Showing posts with label சிறுகதை.. Show all posts
Showing posts with label சிறுகதை.. Show all posts

Saturday, December 12, 2020

கன்னிமார் சாமி

 


நல்லம்மாள் தரையில் அமர்ந்து பூக்கட்டிக்கொண்டிருந்தாள். கொல்லைப்புறம் இருக்கும் ஒற்றை மல்லிகைச்செடிதான். பூத்துக்கொட்டித் தீர்க்கும். அவைகளை ஒன்றுவிடாமல் பறித்துத் தருவாள் அம்மா. பூக்களைக் கட்டி சாமிக்கு, அம்மாவுக்கு, தங்கைக்கு, தனக்கு என்று பிரித்துக் கொடுப்பது இவள்தான். நான்கு கண்ணி பூக்கள்தான் இவள் வைத்துக்கொள்வாள். அம்மாவும் அப்படித்தான். தங்கையும் சாமியும்தான் பூக்களில் திளைப்பவர்கள்.


அறையில் இருந்தபடியே கூடத்துப் பேச்சைக் கேட்க முடிந்தது. கல்யாணப்பேச்சு. அப்பா சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் சாராம்சம் இதுதான், அப்பாவின் அக்காவுக்கு ஒரே மகன். பேர் ராசு. மிலிட்டரியில் சிறிது காலம் இருந்துவிட்டு தாக்குபிடிக்கமுடியாமல் ஓடி வந்துவிட்டவன். அதனால் எப்போது வேண்டுமானாலும் மிலிட்டரியில் இருந்து வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் என்று பயந்து யாருமே அவனுக்கு பெண் தர முன்வரவில்லை. பயந்தது போலவே வெள்ளைக்காரர்கள் அவனைத் தேடிக்கொண்டு சிலமுறை வந்தும் இருக்கிறார்களாம்.  அப்பொழுதெல்லாம் ராசு அட்டாலியில் ஏறி ஒளிந்து கொள்வானாம். மறுநாளே அத்தை இங்கு வந்து அப்பாவிடம் ஒரு பாட்டம் அழுது தீர்த்துவிட்டு போவாள். பாவம் புருசனை இழந்து தனிமரமாய் பிள்ளையை வளர்த்து ஆளாக்கியவள். அப்பாதான் அக்கா மகனுக்காக பெண் தேடி அலைந்தார். 


தூரத்து சொந்தக்காரர் ஒருவர் நாளு கிராமம் தாண்டி இருக்கிறார். வண்டி கட்டித்தான் போகவேண்டும். அங்கு போய்விட்டு வந்துதான் அப்பா கோபமாக இறைந்து கொண்டிருக்கிறார். போன இடத்தில், 


உன் வீட்லயே பொண்ண வச்சுக்கிட்டு, அக்கா மகனுக்கு பொண்ணு கேட்டு இங்க வந்துருக்கயே! உன் மவளயே கொடுக்கலாம்லனு சொல்லவும் அப்பா ரோசமாக, சரி என் மவளுக்கே கட்டிவைக்கிறேன்னு எழுந்து வந்துவிட்டார்.


பிள்ள இன்னும் வயசுக்கே வரல. ஒரு வருசம் போகட்டுமே என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார். அப்பா இந்த மாசமே கல்யாணம் பண்ணியாகவேண்டுமென்று பிடிவாதமாக நிற்கிறார். நாளு ஊர் தாண்டி அவர் விட்டுவிட்டு வந்த மானத்தை இந்த மாசமே திருப்பி எடுத்துவிடத் தவித்துக்கொண்டிருந்தார்.


ஒன்னுவிட்ட சித்தப்பா, பக்கத்து வீட்டு பொன்னய்யா தாத்தா, அக்கம்பக்க உறவுகள் சிலர் என்று அதற்குள் கூடிவிட்டிருக்க, அம்மா முடிவாகச் சொன்னாள்,


 சரி, கட்டிக்கொடுக்கலாம் ஆனா நல்லம்மாளையும் சேர்த்துக் கட்டணும். அதுக்கு சம்மதமானு உங்க அக்கா மவன்கிட்ட கேட்டுடுங்க. 


அப்பா பேசாமல் யோசனையில் ஆழ்ந்தார். பூக்கட்டிக்கொண்டிருந்த நல்லம்மாளின் கைகள் தானாக நின்றன. 


எறும்பு ஒன்று எங்கிருந்தோ இழுத்துவந்த ஒரு பருக்கைச் சோற்றை கவ்விக்கொண்டு வழியை மறித்தபடி கிடக்கும் நல்லம்மாளின் கால்களிடம் தடுமாறிக்கொண்டிருந்தது. தட்டில் உணவாகாமல் தவறி தரையில் விழுந்துவிட்ட ஒரு பருக்கை எறும்புக்கு உணவாகிறது. 


ஒருமுறை அம்மாவுடன் கோயிலுக்குப் போனபோது அம்மா இவளை கருவறை முன் இறக்கிவிட்டுவிட்டு பிரகாரத்தைச் சுற்றிவரச் சென்றிருந்தாள். கீழே அமர்ந்தபடி சாமியைப் பார்த்துக்கொண்டிருந்தவள். அர்ச்சனைக்கு மாலை, தேங்காய், எண்ணெயோடு வந்த ஒருத்தி தட்டை அர்ச்சகரிடம் கொடுத்தாள். மாலையிலிந்து ஒற்றை மலர் மட்டும் உதிர்ந்து படியில் விழ அர்ச்சகர் தட்டோடு கர்ப்பக்கிரகத்திற்குள் நுழைந்தார். பார்த்துக்கொண்டிருந்த நல்லம்மாளுக்கு சொல்லவொண்ணாத் துயர் மிகுந்தது. விதையிலிருந்து முளைத்து, கிளைவிட்டு மொட்டாகி மலர்ந்து கடவுளுக்கென்று மாலையாகி கருவறை வாசல்வரை வந்து படியில் நழுவி விழுந்துவிட்ட அந்த மலரை ஒரு குழந்தையை ஏந்துவதைப் போல ஏந்திக்கொண்டாள். பின் மெல்ல நகர்ந்து முன்னால் அமர்ந்திருந்த நந்தியின் தலையில் அந்த மலரை வைத்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டாள். 


நல்லம்மாள் எறும்பின் வழியை அடைத்துக்கொண்டிருந்த தன் சூம்பிய இரு கால்களையும் அள்ளி இடப்பக்கம் போட்டுவிட்டு நகர்ந்து அமர்ந்தாள். அப்பா கனைத்துக்கொண்டு சரி ராசுக்கிட்ட பேசறேன் என்று சொன்னது காதில் விழுந்தது. பிறகு என்னென்னவோ எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நல்லம்மாள் விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள். கல்யாணத்தை எல்லாம் அவள் கனவிலும் எண்ணியவளில்லை. தங்கையின் கணவனே தனக்கும் கணவனாவதா?! முடியாது என்று அம்மாவிடம் சொல்லலாமா? நினைக்கவே பயமாக இருந்தது. அம்மா பேயாட்டம் ஆடிவிடுவாள். நல்லம்மாளை காடுகரைக்கு, கோயிலுக்கு என்று சலிக்காமல் சுமந்து செல்பவள் அவள்தான். நல்லம்மாளும் ஒன்றும் சும்மாக் கிடப்பவள் இல்லை. உட்கார்ந்துகொண்டே காய் நருக்குவது, அரிசி புடைப்பது, மாவரைப்பது, வெங்காயம் ஆய்வது, கடலை ஆய்வது, கொட்டமுத்து தட்டுவது என்று ஓயாமல் இயங்கிக்கொண்டிருப்பவள்தான். வேலை செய்து சிறுவாடு கூட சேர்த்து வைத்திருக்கிறாள். 


அம்மா என்னை சுமையாக நினைக்கிறாளா? இல்லை. எனக்கும் இந்த சாக்கில் கல்யாணம் பண்ணி பார்த்துவிட நினைக்கிறாள். அவள் காலத்திற்குப் பின் எனக்கொரு நிழல் வேண்டுமென்று பார்க்கிறாள். ஆனால் இது சரியா? தங்கை ராமாயியை நினைத்துக்கொண்டாள். துறுதுறுவென்று இருப்பவள். தன் தோழிகளையெல்லாம் வீட்டுக்கு அழைத்துவந்து அக்காவிற்கும் சிநேகமாக்கியவள். தின்பதை எல்லாம் மறக்காமல் அக்காவுக்கு பங்கு வைப்பவள். ஆனால் இந்த கணவனைப் பங்கு வைக்கும் ஏற்பாட்டை ஏற்பாளா? முதலில் நான் ஏற்பேனா? துவண்ட அவள் கால்களைப் போலவே மனம் துவண்டு போனது. கட்டிய பூக்களை ஓரமாக வைத்துவிட்டு அப்படியே தரையில் சாய்ந்து படுத்தாள்.


மனக்கண்ணில் ராசு. அத்தை மகன்.


நல்ல கருவேலமரம் போன்ற தேகம்தான். மிலிட்டரி பழக்கத்தில் ஒட்ட வெட்டி, எண்ணை வைத்து, இடப்புறம் வாகெடுத்து படிய வாரிய தலைமுடி. அதிகம் இந்தப்பக்கம் வரமாட்டான். ஆனால் திருவிழாவுக்கு வருகையில் பை நிறைய தீனி வாங்கிவருவான். கடலைமிட்டாய், பொரி, ரவா உருண்டை, மாம்பழம் என்று வகையாகத் திங்கலாம். இத்தனை நாள் அவனுடன் அதிகமாகப் பேசியதே இல்லை என்று இன்றுதான் உறைத்தது. அவனை எனக்குப் பிடிக்குமா? மனதைக் கேட்டுப் பார்த்தாள். அவனுக்கு என்னைப் பிடிக்குமா? கேள்வி விழுந்தது. எதுவும் தோன்றாமல் கண்களை மூடிக்கொண்டாள்.


ஓரே வாரத்தில் எல்லாம் சுமூகமாக முடிந்தது. ராசு நல்லம்மாளைக் கட்டிக்கமாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டான். தாலிலாம் கட்டமாட்டேன். ராமாயிக்கு துணையா எங்க வீட்லயே வேணா இருக்கட்டும். கடைசிவரை அவள பாத்துக்கறது என் பொறுப்பு என்று கூறிவிட்டான். அப்பா அம்மாவுக்கு அவன் பதில் திருப்தியைத் தந்தது. மூஞ்சைத் தூக்கிக்கொண்டு திரிந்த ராமாயி கூட இயல்பாக சிரித்துப் பேசத்தொடங்கினாள். 


