரணும் என்று பத்திரிக்கையை நீட்டுகிறான். நல்வரவை நாடுபவர்கள் குபேரன், கோடீஸ்வரன். யார் இந்த கோடீஸ்வரன்?! அவன் தம்பி. எளிய மனிதர்களின் இப்படியான பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியலை எண்ணுகையில் மனம் இலகிப்போகிறது.
அவன் அம்மா , பையன் எப்படிமா ஒழுங்கா இருக்கானா ? நான் அவன்ட சொல்லிருக்கேன் பணம் சம்பாதிக்கறது ரெண்டாவது தான், ஏதாவது கெட்டபேர் வந்ததுனா என்ன உயிரோட பார்க்கமுடியாது என்று என்றார். இல்லமா ரொம்ப நல்லபையன், இங்க எல்லார்க்கும் பிடிக்கும், ஒரு கெட்டபழக்கம் இல்ல. கவலைப்படாதீங்க என்று நான் சொன்னதும் அவர் முகத்தில் தெரிந்த பெருமிதம் அவ்வளவு அழகு.
ஒரு நாள் நாங்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டு வாசலில் ஒரு பழைய டாடா சுமோ நின்றுகொண்டிருந்தது. பார்த்தால் குபேரன் வாசலில் காத்திருக்கிறான். செகண்ட் ஹான்ட் வண்டி வாங்கியிருக்கேன் ஆண்டி உங்ககிட்ட காட்டலாம்னு வந்தேன் என்கிறான். மனம் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தது. நான் பார்க்க பொடியனாக இருந்த பையன் கண் முன்னே எப்படியான வளர்ச்சி. ஒரு விதை முட்டி மோதி முதல் இலை விடும் கணம். நான், செல்வா, பிள்ளைகள் எல்லாம் வண்டியில் ஒரு ரவுண்டு போய்வந்தோம். ஆசிர்வதித்தோம்.
இன்று திருமணம் ஆகி அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருக்கிறான். மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்திருந்தான். பெற்ற மகனை திருமண கோலத்தில் தாய் பார்க்கும் சந்தோசத்தை எழுத்தில் சொல்லிவிட முடியுமா ? நான் உணர்ந்தேன். அவர்கள் தம்பதிகளாக எங்கள் காலில் விழுந்து வணங்கினர். மஞ்சள் கலந்த அரிசியை அவர்கள் மேல் தூவி ஆசிர்வதித்த நிமிடங்கள் கருணையுடன் கடவுள் எனக்காக வழங்கியவை.

                                                              *****************

Monday, February 23, 2015

அம்மா நிலா




அது இன்வெர்டெர்கள் அறிமுகம் இல்லாத கிராமம். தொலைக்காட்சிப் பெட்டியையோ, மிக்சி,  க்ரைண்டரையோ நம்பி வாழாத வாழ்க்கைமுறை. ஆகையால், எங்களுக்கு மின்சாரத்தடை என்பது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்ததில்லை. வயலுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டி பெரியவர்கள் கவலை கொண்டிருக்கலாம், அது நாங்கள் அறியாதது.
இரவு 7-மணி வாக்கில் மின்சாரம் போய்விடும். பிறகு அரைமணிநேரமோ, ஒரு மணி நேரமோ கழிந்து வரும். அந்த நேரத்தில் அநேகமாக நான் சமையற்கட்டில் அம்மாவுடன் பேசிக்கொண்டோ, அங்கே விளையாடிக்கொண்டோ தான் இருப்பேன். மின்சாரம்போன மறுநொடியில்  பயம் வயிற்றைக்கவ்வும். அப்போது அம்மா அருகில் இருந்தாலும் நம்புவதற்கில்லை. அவரே, எரிந்துகொண்டிருக்கும் அடுப்பின் ஒளி முகத்தில் பட்டு பேய் போலத்தான் தெரிவார். எனவே மின்சாரம்போன மறு நொடியில் தெருவில் தெரியும் சொற்ப ஒளியை பார்வையால் பற்றியபடி ஒரே ஓட்டம் தான். 

