Thursday, June 18, 2015


ஜெயமோகனின் 'வெண் கடல்' சிறுகதை வாசித்தேன். ஒரு வைத்தியசாலையின் தினசரி காட்சியில் தொடங்கும் கதை சட்டென்று சரிவில் உருண்டோடும் சக்கரமென வேகம் கொள்கிறது. 'மரணித்த மழலை கைவிட்ட முலைகள்' என்று என்றோ நான் எழுதிய வரிகள் இன்று பெருவலியை சுமந்துகொண்டு என்னிடமே திரும்பி வந்திருக்கின்றன. பிறக்கும்போதே குழந்தை இறந்துபோகிற ஒரு தாயின் மார்பில் பால் கட்டிக்கொண்டு படும் வேதனையும், தீர்வுமே கதை.

வெண் கடல் எத்தனைப் பொருத்தமான பெயர்! ஆம், ஒரு தாயின் முலைகள் வெறும் சதையும், உதிரமும் அல்ல. அது பல நூறு ஜீவநதிகள் பாய்ந்தோடி ஒற்றைப் புள்ளியில் சங்கமிக்கும் பெருங்கடல். இரவெல்லாம், அழும் குழந்தையுடன் போராடுவாள் தாய். பகலில் பிள்ளை களைத்து உறங்கும். பட்டன் போடாத மேலாடையுடன் தாயும் உறங்கிப்போவாள். ஆனால் முலைகள் உறங்காது. பிள்ளைக்கு புகட்டுவது ஒன்றே இப்பிறவி நோக்கமென சதா இயங்கிக்கொண்டிருக்கும்.அவைகள் தனி மனுஷிகள்.

பிள்ளை பசிமறந்து உறங்குகிறது. தாய்க்கு, கிடைத்த நேரத்தில் உறங்கிக்கொள்ளும் ஆசை. பிள்ளையின் உணவு நேரத்தில் மிகச்சரியாக வெண் நதி வேகம் கொள்ளும். கரைபுரண்டோடி ஒற்றைப்புள்ளியில் மோதிக் கசியும். அது ஒரு மின்னல் வலி. தாய் பதறி எழுவாள். எழுப்பினாலும் எழாமல் உறங்குகிறது குழந்தை. காம்பை அதன் வாயில் பொருத்திப் பார்க்கின்றாள். அது ஒரு வேண்டுதல், கோரிக்கை. உன் சின்ன இதழ் பொருத்தி எனக்கு மோட்சம் கொடு என்னும் தவம். பிள்ளை மனமிரங்கவில்லை. அது ஆழ் சயனத்தில். வலி வேகமெடுக்கிறது. மின்னல் சாட்டையை சொடுக்கத்தொடங்குகிறாள் முலை என்னும் அந்த தனி மனுஷி. வார்த்தைகளுக்குள் பொருத்தமுடியாத ஆவேச வலி.

பெண், வலி தாங்கவென விதிக்கப்பட்டவள். கண்ணீர் கசிய முலைகளை பற்றியபடி பரிதவிக்கிறாள். நேரம் தாண்டிக் கொண்டிருக்கிறது. வெண் நதி குணம் மாறுகிறது. புளித்த பால் பின்பு இறுகத்தொடங்குகிறது. நூறாயிரம் தேள் முலைகளை உள்ளிருந்து கொட்டத் தொடங்குகிறது. பெண் கடந்துவரும் உச்சபட்ச வலியில் மேலும் ஒரு எண்ணிக்கை.
இப்போது என்ன செய்ய?! சுடு நீரில் ஒத்தடம் கொடுக்கிறாள். காம்புகளை மெல்ல நீவி பீய்ச்சத் தொடங்குகிறாள். வலியுடன் வெண் நதி சுரந்துவழிகிறது. இங்கு அவசரம் காட்ட முடியாது. மெல்ல மெல்ல வலி இறங்கி வருகிறது. அது ஒரு விடுபடல் , ஆசுவாசம். கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிற்றை மெல்ல மெல்ல தளர்த்தும் கணம். இன்னுமொரு எளிய வழி உண்டு. யாரேனும் காம்பை சப்பி உறிஞ்சி பாலை துப்பிவிடவேண்டும். இந்த உதவியை செய்யக் கடமைப்பட்டவன் கணவன். ஆனால் பல நேசமிகு ஆண்கள் கூட தயங்கும் இடம் இது தான்.
வெண் கடல் கதையிலும் அவ்வாறே. குழந்தையின் இதழ் பட்டு கண் திறக்க வழியில்லாதக் காம்புகள் அடைபட்டுக் கிடக்கின்றன. பால் புளித்து, இறுகி, பின் சலம் கட்டிப் போகிறது. வலியில் அலறித் தவிக்கிறாள் மனைவி. கணவன் நடுங்கி அழுகிறான். தன்னால் தான் இவளுக்கிந்த துன்பம் என்று மருகுகிறான். முலைகளை அரிந்து வீசியேனும் என் மனைவியை காப்பாற்றுங்கள் என்கிறான்.