அந்த மாசமே ஒரு நல்ல நாளில் கோயிலில் வைத்து திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. தங்கைக்கு கூரைச்சேலை வாங்குகையில் நல்லம்மாளுக்கும் பாவாடை, சட்டை (செவப்புல மஞ்ச பூ போட்டது) எடுத்துத் தைத்தார்கள். அன்று நல்லம்மாள் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக பூ வைத்துக்கொண்டாள். தாலி கட்டிய கையோடு அக்காளும், தங்கையும் புகுந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள்.


கிராமத்தில் கிட்டத்தட்ட எல்லா வீடும் ஒன்றுதான். அதே திண்ணை, அதே கூடம், சமையலறை, வசதிக்கு ஏற்ப ஒன்றோ இரண்டோ அறைகள். அத்தை வீடும் அப்படித்தான் இருந்தது. ஆனால் மாடு, கன்னு கொஞ்சம் அதிகம் இருந்தது. வாசலில் சாணி போட்டு மெழுகிய பெரிய களம் இருந்தது. பக்கத்திலேயே வேப்பமரம் ஒன்று செழிக்கக் காய்த்துப் பழங்களை உதிர்த்துக்கொண்டிருந்தது. பொண்ணு மாப்பிள்ளையைக் காட்டிலும் சட்டைப் பாவாடை அணிந்த நல்லம்மாளின் மேல் அங்கிருந்த வாண்டுகளுக்கு ஆர்வம் அதிகமாய் இருந்தது. அவள் பெரிய மனுஷியா அல்லது தங்களைப் போலவே சட்டைப் பாவாடை அணிந்திருப்பதால் தங்களுடன் கூட்டு சேருவாளா என்று குழப்பத்தில் இருந்தார்கள் அவர்கள். மெல்ல நெருங்கி வந்து பேசி இரண்டொரு நாளிலேயே நல்லம்மாளுடன் சிநேகமானார்கள்.


நல்லம்மாள் இடம் மட்டும்தான் மாறி இருந்தாள். மற்றபடி தன் வழக்கமான வேலைகளை இங்கும் தொடங்கிவிட்டாள். கடலை தொலி உடைப்பது, உளுந்து அரைப்பதுடன் வாசலில் விழும் வேப்பம்பழங்களைப் பொறுக்குவதும் இப்போது கூட சேர்ந்திருந்தது. நெல் மூட்டைகளை ஓரமாக அடுக்கி ஒழுங்கு பண்ணி அந்த அறையை அக்காவும் தங்கையும் தங்கள் ட்ரங்குப் பெட்டியை வைத்துக்கொள்ளவும், படுத்து உறங்கவும் அத்தை தந்திருந்தாள். காலையில் எழுந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு ராசுவோடு ராமாயி தோட்டத்துக்கு வேலைக்குப் போனால் நல்லம்மாள், வீட்டில் அத்தைக்கு கூடமாட சமையலில் ஒத்தாசை செய்வாள். சோறாக்கி எடுத்துக்கொண்டு அத்தையும் தோட்டத்துக்கு போய்விட்டால் மூவருமாக வீடுவந்து சேர பொழுதாகிவிடும். 


தனித்துவிடப்படும் உச்சி வெயில் பொழுதுகளில் வேப்பமரத்துக் காக்கைகள்தான் அவளுக்கு துணை. திண்ணையில் அமர்ந்து கடலை தொலி உடைத்துக்கொண்டு கண் கூசும் வெயிலில் காக்கைகளைப் பார்த்தபடி இருப்பாள். ஓரிரு கடலைகளை உடைத்து வாசலில் வீசுவாள். வேப்பம்பழத்தை விட்டுவிட்டு கடலைக்கு வந்து அமரும் காகங்களிடம் ஆசையப் பாரு என்று செல்லக் கோபம் கொள்வாள். வெயிலுக்கு வீட்டில் அடைந்து உறங்கிவிடும் பிள்ளைகள் சாயங்காலம் இவளுடன் கதைபேச வருவார்கள். தலை சீவி விடவும், பேன் பார்க்கவும் என்று அவள் காலடியில் பிள்ளைகள் மொய்க்கும்.


இரவில் அருகில் படுத்திருக்கும் தங்கையிடம் ஏதாவது கதை பேசுவாள். அக்கம்பக்க பிள்ளைகள் சொன்ன ஊர் தகவல்கள், பிறந்த ஊரின் கதைகள் என்று பேச்சு போகும். நாளெல்லாம் தோட்டத்தில் வேலை செய்த களைப்பில் ராமாயி சீக்கிரமே உறங்கிப் போவாள். 


அசந்து உறங்கும் தங்கையின் சற்று பிளந்த வாயைப் பார்க்கும்போது குழந்தை போல தோன்றும். மனம் இளகிப் போகும். அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள்? அவளும் களைத்து உறங்கிக்கொண்டுதான் இருப்பாள். அம்மாவின் வெடித்த பாதங்களில் சரியாகக் கழுவாத களிமண் ஒட்டியிருக்கும். தங்கையின் பாதத்தை எழுந்து பார்த்தாள். நகங்களில் மண் சேர்ந்திருந்த்து. 


ராமாயி அடுத்த நான்கு மாதங்களில் வயசுக்கு வந்தாள். 


பொறந்த வீட்டில் சீர் செய்து பத்துநாள் வைத்திருந்து பிறகு புகுந்த வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். அன்றிலிருந்து ராமாயி புருசனோடு தூங்கப்போனாள். நல்லம்மாள் மீண்டும் தனியானாள். அவளின் இரவுகள் மிக நீண்டதாக மாறின. முற்றிய நெல்மணிகளின் வாசனை அவள் அறையெங்கும் நிறைந்திருக்கும். மூச்சை நீண்டு உள்ளிழுத்து சுவாசிப்பாள். சோறு உண்டது போல நெஞ்சு நிறையும். சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி தன் கால்களை மேலே தூக்கிப் பின் விடுவாள். அது பொத்தென்று தரையில் விழும். எடுப்பாள் விடுவாள் எடுப்பாள் விடுவாள்.. பொத்.. பொத்.. 


ஒருமுறை காகம் கவ்விக்கொண்டு போன செத்த எலி இப்படித்தான் வாசலில் பொத்தென்று வந்து விழுந்தது.


ராமாயி அடுத்த வருடத்தில் குழந்தை பெற்றாள். அம்மா கையில் இருந்த குழந்தையை ராசுதான் வாங்கிக்கொண்டு வந்து நல்லம்மாள் கையில் தந்தான். அது கருத்த மேனியோடு பட்டு போன்ற உதட்டை சுழித்துக்கொண்டுக் கொண்டு சிணுங்கியது. அன்றிலிருந்து அது அவள் பொறுப்பில் விடப்பட்டது. பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் குழந்தை இவள் காலடியில்தான் உதைத்துக்கொண்டு கிடந்தது. நல்லம்மாள் அவள் சிறுவாட்டுக் காசில் குழந்தைக்கு காப்பு செஞ்சு போட்டாள். அடுத்த மூன்று வருடத்தில் அடுத்தக் குழந்தை பிறந்தது. ராமாயி சட்டென்று முதிர்ந்தவள் போல் ஆனாள். மாராப்பு சரிவதில் கவனமற்றவளாய் சரியாக வாராத தலையோடு அவள் தோட்டத்துக்கும் வீட்டுக்குமாக அலைந்து களைத்தாள். பேச்சில் பெரியமனுசியின் தோரணை வந்திருந்தது. காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, நல்லம்மாள் தன் தளர்ந்த கால்களுடன் கால ஓட்டத்திடம் தோற்று தேங்கி நின்றாள். அவளிடம் சடைப்பின்னிக் கொள்ளவரும் வள்ளி ஒரு நாள் தாவணியில் வந்து நின்றபோது இவள் மலைத்துப் போனாள். இன்னும் சட்டைப் பாவாடையிலேயே இருக்கும் தன்னை எண்ணி மருகினாள். 


அன்று களத்தில் மஞ்சள் வேக வைத்துக்கொண்டிருந்தார்கள். திண்ணையில் உட்கார்ந்திருந்த அத்தையுடன் கிழங்கு அவிக்க வந்த மரகதம் பேசிக்கொண்டிருந்தாள். பேச்சு ராமாயி பிள்ளைகள் பற்றி வந்தபோது, அத்தை சொன்னாள்,


பெத்தவ எங்க பிள்ளைய பாக்குறா, அவளுக்கு காடு கரைல கெடந்து அல்லாடவே சரியா இருக்கு. பெரியவ கைலதான் பிள்ளைங்க வளருது. அவ கன்னிமார் சாமி மாதிரி. அவ வளக்கறது சாமியே வளக்கறாப்ல.  


வெந்து வரும் முற்றிய மஞ்சள் கிழங்கின் மணம் தெருவெங்கும் மணந்தது.


நல்லம்மாளுக்கு ஒவ்வாத நாட்கள் என்றால் அது வீட்டுக்கு விலக்காகும் நாட்கள்தான். கோவணமாக இழுத்துக் கட்டியிருக்கும் தீட்டுத் துணி அவள் தரையில் பிட்டத்தை இழுத்துக்கொண்டு நகர்கையில் எல்லாம் விலகி விடும். யாரும் அறியாமல் அதை இழுத்து இழுத்து சரி செய்ய வேண்டும். அதனால் பெரும்பாலும் பின்கட்டுத் திண்ணையை விட்டு அவள் நகர மாட்டாள். 


நான்கு பக்கமும் மறைப்பு வைத்துக் கட்டப்பட்ட குளியல் அறைக்குள் இழுத்து இழுத்து போனாள் நல்லம்மாள். துணிகளைக் களைந்தாள். மேற்கூரை அற்ற மறைப்பினுள் பகல் நேர வெயில் மஞ்சள் நீர் போல் கொட்டியது. நல்லம்மாள் தன் ஆடையற்ற மேனியை புதிதாய் பார்ப்பவள் போல் தனித்தனியாக பார்த்துக்கொண்டிருந்தாள். இடுப்புக்கு கீழே துவண்ட அந்த உடலில் தோள்கள் இறுகிப் படர்ந்திருந்தன. மொத்த வலிமையையும் காட்டிவிடத் துடிப்பது போல  அவள் உறுதியான கைகள், திரண்ட மார்புகள், இறுகிய தோள்கள், படிந்த வயிறு என்று அங்கங்கள் அத்தனையும் திமிரிக்கொண்டு நின்றன. அவள் தன் மார்புகளைப் பார்த்தாள். 


