Saturday, June 22, 2013

ஆலிலைக் கண்ணன் போல நீயெனக்கு





நம் ஆதிக்கனவின் அரூபமாய்
வான் முட்டி விம்மும் கோபுரக்கலசம்

நந்தவனத்தில் குழைந்தோடும்
அந்த ஜோடி அணில்களின் பின்னே
ஓடித்தவிக்கும்
எனது விழிகள்
செவ்வரி அணில்கள்

அனிச்சையாய் மலர் பறிக்கும்
வெளிறிய முல்லை விரல்கள்
நிரப்பப்படாத என்பூக்கூடையை
நிரப்ப முயன்று தோற்கிறது

கூடைக்குள் புரண்டுச் சிரிக்கும்
அச்செந்நிற அரளி மலர்கள்
நம் கருவறைக் காலமிச்சங்களை
கண்சிமிட்டிக் கதைக்கின்றன

ஈரம் படர்ந்தப் பிரகாரம்
தன்
பனித்த கரங்களால்
காத்துக் காய்ப்பேறிய
என் பாதங்களை ஆசுவாசம் செய்தபடி
உடன் வருகிறது

என் ஆலிலைக் கண்ணனின்
குழலோசைத் தீண்டி
சுடர் விடக்காத்திருக்கும்
திரி தாங்கி ஓர்கல்விளக்கு.

*******
நன்றி: புதுவிசை இதழ்-38. 


No comments:

Post a Comment