அது நீண்ட பழங்காலத்து வீடு. வாசலில் இருந்து கடைசி சமையலறை வரை கதவுகள் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். சமையலறைக்கு முன் இருக்கும் அறையின் ஓரத்தில் தான் மாடிப்படி இருக்கிறது. அதை ஒட்டி ஒரு சிறு அறையும். அந்த அறையில் மண்வெட்டி, கடப்பாரை, பைப்புகள், முறம் இன்னபிற இரும்பு சாமான்கள் போடப்பட்டு அதிக புழக்கமில்லால் இருக்கும். வெளிச்சத்தில் சாதாரணமாக தெரியும் அந்த மாடிப்படி இருளில் பெரும் திகில் கிளப்புவதாக இருக்கும். போதாதக் குறைக்கு அந்த உடைசல்கள் கிடக்கும் அறைவேறு கூடுதல் திகில்.

மின்சாரம் போனால் உடனடியாக எங்கள் வீட்டு திண்ணை அரட்டைக் கச்சேரிக்கு தயாராகிவிடும். பக்கத்து வீட்டு விஜயாக்கா, சித்தி, அம்மா, எதிர்வீட்டு செட்டியாரம்மா [அந்த அம்மா பெயர் இன்றுவரைத் தெரியாது :) ] ஆகியோர் கூடிப் பேசத்தொடங்கிவிடுவார்கள். நானும் என் தங்கையும் தெருவில் விளையாடுவோம். அப்போது தான் அவசரமாக ஒன்றுக்கு போகவேண்டிவரும். அம்மாவைக் கூப்பிட்டால் இத்தசோடு புள்ள இருட்டுக்கு என்னபயம்? உள்ள போய் வெளக்கு எடுத்துக்கிட்டு போ என்பார். விளக்கு ஹாலில் எரிந்துகொண்டிருக்கும். பாத்ரூம்க்கு செல்ல மாடிப்படிக்கு நேர் எதிரே சென்றுதான் திரும்பவேண்டும். அந்த இருட்டில் விளக்கை ஏந்திக் கொண்டு மாடிப்படி முதுகில் வெறிக்க சென்று திரும்புவதை எண்ணினாலே காலோடு வந்துவிடும். நீ வாம்மா நீ வாம்மா என்று நச்சரிக்கத்தொடங்குகையில் சித்தி அந்த சந்துபக்கம் போயிட்டு வாங்களேன் என்று குரலுயர்த்துவார். அங்கமட்டும் இருட்டு இல்லையா ? ஆனாலும் வேற வழியில்லை. தங்கையும் நானுமாக போய் நிலாவைப் பார்த்தபடி அமர்ந்துவிட்டு யார் முதலில் எழுந்து ஓடிவருவது என்பதான பதற்றத்துடன் ஓடிவருவோம். தங்கை உள்ளாடை கூட சரியாக அணிந்துகொள்ளாமல் திட்டிக்கொண்டே பின்னால் ஓடி வருவாள். 

வயிறு காலியானதும் ரோஷம் வந்துவிடும். பாக்கலாமா யாரு தைரியசாலின்னு என்று வாதம் செய்துகொண்டு, சரி யாரு போய் தைரியமா மாடிப்படிய பாத்துட்டு வராங்களோ அவங்கதான் தைரியசாலி என்ற பந்தயத்தில் வந்து நிற்போம். உள் திண்ணைத் தாண்டி, ஹால் தாண்டி....! ரோசப்பட்டிருக்கக் கூடாதோ?! அடுத்த அறைக்கு படி இறங்குகையில் மின்னல் ஒன்று வயிற்றைத் தாக்கும். படியிறங்கி நின்று மாடிப்படியை பார்க்கும் கணம் மொத்த நரம்புகளும் சொடுக்கி இழுக்கும். மாடிப்படி தன் கரியநிற வாயைப் பிளந்தபடி உறைந்திருக்கும் . மேலே முதல் படியில் கால்வழிய நீளமான அங்கி அணிந்த உருவம் தலை புகைய நின்றிருக்கும். ஐயோ நான் செத்தேன் .ஒரே பாய்ச்சலாக திரும்பி ஓடிவருகையில் அது முதுகுக்குப் பின்னால் துரத்திக்கொண்டு வரும். ஓடிவந்து வாசலில் குதிக்கையில் அந்த உருவம் காணாமல் போயிருக்கும். போயிட்டு வந்துட்டேன் பாத்தியா என்று சொல்லியபடி போய் அம்மா அருகில் பொட்டாட்டம் அமர்ந்துகொள்வேன். இதயம் படபடவென அடித்துக்கொள்ளும். நிலாவெளிச்சத்தில் என் பீதி அடைந்த முகத்தை யாரும் பார்க்கும் முன் அம்மா மடியில் படுத்துக்கொள்வேன். அம்மா மீண்டும் எழுப்புகையில் எங்கும் ஒளி வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கும்.
***
செ.சுஜாதா
பெங்களூர்.

