Saturday, April 9, 2016

குரல்களின் மேல் எனக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. ஒரு நபரிடம் முதல் முறை பேசுகையில் அவர் குரல் எப்படி இருக்கிறது என்பதில் தான் என் முதல் கவனம். கனமாக இருப்பவர்களின் மென்மையான குரல்கள், மெலிந்து இருப்பவர்களின் கனமான குரல்கள், குரல் மூலமாகவே தனக்கு கம்பீரம் கூட்டிக்கொள்ளும் மனிதர்கள் என்று குரல்களில் தான் எத்தனை சுவாரஸ்யம்?!

நான் பேசுகையில், பாடுகையில் என் காதில் விழும் என் குரல் எனக்கு மிகப் பிடிக்கும். அந்த நம்பிக்கை உடைந்துபோனது எப்போது ? என் குரலைப் பதிவு செய்து நானே முதன் முதலாகக் கேட்ட அந்த நாளில் நான் பெரும் ஏமாற்றமும் துக்கமும் அடைந்தேன். அனேகமாக அன்றிலிருந்து தான் நான் குரல்களின் மேல் கவனம் கொள்ள ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன்.

அம்மா தொலைபேசில் அழைக்கையில்,' நேத்து தானம்மா பேசினோம் ? ஏதும் விஷயம் இருக்கா? என்று கேட்டால், இல்ல சுஜி பொக்குனு இருந்துச்சு,
உன் குரல் கேட்டா தேவலாம்னு தோணுச்சு அதான் கூப்டேன் என்பார். எது இந்த குரலா? ஆமாம் பெரிய சுசீலா குரல் என்று கிண்டல் அடிப்பேன். மனதுக்கு இணக்கமானவர்களின் குரல் எப்போதும் இனிமையாகவே ஒலிக்கிறது. உண்மையில் வெறும் குரலை மட்டுமே நம்பிக்கையாக பற்றிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் தான் எத்தனை பேர்! உறவினர் ஒருவர், மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து 8 வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்தார். அடிக்கடி எங்களுக்கு தொலைபேசுவார். நல்லா இருக்கீங்களா? கிளைமேட் எப்படி இருக்கு? எப்போ இந்தியா வரீங்க என்பதை தாண்டி அவரிடம் பேச எங்களுக்கு எதுவுமே இல்லாதபோதும் அவர் பேசிக்கொண்டே இருப்பார். தண்ணீருக்குள் மூழ்கி விட்டவனின் கைக்கு அகப்பட்ட நீண்ட குழாய் அது. அவன் சுவாசிக்க அது ஒன்றே வழி. இந்த குரல்களும் அப்படித்தான்.அது பெரும் ஆசுவாசம்.

பிரசவ அறையில் கண்கள் மூடப்பட்ட நிலையில் நான் கேட்ட ஸ்ருதியின் முதல் அழுகை. ஆணா பெண்ணா என்று அடையாளம் இடப்படாத புத்தம் புது குரல். என்னை வந்து தீண்டிய என் இன்னொரு குரல்! இந்த குரல்கள் தான் என்ன ஒரு அற்புதம்!!

சில வார்த்தைகள் சில குறிப்பிட்ட குரல்களுக்கு மட்டுமே சொந்தமாகிப்போகிறது.அந்த வார்த்தைகளை எங்கு, எப்பொழுது கேட்டாலும் அந்த குறிப்பிட்ட குரல்கள் தான் நினைவில் வரும். வாசனையைப் போலவே சில வார்த்தைகளும் சில குறிப்பிட்ட மனிதர்களுக்கானது.

நாம் திரும்ப கேட்கவே வழி இல்லாமல் போன குரல்கள் தான் எத்தனை எத்தனை ? அன்பும், கருணையும் குழையும் அப்பாவின் அந்த கனமானக் குரலை இனி ஒரு போதும் கேட்கவே முடியாது என்பதை விட பேரிழப்பு வேறு என்னவாக இருக்கமுடியும்? சொல்றா கண்ணு ... பாப்பா .. என்று அழைக்கும் அக்குரலுக்காக இப்பவும் காத்திருக்கிறேன்.

*****

No comments:

Post a Comment