Monday, October 1, 2018

கை கால்கள் துவண்டு சரிகின்றன
உடல் மெலிந்து வெளிற்கிறது
உயிர் தேம்பித்தவிக்கிறது
மனம் மூர்க்கம் கொண்ட பேரலையென அடித்துப்புரள்கிறது
உறக்கம் கண்களைக் கைவிட்டு காணாமல் போகிறது
பசித்த வயிறு உணவை விஷமென மறுக்கிறது
உலகம் ஒற்றை உயிரை மட்டுமே ஏந்திக்கொண்டு சுழல்கிறது
நெற்றிப்பொட்டில் முளைத்திருக்கும் மூன்றாம் கண்ணில் ஒரே ரூபம் நிலைத்திருக்கிறது
ஒலிகளின் மூச்சை நிறுத்திவிட்டு
மனம் கூடு நெய்துகொண்டு உறையத் தவிக்கிறது
சொற்கள் மொத்தத்தையும் பொழிந்து தீர்க்கவும், கண்ணீரை மட்டுமே சொற்களாக்கவும் இருவேறு எல்லைகள் அழைக்கின்றன
திசை தொலைத்த பறவையென மனம் தொலைதூரம் பறந்து களைத்து திரும்புகின்றது
கானகத்தில் பிணையலிடும் சர்ப்பங்களென காதலும் காமமும்
பின்னலிட்டு எழுந்து ஆடுகின்றன.

Wednesday, July 11, 2018

சிறகு முறிந்த பறவையென
உன் குரலை
இறுதியிலும் இறுதியாக
விட்டுச்செல்கிறாய்

வானம் கண்டிராத
நதித்தடம் அற்ற
ஒலிகள் மரித்துப்போன
நிறங்கள் தொலைத்த
இப்பெரும் பரப்பை
வனமென வரைந்துகொண்டிருக்கிறது

இன்னும் பறவையென அறியப்படும் அப்பறவை



Tuesday, July 3, 2018

நினைவுகள்



சுவரோவியம் போன்றதல்ல
பச்சைக் குத்தப்பட்டவைகள்

அழித்தொழித்துவிட்ட
ஒரு வாசனை
ஒரு சொல்
ஒரு காட்சி
ஒரு ஸ்பரிசம்
ஒரு நிமிடம்
ஒத்த கணம் ஒன்றில் மேலெழுந்து வரும்
அத்தனை துல்லியமாக
அத்தனை தீர்க்கமாக
அத்தனை இரக்கமற்றதாக
நூற்றாண்டு உறைந்த
உடலின் குளுமையுடன்

Monday, July 2, 2018

மயிருக்குப் பிறந்து
மயிருக்கு வாழ்க்கைப்பட்டு
மயிரு வாழ்க்கை வாழ்ந்து
மயிரு போலவே உதிர்ந்து மடிந்தவள் தான்
வெள்ளந்தி மனுசி என்று
அறியப்பட்டவள்

Wednesday, June 27, 2018

ஓநாய்க்குலச் சின்னம்

'ஓநாய்க்குலச் சின்னம்' நாவல் வாசித்து பலகாலம் ஆகிறது. ஏனோ அதைப்பற்றி எழுதாமல் விட்டிருந்தேன். இன்றைக்கு என்னவோ அந்த நாவல் மனதுக்குள் ஓடியபடியே இருக்கிறது. இதோ கொஞ்சம் போல சொல்லிவிடுகிறேன். சில நிகழ்வுகளை , கதைகளை பிறர் சொல்வதை விட நாமே வாசித்து உணர்ந்தால் தான் சுவையாக இருக்கும். இந்தக் கதை கூட அப்படித்தான். நிச்சயம் ஒவ்வொருவரும் வாசித்து ரசிக்கவேண்டிய நாவல்.

