நான் அந்த முடிவை எடுத்த நொடி பெரும் விடுதலை உணர்வை அடைந்திருந்தேன்.சீழ் கட்டிய புண் ஒன்றை கீறி திறந்ததன் ஆசுவாசம்.இதை தற்கொலை என்று சொல்லாதீர்கள்.கொலை என்பது வன்முறை.விருப்பமற்ற ஒருவரிடம் மரணத்தை வலிந்து திணிப்பது.ஆனால் என்னுடைய மரணம் அப்படியானதல்ல.கதறிக்கொண்டு ஓடி ,கண்ணை மூடியபடி கிணற்றில் விழுவது போல் அல்ல ,ஆடைகளை சாவகாசமாய் களைந்துவிட்டு , கை உயர்த்தி கூந்தலை கொண்டையாக்கிகொண்டு ,சோப்பும்,மஞ்சள் கிண்ணமுமாக ,திறந்த முதுகில் சூரியனை படரவிட்டபடி ஆற்றில் குளிக்க இறங்கும் ஓர் இளம் பெண்ணை கற்பனை செய்துகொள்ளுங்கள்.எவ்வளவு ரசனையான காட்சி?!!அத்தகைய லாவகத்துடன்,ரசித்து என் மரணத்திற்குள் இறங்க இருக்கிறேன்.இப்போது சொல்லுங்கள் அது தற்கொலையா?
சிலிண்டரை திறந்து விட்டு,அறை முழுதும் நிரப்பி ,ஒரு தீக்குச்சி உரசலில் வெடித்து சிதறலாமா?என்னை நவீன ஜான்சி ராணி போல் உணரச்செய்யும் என் பிரியமான இரு சக்கர வாகனத்தில் ஏறிச்சென்று மணலை திருடிக்கொண்டு ஓடி வரும் அந்த லாரியின் முகத்தில் மோதிச்சரியலாமா?இல்லை இல்லை…என் மரணத்தை வரவேற்கும் முறை இதுவல்ல.மிக மென்மையாய் ,ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றி அணுகவேண்டும்.ம்ம் ..எங்கள் தோட்டத்து பூச்செடிக்கு போடும் மருந்து ஒன்று வீட்டின் கடைகோடி மூலையில் ஒரு அலமாரியில் இருக்கிறது.குழந்தைகள் கைக்கு எட்டிவிட கூடாதென்று அது அங்கு அத்தனை பாதுகாப்பாக இருக்கிறது.அது எப்படி இருக்கும்?என்ன நிறம்?எதையும் இதுவரை அறிய முயன்றதில்லை.அதை குடித்தால் உடனே உயிர் போய்விடுமா?தோட்டக்காரன் செடிக்கு மருந்தடிக்கும் போது அருகில் சென்றதில்லை.மறுநாள் இறந்துகிடக்கும் புழுக்களை குரூரமான சந்தோசத்துடன் எண்ணிபார்த்ததுண்டு.அவை துடி துடித்து இறந்திருக்குமா?இல்லை மலர்கள் உதிர்வது போல இலையிலிருந்து கண்மூடி உதிர்ந்திருக்குமா?எப்படியாயினும் புழுக்களுக்கான விஷம் அது.இந்த வீட்டில் நானும் ஒரு புழு என்பதை உணர்ந்த இந்த கணம் அந்த விஷத்தையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.
நான் ஒரு சொற்க்கிடங்கு.அள்ள அள்ள குறையாத அமுத பாத்திரம் அது.அதிலிருந்து முடிந்தவரை அள்ளி என் வாழ்வில் உடன் வந்தவர்களுக்கு தந்துவிட்டு போக விரும்புகிறேன்.நான் எழுதபோகும் முதல் கடிதம் என் குருவுக்கு.ஆம் குரு தான் அதில் மாற்றம் இல்லை.இதுவே நான் அவருக்கு எழுதப்போகும் கடைசி கடிதம்.இதற்க்கு முன் நிறைய எழுதி இருக்கிறேன்.என் குழப்பங்களை,கஷ்டங்களை,தீர்வுக்கான வழிகளை,மன உளைச்சல்களை என்று எண்ணில் அடங்கா மின் அஞ்சல்கள்,குறுஞ்செய்திகள் அனுப்பி இருக்கிறேன்.ஏதோ கடவுளிடமே நேரடியாக முறையிட்டு விட்டதை போன்றதொரு நிம்மதி அப்போது கிடைக்கும்.கடவுளுக்கு கண் இல்லை,காது இல்லை,வாயும் இல்லை.நம் எந்த புலம்பலும் அவரை எந்த விதத்திலும் பாதிக்காது,எரிச்சல் படுத்தாது.ஆனால் பாவம் அவர் மனிதராயிற்றே!!அவரிடம் முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும்.
