பொதுவாக, ஒருஆணுக்குள் கொஞ்சம் பெண்ணும், ஒரு பெண்ணுக்குள் கொஞ்சம் ஆணும் இருக்கிறான். அது பல தருணங்களில் நம்மை மீறி வெளிப்பட்டுவிடுவதுண்டு. உடல் ரீதியாக ஆண் முரட்டுத்தனமாகவும், பெண் சற்று மென்மையானவளாகவும் இருப்பது பொதுவானது என்றபோதும் மிகுந்த துணிச்சலான பெண்களையும், பயந்த மென்மையான ஆண்களையும் நாம் பார்க்காமலில்லை. ஆண் மட்டுமே செய்யமுடியும் என்றிருந்த வேலைகளைப் பெண்களும் இன்று செய்ய வந்துவிட்டனர். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமத்திலும் ஏர் ஓட்டுவது, மரம் ஏறுவது என்று பெண்கள் எல்லா வேலைகளையும் ஒருகை பார்க்கிறார்கள். ஆக முழு ஆண், முழு பெண் என்றும் யாரும் இங்கு இல்லை.
மூன்றாம் பாலினம் என்று சொல்லப்படும் அரவாணிகள் நம்மைக் காட்டிலும் கொஞ்சம் அதிக சதவிகிதம் எதிர்பாலினக் கலப்பு உள்ளவர்கள் அவ்வளவே. இந்த அறிதல் நம் அனைவருக்கும் ஓரளவு உண்டு என்றபோதும் ஏனோ நம்மால் அவர்களை சகஜமாகப் பாவிக்கமுடிவதில்லை. நமக்கு அவர்கள் மீதான கருணை என்பது 1,2 ரூபாயோடு முடிந்துவிடுகிறது.
நான் அரவாணிகளைப் பிச்சை எடுப்பவர்களாக மட்டுமே பார்த்திருக்கிறேன். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களும் கூட என்பது கேள்விப்பட்ட ஒரு செய்தி. மற்றபடி அவர்களை வேறு எந்தப் பணியிலும் நான் கண்டதே இல்லை. இவர்களுக்கு வேறு வாய்ப்புகளே இல்லையா? நர்த்தகி,கல்கி,வித்யா என்று வெகு சிலரே மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு சமூகத்தில் தங்களுக்கான இடத்தைக் கைப்பற்றி இருக்கிறார்கள். தங்கள் அடையாளங்களை நம்பிக்கையோடு ஆழப் பதித்திருக்கிறார்கள். இவர்களைப் போல அல்லாமல் படிப்பறிவு, போராட்டக் குணம், தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, தங்கள் இருப்பு சார்ந்த அறிதல் ஏதும் அற்ற வெகு எளிய நிலையில் உள்ள அரவாணிகள் கை ஏந்தி நிற்பதையே தங்கள் வாழ்வாக முடிவுசெய்துவிட்டவர்களா???
நிச்சயமாக இல்லை. அரவாணிகள் இது தான் தங்கள் தலையெழுத்து என்று முடிவுக்கு வராமல் தங்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைத்து முயன்றால் அவர்களின் நல்வாழ்வு அவர்கள் கையில். அப்படி ஒரு நம்பிக்கையின் சிறு விதையாக மூன்றாம்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். படிப்பறிவோ, இன்னபிற சிறப்புத் தகுதிகளோ ஏதும் அற்ற , தன் சுயத்தின் மீது மிகுந்த நம்பிக்கை மட்டுமே கொண்டவர். அந்த நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தன் வாழ்வை வெகு எளிமையாக, அதே நேரம் கவுரவமாக, சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்.
இவர் பெயர் "குமாரி". பெங்களூரில் ஒருஅம்மன் கோவில் வாசலில் பூ விற்றுக்கொண்டிருக்கிறார். இவரை நான் முதன் முதலில் பார்த்தபோது மிகுந்த ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. உடனே அவரிடம் பேசவேண்டும் என்று மனம் உந்ததொடங்கிவிட்டது. என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, அவர் தவறாக நினைத்துவிடுவாரா? கோபப்பட்டுவிடுவாரோ? இப்படி யோசித்துக்கொண்டு ஒரு வாரமாகப் போகும்போதும், வரும்போதும் அவரை பார்த்தபடி சென்றுகொண்டிருந்தேன்.