நமக்கு மான் பிடிக்கும். அதனை வேட்டையாடும் ஓநாயைப் பிடிக்காது. இந்தக்  கதை, ஓநாயைக் குலதெய்வமாக மதிக்கும் ஒரு இனத்தின் வாழ்வியலை நம் கண்முன்னே விரிக்கிறது. முதல் வரியில் இரவில் மலைகளினூடே அச்சத்துடன் பயணிக்கும் கதாநாயகனில் தொடங்கும் கதை ஒரு இடத்தில் கூட கொஞ்சமும் சோர்வின்றி இறுதிவரை செல்கிறது. மேய்ச்சல் நிலங்களை மட்டுமே நம்பி வாழும் நாடோடி மக்களின் அருமையான , சாகசங்கள்  நிறைந்த வாழ்வு எப்படி விவசாயத்தின் வருகையால் உருக்குலைந்து போகிறது என்பதை பேசுகிறது நாவல். இன்று விவசாயம் சிதைந்து தள்ளாடிக் கொண்டிருப்பதை செய்வதறியாது நான் பார்த்துக் கொண்டிருப்பது போலவே அவர்களும் சிதறும் தங்கள் வாழ்வியலை வலியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு வழியற்று மாற்றத்திற்குள் தங்களைப் பொருத்திக்கொண்டு வாழத்தொடங்குகிறார்கள்.

பொதுவாக நான் வாசித்தவரை நாவல்களில் காதலும் காமமும் கட்டாயம் இருக்கும். வாசகனை தொய்வடையாமல் வாசிக்க வைக்கவேண்டுமெனில் இவையெல்லாம் தேவை போல என்று எண்ணியதுண்டு. ஆனால் இந்தக் கதையில் காதலோ காமமோ இல்லவே இல்லை. சொல்லப்போனால் பெண்களே இல்லை. ஒரே ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெண் . அவ்வளவே. கதை முழுக்க வேறு களத்தில் இயங்குகிறது. உணவும் , பாதுகாப்பும் அது சார்ந்த ஆபத்துகளும் போராட்டங்களும் என்று மிக முக்கியமான பிரச்சனைகளைப்  பொறுப்புடன் பேசுகிறது. இதில் ஆச்சர்யம் ஒரு இடத்தில் கூட வாசகன் சலிப்புறவே மாட்டான் என்பது தான்.

ஓநாய்களின் வேட்டைத் தந்திரங்கள், பருவநிலைகளைக் கணக்கில் கொண்டு மக்களும் ஓநாய்களும் உணவை கைகொள்ள அமைத்துவைத்திருக்கும் திட்டங்கள், அழகிய , சலனமற்ற புல்வெளி தேசம், பட்டிகள், உணவுகள், ஆடுகள், நாய்கள், மான்கள் ,குதிரைகள்,மலைகள்,இரவுகள்,ஓநாய்க் குகைகள், உறைந்த ஏரிகள் ,மனிதனுக்கும் ஓநாய்களுக்கும், மான்களுக்கும் ஓநாய்களுக்குமான வேட்டைக் களம் என்று பேராச்சர்யங்களுக்குள் வாசகனை கைபிடித்து அழைத்துப்போகும் இந்த நாவல் அவனைப்  பின் ஒருபோதும் வெளியேற அனுமதிப்பதே இல்லை. மிருகங்கள் வெறும் மிருகங்களாக அன்றி அவற்றின் புத்திக் கூர்மையும் செயல்பாடுகளும் விழி விரிய வைக்கும் ஆச்சர்யங்கள்..

கதாநாயகன் ஒரு ஓநாய்க் குட்டியை எடுத்து வளர்ப்பான். நாய்களுடன் ஒன்றாக வளரும் அது ஒரு போதும் நாய்களைப் போல இயங்கவே இயங்காது. அதன் ஒவ்வொரு அணுவிலும் ஓநாயின் வேகமும், திமிரும், தந்திரமும், ஆக்ரோஷமும் நீக்கமற நிறைந்திருக்கும். கடைசி வரை நாய்களின் குணத்திற்குள் நுழைய மறுத்து ஒரு தன்னிகரற்ற , ஆளுமையான ஒநாயாகவே மரித்துப் போகும். மனிதனை விட ஓநாய் எவ்வளவு மேலானது !!