Friday, February 13, 2015



நாளைக் காதலர் தினம் . நண்பர் ஒருவர் பேசும்போது கேட்டார் நீங்க இதுவரை யாரையும் காதலித்ததே இல்லையா?! ச்சே வாழ்க்கையே வீண் என்றார். என்னைப்பொறுத்தவரை நேசிக்கத் தெரிந்த யாருக்கும் வாழ்க்கை வீண் இல்லை.

 நேசம் என்பது என்ன ? நீ எட்டி உதைத்தாலும் உன் காலடியில் கிடப்பேன் என்னும் அடிமைத்தனமா அல்லது நீ எனக்கானவன், என் சொல் தாண்டி நீ யோசிக்கக் கூடாது என்று தலைமேல் அமர்ந்துகொண்டு ஆட்டிவைக்கும் திமிரா? கையை கிழித்துக்கொள்வதும், சூடுபோட்டுக்கொள்வதும், நெஞ்சில் பசைக்குத்திக்கொள்வதும், தொலைபேசியில் துரத்துவதும் அல்ல நேசம்.

 சுய கவுரவத்தை, விருப்பத்தை, தனித்தன்மையை இழந்துவிடாமல் ஒருவரின் நேசத்தைப்  பெறமுடிந்தால் அங்கே வாழ்வு அர்த்தப்படுகிறது. நேசம் நிரூபணங்களைக் கோராதது. நிபந்தனைகள் அற்றது. அது ஒரு பட்டாம்பூச்சி.



நாம்  அனைவரையும் நேசிப்போம். எதிர்படும் அத்தனை உயிர்களுக்கும் புன்னகையை பரிசளிக்க நாம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நேசம் என்பது நேசித்திருத்தல் மட்டுமே. 

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். 