ஒருமுறை அம்மா வீட்டில் தோழிகளுடன் திண்ணையில் தாயம் ஆடிக்கொண்டிருக்கையில் தோழி ஒருத்தி, விலகும் தன் மாராப்பை இழுத்து விட்டுக்கொள்வதைப் பார்த்த இன்னொருத்தி, அங்க என்ன இருக்குதுனு இழுத்து இழுத்து விடுற என்று கேலி செய்தாள். சுற்றி அமர்ந்திருந்த மொத்தப் பெண்களும் சத்தமாக சிரிக்கவும் அவமானப்பட்டவள் விடாமல், ஆமாம் பின்ன உனக்காட்டம் மூஞ்சில வந்து இடிக்கணுமா, கொஞ்சம் அடக்கி வைடி, விட்டா பறந்துடும் போல என்று எதிர் கேலி செய்ய கூட்டம் மொத்தமும் வயிறு வலிக்க சிரித்து, அவளுக்கு எப்படி, இவளுக்கு எப்படி என்று மாற்றி மாற்றி கிண்டல் செய்து விளையாடும்போது நல்லம்மாளை யாருமே கவனிக்கவோ, கேலி செய்யவோ மறந்து போனதை இப்போது நினைத்துக் கொண்டாள். 


சூம்பிய அந்த உடலில் திரண்டு நிற்கும் மார்புகள் மதிக்கப்படுவதில்லையா?! அவள் தீட்டுத் துணியை கழற்றி அலசத் தொடங்கினாள். உதிரம் தோய்ந்த அந்த துணி அப்பொழுதுதான் பிறந்த குழந்தை போல் இருந்தது. குளிர்ந்த நீரை ஊற்றி தேய்த்து தேய்த்து கழுவினாள். பிள்ளை அழாமல் நீராடியது. இரும்பின் துரு வாசனை முகத்தில் மோதியது. அவள் மூச்சை நன்கு உள்ளிழுத்துவிட்டுக்கொண்டு அலசிக்கொண்டே இருந்தாள். 


உதிரம் ஒரு குட்டி ஆறு போல அவள் காலடியில் இருந்து பிறப்பெடுத்து ஓடியது.


***

-சுஜாதா செல்வராஜ்.






Thursday, May 8, 2014

தேவஸ்வரம்






அவள் வெகு தொலைவு கடந்து வந்திருக்கிறாள். விரட்டப்பட்ட 

ஒரு அநாதை நாய்க்குட்டியைபோல திசைகள் அற்று 

ஓடிக்கொண்டிருக்கிறாள். கால்களில் வழிந்தபடி 

இருக்கும் உதிரம் முட்களின் இரக்கமற்ற கூர்மையை 

எழுதிக்காட்டுகிறது.இந்த கான்க்ரீட் உலகத்தின் விரைத்த, நிலைத்த 

விழிகள் அவளை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அவள் ஓடுகிறாள். 

உருகும் தார் வாசனைக்கு அஞ்சி, பச்சையம் தேடி ஓடுகிறாள்.



அவளின்  மெலிந்த  கால்கள்  ஓர்  அடர்ந்த வனத்தின் வாசலில் 

அவளை கொண்டுவந்து சேர்த்திருந்தது. பாதைகள் அறியா 

அவ்வடர்ந்த வனத்தில் ஒரு பூனையின் தயக்கத்துடன் அவள் 

தனக்கான பாதையைத் தேடிக்கொண்டிருந்தாள். தடங்களைத் தேடி பாதங்கள் அலைபாய்ந்துக் கொண்டிருந்ததொரு உச்சிப்பொழுதில்தான் அவள் அவனைக் கண்டாள். தடித்த பலா மரத்தின் வேர்களில் அமர்ந்து அவன் பலாச்சுளையைப் புசித்துக்கொண்டிருந்தான். கனிந்த பலாச்சுளையின் சாறு இதழோரம் வடிந்து அவன் மார்பில் சொட்டிக்கொண்டிருந்தது. புடைத்து திரண்ட ஒரு மரத்தில் கோடாரியால் உண்டாக்கிய ஒரு சிறு பிளவிலிருந்து பொன்னிறக்கோந்து வடிவதுபோல் அது மிக மெதுவாய் வடிந்துகொண்டிருந்தது.



ஏற்கனவே அவன் அருகில் அமர்ந்துவிட்ட அவள் மனம் அவளை அருகில் வரச்சொல்லி கை அசைக்கவும் அவள் மெல்ல நகர்ந்து அவனை நெருங்கினாள். நிமிர்ந்து நோக்கிய விழிகளில் “ தெறிக்கும் இரு சூரியன்கள்”.

அவன் சொன்னான் , “ வழிதவறிய காட்டு மானின் மருண்ட விழிகள் உனது” என்று.



ஒரு மேய்ச்சல் சிறுவனின் உடல்மொழியோடு அவன் அந்த வனத்துடன் உறவாடிக்கொண்டிருந்தான். வனத்தின் வாசல்வரை அவளுக்கு வழித்துணையாக வருவதாக அவன் சொன்னான். அவள் பயணம் அங்கே முடிந்துவிட்டதாக அவள் பதில் அளித்தாள். அவன் அவள் கண்களைப் படிக்க முயல்கையில் விழி வாசல், அவள் கடந்து வந்த பாதை முழுவதையும் திறந்து காட்டியது. அவள், அவன் நிழலில் இளைப்பாறும் தனது விருப்பத்தை தெரிவித்தாள்.



அவன் கரம் அவளை நோக்கி நீண்டது. அவள் அதைப்பற்றிக்கொண்டாள்.

ஆணிவேரின் ஈரமும், வாசனையும் அதில் இருந்தது. மரங்களினூடே ஒரு தும்பியின் லாவகத்துடன் அவன் பறந்துகொண்டிருந்தான். அவளையும் அவன் சிறகுகளில் ஏற்றி இருந்தான்.



அவர்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு சிற்றாற்றின் கரை. அவன் அவளைப் பார்த்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டபடி புன்னகைத்தான். பின் மண்டியிட்டு அமர்ந்து மணலை கைகளால் தோண்டத்தொடங்கினான். அறியும் ஆவலோடு அவளும் அவனோடு சேர்ந்து மண்ணை வாரி வெளியில் போட்டுக்கொண்டிருந்தாள். கசியத்தொடங்கியிருந்த ஈரம் அவர்கள் இருவர் கைகளையும் நனைக்கவும் “ ஹே “ என்று சின்னதாய் ஒலி எழுப்பியபடி அவன் வேகம் கூட்டினான். அப்போது அவர்கள் கைகளுக்குப் பாசி படர்ந்த வெண்ணிற மணிகளை ஒத்தச் சொற்கள் தட்டுப்படத்தொடங்கின. அவன் சொன்னான், ”'நான் தினமும் இங்கு வருவேன்,எண்ணிலடங்கா எனது சொற்களை இங்கே புதைத்துவிட்டு மௌனத்தைப் போர்த்தியபடி அமர்ந்திருப்பேன். பின் இவ்வாற்றங்கரை புங்கைமரக்கிளையில் மூக்குரசியபடி இருக்கும் ஜோடிக்கிளிகளின் ஒலியை கொஞ்சம் சேகரித்துக்கொண்டு திரும்புவேன் ” என்று. .



இருவரும் கை நிறைய சொற்களை அள்ளிக்கொண்டு திரும்பத்தொடங்கினார்கள். மெளனமாக நடந்துகொண்டிருந்தவனின் முதுகில் கொஞ்சம் சொற்களை அள்ளி அவள் வீசினாள். அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. திடுக்கிட்டுத் திரும்பிய அவனிடம் நாக்கைத் துருத்திக்காட்டிச் சிரித்தாள் அவள். முகம் எல்லாம் மின்னல் தெறிக்க , கீழ் உதட்டைக் கடித்தப்படி அவன் கையில் இருந்த சொற்களை அவள் மீது அள்ளி வீசினான். அவள் சிரித்தப்படி விலகி ஓடினாள். அவன் துரத்திவந்தான்.  மாறி மாறி துரத்தியபடி சொற்களை ஒருவர்மேல் ஒருவர் வீசி விளையாடிக் களித்திருந்தார்கள் . மான் கூட்டம் ஒன்று தங்கள் மேய்ச்சலை நிறுத்திவிட்டு தலை உயர்த்தி அவர்களை வேடிக்கைப் பார்த்திருந்தது.



யானையின் அடிவயிற்றை ஒத்த பருத்த பாறைமேல் அவர்கள் இருவரும் வான் பார்த்துப் படுத்திருந்தார்கள் . சூரியன் குளிரத்தொடங்கி இருந்த அந்த அந்திப்பொழுதில், “ அருவியின் ஓசையை என்னுள் கேட்கிறேன்,ஒற்றைப் பனித்துளி ஒன்று என் உச்சந்தலையில் இறங்குகிறது, இன்று தான் நிகழ்கிறது இது ” என்று அவன் சொன்னான். பிறகு மெல்லமாய் உன் பெயர் என்ன என்று வினவினான். அவள் சொன்னாள்  “ வன உயிர்கள் பெயர் அற்றவை “.  மலர்ந்து எழுந்த அவன், அவள் இரு பாதங்களையும் மடியில் எடுத்துக் கிடத்திக்கொண்டான். அவள் தன் காயங்களைக் காட்டினாள். இவைகள் என்றும் மறையாது என்றாள். வழித்தடங்களுக்குப் பழகிய உன் பாதங்கள் நீ கடந்து வந்த பாதையை மறக்கும் நாளில், உன் காயங்கள் மறையும். நீயும் ஓர்வன உயிர் ஆவாய் என்றான் அவன்.