என் இரண்டாவது கடிதம் என் தோழிகளுக்கு.எனக்கு எல்லா தோழிகளும் ஒன்று தான்.யாரிடமும் தனிப்பட்ட பகிர்வோ,ரகசியமோ இருந்ததில்லை.என் சந்தோசங்களை,வருத்தங்களை எங்கள் தேநீர் மேஜையில் பகிர்ந்து கொள்ள நான் தவறியதில்லை என் ஆணி வேரில் விழுந்த அடியை தவிர..அவர்களுக்கு என் மரணம் பேரதிர்ச்சியை தரலாம்.எந்நேரமும் வெடிச்சிரிப்பும்,விளையாட்டு பேச்சுமாக இருக்கும் என்னை முழுதும் படிக்க முடியாமல் போனதை எண்ணி மனம் வருந்தலாம்.எந்த இறுக்கமான சூழ்நிலையையும் கட்டவிழ்த்து கலகலப்பாக்கும் நான் அவர்களை கண்ணீரோடு நிற்கவைக்கப்போவதை எண்ணி வேதனை கொள்கிறேன்.
என் கடைசி கடிதம் என் பிள்ளைகளுக்கு.இங்கு தான் நான் சற்று கவனமாக இருக்கவேண்டும்.அடர்ந்து வீசும் முலைப்பாலின் மணத்திற்கு இருக்கும் வல்லமையை நான் பல நேரங்களில் கண்டிருக்கிறேன்.அது எந்நேரமும் என் முடிவை தகர்த்துவிடலாம்.முடிச்சிடப்பட்ட என் கர்ப்ப பை எந்த நேரமும் என்னை உள்ளிழுத்து சிறை படுத்தலாம்.என் தாய்மைக்கு நான் சமாதானம் சொல்லியாகவேண்டும்.இங்கு நான் சற்று கடுமையாகவே பதில் உரைக்கவேண்டும்.என் இருப்பு அவர்களையும் ஒரு புழுவாக மாற்றக்கூடும்.அவர்களுக்கேனும் முதுகெலும்பு முளைக்கவேண்டும்.அதற்க்கு அவர்கள் பற்றுகோலை இழந்தாகவேண்டும்.தடுமாறி,தளர்ந்து பின் முளைத்து கிளை பரப்புவார்கள்.என் இறுதி நம்பிக்கையை அவர்களிடம் தான் விட்டு செல்கிறேன்.அவர்கள் வாழ்வார்கள்.ஓடு உடைத்து வெளியேறும் வலி அறிந்தால் மட்டுமே பறவைக்கு வானம் சொந்தம்.வலி அறியாமல் என்னை வளர்த்துவிட்ட என் தாயை நான் நினைத்துக்கொள்கிறேன்.அம்மா,என்னை மன்னியுங்கள்..
இந்த வீடு என் மரணத்தை எப்படி எதிர்கொள்ளும்?சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்றுவிட்ட வேலைக்காரியால் எப்படி வீட்டின் அன்றாட வேலைகள் தடுமாறிப்போகுமோ அப்படி கொஞ்சம் தடுமாறித்தான் போகும்.ஆனாலும் சீக்கிரமாக சுதாரித்துக்கொள்ளும்.ஆம்,”கூரை மேல் சோற்றை விட்டெறிந்தால் ஆயிரம் காக்கா”என்ற வாக்கியத்தை என் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அறிந்து வைத்திருக்கிறது.சோறு உள்ளவரை காக்கைகளுக்கும் பஞ்சம் இல்லை.
எனக்கு மெலிதாக ஒரு அச்சம் வருகிறது.இப்படியே பேசி பேசியே என் துக்கத்தை நான் கடந்துவிடுவேனோ?!என் பயத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது.என் நான்காவது வயதில் என் அம்மா இதே முடிவை எடுத்திருந்தார்.நானும்,அண்ணனும் விரும்பி கேட்ட திரைப்படம் ஒன்றிற்கு கடைசி கடைசியாக அழைத்து சென்றுவிட்டு வந்து பின் சாகலாம் என்ற முடிவோடு எங்களை அழைத்துச்சென்றார்.உருளைக்கிழங்கு போண்டாவை ருசித்தபடி நாங்கள் ரசித்து பார்த்த அந்த படம் முழு நீள நகைச்சுவை திரைப்படம்.விழுந்து விழுந்து சிரித்து,படம் முடிந்து வெளியே வரும்போது அவள் துக்கம் முழுதும் கரைந்து போயிருந்ததையும்,குடிகார புருசனோடு முடிந்தவரை மல்லுக்கட்டி வாழ்ந்துவிடுவது என்ற முடிவோடு வீடுவந்து சேர்ந்ததையும் அம்மா பின்னாளில் எனக்கு சொல்லியிருக்கிறார்.ம்ம்,பார்ப்போம்..