'அபின்' மயக்கத்தில் இருக்குமவள் மயக்கம் தெளியும்போதேல்லாம் துடி துடிக்கிறாள் . எதிர்பட்டவர் தலைமயிரை பற்றி உலுக்குகிறாள். 'ஐயோ இந்த வலியை நானும் அறிவேன்.' அவள் வலி எழுத்துவழி என்னைத்தாக்குகிறது. என் முலைகளில் வலி பரவுகிறது. நானும் அவளுடன் துடிக்கின்றேன். வைத்தியர், கொளவட்டைகளை சேகரித்துவர கணவனையும், பணியாளையும் அனுப்புகிறார். வலி நீக்கும் வழி எனக்குத் தெரிந்துவிட்டது. அவ்விருவரும் மாடுகளை அட்டைகள் மொய்க்கும் குளத்திற்கு இட்டுச்செல்கிறார்கள். மாடுகளை நீரில் இறக்குகிறார்கள். பேசிக்கொண்டே மாடுகளின் அடிவயிற்றில் ஒட்டியிருக்கும் அட்டைகளை எடுத்து பாத்திரத்தில் சேகரிக்கிறார்கள். மீண்டும் மீண்டும் சேகரிப்பு. எனக்கு வலி தாளவில்லை. உனக்கு புரியவில்லையா ?எதற்கு இத்தனை நிதானமாக  கதையை நகர்த்துகின்றாய் ?! நீ ஆண் என்பதாலா ? மெல்ல நகரும் இக்காட்சிகளை நான் வெறுக்கிறேன்.  குளத்தின் வர்ணனையும், குளக்கரை தெய்வமும் யாருக்குவேண்டும்? ஆத்திரத்துடன் கதாசிரியரின் தலைமயிரை பற்றி உலுக்குகிறேன். அவசரம் அவசரம். விரட்டு இவர்களை. வலியுடன் நான் வைத்திய சாலைக்கும் குளத்திற்குமாக ஓடிக்கொண்டிருக்கிறேன்.

அட்டைகள் துண்டில் வைத்து மார்பில் கட்டப்படுகிறது. அட்டைகள் பால்,உதிரம், சலம் என பாகுபாடின்றி உறிஞ்சுகின்றன. பிள்ளையற்றவளுக்கு ஒரு நூறு பிள்ளைகள். அவள் சத்தம் அடங்குகிறது. வலி குறைகிறது. கழுத்தை நெரித்த முடிச்சு மெல்ல விலகுகிறது. அயர்ந்து கண் மூடுகிறாள். பிரளயமே எழுந்து அடங்கிய அமைதி. வைத்தியர் அட்டைகளை அள்ளிச்சென்று  கோழிக்கு போடுமாறு சொல்கிறார். கண்மூடிக்கிடந்தவள் பதறி எழுகிறாள். 'கொல்லவேண்டாம் அய்யனே, என் பாலு குடிச்ச ஜீவன்கள் அவை ' என்கிறாள். அட்டைகள் குளத்தில் மீண்டும் விடப்படுகின்றன.

இக்கதையில் ஒரு வரி இருக்கிறது 
"ஸ்திரீ ஜென்மத்துக்குண்டான வலியிலே பாதி கூட ஆம்பிளைக்கு இல்லை..."

***
மலைகள்.காம் .

No comments:

Post a Comment