அடர்ந்த அயனி மரங்களை மூங்கிலால் இணைத்து அவளுக்காக ஒரு பரண் அமைத்தான். மந்திகள் தங்கள் குட்டிகளுக்குப் பாதாம் கொட்டைகளை உடைத்து உண்ணப் பழக்குகையில் அவன் அவளுக்கு வனத்திடமிருந்து உணவைப் பெரும் முறையை சொல்லிக்கொடுத்தான். உண்ணத்தகுந்த கிழங்குகள்,தவிர்க்கவேண்டிய கனிகள், காதுகொடுக்க வேண்டிய ஒலிகள், கவனிக்கவேண்டிய கால்தடங்கள் என்று கானகத்தின் பக்கங்களை அவனோடு சேர்ந்து அவள் கொஞ்சம் கொஞ்சமாய் வாசிக்கத்தொடங்கினாள்.



அவள் உதிரம் கண்ட நாளில், வனம் அவனை புதுவிதமாய் அறிந்தது. இரண்டு மடங்கு விழிப்புக் கொண்டவனாக ஆனான் அவன். ஒரு தாயின் பரிவை கணநேரத்தில் தன்னுள் கொண்டுவந்திருந்தான். காய்ந்த சருகுகளையும், விறகுகளையும் இட்டு தீ மூட்டி விடிய விடிய விழித்திருந்தான். அவன் கண்கள் தீக்கங்கு போல் சிவந்து ஒளிர்ந்தது. அவள் உதிரம் தோய்ந்த நிலமெங்கும் சாம்பல் கலந்த மணலை இட்டு மூடினான். உதிர வாடையை  விலங்குகள் அறியாதிருக்க அத்துனை சாகசங்களையும் செய்து முடித்தான். அவனே வன ராஜா .அவனே சிறந்த தோழன்.



அது, வானம்  மஞ்சள்பூசிய இளமாலை நேரம். அவன் அவள் கைப்பற்றி இழுத்துக்கொண்டு ஓடினான். தூரத்தில் உடலெங்கும் மிக நேர்த்தியாக வரையப்பட்ட கோடுகளுடன் புலி ஒன்று வந்துகொண்டிருந்தது. மூச்சிரைக்க ஓடி ஒரு பெரிய பாறைக்குப் பின்னால் அவர்கள் ஒளிந்துகொண்டார்கள். அவன் முதுகுக்குப் பின்னால் அவள் குறுகி அமர்ந்திருந்தாள். அவள் தன் முன்னுடலை அவன் மேல் சாய்த்திருந்தாள். அது அவளுக்கு கொஞ்சம் தைரியம்  தருவதாக இருந்தது. அவள் நெஞ்சு படபடப்போடு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கொழுத்த புலி கொஞ்சம் தொலைவில் மேய்ந்துகொண்டிருந்த காட்டு எருமைக்கூட்டத்தை நின்று கவனித்து விட்டு, பின் அசிரத்தையோடு  ஒரு மர நிழலில் போய் படுத்துக்கொண்டது. அவன் சொன்னான் “ அதற்கு பசி இல்லை”.அவர்கள்  கொஞ்சம் ஆசுவாசம் கொண்டனர்.



அவள்  இன்னமும் அவன் முதுகோடு ஒட்டி இருந்தாள். ஜோடி ஆமைகளின் மிக மெல்லிய நகர்வை அவன் முதுகில் உணரத்தொடங்கிய  வேளையில் அவன் திரும்பி அவள் விழிகளைப் பார்த்து சொன்னான் “ உன் ஆயுதங்கள் பலம் பொருந்தியவை “.  கரிய இரு நாகங்கள் முத்தமிட்டு விலகுவதைப்போல அவள் தன் புருவங்களைச் சுருக்கி “ புரியவில்லை “ என்றாள். அவன் உதட்டோரம் நெளியும் குறும்பு புன்னகையுடன் ''உன் ஆயுதங்களால் என்னை புறமுதுகில் தாக்காதே. ஒரு வீரன், ஆயுதங்களை நெஞ்சில் சந்திக்கவே விரும்புவான் '' என்றான்.  நொடிப்பொழுதில் கூசிச் சிவந்த மலர்முகத்தை ஒரு கையில் மூடிக்கொண்டு அவன் நடுநெஞ்சில் மறு கையைப் பதித்து பின்புறமாய் அவனைத் தள்ளி விட்டுவிட்டு  எழுந்து ஓடினாள். அந்நிமிடத்தில் செந்நிற செம்பருத்தி மலர்கள் மலர்ந்து ஒளிரத் தொடங்கின.



அந்த வனம் மிகப்புதிய இரவை அன்று சந்தித்தது. அடர்ந்த மௌனம் மான்களை பதற்றம் கொள்ளச் செய்தது. யானைகள் இருப்பு கொள்ளாமல் தங்கள் உடல்களை முன்னும் பின்னும் அசைத்தபடி இருந்தன. பறவைகள் தங்கள் இணை சேராமல் விழித்திருந்தன. காற்று மூச்சை இழுத்துப் பிடித்தபடி நின்றிருந்தது. மரங்கள் துவண்டு தலை சாய்த்திருந்தன. அவனும் அவளும் எதிர் எதிர் பரண்களில் வானத்தை வெறித்திருந்தார்கள். அவர்கள் இருவரின்  மூச்சுக்காற்றுகளும்  பாம்புகள் சீறும் ஒலியைப்போல விடியல் வரை ஒலித்திருந்தன. என்றும் அறியா புழுக்கத்தை வனம் அன்று கண்டிருந்தது.



வனம், தன் உறக்கம் தொலைத்த இரவுக்குப் பின்பான பகல் அவர்களுக்கு மிக நீண்டதாய் இருந்தது. அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். பசியை முற்றிலும் மறந்திருந்திருந்தார்கள். மௌனம் இருவரையும் கவ்விப்பிடித்திருந்தது. மனங்கள் இரண்டும் ஒரு புள்ளியில் குவிந்திருந்தது. எப்போதும் அவள் இயல்பாய் பற்றிக்கொள்ளும் அவனது விரல்கள் அன்று இயல்பைத் தொலைத்திருந்தது. அந்த சின்ன நடுக்கம் அவள் விரல்களிலா? அவன்விரல்களிலா? அவர்கள் சொற்களைத் தோண்டி எடுத்த அந்த சிற்றாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். வழக்கமாக அவர்கள் நீராடும் இடம் அது தான். கண்கள் சந்திக்கத் துணிவற்று, அவள் அருகிலிருந்த வெண்ணிற காட்டுமல்லிப் பூக்களைச்  சேகரிக்கத்தொடங்கினாள். அவன் மரத்துண்டு ஒன்றை எடுத்துவந்து தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கத்தியைக்கொண்டு செதுக்கத்தொடங்கினான்.



கதிரவன் உச்சியை அடைந்த பொழுதில், கொஞ்சம் மரவள்ளிக்கிழங்குகளையும், கொய்யாக்கனிகளையும் கொண்டுவந்தான்அவன். அவர்கள் மர வேர் ஒன்றில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார்கள். கொய்யாக்கனிகளே அவர்களின்  விருப்ப உணவாக இருந்தது. சூரியனின் கதிர்கள் அடர்ந்த மரங்களைக் கடந்து வந்து அவர்களைத் தழுவிவிடத் தவித்துக்கொண்டிருந்தது.  அவள், சேகரித்த காட்டுமல்லிப் பூக்களை  மாலையாகத் தொடுக்கத்தொடங்கினாள். அவன் வலிய தன் கரங்களை நீட்டி மிக மென்மையாய் அவள் இதழோரம் ஒட்டியிருந்த கொய்யா விதையை எடுத்தான். பின் எழுந்து சென்று ஒரு பாறைமேல் அமர்ந்துகொண்டு மீண்டும் மரத்துண்டை செதுக்கத்தொடங்கினான்.



அந்த நாள் அவர்களின் பிரக்ஞை அற்று மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. கதிரவன் மறையத்தொடங்கிய அந்திப்பொழுதில் அவன் நீராடச் சென்றான். அவள் மலர்மாலையில் கொஞ்சம் நீர் அள்ளித் தெளித்துவைத்துவிட்டு அவனைப் பார்த்தபடி பாறைமேல் அமர்ந்திருந்திருந்தாள். யானையின் நீராட்டம் நீங்கள் கண்டதுண்டா? கரிய அதன் தோள்களில்  நீர்த்துளிகள் சரிந்து தெறிக்கும் காட்சி கிளர்ச்சி மிகுந்தவை,  காண்போரின் உடலில் அதன் குளுமையை உணரச்செய்பவை.

“  நீர் என்பது வெறும் நீரல்ல. அது, காலங்களை தன்னிடத்தில் பொதித்து வைத்திருக்கிறது. அது நம் மனங்களுக்குத் தக்கபடி தன்னைப்  பிரதிபலிக்கவல்லது “

அவன் கரை ஏறிவந்து அவள் அருகில் அமர்ந்தான். அவள் எழுந்து, மெல்ல தன் பாதங்களை எடுத்து வைத்தாள். அந்த ஆறு அவளைக் கைவிரித்து அழைத்தது. புற்களும் கருகிவிடக்கூடிய மிக மிகுந்த வெம்மை அவள் மூச்சுக்காற்றில் ஏறி இருந்தது. அவள் தன்உடலை நீருக்குள் நழுவவிட்டாள். காலைப்பனியின் சிலுசிலுப்பை பெற்றிருந்த அந்த ஆற்றுநீர் அவள் உடலின் அத்துனை திசைகளிலும் மோதிச் சிலிர்த்தது. அவள் மெதுமெதுவாய் குளிரத்தொடங்கினாள்.



ஈரஉடை அசைய நடந்து வந்து அவன் சிலையாய் சமைந்திருந்த பாறைமீது அவன் தோள்உரசி அமர்ந்தாள் அவள். கடலும்,ஆறும் ஒன்றுசேரும் இடத்தைப்போல் குளுமையும் வெம்மையும், மோதி உரசிக்கொண்டது அப்போது. அவன் மெல்ல திரும்பி அவள் கூந்தலிலிருந்து முதுகில் சொட்டிக்கொண்டிருந்த நீரை உள்ளங்கை ஏந்தி சேகரித்தான். பின் மெல்ல கண்மூடி அந்நீரைப் பருகினான். “ தாகம் கொண்ட விலங்கின் உதடுகள் அவை “. அவளது திரண்ட தோள்களில் நடுங்கிக்கொண்டிருந்த நீர் முத்துக்களை சுட்டுவிரல் கொண்டு துடைக்கத் தொடங்கினான். வானம் செந்நிறம் கொள்ளத்தொடங்கியது. பின் அவள் பாதங்களை எடுத்து மடியில் கிடத்திக்கொண்டு சொன்னான் “ உன் காயங்கள் ஆறி வருகிறது “. அவள் சொன்னாள் “ நீ காயங்கள் அற்றவன் “.மெல்லிய புன்னகை ஒன்றை தவழவிட்டபடி குனிந்து அவள் பாத விரல்கள் ஒவ்வொன்றாய் வருடி முத்தமிட்டான். 



