சிதையிலேற்றுகிறேன்
சொற் சுள்ளிகளை வீசி எரி
உறைந்த வானில்
சிறு புள்ளியெனப் பற
குருடனின் திருவோட்டில்
சிற்றொலியாய் வீழ்
மூளிச் சிலையின் மேல்
கதிரவனாய் பொழி
ஊமைக் குயிலை
வெறித்திருத்தல் துயரம்
என்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...
மரணம் ஒரு ஞானம் நுரைக்கும் போத்தல் எனில்
நுரைத்து அடங்கிவிடும் ஞானம் ஞானமே அல்ல.அது வெறும் சலனம்.
வரிசையாக நம் கண்முன்னே மரணம் ஒரு பைத்தியம் பிடித்தக் குரங்கென முதிராக் கனிகளைப் பறித்து வீசிக் கொண்டிருக்கிறது. வாரம், மாதம் என்று அவரவர்க்கு தக்கபடி துயரமும், ஞானமும் கருமேகமென அப்பிக்கொள்கிறது.பின் கலைந்து காணாமல் போகிறது.
உண்மையில் எந்த மரணமும் இதயத்தை சுத்திகரிப்பதில்லை. குளத்தில் வீசப்பட்ட கூழாங்களென அல்லது மிகக்குறைந்த ரிக்டரில் வரும் நிலநடுக்கமென ஒரு அலையை, அதிர்வை உண்டாக்கிவிட்டு பின் இந்த மனித ஜென்மத்திடம் அது தோற்று நிற்கிறது.
மரணிப்பான் என்று தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேசித்திருப்பேன், இன்னும் கொஞ்சம் பேசியிருப்பேன், புன்னகைத்திருப்பேன், மன்னித்திருப்பேன்..இப்படி எண்ணாத மனமுண்டா?! அப்படியெனில் நாம் மரணமற்றவர்கள் என்று இத்தனை நாளும் நம்பிக்கொண்டிருந்தோமா? அல்லது அகால மரணங்களுக்கு மட்டுமே நம் மனம் தரும் சலுகையா இந்த நேசமும் மன்னிப்பும்?!
மரணத்தை நிதமும் கடந்தபடியே இருக்கும் நாம் ஒருபோதும் நிபந்தனைகளற்று நேசிப்பதில்லை, புன்னகைப்பதில்லை, மன்னிப்பதில்லை. கோவம், வன்பம், பொறாமை அற்ற இதயத்தை நாம் ஒருபோதும் கைகொள்வதில்லை.எவரின் மரணமும் அந்த வேலையைச் செய்துவிட்டுப் போவதில்லை.
வானம் முழுமைக்குமாய்
ஒரு கறுப்பு நிலா
தொட்டுக் கண்களில் எழுதிக்கொள்கிறேன்
இன்றென்
கனவின் மேனியெங்கும்
பொழியட்டும்
பன்னீரின் வாசம்.
வர்ணங்களை ப்ரசவிக்கமுடியா
என் கவிதைகள்
சாம்பல் பூத்தவை
அவை எப்போதும்
எனை இட்டுச்செல்ல
பாதையற்ற பாதையையே
தேர்ந்தெடுக்கின்றன
உதிரமும் நெருப்பும்
மறுக்கமுடியாத
வழித்துணையாகி
உடன் வருகையில்
வறளும் உதடுகளைக்
கண்ணீர் நனைக்கிறது
மண்ணில் சொட்டும் உதிரம்
அழகியதொரு ஓவியம்
அந்தரங்கத்தை மறைக்க முயலும்
கந்தலில் புழுதி மணம்
கொப்புளங்கள் முத்தமிடும் பாதை
காலடியில் நழுவுகையில்
முள் கிரீடம் ஒன்றை
அணிவித்து நிமிர்க்கிறது
எனது பிரிய கவிதை
இமை மயிரில் உதிரம்
பவளமென மின்ன
நானோ
அரசியாகி கர்ஜிக்கிறேன்