அது இன்வெர்டெர்கள் அறிமுகம் இல்லாத கிராமம். தொலைக்காட்சிப் பெட்டியையோ, மிக்சி, க்ரைண்டரையோ நம்பி வாழாத வாழ்க்கைமுறை. ஆகையால், எங்களுக்கு மின்சாரத்தடை என்பது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாக இருந்ததில்லை. வயலுக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டி பெரியவர்கள் கவலை கொண்டிருக்கலாம், அது நாங்கள் அறியாதது.
இரவு 7-மணி வாக்கில் மின்சாரம் போய்விடும். பிறகு அரைமணிநேரமோ, ஒரு மணி நேரமோ கழிந்து வரும். அந்த நேரத்தில் அநேகமாக நான் சமையற்கட்டில் அம்மாவுடன் பேசிக்கொண்டோ, அங்கே விளையாடிக்கொண்டோ தான் இருப்பேன். மின்சாரம்போன மறுநொடியில் பயம் வயிற்றைக்கவ்வும். அப்போது அம்மா அருகில் இருந்தாலும் நம்புவதற்கில்லை. அவரே, எரிந்துகொண்டிருக்கும் அடுப்பின் ஒளி முகத்தில் பட்டு பேய் போலத்தான் தெரிவார். எனவே மின்சாரம்போன மறு நொடியில் தெருவில் தெரியும் சொற்ப ஒளியை பார்வையால் பற்றியபடி ஒரே ஓட்டம் தான்.
அது நீண்ட பழங்காலத்து வீடு. வாசலில் இருந்து கடைசி சமையலறை வரை கதவுகள் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். சமையலறைக்கு முன் இருக்கும் அறையின் ஓரத்தில் தான் மாடிப்படி இருக்கிறது. அதை ஒட்டி ஒரு சிறு அறையும். அந்த அறையில் மண்வெட்டி, கடப்பாரை, பைப்புகள், முறம் இன்னபிற இரும்பு சாமான்கள் போடப்பட்டு அதிக புழக்கமில்லால் இருக்கும். வெளிச்சத்தில் சாதாரணமாக தெரியும் அந்த மாடிப்படி இருளில் பெரும் திகில் கிளப்புவதாக இருக்கும். போதாதக் குறைக்கு அந்த உடைசல்கள் கிடக்கும் அறைவேறு கூடுதல் திகில்.
மின்சாரம் போனால் உடனடியாக எங்கள் வீட்டு திண்ணை அரட்டைக் கச்சேரிக்கு தயாராகிவிடும். பக்கத்து வீட்டு விஜயாக்கா, சித்தி, அம்மா, எதிர்வீட்டு செட்டியாரம்மா [அந்த அம்மா பெயர் இன்றுவரைத் தெரியாது :) ] ஆகியோர் கூடிப் பேசத்தொடங்கிவிடுவார்கள். நானும் என் தங்கையும் தெருவில் விளையாடுவோம். அப்போது தான் அவசரமாக ஒன்றுக்கு போகவேண்டிவரும். அம்மாவைக் கூப்பிட்டால் இத்தசோடு புள்ள இருட்டுக்கு என்னபயம்? உள்ள போய் வெளக்கு எடுத்துக்கிட்டு போ என்பார். விளக்கு ஹாலில் எரிந்துகொண்டிருக்கும். பாத்ரூம்க்கு செல்ல மாடிப்படிக்கு நேர் எதிரே சென்றுதான் திரும்பவேண்டும். அந்த இருட்டில் விளக்கை ஏந்திக் கொண்டு மாடிப்படி முதுகில் வெறிக்க சென்று திரும்புவதை எண்ணினாலே காலோடு வந்துவிடும். நீ வாம்மா நீ வாம்மா என்று நச்சரிக்கத்தொடங்குகையில் சித்தி அந்த சந்துபக்கம் போயிட்டு வாங்களேன் என்று குரலுயர்த்துவார். அங்கமட்டும் இருட்டு இல்லையா ? ஆனாலும் வேற வழியில்லை. தங்கையும் நானுமாக போய் நிலாவைப் பார்த்தபடி அமர்ந்துவிட்டு யார் முதலில் எழுந்து ஓடிவருவது என்பதான பதற்றத்துடன் ஓடிவருவோம். தங்கை உள்ளாடை கூட சரியாக அணிந்துகொள்ளாமல் திட்டிக்கொண்டே பின்னால் ஓடி வருவாள்.
வயிறு காலியானதும் ரோஷம் வந்துவிடும். பாக்கலாமா யாரு தைரியசாலின்னு என்று வாதம் செய்துகொண்டு, சரி யாரு போய் தைரியமா மாடிப்படிய பாத்துட்டு வராங்களோ அவங்கதான் தைரியசாலி என்ற பந்தயத்தில் வந்து நிற்போம். உள் திண்ணைத் தாண்டி, ஹால் தாண்டி....! ரோசப்பட்டிருக்கக் கூடாதோ?! அடுத்த அறைக்கு படி இறங்குகையில் மின்னல் ஒன்று வயிற்றைத் தாக்கும். படியிறங்கி நின்று மாடிப்படியை பார்க்கும் கணம் மொத்த நரம்புகளும் சொடுக்கி இழுக்கும். மாடிப்படி தன் கரியநிற வாயைப் பிளந்தபடி உறைந்திருக்கும் . மேலே முதல் படியில் கால்வழிய நீளமான அங்கி அணிந்த உருவம் தலை புகைய நின்றிருக்கும். ஐயோ நான் செத்தேன் .ஒரே பாய்ச்சலாக திரும்பி ஓடிவருகையில் அது முதுகுக்குப் பின்னால் துரத்திக்கொண்டு வரும். ஓடிவந்து வாசலில் குதிக்கையில் அந்த உருவம் காணாமல் போயிருக்கும். போயிட்டு வந்துட்டேன் பாத்தியா என்று சொல்லியபடி போய் அம்மா அருகில் பொட்டாட்டம் அமர்ந்துகொள்வேன். இதயம் படபடவென அடித்துக்கொள்ளும். நிலாவெளிச்சத்தில் என் பீதி அடைந்த முகத்தை யாரும் பார்க்கும் முன் அம்மா மடியில் படுத்துக்கொள்வேன். அம்மா மீண்டும் எழுப்புகையில் எங்கும் ஒளி வெள்ளம் பாய்ந்துகொண்டிருக்கும்.
***
செ.சுஜாதா
பெங்களூர்.
No comments:
Post a Comment