அவன் அப்படித்தான். மிகுந்த ரசனைக்காரன், எதிலும் நிதானம் தவறாதவன். காட்டு முயலை சுட்டு சமைக்கையிலும் தன் தனித்த ரசனையை,ருசியை அதில் ஏற்றிவிடவல்லவன். ஒருமலரை நுகர விரும்பினாலும் இதழ் இதழாக மென்மையாக வருடி, அதன் மகரந்தப்பரப்புகளை முத்தமிட்டு பின் நுகர்ந்து ரசிப்பான்.  உச்சிக்கொம்புத்தேன் கிடைக்கும் நாளில் அடையோடு எடுத்து தின்பவன் அல்ல அவன். தேக்கு மரத்தின்  தளிர் இலையைக் கிண்ணம் போல் செய்து அதில் தேனை பிழிந்து கொள்வான். பின் அவளை ஆற்றங்கரைக்கு அழைத்துப்போய் நீரை ஒட்டிஇருக்கும் பாறையில் இருவருமாக அமர்ந்துகொண்டு பாதங்களை நீருக்குள் இருக்குமாறு வைத்துக்கொள்ளச் சொல்வான். பிறகு ஒரே ஒரு துளி தேனை நுனிநாக்கில் சொட்டி சுவைக்கச்சொல்லுவான். பாதங்களில் குறுகுறுத்து ஓடும் சில்லென்ற ஆற்றுநீரும் நுனிநாக்கில் கரையும் கொம்புத்தேனும் தேவ சுகத்தை தரும் நேரம் அது. பின் கொஞ்சம் கொஞ்சமாய் தேனை சுவைத்து முடிப்பார்கள். அவன் ரசனையே அலாதி..



அவள் பாதங்களை முத்தமிட்டு நிமிர்ந்தவன் அவள் தொடுத்து வைத்திருந்த மலர்மாலையை அவள் கழுத்தில் அணிவித்தான். ஜோடிக்கிளிகள் கத்திக்கொண்டு வந்து மரக்கிளையில் அமர்ந்தன. கிளிகளை அவள் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அவள் கழுத்து நரம்பில் விரல் வருடிச் சொன்னான் “ உன் ஆடைகள் மிகவும் கந்தல் ஆகிவிட்டது “. பௌர்ணமி நிலவு திரண்டு எழுந்து தன் பால்வண்ண ஒளியை வனமெங்கும் பரப்பத் தொடங்கிய நேரம் அது. அவள், “ இன்று நிலவை பார்த்தாயா? அதன் ஒளி “ வெண்பட்டு விரிப்பு போல இருக்கிறதல்லவா?! “ என்றாள். அவன் ஆம் என்று தலையசைத்து “நாம் இருவரும் அவ்வெண்ணிலாவின் ஒளியை இவ்விரவில் ஆடையாக அணிவோமா?" என்றான். செந்நிற மீன்கள் மேல்எழுந்து அவள்  இரு கன்னங்களிலும் துள்ளத் தொடங்கியது. அவள் தனது வலது பாதத்தின் பெருவிரலால் அவன் மென்மயிர் படர்ந்த மார்பில் மெல்ல அழுத்தி சிரித்துவிட்டு எழுந்து ஓடமுயன்றாள். தொலைவில்  ஒரு யானை தன் வலிய துதிக்கை கொண்டு மூங்கில் புதர்களை வளைத்து இழுத்துச் சுவைத்துக்கொண்டிருந்தது. 



 சிரிப்பொலி வனமெங்கும் பட்டுத்தெறிக்க வனம் குதூகலம் கொண்டது. பறவைகள் கூவித்திளைத்தன. காற்று சுழன்று வீச மரங்கள் தலை சிலுப்பி ஆடின. விலங்கினங்கள் தங்கள் இணை சேர விளைந்தன. திருவிழாக்காலத்து தேர் தெருவைப்போல் கலவையான ஒலியில் காடு கள்  வெறி கொண்டது. தூறலில் தொடங்கிய மழை வேகம் கொண்டு அடைமழையாய் கொட்டித்தீர்த்தது.  நிலவின் மல்லிகை ஒளியில் அவள் அவனது மச்சங்களைக் கண்ட அவ்இரவில்தான் அவனது  தழும்புகளையும் காண நேர்ந்தது. அவனும் வடுக்களோடு வாழ்பவனே . வனம் கண்ட மிகுமழை, களைத்து ஓய்கையில் கதிரவன் காடேறி வந்தான். தன் மெல்லிய ஒளிக்கரங்களால் துவண்டிருந்த உயிர்களின் தேகம்தொட்டு வருடத்தொடங்கினான். 



                           ******* 

செ.சுஜாதா.
நன்றி: மலைகள்.காம்.





Friday, July 26, 2013

நந்தினியின் அப்பா






அந்த நீண்ட வீட்டின் முன்திண்ணையில் கிடந்த பெஞ்சில் வந்து அமர்ந்தாள் நந்தினி. சாப்பிட்டுக் கை கழுவிய ஈரம் கையில் இன்னும் இருந்தது.
பாவாடையில் அழுந்த கைகளைத் துடைத்துக்கொண்டாள். கைகளில் புளிச்சைக் கீரை வாசம். இனி ரெண்டு நாளைக்கு  இதே கீரையைச்  சூடுபண்ணி போடுவாள் அம்மா . சோற்றில் கொஞ்சம் மோர் விட்டுக் கரைத்து அப்படியே கிண்ணியோடு சாய்த்துக்  குடித்துவிட்டுத் தோட்டத்துக்கு கிளம்பிவிடுவாள் அம்மா. அம்மா, சின்ன வயசில் அப்படி ஒரு சாப்பாட்டுப்  பிரியையாம்.

"இப்படித் தட்டு வழிய சோறு போட்டுகிட்டுத் திண்ணைல உக்காந்துச் சாப்பிடாத , பாக்கறவங்க கண்ணு வைக்கபோறாங்க "ன்னு பாட்டி அடிக்கடி  சொல்லுவாங்களாம்.
ஏதாவது தப்பு பண்ணி,பாட்டி அடிச்சுட்டாக் கூட உக்காந்து நல்லா அழுதுட்டு, கண்ண தொடச்சுக்கிட்டுப் போய் சோறு போட்டு சாப்பிட்டுவாளாம். 'என் மகள்  நீ, என்னடான்னா கோபத்த முதல்ல சாப்பாட்டுலத் தான் காட்டுற' என்று நந்தினியிடம் அம்மா எப்பவும் அலுத்துக்கொள்வாள்.

அம்மா, ஒழுங்காச் சமைச்சு ஒரு வாரம் ஆச்சு. ஒருவீட்டின் உயிர்ப்பு, சமையல்கட்டில் இருந்து தான் ஆரம்பமாகிறது. காலையில் எழுந்து காபிக்கு அடுப்பை பற்றவைக்கும்போது தான் அந்த வீடு மூச்சுவிடத் தொடங்குகிறது. நம்மோடு சேர்ந்து அதுவும் பரபரப்புக் கொள்கிறது. நாம் புத்தாடை அணிந்தால் அதற்கும் பொலிவு கூடுகிறது. நாம் அழுதபடி இருந்தால் அதுவும் மூக்குச் சிந்துகிறது.

நந்தினி வீட்டைக் கவனியுங்கள் அதுஅழுக்கேறி இருக்கிறது. கெட்ட வாடை வீசுகிறது. உற்றுக் கவனித்தால் அது லேசாகத்  தள்ளாடுவதையும் அறியமுடியும். அவள் வீடு தன் இயல்பைத் தொலைத்துத்  தடுமாறிக்கொண்டிருந்தது.

யாரோ ஒருவர் வாசலில் வந்து நின்று,  " அப்பா இல்லையா பாப்பா?"என்றார்.  நந்தினி உள்ளே எட்டிப் பார்த்து , "அம்மா ..யாரோ கூப்பிடுறாங்க .."என்று சத்தமாகச் சொல்லிவிட்டு வந்திருந்தவரை ஒருமுறை பார்த்துவிட்டு தன் கை விரல்களை ஆராயத்தொடங்கினாள். அந்தக் கைவிரல்கள் அவளை அழைத்துக்கொண்டு அவள் அப்பாவிடம் சென்றது.."அப்பா"... நினைக்கும்போதே மனம் கனிந்துபோனது. அப்பா எப்போதும் நந்தினியின் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொதித்துக்கொண்டு தான் பேசுவார்.சாயங்கால வேளையில் தவறாமல் மசால் வடை,போண்டா என்று ஏதாவது வாங்கிவந்து அவள் தின்று முடிக்கும் வரை அருகிலேயே அமர்ந்திருப்பார். மேலும் அதுஎவ்வாறு  சுடச் சுட தயாரிக்கப்பட்டது என்பதையும் பூரிப்போடு சொல்லிக்கொண்டிருப்பார். அவருக்கு நந்தினி என்றால் உயிர். 

நந்தினியோடு 6ம் வகுப்பு படிக்கும் தோழிகள் எல்லாம் வீடு கூட்டுவது, பாத்திரம் துலக்குவது என்று வீட்டு  வேலை செய்யத்தொடங்கி இருந்தனர்.அதை அவர்கள் பெரியமனுசி ஆகிவிட்ட தோரணையில் சொல்லத்தொடங்கவும் நந்தினிக்கும் ஆசையாய் இருந்தது. அம்மாவிடம் நச்சரித்துப் பாத்திரம் துலக்க அனுமதி வாங்கி விட்டாள். தட்டுத் தடுமாறி அவள் இரண்டாவது பாத்திரத்தை கழுவிக்கொண்டிருக்கும் போதே

'கண்ணு' ...?!!இங்க என்ன பண்ற? 

'பாத்ரம் கழுவறயா ? உங்க அம்மா எங்க போனா'?

