Sunday, October 2, 2016

வகுப்பில் நெருங்கிய தோழன், தோழிகள் என்று சில ஜோடிகள் உண்டு. நிதீஷ் + மோனிஷ் , சோனாக்ஷி + ப்ரியான்ஷு , குருசரண் + ச்சார்வி. இவர்களை எப்படி பிரித்து அமரவைத்தாலும் அடுத்த அரைமணி நேரத்தில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். இதில் குருசரண், ச்சார்வி மட்டும் வெவ்வேறு பாலினம் என்பதால் சுவாரஸ்யம் கூடுதல்.

பள்ளிக்கு வந்த புதிதில் குரு தான் ச்சார்வி மேல் ரொம்ப பிரியமாக இருப்பான். அவள் ரொம்ப பந்தா பண்ணுபவளாக, அவனை பெரிதாக கவனத்தில் கொள்ளாதவளாக இருப்பாள். ஒரு முறை குரு பென்சில் முனை உடைந்துவிட்டதென்று ஷார்ப் பண்ண எழுந்தான். இவள் உடனே என் பென்சிலையும் ஷார்ப் பண்ணிட்டு வா என்று அமர்ந்தபடி கட்டளை இட்டாள். இவன் உடனே, இரு என்னோட பென்சில ஷார்ப் பண்ணிட்டு வந்து உன்னோடத ஷார்ப் பண்றேன் அப்படின்னு சொன்னதும் இவ முகத்த பாக்கணும், ம்ஹ்ம் முதல்ல என் பென்சில ஷார்ப் பண்ணிக்கொடு, இல்லன போ பேசமாட்டேன் என்று சிணுங்கிக்கொண்டு சொல்கிறாள். இருவரும் முதல் பெஞ்ச் ஆகையால் இந்த உரையாடல் , முக பாவனை எல்லாம் துல்லியமாக கண்டு நான் ரசித்துக்கொண்டிருந்தேன். அவன் சரி கொடு என்று அவள் பென்சிலை வாங்கி ஷார்ப் பண்ணிக்கொடுத்ததும் வேக வேகமாக அவனுக்கு முன்னால் எழுதி முடித்து நான் தான் first என்று நோட்டுடன் என்னிடம் ஓடி வந்தாள். இதுவே குரு முதலில் எழுதி முடித்தால் அவளுக்காக காத்திருந்து ரெண்டுபேரும் சேர்ந்து தான் வருவார்கள். நான் கூட அவனிடம் சொல்வேன், அவ உனக்காக வெயிட் பண்றாளா ? இல்லதானே ,அப்புறம் நீ மட்டும் ஏண்டா வெயிட் பண்ற என்று. அதற்கு அவனிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வரும். மேம், சார்வி சாப்பிடாம பாக்ஸ் ஐ மூடிட்டா என்று ஒரு முறை தீரஜ் என்னிடம் சொன்னபோது, இந்த குரு அவனை முறைத்துப் பார்த்து, உன்கூட காய் என்று செய்கை செய்தான். அவளை அப்படி பாதுகாப்பாக பார்த்துக்கொள்வான். ஆனா அவ பெருசா அலட்டிக்க மாட்டா.

இதெல்லாம் வருடத்தின் ஆரம்ப மாதங்களில் தான். தற்போது ஒரு நாள் குருவையும் சார்வியையும் வேறு வேறு இடத்தில் உட்கார வைத்திருந்தேன். பிள்ளைகள் எல்லாம் பழங்களின் படத்திற்கு கலர் அடித்து ஒவ்வொருவராக பேப்பரை என் மேசை மேல் வந்து வைத்துக்கொண்டிருந்தார்கள். குருவுக்கு கலர் அடிப்பதே பிடிக்காத வேலை.எப்பொழுதும் மெதுவாகத்தான் செய்வான், பலமுறை பாதியிலேயே நேரமில்லாமல் பேப்பரை வாங்கிவிடுவேன். அன்றும் அப்படி தான் முடிக்காத வெகு சிலரோடு அவனும் இருக்க, இந்த சார்வியும் குனிந்து கலர் அடித்தபடியே இருக்கவும் , இவளுமா இன்னும் முடிக்கவில்லை? என்று ஆச்சர்யத்துடன் அருகில் சென்று பார்க்கிறேன், கலர் அடித்து முடித்துவிட்டு சும்மாவாச்சும் கலர் அடிப்பது போல பென்சிலை வைத்துக்கொண்டு பாவனை செய்துகொண்டிருக்கிறாள்.

இப்பொழுதெல்லாம் அவன் கோவப்படுகிறான், அவளைப் பற்றி என்னிடம் புகார் சொல்கிறான், ஆனால் அவள் நேர் மாறாக மாறிவிட்டாள். எனினும் இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். இன்று குரு, வாயில் ரப்பரை போட்டு சப்பிக்கொண்டிருந்தான். நான் கோவமாக அவனை அருகில் அழைத்து, எப்ப பாரு எதையாவது வாய்ல கடுச்சிகிட்டே இருக்க, இரு வாய்க்கு ஸ்டேப்லர் போட்டு மூடுறேன்னு சொல்லி, இரண்டு உதட்டையும் பிடித்து இனி இப்படி செய்வியா? செய்வியா ? என்று கேட்டபடி ஸ்டேப்ளரை உதட்டருகில் கொண்டு சென்றேன். அதற்குள் பிள்ளைகள் சிலரும் கூடி விட்டனர். குரு பயந்தபடி செய்யமாட்டேன் ,செய்யமாட்டேன் என்கிறான். பார்க்கிறேன், இந்த சார்வியும், இனி அப்படி செய்யமாட்டான் ,செய்யமாட்டான் என்று அவளும் என் கை அருகில் நின்று தவித்தபடி கெஞ்சிக்கொண்டிருக்கிறாள். அவள் கண்ணெல்லாம் கலங்கி விட்டது. அந்த காட்சியை கண்ட நொடி என் மனம் அடைந்த உணர்வை எழுத்தில் சொல்லவே முடியாது. அவன் வாய்க்கு ஸ்டேப்ளர் போட்டா உனக்கு வலிக்குமா என்கிறேன் ,சார்வி ஆமாம் என்று கலங்கிய கண்ணும், சிரித்த முகமுமாய் சொல்கிறாள். அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, பின், எனக்கு முத்தம் ,எனக்கு முத்தம் என்று ஓடி வந்த எல்லா பிள்ளைகளுக்கும் முத்தம் தந்து.... வாழ்க்கை மிக அழகானது.

ஒரு பெண் நேசிக்கத்தொடங்கிவிட்டால் அதன் எல்லை அளவிட முடியாதது. பேரலையென அடித்துச் சுருட்டி தன்னுள் புதைத்துக்கொள்ளும் மூர்க்கமும் அதுவே, பொத்தி அணைத்து அடைகாக்கும் கதகதப்பும் அதுவே. மேற்சொன்ன நிகழ்வுகளை குரு, சார்வியின் குழந்தை மனம் மறந்து போகும். ஆனால் எனக்கு, கடவுள் தோன்றி மறைந்த கணமென இக்காட்சி நினைவில் ஒளி கூட்டும்.

*****

No comments:

Post a Comment