பெண்களின் கனவுக்குள் நுழைந்து பார்த்தால் நீங்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும்.அத்தனை சட்ட திட்டங்களையும்,கட்டமைப்புகளையும் உடைத்து நொறுக்கி அதன் மேல் எழுந்து நின்றிருக்கும் அவள் கனவுக்கோட்டை.அதற்காக நீங்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை.அவர்களுக்கு கனவு காண மட்டுமே தெரியும்.அதை நடைமுறைப்படுத்திக்காட்டும் பரிணாம வளர்ச்சியை அவர்கள் இன்னும் எட்டவில்லை.எனவே நீங்கள் அவர்களை கையாளும் பாணியில் அவசர மாற்றம் ஏதும் செய்யத்தேவை இல்லை.அலை கரை கடக்காதவரை நீங்கள் நடை பயிற்சி மேற்கொள்ளலாம்,குந்தி மலம் கழிக்கலாம்,போதையோடு புரண்டு கிடக்கலாம்,புணர்ந்து கிடக்கலாம்.பாதகம் இல்லை. நான் சொல்லவந்தது இதுவல்ல.எல்லா பெண்ணும் செயல்படுத்திக்காட்டப்படாத தற்கொலை கனவு ஒன்றை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டிருப்பாள்.தற்காலிக வலி நிவாரணியாய் அந்தக்கனவுக்குள் சற்று இளைப்பாறி வந்திருப்பாள்.
இறுதியாக “என் மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல”என்ற கடிதம் ஒன்றை எழுதி வைக்கவேண்டும்.ஆமாம்,நான் கொள்ளும் இன்பம்,துன்பம் யாவற்றிற்கும் நான் மட்டுமே பொறுப்பாகமுடியும்.யாரையும் கை நீட்டி காரணமாக்குவது சுத்த பேடித்தனம்.மரண வாசலில் நான் ஒரு புழு அல்ல.உணர்வும்,உதிரமும் ஆகிய மனிதன்.’மனுஷி’ என்று சொல்ல வேண்டுமோ?வாழ்க்கையில் தான் ஆண்,பெண் என்ற பேதம் எல்லாம்..மரணத்தின் முன் அத்தனையும் வெறும் உடல்கள் தான்.இங்காவது நான் நானாக இருக்க விரும்புகிறேன்.என் இந்த முடிவேனும் என் சுயவிருப்பத்தோடு,தனிச்சையாக ,நிர்பந்தங்கள் ஏதுமற்றதாய் இருக்க விழைகிறேன்.ஆம், என் முடிவுக்கு நானே பொறுப்பு.
என் வாழ்வில் வந்து போன அத்தனை பேரையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.நான் கடந்து வந்த அத்துனை சம்பவங்களையும் பாரபட்சம் இன்றி ஒரு முறை புரட்டிப்பார்க்கிறேன்.ஆஹா!!அத்துனை சம்பவங்களும் ஒன்று போல் தெரிகிறதே?! ‘ விடுபடல் ‘ என்பது இது தானா?எந்த உணர்வுகளும் கலக்காமல் தெளிந்த காட்சிகளாக அனைத்தையும் பார்க்கமுடிவது எவ்வளவு லேசாக,பாரமற்று இருக்கிறது?!!கடவுள் இப்படி தான் இப்பூமியை பார்ப்பாரோ?!ஆம்,அப்படி தான் இருக்கவேண்டும்,இல்லை என்றால் அவர் இந்நேரம் பைத்தியமாகி இருப்பார்.
சரி,நான் இறுதியாக உங்களுக்கு ஒன்றை சொல்லிவிட்டு விடை பெறுகிறேன்.நான் எழுதி எழுதியே என் துக்கத்திலிருந்து மீண்டிருக்கவேண்டும் என்றும்,நான் என் முடிவை கைவிட்டு என் அம்மாவை போல் மீண்டும் வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என்றும் வருந்தி இறைவனை பிரார்த்திப்பவரா நீங்கள்?மன்னிக்கவும்.நீங்கள் இவ்வுலகில் வாழும் தகுதியை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டிஇருக்கிறது.மாறாக இதை மற்றுமொரு செய்தியாக மட்டுமே கடந்து போகிறவராகவோ அல்லது என் முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே உள்ளவராகவோ நீங்கள் இருக்கிறீர்களா?..வாழ்த்துக்கள்!!! .
*********************
நன்றி:மலைகள்.காம்