'மொதல்ல கையக் கழுவிக்கிட்டு எழுந்திரி' ..

'பச்சப் புள்ளைய வேல செய்ய உட்டிருக்காப் பாரு' ..

'நீ ஏம்மா இந்த வேலையெல்லாம் பாக்குற?'  என்று அலுத்தபடி தன் மேல் துண்டால் அவள் கைகளின் ஈரத்தை அப்பா  துடைத்துவிட்டார்.

'அம்மா ஒண்ணும் சொல்லல.. எனக்குத்தான் ஆசையா இருந்துச்சுப்பா'. என் பிரண்ட்ஸ் எல்லாம் வீட்டு வேலை செய்யறாங்க தெரியுமா? நானும் கத்துக்கறேன்பா...' நந்தினி சிணுங்கிகொண்டிருக்க அவருக்குப் பெருமை.

'போகப் போகக் கத்துக்கலாம்மா ..பாரு பிஞ்சுக் கையி ..பாத்திரம் கழுவினா என்னத்துக்கு ஆகறது'?? கைகளை எடுத்து முகத்தில் ஒற்றிக்கொண்டார்.அவர் அப்படிதான், தன் சந்தோசம், துக்கம் யாவற்றையும் தன் மகளின் கைகளில் கொண்டு சேர்த்துவிடவே விரும்புவார்.அந்தப் பிஞ்சுக் கைகளில் தன் தாய் மடியின் வெம்மையை அவர் அறிந்திருந்தார். அவள் கைகளில் முகம் ஒற்றி நிமிரும் ஒவ்வொரு முறையும் அவர் கண்களில் ஈரம் படர்ந்திருப்பதைத் தவறாமல் பார்க்கமுடியும்.

 பஞ்சாயத்துகளில் அவர் பேசத் தொடங்கினால் யாரும் மறுபேச்சுப் பேசமாட்டார்கள். அவர் பேச்சு அத்தனை கம்பீரமாக, நியாயமாக இருக்கும். ரொம்பக் கோபக்காரர் . அவரின் இந்த மென்மையான மறுபக்கம் ரொம்பவும் ஆச்சர்யம் தான்.

அவர் கையும் அப்படித் தான் ஒருஆணின் கைகள் போல் அல்லாமல் மிக மென்மையாக இருக்கும்.. நந்தினி , 'அம்மா... உங்க கை தான் சொரசொரன்னு இருக்கு, அப்பா கையப் பாருமா எவ்ளோ பஞ்சாட்டம் இருக்கு' என்று வியந்துக் கூறினாள்.

'ஆமாம்.. காடு கரையில எறங்கி வேல பாத்தா  தானே கையி சொரசொரங்கும் . வேலயாளுங்கள ஏவி உட்டுட்டு மைனரு வரப்புலேயே சுத்திவந்தா கையி பின்ன எப்படி இருக்கும்?ஊட்டுக்கு மொதப் பிள்ளைனு உங்க ஆயா ஒரேயடியாச் செல்லம் குடுத்து வளர்த்திருக்கு' - அம்மா அலுத்துக்கொண்டாலும் கூடவே ஒரு பெருமை இழையோடும்.

'தலைவர் இல்லீங்களா ?'  வந்து நின்றிருந்த ஆள் மீண்டும் குரல் கொடுக்க  நந்தினி சுயநினைவுக்கு வந்தாள். மறுபடி அம்மாவைக் கூப்பிட அவள் உள்ளே எட்டிப் பார்க்கவும் அம்மா கூடையோடு வெளியே வரவும் சரியாக இருந்தது.

'சோளசோத்தார் வீட்ல அப்பனுக்கும், மவனுக்கும் தகராறு  .. 

பஞ்சாயத்து வச்சுதான் தீரும் போல'..

'அதான் அய்யாவக் கேட்டுவரசொன்னாங்க' ..வந்தவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

கிராமங்களில் தான்  இந்த மாதிரி விசித்திரமான பட்டைப் பெயர்களைக் கேட்கமுடியும்.  சோளசோத்தார் , செம்மூஞ்சி, கூலமுத்து, காக்கா முடிக்கி என்று சுவாரஸ்யமான பட்டை பெயர்கள் உண்டு. அவர்களின் நிஜப் பெயர்கள் மறைந்துபோய் பட்டைப் பெயர்களே நிலைத்துவிடும். வந்திருந்தவருக்குச் சோளசோத்தாரின் நிஜப்பெயர் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றியது.

"உங்க தலைவரு ஒரு நிலையில இல்ல.நேத்தே மலை ஏறியாச்சு.
அங்க கடைகிட்ட விழுந்துக் கிடந்து அறிவு தான் கூட்டியாந்து விட்டுட்டுப்  போனான்"  அம்மா சாதாரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்கு இதெல்லாம் பழகி விட்டிருந்தது.அவள் தன் துக்கத்தை அடுத்தவர்களிடம் மறைக்க பழகிக்கொண்டாள் .தோட்டத்து வரப்புகளில் மௌனமாய் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள் அறியும் அவள் கண்ணீரை, மண்ணை கொத்தி விதையை இட்டு மூடும்போதே தன் கண்ணீரையும் அதனுள் இட்டு விதைத்து விடுவாள்.

"நேத்துக் காலைல பாத்தேன் நல்லா தானே இருந்தாரு.நாலஞ்சு மாசமா விட்டிருந்தாரு.. மறுக்க ஆரம்பிச்சுட்டாரே."

'சரிமா ..நான் சொல்லிடறேன்' ,வந்தவர் சங்கடத்துடன் கிளம்பத்தொடங்கவும்,

'வேணும்னா சின்னப் பண்ணைகாரக் கூப்பிட்டுப் பாரு'. பேச்சுக்குச்  சொல்லிவைத்தாள் . அவளுக்குத் தெரியும் தன் கணவன் தெளிந்து வரும்வரை அவர்கள் காத்திருப்பார்கள் என்று. மூன்று, நான்கு மாதத்திற்கு ஒருமுறை இப்படிப் போதையில் விழுந்து ஒரு வாரம், பத்துநாள் கழித்து மீண்டு வரும் அவரின் மேல் இந்த ஊர் மக்கள் வைத்த நம்பிக்கையைஒருநாளும் குறைத்துக்கொண்டதே இல்லை. 

'வீட்ட பாத்துக்கப் பாப்பா ..நான் தோட்டத்துக்குப் போயிட்டு வந்துடறேன். அப்பா வந்தா சோறு போடு' . அம்மா போய்விட்டாள். இன்று குச்சிக்காடு களை வெட்டு. பொழுது சாயத்தான் வருவாள்.

நந்தினியின் மனம் மீண்டும் அப்பாவிடம் சென்றது. முன்பொருமுறை இப்படிதான் அப்பா ஒரு வாரமாய் நல்ல குடி .
அப்போது பள்ளியில் வகுப்புத் தொடங்கி இரண்டாவது பீரியட் நடந்துகொண்டிருந்தது.ப்யூன் வந்து நந்தினியைத் தலைமை ஆசிரியர் கூப்பிடுவதாகச் சொன்னார் . 

ஐயோ...நான் ஒரு தப்பும் பண்ணலையே !! எதுக்குக் கூப்பிடறாங்க ??

பள்ளிக்குப் பின்னால் ஒரு சிறு ஓடை இருக்கிறது.ஓடை என்றால் நீர் சலசலத்து ஓடும் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.முன்னொரு காலத்தில் அங்கு நீர் புரண்டு ஓடியதற்கானச் சாட்சியாக மட்டுமே அந்த ஓடை இருந்தது. அந்த ஓடையில் கொஞ்ச தூரம் போனால் ஒரு பெரிய மரம் இருக்கும். அதுஎன்ன மரம் என்றெல்லாம் தெரியாது. பள்ளிப் பிள்ளைகள் அந்த மரத்தடி வரை சென்று விளையாடுவது வழக்கம். சரவணன் சரியான அறுந்த வால். நேற்று பள்ளி முடிந்துக் கிளம்பும் நேரம் அந்த மரத்தடியில் ஒரு சிறு கூட்டத்தைக்  கூட்டி  இருந்தான் அவன். நந்தினியும் என்ன என்று பார்க்கும் ஆவலில் அந்தக் கூட்டத்திற்குள் எட்டிப்பார்த்தாள். அவன் ஒருஓணானை சிறு குச்சியால் அழுத்திப்  பிடித்துக்கொண்டு அதன் வாலை கையால் பிடித்திருந்தான். அதை என்ன பாடுபடுத்தினானோ அது துவண்டுபோய் அரை மயக்கத்தில் இருந்தது. இப்போது அவன் குச்சியை ஓணானின் கழுத்திலிருந்து லேசாக அழுத்தியவாறே கீழ் நோக்கி நகர்த்தவும்  வெள்ளையாய் ஒரு முட்டை வெளியே வந்து விழுந்தது. கூடி இருந்த அத்தனை பிள்ளைகளின் கண்களும் பெரும் ஆச்சர்யத்தில் விரிந்தன. 'ஐயோ ..பாவம்டா விட்டுடுடா' என்று பாதிப்பேரும் ,  'மறுபடி நசுக்குடா முட்டை வருதானுப் பாப்போம்'  என்று ஆவலாய் பாதிப்பேரும் சத்தம் போட்டுக்கொண்டிருக்க ப்யூன் அண்ணன் வந்து கத்தத்தொடங்கினார்.

'ஸ்கூல் விட்டு எவ்ளோ நேரமாச்சு இன்னும் இங்க என்னடாப் பண்றீங்க'??

'உங்களக் காணோம்னு வீட்லர்ந்து ஆள் வரதுக்கா'??

'டேய் சரவணா..நீதான் கூட்டம் கூட்டி வச்சிருக்கியா'?

'இருங்க வாத்தியார்கிட்ட சொல்றேன்.. ஓடுங்கடா வீட்டுக்கு'.. ப்யூன் துரத்திவிடவும் எல்லோரும் ஸ்கூலுக்கு ஓடி பையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடினர்.

ஒருவேளை அதற்குதான் தலைமை ஆசிரியர் கூப்பிடறாரோ?? அப்படினா சரவணனத் தானே முதல்ல கூப்பிடனும்?!! நந்தினிக்குக் குழப்பமாக இருந்தது.நந்தினி யோசனையோடு ப்யூன் பின்னால் நடந்துகொண்டிருந்தாள். தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பு இருந்த இலவமரத்தின் கீழ் அப்பா நிற்பதை நந்தினி தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள். தலைமை ஆசிரியர் அப்பாவிடம் எதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவள் அப்பாவை நெருங்கவும் அவரின் அழுக்கேறிய சட்டையும், வறண்டுக் கலைந்த தலைமயிரும் அவளுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தது. 

