நம் இருவருக்குமிடையில்
நிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்
அத்தனை உறுதியானதொன்றும் இல்லை தான்
ஆயினும்
நாம் அதைக் கடக்கவோ உடைக்கவோ
முயன்றதே இல்லை
அச்சுவர் தாண்டித் தாழப்பறக்கும்
என் மனப்பறவை மிகச்சரியாய்
உன் தோள் அமர்ந்து கூவுகிறது
உன் நெஞ்சுக்குழியில் சுடரும்
தீபத்தின் வெம்மையை என் காதுமடல்கள்
ஒரு நாளும் தவறவிட்டதே இல்லை
துவண்டு விழும் நம் கண்களின்
முதல் துளிக் கண்ணீர்
என்றுமே தரை தொட்டதில்லை
என் திசையெங்கும் நீ
வனம் பரப்பி வைத்திருக்கிறாய்
உன் பாதை தோறும் நான்
முள் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன்
நெருங்கி நிற்கும் அவ்விருகண்கள்
இடையில் கிடக்கும் நாசி பற்றி
கவலையுறுவதே இல்லை
****
நன்றி:புதுவிசை இதழ்-38
No comments:
Post a Comment