வாசிப்பை நேசிக்கும் அனைவரும் கட்டாயம் வாசித்தே ஆகவேண்டிய நாவல் இது. இதன் மூலம் ஒரு அருமையான அனுபவத்தை வாசகன் பெறுவான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Sunday, June 24, 2018

இன்று காலையிலேயே படு டென்ஷன். காலை நேரம் எல்லாமே  இப்படித் தான் என்றபோதும் நேற்று மாலை வள்ளி வேலைக்கு வராததால் இன்று காலையில் பல வேலைகள் சேர்ந்துபோய் செம கடுப்பில் இருந்தேன் நான். வள்ளி எங்கள் வீட்டில் பல வருடங்களாக வேலைபார்க்கும் பெண். வயதில் என்னைவிட மூத்தவர். வீட்டுக்குள் வந்ததிலிருந்து போகும் வரை ஒரே அரட்டை தான். கலகலப்பானவர். இவரைப்பற்றி இன்னொரு சமயம் சொல்கிறேன்.

இன்று வீட்டுக்குள் நுழையும்போதே ஏம்மா நேத்து வரல என்றேன். ஏதோ மாவரைக்கபோனேன் என்று ஒரு டம்மியான காரணம்  சொன்னது. வர மூட் இல்ல,அவ்ளோ தான் மேட்டர். எனக்கு வள்ளியைத் தெரியும்.

இப்போது அவரிடம் காட்டமுடியாத கோபமும் டென்ஷனும் ஒன்றாக சேர்ந்துகொண்டது. நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் ரெண்டு பேருமே ரெடியாகவில்லை .ஸ்ருதியும் ,சஞ்சுவும் மாறி மாறி திட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசினாலும் பதிலுக்கு திட்டு தான் விழும் என்ற நிலை. வீடே ரெண்டாகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில் என்று நம்ம SPB வேறு குழைந்துகொண்டிருக்கிறார். ம் ஹ்ம்.அவராலும் சாந்தப்படுத்த முடியவில்லை.

எதேட்சையாக வள்ளியைப் பார்க்கிறேன், சத்தமில்லாமல் அங்கயும் இங்கயும் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது எனக்கு. என்னா பேச்சு பேசும்.!! இப்போ..பேயடிச்ச மாதிரி இருக்குதே !!  நிதானித்து என்னை கவனித்தேன். கோபத்தில் எனது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. யப்பா எவ்ளோ கோபம்.!!இந்தமுறை அம்மா வந்திருந்தபோது சொன்னார், ஸ்ருதி நீ கவலைப் படாத, உங்கம்மாவுக்கு கோபம் வந்தா உங்க தாத்தா மாதிரி தான் சுருக்கு சுருக்குனு பேசிடும் என்று. ஆமாம் நான் அப்பா மாதிரி தான் இவ்ளோ பெரிய உதட வச்சுக்கிட்டு இவ்ளோ கூட பேசலைனா எப்படி? என்று கிண்டலாகச்  சொல்லி சமாளித்தேன். அம்மாவுக்கு ஒரே சிரிப்பு. அப்பாவின் உதடுகள் அச்சாக எனக்கு.

நியாயமான கோபம் யாரிடமும் வரும். ஆனால் அர்த்தமற்ற , வெட்டிக் கோபத்தை  நம் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே நாம் காட்டமுடியும். இதைச் சொன்னவுடன் எனக்கு ரேவதி ஞாபகத்தில் வருகிறாள். என் கல்லூரித் தோழி. பக்கத்துக்கு பக்கத்துக்கு ஊர். ஒரே வகுப்பு, ஒரே விடுதி அறை. எனக்கு நேர் எதிர் குணம் கொண்டவள். அத்தனை அமைதி, பொறுமை. அவளிடம் தான் அத்தனை கோபத்தையும் காட்டுவேன். முகத்திலேயே போய் இடித்துவிடுவது போல கோபமாக கத்துவேன். அப்படியே சுவரோடு குறுகி உட்கார்ந்துவிடுவாள். நான் காச் மூச் என்று கத்தி அடங்கியதும் மெதுவாக அருகில் வந்து ஏண்டி நீ இப்படி செஞ்ச ,அதுக்கு தான் நான் இப்படி சொன்னேன் என்று பொறுமையாக விளக்குவாள். கோபமெல்லாம் வடிந்து மன்னிப்புக் கேட்பேன்.