Wednesday, February 4, 2015



இன்றைய நாள்
வழக்கமானதொரு நாளாக தொடங்க எத்தனித்து கொஞ்சம் விசித்திரம் காட்டி ஆரம்பித்தது .
எல்லா நாட்களையும் போல இன்றைய நாளும் பரபரப்பாகவே தொடங்கியது .பரபரக்கும் நாளை மெலடிப் பாடல்களுடன் தொடங்குவது என் வழக்கம் .இன்றும் அப்படியே இளையராஜாவின் இன்னிசை சாம்பிராணிப் புகை போல வீடெங்கும் மெல்லியதாய் பரவி
நெகிழ்த்திக் கொண்டிருந்தது .
நேரம் 7 ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது .இன்னும் அரை மணியில் பள்ளி வேன் வந்துவிடும் .சாம்பார் பொடி பொட்டலத்தைக் கத்தரிக்க கத்தரிக்கோலை தேடுகிறேன் .வழக்கம் போல கிடைக்கவில்லை .இந்த பிள்ளைகள் இப்படித்தான் எடுத்த பொருளை அதனிடத்தில் வைப்பதில்லை .சரி தேடிக்கொண்டிருக்க நேரம் இல்லை .காய் நறுக்கும் கத்தியை எடுக்கிறேன் .பொட்டலத்தை ஓரத்தில் அறுக்க முயல்கிறேன். அவசரம். சுருக்கென்று ஒரு வலியுடன் விரலை கீறித்திறந்திருக்கிறது கத்தி .
கொஞ்சமும் பதற்றத்தை தந்துவிடாத செந்நிற உதிரம் . விரலை அழுத்திப்பிடித்தபடி திரும்புகிறேன் . சமையல் மேடையில் ஓரத்தில் கத்தரிக்கோல் அமைதியாக சாய்ந்திருக்கிறது .ஒரு நிமிடம் முன்பு என் கண்ணிலிருந்து மறைந்த அது அடுத்த நிமிடத்தில் உருப்பெற்றிருக்கிறது . அப்படி என்றால் நடந்தது ஏற்கனவே முடிவான ஒன்றா ? நடப்பது அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றால் நம் செயல்கள் அனைத்தும் அதை நோக்கித்தானா ?!
கத்தியை எடுத்துப்பார்த்தேன் . எந்தவித தடயமும் இன்றி மௌனமாக இருந்தது அது . சமரசம் ஏதும் இன்றி தன் கடமை ஒன்றே குறி என்றிருக்கும் அதன் நிலையும் ஜென் நிலை தானா ? மெல்லிதாய் புன்னகைத்தேன் .கத்தியை எடுத்து முத்தமிட்டேன் . சில்லென்ற அதன் உடலில் வெங்காய வாசனை . முத்தம் வெறும் முத்தமாக ஒருபோதும் இருப்பதில்லை . கண் லேசாக கலங்கியது . அப்பா முகம் நொடியில் தோன்றி மறைந்தது .
விரலை அழுத்திப்பிடித்தபடி சமையலை தொடர்கிறேன் . விரல்கள் ஒரு பரத நாட்டிய முத்திரையுடன் இருக்கிறது . சிறு வயதில் நாட்டியம் கற்கும் ஆசை இருந்தது . அதற்கான சூழல் இல்லை . சித்தப்பா மகள் கற்றுத்தந்த ஒரு சில அசைவுகள் மட்டுமே இன்று வரை அறிந்தது . மற்றபடி சினிமா பாடல்களுக்கு ஆடுவதை யார் தடுக்க இயலும் ?! நான் நன்றாக ஆடுவேன் என்பது கடைசி வரை அப்பாவுக்கு தெரியாது . அம்மா என்னை உள்ளும் புறமும் அறிந்தவள் .
அழுத்திப்பிடித்திருந்த விரலை மெல்ல திறந்து பார்த்தேன் . இரத்தம் நின்றிருந்தது .கோபம் கொண்ட காதலனை அல்லது கதறி அழும் குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அழுத்துகையில் மெல்ல இயல்பு நிலை திரும்புமே அப்படி என் கட்டை விரலின் சமாதானத்தில் ஆள்காட்டி விரல் அமைதிகொண்டு உதிரம் நிறுத்தியிருந்தது .
சஞ்சுவின் குரல் என்னை மீண்டும் கொண்டுவந்து சமையலறையில் இறக்குகிறது . அடுப்பைப் பார்க்கிறேன். சாம்பார் தயாராகிவிட்டிருக்கிறது . சாம்பாரில் சேர்ப்பதற்காக நறுக்கி வைத்த கேரட்டும் ,பீன்சும் அப்படியே தட்டில் இருக்கிறது . கத்தரிக்காய் மட்டும் தன்னந்தனியாக சாம்பாரில் மிதந்தபடி அலுத்துக்கொள்கிறது அப்படி எங்கதான் நினைப்பு போகுமோ உனக்கு!? என்று.மீண்டும் புன்னகை.
ஒரு துண்டு மாமிசத்திற்கு சுற்றி மொய்த்துத் தீர்க்கும் எலிகளென ஒரு நிகழ்வைச் சுற்றி மொய்த்துக் கிடக்கும் இந்த நினைவுகளை எப்படி விரட்ட ? பேக்பைப்பர்க்காரனைப் போல் இசைத்தபடி அழைத்துச்சென்று பள்ளத்தில் தள்ளி விடலாமா ?!

                                                           ******

Sunday, February 1, 2015



திருவிழாக் கூட்டத்தில்
குழந்தைகளின்
கூச்சலுக்கு இடையே
பஞ்சுமிட்டாய்காரனின் 
மணியோசைக்கு நடுவே
மலர்மணக்கும்
வீதியில்
சிரிப்பொலிக்கும்
வளையல்களின் சிணுங்களுக்கும்
செவிமடுத்தபடி
மௌனித்துக் கிடக்கிறது
அச்சு முறிந்த
அழகியதொரு
ராட்டினம்
***