'இதோ உங்க பொண்ணு வந்துடுச்சுங்க' ..

'நந்தினி.. அப்பாவ வீட்ல விட்டுட்டு வாம்மா '

தலைமை ஆசிரியர் குரலில் அசௌகர்யம் சேர்ந்திருந்தது.

தலைமை  ஆசிரியருக்கு அப்பாவுடன் நல்ல பழக்கம். அவருக்கு வேறு ஊர். தினமும் பஸ்சில் தான் ஸ்கூல்க்கு வருகிறார். நந்தினியை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வரும்போது தான் அவருடன் அப்பாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. நந்தினி பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அப்பா எல்லா ஆசிரியர்களுக்கும் டீ பார்ட்டி கொடுத்தார். அன்று டீயுடன் சாப்பிட்ட ஏலக்காய் பிஸ்கட் ரொம்பவும் வாசனையாக இருந்ததாக ப்யூன் அண்ணன் அடிக்கடி சொல்லும். 

அப்பா நிற்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தார். நந்தினி எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அப்பா கையைத் தன் கையோடு கோர்த்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள். 

'ஏன்பா ,வீட்ல அம்மா இல்லையா ?'  

'இல்ல கண்ணு'.. உங்கம்மா காட்டுக்குப் போய்ட்டா..நான் உன்னப் பாக்கலாம்னு வந்தேன்'..

'சாப்டீங்கலாப்பா ?..தள்ளாடி ரோட்டின் ஓரத்திற்கு நகரும் அவரை இழுத்துப்  பிடித்தபடி நடந்துகொண்டிருந்த அவள் மிக இயல்பாய் பேசியபடி நடந்துகொண்டிருந்தாள். தெருவின் இருபுறமும் இருந்த வீடுகளில் இருந்து ஒன்றிரண்டு பேர் இவர்களைப்  பார்த்துக்கொண்டிருந்தனர். நந்தினி தன் பேச்சிலே பாதை அமைத்து,அதில் அவரை நடத்திக்கொண்டு போனாள் . வீடு பூட்டி இருந்தது. சாவியை அந்த ஜன்னலில் வைப்பது தான் வழக்கம். நந்தினி ஜன்னலில் கைவிட்டுப் பார்த்தாள். சாவி இருந்தது.

இந்நேரம் மூன்றாவது பீரியட் முடிந்திருக்கும். அப்பா பாதிச் சாப்பிட்டு, பாதிச் சிந்திவைத்த சாப்பாட்டைத் தட்டோடு எடுத்துசென்று பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டுவிட்டு  வந்தாள். அப்பா கட்டிலில் சரிந்திருந்தார். நந்தினி கதவைப் பூட்டிச் சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு, பள்ளி நோக்கி ஓடினாள்.

"நந்தினி விளையாட வரியா?" வாசலில் மலர் நின்றுகொண்டிருந்தாள். நந்தினி மீண்டும் சுயநினைவுக்கு வந்தாள். ஓ ! இன்று சனிக்கிழமை.. சனி , ஞாயிறுகளில் நந்தினி பள்ளித் தோழிகளைச் சேர்த்துக்கொண்டு விளையாடக் கிளம்பிவிடுவாள். வடக்கே பள்ளிக்கூடத்திலிருந்து தெற்கே சுடுகாடு வரை அவர்கள் எல்லை. சுடுகாட்டுக்கு அருகில் விளையாடுவது கொஞ்சம் பயம் தான் என்றபோதும், சுடுகாட்டை ஒட்டித்தான் கவிதாவின் தோட்டம் இருக்கிறது. அங்குப் போனால் கொய்யா மரத்தில் ஏறி விளையாடலாம். புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி வைத்திருக்கிறார்கள். உனக்குப் பத்து தடவை, எனக்குப் பத்து தடவை என்று முறை போட்டுக்கொண்டு எல்லோரும் ஊஞ்சல் ஆடலாம் . சமயத்தில் கவிதா அப்பா இருந்தால் இளநி கூட வெட்டித் தருவார். ஆக, விளையாடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து சுடுகாடு வரை சென்றாயிற்று. அங்குக் கிடந்த மாலை, உடைந்த சட்டி இத்யாதிகளைக் கிளறிப்பார்த்துவிட்டு வந்தது அவர்களின்  உச்சபட்சத் தைரியத்திற்குத் சான்றாக இருக்கிறது. 

மற்ற நாளாக இருந்தால் நந்தினி தான் முதலில் விளையாடக் கிளம்புவாள். இன்று நிலை வேறாக இருப்பதால் 

'நான் வரல மலர்.. அப்பா வருவாங்க'

'நாளைக்கு வரேன் '...அவள் குரல் அவளுக்கே பரிதாபமாக இருந்தது.

மலருக்கும் தெரியும் அவள் வரமாட்டாள் என்று. இருந்தாலும் அவளைக் கூப்பிடாமல் செல்ல மனமின்றி வந்திருந்தாள். 

'சரி அப்போ நாளைக்குக் கண்டிப்பா வரணும்' சொல்லிவிட்டு அவள் ஓடிவிட்டாள்  

நந்தினி மீண்டும் தனியானாள். அவள்  ரோட்டை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அப்பா எப்போதான் குடியை நிறுத்துவாரோ?அவள் கவலையுடன் தன் கைகளைப் பார்த்துவிட்டு நிமிரவும் அப்பா வாசலில் வந்து நின்றார். வாசலில் இருந்து இரண்டு படி ஏறி தான் திண்ணைக்கு வரவேண்டும். அவர் படியேற முடியாமல் தடுமாறவும் நந்தினி அவர் கையைப் பிடிக்கலாம் என எழுந்துப் போனாள். அவரின் அழுக்கேறிய வெள்ளை வேட்டி செத்து விழும் ஒரு பிராணி போல அவர் இடுப்பிலிருந்து நழுவிச்சரிந்து தரையில் விழுந்தது. முதல் படிக்கட்டில் அப்பாவின் முகத்திற்கு நேரே நின்றிருந்த நந்தினி தன் பிஞ்சுக் கையை விசிறி அவரின் கன்னத்தில் ஓங்கி ஒருஅறை  விட்டாள் .படீர் என்ற அந்தச் சத்தத்தில் அவள்  வீடு விதிர்விதிர்த்து நிமிர்ந்தது. 


செ .சுஜாதா.                                                                
நன்றி: கல்கி வார இதழ் (7.7.2013)

Tuesday, April 2, 2013

மரணக்குறிப்பு





நான் அந்த முடிவை எடுத்த நொடி பெரும் விடுதலை  உணர்வை அடைந்திருந்தேன்.சீழ் கட்டிய புண் ஒன்றை கீறி திறந்ததன் ஆசுவாசம்.இதை தற்கொலை என்று சொல்லாதீர்கள்.கொலை என்பது வன்முறை.விருப்பமற்ற ஒருவரிடம் மரணத்தை வலிந்து திணிப்பது.ஆனால் என்னுடைய மரணம் அப்படியானதல்ல.கதறிக்கொண்டு ஓடி ,கண்ணை மூடியபடி  கிணற்றில் விழுவது போல் அல்ல ,ஆடைகளை சாவகாசமாய் களைந்துவிட்டு  , கை உயர்த்தி கூந்தலை கொண்டையாக்கிகொண்டு ,சோப்பும்,மஞ்சள் கிண்ணமுமாக ,திறந்த முதுகில் சூரியனை படரவிட்டபடி ஆற்றில் குளிக்க இறங்கும் ஓர் இளம் பெண்ணை கற்பனை செய்துகொள்ளுங்கள்.எவ்வளவு ரசனையான காட்சி?!!அத்தகைய லாவகத்துடன்,ரசித்து என் மரணத்திற்குள் இறங்க இருக்கிறேன்.இப்போது  சொல்லுங்கள் அது தற்கொலையா?

சிலிண்டரை திறந்து விட்டு,அறை முழுதும் நிரப்பி ,ஒரு தீக்குச்சி உரசலில் வெடித்து சிதறலாமா?என்னை  நவீன ஜான்சி ராணி போல் உணரச்செய்யும் என் பிரியமான இரு சக்கர வாகனத்தில் ஏறிச்சென்று மணலை திருடிக்கொண்டு ஓடி வரும் அந்த லாரியின் முகத்தில் மோதிச்சரியலாமா?இல்லை இல்லை…என் மரணத்தை வரவேற்கும் முறை இதுவல்ல.மிக மென்மையாய் ,ஆர்ப்பாட்டம் ஏதும் இன்றி அணுகவேண்டும்.ம்ம் ..எங்கள் தோட்டத்து பூச்செடிக்கு போடும் மருந்து ஒன்று வீட்டின் கடைகோடி மூலையில் ஒரு அலமாரியில் இருக்கிறது.குழந்தைகள் கைக்கு எட்டிவிட கூடாதென்று அது அங்கு அத்தனை பாதுகாப்பாக இருக்கிறது.அது எப்படி இருக்கும்?என்ன நிறம்?எதையும் இதுவரை அறிய முயன்றதில்லை.அதை குடித்தால் உடனே உயிர் போய்விடுமா?தோட்டக்காரன் செடிக்கு மருந்தடிக்கும் போது அருகில் சென்றதில்லை.மறுநாள் இறந்துகிடக்கும் புழுக்களை குரூரமான சந்தோசத்துடன் எண்ணிபார்த்ததுண்டு.அவை துடி துடித்து இறந்திருக்குமா?இல்லை மலர்கள் உதிர்வது போல இலையிலிருந்து கண்மூடி உதிர்ந்திருக்குமா?எப்படியாயினும் புழுக்களுக்கான விஷம் அது.இந்த வீட்டில் நானும் ஒரு புழு என்பதை உணர்ந்த இந்த கணம் அந்த விஷத்தையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.