அவள் என்னை விட நன்றாகப் படிப்பாள். ஒரு முறை செமெஸ்டருக்கு முதல் நாள் , அக்கவுண்ட்ஸ் பாடத்தில் ஒரு கணக்கு புரியவில்லை, அவள் சொல்லித் தருவதாக சொல்லி இருந்தாள். அதற்குள் இப்படித்தான் எதோ சண்டை போட்டுக்கொண்டு போய் விடுதியில் வேறு அறையில் மற்ற பிள்ளைகளுடன் படிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். பெயில் ஆனாலும் சரி அவகிட்ட கேட்கக்கூடாது என்று பிடிவாதம். பின் அவளாக என்னைத் தேடிக் கொண்டு வந்தாள், இங்க என்னா பிள்ள பண்ற ,ரூம்க்கு வா என்று அழைத்துக் கொண்டு போய் சொல்லிக் கொடுத்தாள். இப்போது நினைத்தாலும் கண்ணில் நீர் திரையிட்டுவிடுகிறது. எத்தனை நேசம் இருந்தால் இவ்வளவு விட்டுக்கொடுக்க முடியும் ?!

உண்மையில் நேசம் கொண்ட மனங்களைக்  கோபத்தால் கொஞ்சம் கூட அசைத்துப் பார்க்க முடியாது. அவைகளால்  மேலோட்டமான வெற்று அலைகளை மட்டும்தான் உண்டாக்க முடியுமே அன்றி அடி ஆழத்தில் அடர்ந்திருக்கும் அன்பெனும் குளுமையை தீண்டிவிடவே முடியாது. ஆக, இந்தக் கோபம் என்ன மாதிரி பின் விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற எச்சரிக்கை உணர்வும் , கட்டுப்பாடும் அற்று ஒருவரிடம் உடைந்து வெளிப்பட முடிந்தால் அதுவன்றி வேறு வரம் நமக்கில்லை. காரண காரியம் அற்ற நேசமும், கட்டுக்குள் அடங்காத கோபமும் கொள்வோம். வாழ்க செல்லக் கோபங்கள் :)

Saturday, June 23, 2018

அழகி

‌ பேக்கரியில் பலகாரம் வாங்கிக்கொண்டு திரும்புகிறேன், என் பின்னால் ஒரு குட்டிப் பெண். 10,11 வயது இருக்கலாம். ஒல்லியான தேகம். லேசாகத் தோளை அணைத்து 'உன் பேர் என்ன?' என்றேன். பளீரென்றச் சிரிப்புடன் வர்ஷா என்கிறாள். கன்னத்தில் குழி வேறா!!

 ‌அவளின் கரிய நிறமும் வெண் பல் சிரிப்பும் அவளை நோக்கி வேகமாக  எனை ஈர்த்து மண்டியிடப் பணிக்கிறது.

'நீ அழகின்னு யாராச்சும் சொல்லியிருக்காங்களா?'

வெட்கச் சிரிப்புடன் 'இல்லை' என்கிறாள்.

'நான் சொல்றேன் நீ ஒரு அழகி'. மீண்டும் நட்சத்திரச் சிரிப்பு. அந்த எடுப்பான கூர் மூக்கை இரு விரல்களால் லேசாகக் கிள்ளி எடுக்கிறேன், மெல்லிய நுனி மூக்கு வேர்வை என் விரல் ரேகைகளில் சிறு நதிகளாகப் பிரிக்கின்றன. நதிகளை முத்தமிட்டு  நகர்கையில் அவளினும் சிறியவன் ஒருவன் எங்கிருந்தோ வந்து அவளுடன் ஒட்டிக் கொள்கிறான். அவன் கன்னத்தைக் கிள்ளி கையசைத்து விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறி அமர்ந்து மீண்டும் பேக்கரியைப் பார்க்கிறேன்.

இருவரும் ஆர்வமாகக் கையசைக்கிறார்கள். முத்தத்தை பறக்கவிட்டு நானும் கையசைக்கிறேன்.. சிறுவன் பதில் முத்தம் ஒன்றைப் பறக்கவிடுகிறான். அதற்குள் கிரீடம் தரித்துக் கொண்ட மகாராணி பால் சிரிப்பை மட்டும் அள்ளி இறைக்கிறாள்..