நண்பர் ஒருவர் பேசும்போது சொன்னார், தான் திருப்பதிக்கு ரயிலில் செல்லும்போது அரவாணிகள் ஒரு முரட்டுத் தடியோடு வண்டியில் ஏறி கண்ணில் படுபவர்களையெல்லாம் அடித்து பணம் வாங்கிச்சென்றதாகவும், தான் நல்லவேளையாக அடிவிழாமல் தப்பித்ததாகவும். அவர்களின் அந்தக் கோபம் ஒரு ருத்திர தாண்டவம் போல் இருந்ததாகச் சொன்ன அவர் இறுதியாக ஒன்று சொன்னார், அவர்களின் அத்தனை கோபத்திற்கும் நாம் தானே காரணம்? எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு மூச்சு திணறும் அவர்கள் இயலாமையின் உச்சத்தில் பெரும் கோபம் கொண்டு கதவுகளை உடைக்கத்துணிகிறார்கள். அதில் தவறு சொல்ல நமக்கென்ன உரிமை? என்று. அவர் சொன்னது அனைத்தும் சத்தியமான வார்த்தைகள்.
நான் ஒரு முடிவுக்கு வந்தேன் அந்த பெண் என்மேல் கோபம் கொண்டு அறைந்தாலும் சரி இன்று பேசிவிடுவது என்று. அன்று காலை 'லிவிங் ஸ்மைல் வித்யா' அவர்களின் முகம்புத்தகத்தில் இன்று [april 15] அரவாணிகள் தினம் என்று குறிப்பிட்டு இருந்தார். அவரை சந்திக்க இதைவிடப் பொருத்தமான நாள் உண்டா என்று மாலையில் என் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்பிவிட்டேன்.
நான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினேன். அரவாணிகள் பற்றிய நம் தயக்கங்கள், அறிதல்கள் அனைத்தையும் உடைத்து எறியும்படி இருந்தது அவர் பேச்சு.
அவர் பெயர் குமாரி, 30 வயதாகிறது. திருப்பத்தூர் தான் அவர் சொந்த ஊர். பெங்களூர் வந்து 20 வருடம்போல ஆகப்போகிறது. அம்மா, அப்பா, 2 அண்ணன்கள்,1 அக்கா என்று பெரிய குடும்பத்தில் பிறந்த அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என்று நான் சொல்லத்தேவை இல்லை. அரவாணிகளுக்கு தங்கள் சுயத்தின் மேல் விழும் முதல் அடியே அவரவர் குடும்ப உறுப்பினர்கள் மூலம் வந்து சேர்வது பெரும் துரதிஷ்டம். குமாரியும் அதற்கு விதிவிலக்கல்ல. இவர் வீட்டை விட்டு வெளியேறியபோதும் பிச்சை எடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்திருக்கிறார். தன் தந்தையோடு அவர் செய்துவந்த காரவேலை எனப்படும் கட்டிட வேலையே இங்கு பெங்களூரிலும் செய்துவந்திருக்கிறார். பின் அங்கு பிரச்சனைகள் ஏற்படவே அந்த வேலையே விட்டுவிட்டுக் கடந்த 6 வருடமாக இங்கு பூ விற்றுப் பிழைக்கிறார். கட்டிட வேலை செய்யும் போது என்ன மாதிரியான பிரச்சனைகளைச் சந்தித்தார் என்று அவர் சொல்லவில்லை, அதை சுலபமாக நாமே யூகிக்கமுடியும்.
