Saturday, April 2, 2016





ஆட்டிசம்:

புதிய பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்த முதல் நாள். புது இடம் ,சூழ்நிலைக்கு பயந்து குழந்தைகள் எல்லாம் அழுதுகொண்டிருக்க ஒரு பையன் மட்டும் தரையில் உருண்டுகொண்டும், சத்தமாக ஒலி எழுப்பிக்கொண்டும், வகுப்பை விட்டு வெளியில் ஓடிக்கொண்டும் இருந்தான். எனக்கும் அப்பள்ளியும், சூழ்நிலையும் புதுசு ஆகையால் நானே கொஞ்சம் பதட்டத்தில் இருக்கையில் இவன் இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்க அவனை எப்படி அமைதிப் படுத்தி , ஒரு இடத்தில் அமரவைப்பதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன். எல்லா பிள்ளைகளிலும் அவன் மட்டும் தனித்து தெரிந்தான். என்னவோ பிரச்சனை என்று மட்டும் புரிந்திருக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் அப்படியே சென்றது. ஒரு வழியாக வகுப்புகள் செட்டில் ஆகி பாடங்கள் தொடங்குகையில் இவனைப்பற்றி தலைமை ஆசிரியரிடம் சொல்லி , பள்ளி கவுன்சிலரிடம் அவன் பெற்றோர் சகிதம் அழைத்துச் சென்றேன். 


அங்கு பெற்றோர்களிடம் பேசியபின் எனக்கும் அவனை எப்படிக் கையாள்வது என்று சில டிப்ஸ் வழங்கப்பட்டது. அதன்படி அவனை ஓரளவு கட்டுக்குள் வைக்கமுடிந்தது. வருடம் முடிந்துவிட்டது ஆனாலும் இன்றுவரை அவனுக்கு மருத்துவரின் உதவியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது என்பதை பெற்றோர்கள் உணரவில்லை, பள்ளியும் அதை வலியுறுத்தவில்லை. பெரும்பாலும் பள்ளிகளைப் பொறுத்தவரை ஒரு மாணவன் என்பவன் ஒரு அட்மிசன் எண்ணிக்கை தான். உன் குழந்தை இப்படி இருக்கிறான் , இவ்வளவு தான் இவனால் முடிகிறது என்பதை பெற்றோருக்கு தெரிவிப்பதோடு வேலை முடிகிறது. ஒரு விதையை நட்டுவளர்ப்பது போல பிள்ளையின் ஒவ்வொரு கட்டத்தையும் கண்ணும் கருத்துமாக கவனித்து பராமரிப்பது பெற்றோர்கள் கையில் இருக்கிறது. 

வகுப்பிற்கு இரண்டு,மூன்றென ஆட்டிசம் , கற்றல் குறைபாடு, ஹைப்பர் என்று நாம்  சென்ற தலைமுறை வரைக் கேட்டறிந்திடாத குறைபாடுகளுடன் பிள்ளைகள் இருக்கிறார்கள். பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இச்சின்ன குறைபாட்டை உணர்ந்து, அதை களைவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் அதை மறைக்க முயல்பவர்களாக, போகப் போக சரியாகிவிடும் என்று விட்டுவிடுபவர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு தேவை தனி கவனமும், பயிற்சியும்(individual attention and practice).
கிட்டத்தட்ட 30 குழந்தைகள் இருக்கும் வகுப்பில் ஒரு பிள்ளை மேல் மட்டும் தனிகவனமும், வேறு வகையான கற்பித்தல் முறையும் என்பது நடைமுறையில் சாத்தியப்படாதது. மேலும் ஆசிரியருக்குமே இந்தக் குறைபாடுகள் பற்றிய அறிதல் இருப்பதில்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்குழந்தைகள் புறக்கணிப்பிற்கும், கேலிக்கும் ஆளாகின்றனர்.

என் நெருங்கிய தோழியின் மகன் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளானவன். அவன் பிரச்சனை அறிந்தே PreKG, LKG, UKG வரை படிக்க அனுமதித்த பள்ளி, ஒன்றாம் வகுப்பில் அவனால் மற்றபிள்ளைகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து படிக்கமுடியதென்று சொல்லி UKG யிலேயே மீண்டும் தொடரச் சொன்னார்கள். சரி  அடுத்த வருடத்திற்குள் அவனை ஒன்றாம் வகுப்பில் மற்றவர்களோடு போட்டிபோட தயார்படுத்திவிடுவார்களா, அதற்காக சிறப்பு கவனம் அவன் மேல் செலுத்தப் போகிறார்களா என்றால் அதுவும் இல்லை. 

இன்று அவன் வேறு பள்ளியில் படிக்கிறான். மற்றபிள்ளைகளின் புறக்கணிப்பு , ஆட்டிசம் பற்றிய எந்த புரிதலுமற்ற ஆசிரியை என்று பல தடைகளைத் தாண்டி பெற்றோரின் தனி கவனத்திலும், பயிற்சியிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறான். 

குழந்தைகள் அனைவருமே கடவுளுக்குச் சமம். எந்தத் திறமையும் அற்றக் குழந்தை என்று யாருமே இல்லை. அவர்களின் திறனைக் கண்டறிய முடியாத குருடர்கள் நாம் தான். இந்த இணைய யுகம் அவர்களை மேலும் மேலும் தனிமைக்கும், புறக்கணிப்பிற்கும் ஆளாக்கி வருகின்ற நிலையில் கிழமைகளை வெறும் விழிப்புணர்வு தினமாகக் கடக்காமல் கொஞ்சம் நம் முதுகெழும்பை வளைத்து குனிந்து குழந்தைகளின் சிறிய உலகிற்குள் நுழைந்து கவனிக்க வேண்டும். நாம் காட்டும் அக்கறையிலும் பராமரிப்பிலுமே இருக்கிறது ஒரு விதை வேர் பிடித்து விருட்சமாவது. 

*******

No comments:

Post a Comment