பதில் முத்தம் தந்தவனைச் சென்று சேரவா அல்லது கருப்பழகி பாதம் பணியவா என்று அல்லாடும் என் முத்தத்தை என்ன செய்ய?!

பெண் எனும் உடல்

கல்லூரியில் படிக்கும் போது ரமணிசந்திரன் நாவல் ஒன்றை மொத்த ஹாஸ்டல் பெண்களும் கிறுக்கு பிடித்து வாசித்தோம்.. தெரியாமல் மேலே மோதிவிட்ட நாயகனை (?!!) நாயகி திட்டி விடுகிறாள். அவமானம் அடைந்த நாயகன் பழி வாங்க, அவளைக் கடத்திக் கொண்டு சென்று கற்பழித்து விடுகிறான். கடத்தப்பட்டிருந்தாலும் அவனுடைய வீட்டில் சகல வசதிகளும் செய்து தரப்படுகிறது. அவள் கர்ப்பம் தரிக்கிறாள். இந்த அடைபட்ட வீட்டில் இருந்து தப்பிக்க முடியாதென்றாலும் கொஞ்ச நாளாவது தன் பெற்றோரைப் பார்க்க விரும்பும் அவளை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கிறான்.

அவள் அத்தனை நம்பிக்கையோடும் , ஆசையோடும் ஊருக்கு வருகிறாள். காணாமல் போனவள் நிறை வயிரோடு திரும்பி வந்திருப்பதை பார்க்கும் பெற்றோரும், ஊரும் அவளை அவமானப் படுத்துகிறார்கள். அப்போது நாயகன் வந்து அவளை மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்கிறான்.
இந்தக் கதையை நான் உட்பட அனைவரும் உருகி உருகி வாசிக்க காரணம் அவன் அவள் உடலை ரசனையோடு கையாண்ட விதம்..

பெண்ணின் அனுமதியின்றி அவள் உடல் ஆக்கிரமிக்கப்படுவதை கொஞ்சமும் சொரணையற்று பெண்கள் நாங்களே ரசித்து வாசித்திருக்கிறோம்..

இன்று அம்மா வீட்டில் மற்றுமொரு ரமணிசந்திரன் கதை வாசிக்கக் கிடைத்தது. கிட்டத்தட்ட அதே கதை. கற்பழித்தவன் திருந்தி, கைக் குழந்தையோடு இருப்பவளை, வாழ அழைக்கிறான். வர மறுப்பவளை அள்ளி எடுத்து காருக்குள் வைக்கிறான். சிரித்துக் கொண்டே நம்ம பையனுக்கு தங்கச்சி வேணும் என்கிறான்.. அதைப் படிக்கையில் கண்ணீர் வந்துவிட்டது எனக்கு..

ஒரே காட்சி கிளர்ச்சிக்கும், கண்ணீருக்கும் இடையே 20 வருடங்கள் கடந்து விட்டிருக்கிறது.. எந்த வயதில் இந்த மாற்றத்தை நான் அடைந்தேன் என்பது தெரியாது. நான் சொல்லவருவது பெண் தன் உடல் பற்றிய புரிதல் அற்றவளாகவே வளர்கிறாள். தன் உடல் தன் உரிமை என்பதை உணராமலே வாழ்ந்து மடிகிறாள்.

ரேப் ரேப் எனப் பதறும் நாம், நமது வீட்டில் பெண்களின் உடலை எப்படிக் கையாளுகிறோம் என்பதையும் இந்த சமயத்தில் ஒரு முறை நினைத்துப் பார்த்துக்கொள்வோம்..