இங்கு கோவில் வாசலில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லோரும் சகஜமாகப் பழகுகிறார்கள். பூ வாங்கிக்கொண்டு 'மீதி பணத்தை நாளை கழித்துக்கொள்' என்று சொல்லிவிட்டுச் செல்லும் அளவுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். பொதுவாக அரவாணிகள் தங்களுக்குள் ஒருவரை தத்தெடுத்துக்கொண்டு அவரை தன் மகளாகவும், தன்னை தாயாகவும் பாவித்து வாழ்வது வழக்கம். அது வாழ்க்கை மேல் ஒரு பிடிப்பை, அர்த்தத்தை உண்டாக்கும். இவர் அப்படி யாரையும் தத்தெடுக்கவிரும்பவில்லை. அவர்களோடு கூட்டமாக வாழவும் விரும்பவில்லை. ஆனால் அவர்களோடு நட்பாக இருக்கிறார். அவர் தோழிகளும் குமாரியின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து போகிறார்கள். இவர் பிச்சை எடுக்காமல் சொந்தகாலில் நிற்பது பற்றி இவரின் தோழிகளுக்கும் சந்தோசமாம்.
தனியாக வாடகைக்கு வீடெடுத்து வாழ்கிறார். வாடகை, தன் செலவுபோக எஞ்சும் சொற்ப பணத்தை வங்கியில் சேமிக்கிறார். எந்தக் கெட்டபழக்கமும் இல்லை. அம்மன் சிலையை வீட்டில் வைத்து தினம் பூஜை செய்கிறார். ஆடி மாதம் அந்த சாமிக்குச் சின்னதாக விழா எடுத்து 10,20 பேருக்கு அன்று அன்னதானம் வழங்குகிறார். இவரிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை என்று எதுவும் இல்லை. ரேஷன் கார்டு விண்ணப்பிக்கச் சென்றால் அங்கு கையெழுத்து வாங்கிவா, இந்த சீட்டு வாங்கிவா என்று அலைக்கழித்திருக்கிறார்கள். ரேஷன் கார்டு இல்லாதது மட்டுமே அவருக்குச் சின்ன வருத்தம். வருங்காலம் பற்றிப் பெரிதாக அவர் அலட்டிக்கொள்ளவில்லை. உடல் நலம் அற்று இருக்கும்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியாக இருக்கிறார்களாம். அக்கம்பக்கம் இருப்பவர்கள் அனைவரும் வீட்டுவேலை செய்பவர்கள், கூலித் தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுபவர்கள் என்று ஏழை மக்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும், கூடி வாழ்வதும் என்று நலிந்த தங்கள் வாழ்வை காத்துக்கொள்பவர்கள்.
அரவாணிகள் தினம் பற்றி அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவரின் வாழ்க்கையை சிறப்பாக வாழ அவருக்குத் தெரிந்திருக்கிறது. அப்பா, அம்மா மட்டும் மனம் மாறி அவ்வப்போது இவரை பார்க்க வருகிறார்கள். சொத்து எதிலும் அவருக்குப் பங்கு தரப்படவில்லை. அதைப் பற்றி அவர் பெரிதாக வருத்தப்படவும் இல்லை. அவர் அருகிலேயே சசிகலா என்ற குட்டிப்பெண் பூ விற்கிறாள். அவள் தான் குமாரி இல்லாதபோது அவர்கடையையும் சேர்த்துப் பார்த்துகொள்வது, ஒன்றாக சாப்பிடுவது என்று நட்பு பாராடுகிறாள். தன் கடைசிக் காலத்தில் முடியாமல் நோயில் விழும்போது தன் வங்கி சேமிப்பு பணத்தைப் பெற்றுக்கொண்டு யாரேனும் தன்னைக் கவனித்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு சொல்கிறார். தன் வாழ்க்கையில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும், கவலையும் இன்றி இந்த நாளை சந்தோசமாகவும் ,நிம்மதியாகவும் கடந்துகொண்டிருக்கிறார் . யோசித்துப்பாருங்கள் இத்தனை வாழ்வும் வசதிகளும் உள்ள நாம் விரும்புவதும், போராடுவதும் எதற்காக? இதே நிம்மதிக்காகத் தானே? 'இன்னைக்கு ரொம்ப நல்ல தூக்கம்.. படுத்தது தான் தெரியும்..காலைல தான் எழுந்தேன்.'என்று, என்றாவது வாய்த்துவிடும் நிம்மதியான உறக்கத்தை ஸ்லாகித்துச் சொல்லும் நிலைமையில் தானே நம் வாழ்வு இருக்கிறது??
*********************
***.
No comments:
Post a Comment