தொலைக்காட்சியில் 'மண் வாசனை' பட பாடல் பொத்தி வச்ச மல்லிக மொட்டு போய்க்கொண்டிருக்கிறது. வகிடெடுத்து படிய வாரிய தலையும், முழங்கை வரை நீளும் சட்டையும், வெள்ளை வேட்டியுமாக பாண்டியன் என் மாமன்களை நினைவு படுத்துகிறார். அப்பாவுடைய தங்கைகள் 3 பேர்க்கும் சேர்த்து மொத்தம் பிள்ளைகள் 7. ஆக 7முறை மாமன்கள். தாய்மாமன்கள் 3.
இரண்டு அத்தைகள் உள்ளூரிலேயே கட்டிக்கொண்டதால் முறை மாமன்கள் அன்றாடம் சந்திக்கக்கூடியவர்களாக இருந்தனர். அண்ணனின் நண்பர்கள் யாரையும் படி ஏற விடாத என் அப்பா மாமன்களுடன் மிகுந்த நட்போடு இருப்பார். சின்ன வயசில் திருவிழாவில் மஞ்சள் நீரை சொம்பில் எடுத்துக்கொண்டு மாமனை தேடி அலைந்ததும், ரவி மாமா, நீரை பிடுங்கி என் மேல் மொத்தமாக கொட்டி விட அழுதுகொண்டே நான் வீட்டுக்கு வந்ததும் இன்றும் மஞ்சள் மணம் மாறாமல் இருக்கிறது. கல்லூரி வரை படித்த ரவி மாமா ரொம்ப சாந்தம், அன்பு நிறைந்தது.
சூரி மாமா சைக்கிள் ரேஸில் எப்போதும் முதலில் வரும். வருடா வருடம் வெற்றி பெற்ற மாமனுக்கு சோடா வாங்கிக்கொண்டு பெருமையோடு நான் ஓடுவதும் தவறாது. மாநிறமும், முட்டை கண்ணும், சரிந்து விழும் அடர்ந்த தலை முடியும், அண்ணாந்து சிரிக்கும் போது தெரியும் வரிசையான பல்லுமாக சூரி மாமாவின் முகம் மிகவும் இணக்கமானது.
சந்திரன் மாமா ஒரு சிடு மூஞ்சி. சும்மா ஏதாவது மிரட்டிக்கொண்டே இருக்கும். சிவப்பாக,உயரமாக அழகாய் இருக்கும் அது முகத்தில் சிரிப்பை பார்ப்பதே அபூர்வம். முகத்தை எப்போதும் சீரியசாக, பெரிய மனுஷ தோரணையில் வைத்துக்கொண்டே திரியும்.
ராஜா மாமா எல்லோருக்கும் கடைசி. படபடவென்று பேசும். என் அப்பாவோடு பஞ்சாயத்து வேலைகளுக்கு கூட அலைவது அது தான். ஜடையை ஏன் இப்படி தூக்கி கட்டி இருக்க? நல்லாவே இல்ல, சோறு சாபிடுறியா இல்லையா இவ்ளோ ஒல்லியா இருக்க, சமைக்க எப்போ கத்துக்குவ என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கும். பேசும்போது சுஜி சுஜி என்று 100 சுஜி சொல்லிவிடும்.
பெரிய அத்தை பிள்ளைகளும், தாய் மாமன்களும் வேறு ஊரில் இருந்தாலும் விடுமுறைகளில் அவர்கள் வீட்டில் கழியும் நாட்கள் மிக இனிமையானவை . பெரிய அத்தை பிள்ளைகளும், அம்மாவின் சகோதரர்களும் வயதில் ரொம்ப பெரியவர்கள். சினிமாவுக்கு கூட்டிப்போவது , தின்பண்டம் வாங்கி வருவது என்று அவர்களின் அன்பில் தந்தைமையை காண முடியும்.
இத்தனை மாமன்களிடையே வளர்ந்த என் வாழ்வு அவ்வளவு பாதுகாப்பானதாக இருந்திருக்கிறது. ஒரு நொடிப்பொழுதும் அவர்கள் எல்லை மீறியதில்லை. உரிமையை தவறாக பயன்படுத்தியத்தில்லை. கண்ணியம் தவறாத அவர்கள் அன்பு இன்று வரை மாறாதிருக்கிறது. உறவுகள் சூழ வாழ்ந்திருத்தல் சுகம். அதுவும் மண் வாசனை மணக்கும் கிராமத்தில்..
[ நான் பாடலை பார்த்து மேற்சொன்ன இவ்வளவும் நினைத்து feel பண்ணிக்கொண்டிருக்கிறேன், சஞ்சு, பாண்டியனைப் பார்த்து யாரும்மா இந்த அங்கிள் லூசு மாதிரி இருக்காங்கன்னு சொல்லி ஒரே நிமிடத்தில் என்னை தரை இறக்கிவிட்டாள் ]