Monday, June 4, 2018

அந்தர ஊஞ்சல்

சிறகுகள் படபடக்க காத்திருக்கிறது
என் வெள்ளை நிறக் குதிரை 
தகிக்கும் 
அதன் பிடரி மயிரை 
பற்றிஏறி அமர்கிறேன் 

எரிகல்லின் பாய்ச்சலுடன்
திமிரித்தாவிப் பறக்கிறது
வாகனம் 

என் ஆடைகள் கரைந்து
காணாமல் ஆகின்றன
கூந்தல்
கைவிரித்து
களிஆட்டம் கொள்கிறது
நிலாவை
சூடியிருக்கும் எனது மேனியெங்கும்
பூத்த நட்சத்திரங்கள் 

வரைபடம் அற்ற
எனது பயணத்தில்
பற்றி எரிகின்றன
வேலிகள்
பாதைகள்
உருகி வழிகின்றது 
நதிகளை
திசை திருப்புகின்றேன் 

இப்பூமியை நசுக்கி
துகள்களாக்கும்
சூத்திரம் அறிந்தவள் நான் 
சீறிப்பாய்ந்து
வானம் ஏறுகின்றேன்

என் மார்சுரந்து
பொழியும் பெருமழையில்
இப்புவி
நனைந்து தணிகிறது 
****


பாதங்கள்


கிளிப்பச்சை நிறத்தில்
பனியன் அணிந்தவள்
நீல நிற உள்ளாடை தெரிய
கரும்புச்சாறு உறிஞ்சிக்கொண்டிருக்கிறாள்
'சின்னதா பெருசா'
பழக்கப்பட்ட கேள்வியுடன்
இயந்திரத்தில் துண்டங்கள் ஆகின்றன
சிறகுகள் விரித்தறியா
வெடக்கோழிகள் 
பேரம் படியாத
ஆட்டோ ஒன்று
அதிருப்தியுடன் நகர்கின்றது 
மனைவியை பின்பக்கமும்
மகனை முன்னாடியும்
இருத்தியிருக்கும்
டூவீலர்காரன்
சைடு-மிரரை ஒருமுறை பார்த்துக்கொள்கிறான்
ஹெல்மெட் அணிந்திருக்கிறான் 
உலகம்
காட்சிகளால் நிரம்பியது
உயிருடன் கொளுத்தப்பட்ட
பாம்பென
நெளிந்துகொண்டிருக்கிறது
ஞாயிறு சாலை
குறிப்பெடுத்துக்கொண்டவனின்
மிதிவண்டி
'கிரீச் கிரீச்' என
முனகுகிறது 
***

Thursday, May 17, 2018





நம் வசந்தகாலப் பொழுதுகளை
இக்கோடைக்கென சேமிக்கச்சொல்கிறாய்

ஒருப்பனிக்கரடியின் பாவனையில்
என் பசி காக்கிறேன்

த(ா)கிக்கும் இவ்வுதடுகளுக்கு
என்ன சமாதானம் சொல்வாய்?



வெயிலும் வெயிலும்
பிணையலிடும்
மதியப் பொழுதில்
சமையலறையை உருட்டுகிறது
நீல நிறக்கண்கள் உடையப் பூனை
ஜன்னலில் மோதும் இணைநிழல்களுக்கு
இரண்டே பாதங்கள்



நம் சந்திப்புகள்  முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடிகின்றன. முதல் முத்தமும் கடைசி முத்தமும் எப்போதும் ஒன்று போல் இருப்பதில்லை.
பிரிவு நிமித்தம் இடப்படும் முத்தம் வலையில் சிக்கிய மீனைப்போல துள்ளித்தவிக்கின்றது.
உன்னை உடன் எடுத்துச்சென்றுவிடும் ஆவலாதியுடன் அல்லது உனக்குள் ஒளிந்துகொண்டுவிடும் படபடப்புடன் இதழ்களுக்குள் பாய்ந்து இறங்குகின்றேன்.தின்று தின்று தீராப்பசியுடன் திரும்ப நேர்கையில்
ஒரு ஒட்டகத்தைப்போல உன் இதழ்நீரை என் பயணத்திற்கென்று சேர்த்துக்கொள்கிறேன்.உதடு,மூக்கு, கன்னம்,காது,கழுத்து,தோள்பட்டை,உள்ளங்கை என்று நகர்ந்து விரல் நுனியில் நழுவி விழும் என் முத்தம் இறுதியில்  கண்களைப்பற்றிக்கொண்டு கதறத்தொடங்குகிறது.