Friday, March 13, 2015


நாங்கள் இந்த ஏரியாவிற்கு வந்த புதிது. சஞ்சு அப்போது பிறந்திருக்கவில்லை. குப்பைகளை வீடுகளுக்கே வந்து சேகரிக்க வண்டி வரும் என்று வீட்டு ஓனர் சொல்லியிருந்தார். முதல் நாள் வாசலில் வண்டி வந்து ஹாரன் அடிக்கவும் கையில் கவரோடு வாசலுக்கு வந்தால் ஒரு சின்ன பையன் குப்பைகளுக்கு நடுவே நின்றிருந்தான். பார்த்தமாத்திரத்தில் பிடித்துப் போகும் திருத்தமான முகம்.ஒரு புன்னகையை மட்டும் கவரோடு சேர்த்து தந்துவிட்டு வந்தேன். வண்டியை ஒரு பெரியவர் ஒட்டிவந்திருந்தார். அது அவனது தாத்தா.
பின் தினம் அவர்களை பார்க்கநேர்கையில் மெல்ல ஓரிரு வார்த்தைகள் பேசத்தொடங்கினேன். முதல் முறை உன் பேர் என்ன என்று கேட்டபோது குபேரன் என்று அச்சிறுவன் சொன்னான். புருவம் உயர குபேரனா என்று கேட்டதும் ஆமாங்க ஆண்டி என்று புன்னகைத்தான் . பேருக்கு தகுந்தமாதிரி ஒரு நாள் குபேரன் ஆய்டுவ விடு என்று நான் சொன்னபோது உங்க ஆசிர்வாதம் ஆண்டி என்று பெரியமனுசன் மாதிரி சொல்லிவிட்டு மலர்ந்தான் அவன்.
மிக பொறுப்பானவன். அமைதியானவன். வெகு விரைவிலேயே எங்கள் ஏரியாவில் அனைவரது நன்மதிப்பையும் பெற்றுவிட்டவன். வீட்டுக்கு விலக்காகும் நாட்களில் குப்பைகளை அவன் கையில் தருகையில் மனம் பதறும். அன்று மட்டும் அவனிடம் பேசாமல் வேகமாக நகர்ந்துவிடுவேன். ஆனால் அந்த பிஞ்சுக்கைகளில் எல்லா குப்பைகளும் ஒரே மாதிரியாகக் கையாளப்படும்.
ஒரு நாள், ஆண்டி பழைய பேப்பர் வாங்கறேன். இருந்தா என்கிட்ட போடுங்க என்று வந்து நின்றான். எல்லோரையும் விட ஒரு ரூபாய் அதிகம் விலை வைத்துத் தருவான். டேய் இப்படி இருந்தா எப்படி பொழைக்கிறது என்று கேட்டால் இல்லங்க எனக்கு இந்த ரேட் கட்டுப்படி ஆகுது என்பான்.
தானே சம்பாதித்துத் தம்பியை படிக்கவைத்துக் கொண்டிருந்தான். அப்பா இறந்துவிட அம்மாவுடன் திருவண்ணாமலையிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவன். இங்கே அனேக அடிமட்ட வேலைகளில் இருப்பவர்கள் திருவண்ணாமலைக்காரர்கள் தான். நாமெல்லாம் அங்கே கிரிவலம் சென்றுகொண்டிருக்க அந்த ஊர்க்காரர்களை விதி வெளியே விரட்டிக் கொண்டிருக்கிறது.
அவன் வளர்ந்துகொண்டிருந்தான் . ஒரு நாள் வழியில் அவனை ஆட்டோவில் பார்த்தேன். என்னடா என்றதும் சாயங்காலத்துல ஆட்டோ ஓட்றேன் ஆண்டி என்றான். அன்று ஒருநாள் மாலையில் அம்மாவுடன் வந்திருந்தான். ஊர்ல வீடுகட்டியிருக்கோம் ஆண்டி நீங்க கட்டாயம் வரணும் என்று பத்திரிக்கையை நீட்டுகிறான். நல்வரவை நாடுபவர்கள் குபேரன், கோடீஸ்வரன். யார் இந்த கோடீஸ்வரன்?! அவன் தம்பி. எளிய மனிதர்களின் இப்படியான பெயர்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியலை எண்ணுகையில் மனம் இலகிப்போகிறது.
அவன் அம்மா , பையன் எப்படிமா ஒழுங்கா இருக்கானா ? நான் அவன்ட சொல்லிருக்கேன் பணம் சம்பாதிக்கறது ரெண்டாவது தான், ஏதாவது கெட்டபேர் வந்ததுனா என்ன உயிரோட பார்க்கமுடியாது என்று என்றார். இல்லமா ரொம்ப நல்லபையன், இங்க எல்லார்க்கும் பிடிக்கும், ஒரு கெட்டபழக்கம் இல்ல. கவலைப்படாதீங்க என்று நான் சொன்னதும் அவர் முகத்தில் தெரிந்த பெருமிதம் அவ்வளவு அழகு.
ஒரு நாள் நாங்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டு வாசலில் ஒரு பழைய டாடா சுமோ நின்றுகொண்டிருந்தது. பார்த்தால் குபேரன் வாசலில் காத்திருக்கிறான். செகண்ட் ஹான்ட் வண்டி வாங்கியிருக்கேன் ஆண்டி உங்ககிட்ட காட்டலாம்னு வந்தேன் என்கிறான். மனம் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தது. நான் பார்க்க பொடியனாக இருந்த பையன் கண் முன்னே எப்படியான வளர்ச்சி. ஒரு விதை முட்டி மோதி முதல் இலை விடும் கணம். நான், செல்வா, பிள்ளைகள் எல்லாம் வண்டியில் ஒரு ரவுண்டு போய்வந்தோம். ஆசிர்வதித்தோம்.
இன்று திருமணம் ஆகி அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருக்கிறான். மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்திருந்தான். பெற்ற மகனை திருமண கோலத்தில் தாய் பார்க்கும் சந்தோசத்தை எழுத்தில் சொல்லிவிட முடியுமா ? நான் உணர்ந்தேன். அவர்கள் தம்பதிகளாக எங்கள் காலில் விழுந்து வணங்கினர். மஞ்சள் கலந்த அரிசியை அவர்கள் மேல் தூவி ஆசிர்வதித்த நிமிடங்கள் கருணையுடன் கடவுள் எனக்காக வழங்கியவை.

                                                              *****************

No comments:

Post a Comment