இன்று அம்மாவின் புடவையை உடுத்தியிருந்தேன். இதுவே முதல் முறை. இந்தப்புடவை அம்மாவுக்கு நான் எடுத்துக்கொடுத்தது தான். சின்னபிள்ளைங்க கட்டுற மாதிரி இருக்கு என்று சொல்லி ஒரு முறை மட்டுமே என் திருப்திக்காக கட்டியிருந்துவிட்டு பின் அதை பீரோவில் மடித்து வைத்தது தான்.
சின்ன வயசில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நானும்,தங்கையும் அம்மாவின் புடவையைக் கட்டிப்பார்த்து பெரியமனுஷி ஆகிவிட முயன்று கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அம்மாவின் புடவை அத்தனை சந்தோசத்தைக் கொடுத்தது. இனம் புரியாத ஒரு கவர்ச்சி அந்தப் புடவைக்கு உண்டு.
இன்று நான் உடுத்தியிருந்த அம்மாவின் புடவை பெரும் பாராங்கல் போல் என்னை நசுக்கிக்கொண்டு இருந்தது. இதோ பள்ளியிலிருந்து வந்து அவசரமாக வேறு உடைக்கு மாறும் வரை மூச்சு திணறிப் போயிற்று. இதோ இதை எழுதி முடிக்கையில் நான் இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பேன்.
என் நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மா விதவிதமாக புடவை உடுத்தியோ , ஆசை ஆசையாக தன்னை அலங்கரித்துக்கொண்டோ நான் பார்த்ததில்லை. எளிய புடவை, இரண்டே கண்ணி பூ என்பதே அவரின் அதிகபட்ச அலங்காரம். பொட்டு மட்டும் ஸ்டிக்கர் பொட்டுக்கு பதிலாக குங்குமத்தை நெற்றியில் வைத்திருப்பார். குங்குமம் லேசாக மூக்கின் மேல் சிந்தியிருக்கும். தலை நிறைய பூவும், கண்களில் எழுதிய மையும், கையில் வாட்ச்சுமாக தனது திருமணப் போட்டோவில் அம்மா எவ்வளவு அழகாக இருந்தார்?!
அம்மாவை கலர் புடவையில் பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்பா இறந்த அன்று பிறந்த வீட்டிலிருந்து அவருக்கு தரப்பட்ட வெள்ளைப் புடவையை உடுத்திக்கொண்டு இறுதியாக அப்பாவின் தலைமாட்டில் வந்து அமர்ந்து அழுதார். அதற்குப்பின் என்றுமே அம்மாவை வண்ணங்களுடன் நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும், கெஞ்சிப் பார்த்தும் கலர் புடவைக் கட்ட மறுத்துவிட்டார். தயவு செஞ்சு என்ன கட்டாயப்படுத்தாதீங்க என்று சொல்லி ,தோடு முதற்கொண்டு அத்தனையும் இழந்து ,வெள்ளை உடைக்கு மாறி விட்டார்.
இப்போதெல்லாம் கணவனை இழந்தவர்கள் வெள்ளை ஆடை உடுத்துவது குறைந்து வருகிறது என்றாலும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இவை அத்தனை சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இன்னும் இருக்கிறது. வண்ண உடைகளை துறக்க மறுப்பவர்கள் கணவன் மேல் அன்பற்றவர்கள் என்றும், பேராசை பிடித்தவர்களாகவும், கணவனின் மரணத்திற்கு கவலைப் படாதவர்கள் என்றுமே பார்க்கப்படுகிறார்கள்.ஒரு மெல்லிய சந்தேகம் அவர்கள் தலைக்கு மேல் எப்போதும் வட்டமிட்டபடி இருக்கிறது.
போதாதக் குறைக்கு இவள் கலர் புடவைக் கட்டினால் அது இவள் கூடப் பிறந்தவனுக்கு ( அண்ணன், தம்பி என்று ஆண்களுக்கு மட்டும்) ஆகாதென்று வேறு நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். என் மாமனார் இறந்தபோது என் மாமியார், எனக்கிருக்கறது ஒத்த பொறந்தவன். அவன் நல்லா இருக்கறதவிட எனக்கு கலர் புடவை முக்கியமா என்று சொல்லி இறப்புக்கு வந்திருந்த சொந்தக்காரர்களிடமே அத்தனைப் புடவையையும் ஆளுக்கு ரெண்டாகப் பிரித்துக் கொடுத்தது நினைவில் வருகிறது. ஆக வெள்ளைப் புடவை வேண்டாம் என்றால், கூடப்பிறந்தவர்கள் மேலும் பாசமற்ற ,சுயநலக் காரியாக அவள் அறியப்படுவாள்.
பூமியின் நில அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மாறி வருவதைப்போல , பெண்ணின் முன்னேற்றம், நகர்வு மிக மிக மெதுவா நடந்துகொண்டிருக்கிறது. இது மிகுந்த அலுப்பைத்தருகிறது என்றாலும் நம்பிக்கையோடு தலைமுறைகளைத் தாண்டி வந்துகொண்டிருக்கிறோம். பின்னோக்கி இழுக்கும் எத்தனையோ பூட்டப்பட்ட விலங்குகளை சுமந்துகொண்டு தான் பெண் இத்தனை மலர்ச்சியோடு , தாய்மை குன்றாது வலம்வருகிறாள்.
******
No comments:
Post a Comment