நான் ஒரு சொற்க்கிடங்கு.அள்ள அள்ள குறையாத அமுத பாத்திரம் அது.அதிலிருந்து முடிந்தவரை அள்ளி என் வாழ்வில் உடன் வந்தவர்களுக்கு தந்துவிட்டு போக விரும்புகிறேன்.நான் எழுதபோகும் முதல் கடிதம் என் குருவுக்கு.ஆம் குரு தான் அதில் மாற்றம் இல்லை.இதுவே நான் அவருக்கு எழுதப்போகும் கடைசி கடிதம்.இதற்க்கு முன் நிறைய எழுதி இருக்கிறேன்.என் குழப்பங்களை,கஷ்டங்களை,தீர்வுக்கான வழிகளை,மன உளைச்சல்களை என்று எண்ணில் அடங்கா மின் அஞ்சல்கள்,குறுஞ்செய்திகள் அனுப்பி இருக்கிறேன்.ஏதோ கடவுளிடமே நேரடியாக முறையிட்டு விட்டதை போன்றதொரு நிம்மதி அப்போது கிடைக்கும்.கடவுளுக்கு கண் இல்லை,காது இல்லை,வாயும் இல்லை.நம் எந்த புலம்பலும் அவரை எந்த விதத்திலும் பாதிக்காது,எரிச்சல் படுத்தாது.ஆனால் பாவம் அவர் மனிதராயிற்றே!!அவரிடம் முதலில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

என் இரண்டாவது கடிதம் என் தோழிகளுக்கு.எனக்கு எல்லா தோழிகளும் ஒன்று தான்.யாரிடமும் தனிப்பட்ட பகிர்வோ,ரகசியமோ இருந்ததில்லை.என் சந்தோசங்களை,வருத்தங்களை எங்கள் தேநீர் மேஜையில் பகிர்ந்து கொள்ள நான் தவறியதில்லை என் ஆணி வேரில் விழுந்த அடியை தவிர..அவர்களுக்கு என் மரணம் பேரதிர்ச்சியை தரலாம்.எந்நேரமும் வெடிச்சிரிப்பும்,விளையாட்டு பேச்சுமாக இருக்கும் என்னை முழுதும் படிக்க முடியாமல் போனதை எண்ணி மனம் வருந்தலாம்.எந்த இறுக்கமான சூழ்நிலையையும் கட்டவிழ்த்து கலகலப்பாக்கும்  நான் அவர்களை கண்ணீரோடு நிற்கவைக்கப்போவதை எண்ணி வேதனை கொள்கிறேன்.

என் கடைசி கடிதம் என் பிள்ளைகளுக்கு.இங்கு தான் நான் சற்று கவனமாக இருக்கவேண்டும்.அடர்ந்து வீசும் முலைப்பாலின் மணத்திற்கு இருக்கும் வல்லமையை நான் பல நேரங்களில் கண்டிருக்கிறேன்.அது எந்நேரமும் என் முடிவை தகர்த்துவிடலாம்.முடிச்சிடப்பட்ட என் கர்ப்ப பை எந்த நேரமும் என்னை உள்ளிழுத்து சிறை படுத்தலாம்.என் தாய்மைக்கு நான் சமாதானம் சொல்லியாகவேண்டும்.இங்கு நான் சற்று கடுமையாகவே பதில் உரைக்கவேண்டும்.என் இருப்பு அவர்களையும் ஒரு புழுவாக மாற்றக்கூடும்.அவர்களுக்கேனும் முதுகெலும்பு முளைக்கவேண்டும்.அதற்க்கு அவர்கள் பற்றுகோலை இழந்தாகவேண்டும்.தடுமாறி,தளர்ந்து பின் முளைத்து கிளை பரப்புவார்கள்.என் இறுதி நம்பிக்கையை அவர்களிடம் தான் விட்டு செல்கிறேன்.அவர்கள் வாழ்வார்கள்.ஓடு உடைத்து வெளியேறும் வலி அறிந்தால் மட்டுமே பறவைக்கு வானம் சொந்தம்.வலி அறியாமல் என்னை வளர்த்துவிட்ட என் தாயை நான் நினைத்துக்கொள்கிறேன்.அம்மா,என்னை மன்னியுங்கள்..

இந்த வீடு என் மரணத்தை எப்படி எதிர்கொள்ளும்?சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்றுவிட்ட வேலைக்காரியால் எப்படி வீட்டின் அன்றாட வேலைகள் தடுமாறிப்போகுமோ அப்படி கொஞ்சம் தடுமாறித்தான் போகும்.ஆனாலும் சீக்கிரமாக சுதாரித்துக்கொள்ளும்.ஆம்,”கூரை மேல் சோற்றை விட்டெறிந்தால் ஆயிரம் காக்கா”என்ற வாக்கியத்தை என் வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் அறிந்து வைத்திருக்கிறது.சோறு உள்ளவரை காக்கைகளுக்கும்  பஞ்சம் இல்லை.

எனக்கு மெலிதாக ஒரு அச்சம் வருகிறது.இப்படியே பேசி பேசியே என் துக்கத்தை நான் கடந்துவிடுவேனோ?!என் பயத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது.என் நான்காவது வயதில் என் அம்மா இதே முடிவை எடுத்திருந்தார்.நானும்,அண்ணனும் விரும்பி கேட்ட திரைப்படம் ஒன்றிற்கு கடைசி கடைசியாக அழைத்து சென்றுவிட்டு வந்து பின் சாகலாம் என்ற முடிவோடு எங்களை அழைத்துச்சென்றார்.உருளைக்கிழங்கு போண்டாவை ருசித்தபடி நாங்கள் ரசித்து பார்த்த அந்த படம் முழு நீள நகைச்சுவை திரைப்படம்.விழுந்து விழுந்து சிரித்து,படம் முடிந்து வெளியே வரும்போது அவள் துக்கம் முழுதும் கரைந்து போயிருந்ததையும்,குடிகார புருசனோடு முடிந்தவரை மல்லுக்கட்டி வாழ்ந்துவிடுவது என்ற முடிவோடு வீடுவந்து சேர்ந்ததையும் அம்மா பின்னாளில் எனக்கு சொல்லியிருக்கிறார்.ம்ம்,பார்ப்போம்..

பெண்களின் கனவுக்குள் நுழைந்து பார்த்தால் நீங்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாக நேரிடும்.அத்தனை சட்ட திட்டங்களையும்,கட்டமைப்புகளையும் உடைத்து நொறுக்கி  அதன் மேல் எழுந்து நின்றிருக்கும் அவள் கனவுக்கோட்டை.அதற்காக நீங்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை.அவர்களுக்கு  கனவு காண மட்டுமே தெரியும்.அதை நடைமுறைப்படுத்திக்காட்டும் பரிணாம வளர்ச்சியை அவர்கள் இன்னும் எட்டவில்லை.எனவே நீங்கள் அவர்களை கையாளும் பாணியில் அவசர மாற்றம் ஏதும் செய்யத்தேவை இல்லை.அலை கரை கடக்காதவரை நீங்கள் நடை பயிற்சி மேற்கொள்ளலாம்,குந்தி மலம் கழிக்கலாம்,போதையோடு புரண்டு கிடக்கலாம்,புணர்ந்து கிடக்கலாம்.பாதகம் இல்லை.  நான் சொல்லவந்தது இதுவல்ல.எல்லா பெண்ணும் செயல்படுத்திக்காட்டப்படாத தற்கொலை கனவு ஒன்றை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டிருப்பாள்.தற்காலிக வலி நிவாரணியாய் அந்தக்கனவுக்குள் சற்று இளைப்பாறி வந்திருப்பாள்.

இறுதியாக “என் மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல”என்ற கடிதம் ஒன்றை எழுதி வைக்கவேண்டும்.ஆமாம்,நான் கொள்ளும் இன்பம்,துன்பம் யாவற்றிற்கும் நான் மட்டுமே பொறுப்பாகமுடியும்.யாரையும் கை நீட்டி காரணமாக்குவது சுத்த பேடித்தனம்.மரண வாசலில் நான் ஒரு புழு அல்ல.உணர்வும்,உதிரமும் ஆகிய மனிதன்.’மனுஷி’ என்று சொல்ல வேண்டுமோ?வாழ்க்கையில் தான் ஆண்,பெண் என்ற பேதம் எல்லாம்..மரணத்தின் முன் அத்தனையும் வெறும் உடல்கள்  தான்.இங்காவது நான் நானாக இருக்க விரும்புகிறேன்.என் இந்த முடிவேனும் என் சுயவிருப்பத்தோடு,தனிச்சையாக ,நிர்பந்தங்கள் ஏதுமற்றதாய் இருக்க விழைகிறேன்.ஆம், என் முடிவுக்கு நானே பொறுப்பு.

என் வாழ்வில் வந்து போன அத்தனை பேரையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.நான் கடந்து வந்த அத்துனை சம்பவங்களையும் பாரபட்சம் இன்றி ஒரு முறை புரட்டிப்பார்க்கிறேன்.ஆஹா!!அத்துனை சம்பவங்களும் ஒன்று போல் தெரிகிறதே?! ‘ விடுபடல் ‘ என்பது இது தானா?எந்த உணர்வுகளும் கலக்காமல் தெளிந்த காட்சிகளாக அனைத்தையும் பார்க்கமுடிவது எவ்வளவு லேசாக,பாரமற்று இருக்கிறது?!!கடவுள் இப்படி தான் இப்பூமியை பார்ப்பாரோ?!ஆம்,அப்படி தான் இருக்கவேண்டும்,இல்லை என்றால் அவர் இந்நேரம் பைத்தியமாகி இருப்பார்.

சரி,நான்  இறுதியாக உங்களுக்கு ஒன்றை சொல்லிவிட்டு விடை பெறுகிறேன்.நான் எழுதி எழுதியே என் துக்கத்திலிருந்து மீண்டிருக்கவேண்டும் என்றும்,நான் என் முடிவை கைவிட்டு என் அம்மாவை போல்  மீண்டும் வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என்றும் வருந்தி இறைவனை பிரார்த்திப்பவரா நீங்கள்?மன்னிக்கவும்.நீங்கள் இவ்வுலகில் வாழும் தகுதியை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டிஇருக்கிறது.மாறாக இதை மற்றுமொரு செய்தியாக மட்டுமே கடந்து போகிறவராகவோ அல்லது என் முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே உள்ளவராகவோ நீங்கள் இருக்கிறீர்களா?..வாழ்த்துக்கள்!!! .


                                                    *********************
நன்றி:மலைகள்.காம்