Saturday, April 9, 2016

குரல்களின் மேல் எனக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. ஒரு நபரிடம் முதல் முறை பேசுகையில் அவர் குரல் எப்படி இருக்கிறது என்பதில் தான் என் முதல் கவனம். கனமாக இருப்பவர்களின் மென்மையான குரல்கள், மெலிந்து இருப்பவர்களின் கனமான குரல்கள், குரல் மூலமாகவே தனக்கு கம்பீரம் கூட்டிக்கொள்ளும் மனிதர்கள் என்று குரல்களில் தான் எத்தனை சுவாரஸ்யம்?!

நான் பேசுகையில், பாடுகையில் என் காதில் விழும் என் குரல் எனக்கு மிகப் பிடிக்கும். அந்த நம்பிக்கை உடைந்துபோனது எப்போது ? என் குரலைப் பதிவு செய்து நானே முதன் முதலாகக் கேட்ட அந்த நாளில் நான் பெரும் ஏமாற்றமும் துக்கமும் அடைந்தேன். அனேகமாக அன்றிலிருந்து தான் நான் குரல்களின் மேல் கவனம் கொள்ள ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன்.

அம்மா தொலைபேசில் அழைக்கையில்,' நேத்து தானம்மா பேசினோம் ? ஏதும் விஷயம் இருக்கா? என்று கேட்டால், இல்ல சுஜி பொக்குனு இருந்துச்சு,
உன் குரல் கேட்டா தேவலாம்னு தோணுச்சு அதான் கூப்டேன் என்பார். எது இந்த குரலா? ஆமாம் பெரிய சுசீலா குரல் என்று கிண்டல் அடிப்பேன். மனதுக்கு இணக்கமானவர்களின் குரல் எப்போதும் இனிமையாகவே ஒலிக்கிறது. உண்மையில் வெறும் குரலை மட்டுமே நம்பிக்கையாக பற்றிக்கொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் தான் எத்தனை பேர்! உறவினர் ஒருவர், மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து 8 வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்தார். அடிக்கடி எங்களுக்கு தொலைபேசுவார். நல்லா இருக்கீங்களா? கிளைமேட் எப்படி இருக்கு? எப்போ இந்தியா வரீங்க என்பதை தாண்டி அவரிடம் பேச எங்களுக்கு எதுவுமே இல்லாதபோதும் அவர் பேசிக்கொண்டே இருப்பார். தண்ணீருக்குள் மூழ்கி விட்டவனின் கைக்கு அகப்பட்ட நீண்ட குழாய் அது. அவன் சுவாசிக்க அது ஒன்றே வழி. இந்த குரல்களும் அப்படித்தான்.அது பெரும் ஆசுவாசம்.

பிரசவ அறையில் கண்கள் மூடப்பட்ட நிலையில் நான் கேட்ட ஸ்ருதியின் முதல் அழுகை. ஆணா பெண்ணா என்று அடையாளம் இடப்படாத புத்தம் புது குரல். என்னை வந்து தீண்டிய என் இன்னொரு குரல்! இந்த குரல்கள் தான் என்ன ஒரு அற்புதம்!!

சில வார்த்தைகள் சில குறிப்பிட்ட குரல்களுக்கு மட்டுமே சொந்தமாகிப்போகிறது.அந்த வார்த்தைகளை எங்கு, எப்பொழுது கேட்டாலும் அந்த குறிப்பிட்ட குரல்கள் தான் நினைவில் வரும். வாசனையைப் போலவே சில வார்த்தைகளும் சில குறிப்பிட்ட மனிதர்களுக்கானது.

நாம் திரும்ப கேட்கவே வழி இல்லாமல் போன குரல்கள் தான் எத்தனை எத்தனை ? அன்பும், கருணையும் குழையும் அப்பாவின் அந்த கனமானக் குரலை இனி ஒரு போதும் கேட்கவே முடியாது என்பதை விட பேரிழப்பு வேறு என்னவாக இருக்கமுடியும்? சொல்றா கண்ணு ... பாப்பா .. என்று அழைக்கும் அக்குரலுக்காக இப்பவும் காத்திருக்கிறேன்.

*****
ஸ்ருதி இன்று கேட்டாள், நினைவைப் பின்னோக்கி செலுத்தி முதல் நினைவாக எது ஞாபகத்தில் இருக்கிறது என்று. NAT GEO சானலில் மைண்ட் கேம்ஸ் நிகழ்ச்சியில் நினைவு பற்றி பேசப்பட்டதின் எதிரொலி.

யோசிக்கதொடங்கினேன். 5 ஆம் வகுப்பில் படிக்கிறப்போ என்று ஆரம்பிக்கும்போதே இன்னும் பின்னால் போய் யோசிங்கம்மா என்றாள்.ஓகே இன்னும் பின்னால். ம்ம் நான் முதன் முதலில் LKG சென்ற நாள். இப்பொழுது போல தெருவுக்கு தெரு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இல்லாத காலம். சுற்று வட்டாரத்திற்கே முதல் ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கும்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. எங்கள் ஊரிலிருந்து இரண்டு ஊர் தாண்டி தம்மம்பட்டியில் பள்ளி. பள்ளி வாகனமெல்லாம் இல்லை. பொது போக்குவரத்து தான். அண்ணனும் அக்காவும் அங்கு படிக்க, அடுத்தவருடத்தில் என்னையும் கொண்டு சேர்த்த அந்த நாள். வகுப்பில் நான் ஒரேடியாக அழவும் என்னை என் அண்ணன் வகுப்பிற்கு அனுப்பி வைத்தனர். அழுதுகொண்டே அண்ணன் அருகில் உட்கார்ந்து கொண்டதும், வரிசையாக பெஞ்சுக்கு கீழே தெரிந்த சிகப்பு சாக்ஸ்ம், கருப்பு ஷூஉம் அணிந்த கால்களும் நினைவில் வருகிறது. சிஸ்டர் ஒருவர் ரைம்ஸ் சொல்லித்தந்ததும், அங்கு பெட்டிக்கடை தாத்தாவிடம் தினமும் சிக்லெட் வாங்கி தின்றதும் என்று கொசுறாக கொஞ்சம் நினைவுகள். எவ்வளவு யோசித்தும் அதற்கும் பின்னோக்கிப் போக முடியவில்லை.

நம் மூளையானது நம் உணர்வுகளுடன் தொடர்புடைய விசயங்களை மட்டுமே நினைவில் இருத்தியிருக்கும் என்றும் அன்றாட நிகழ்வுகள் நினைவில் நிற்காமல் போவதும் அதனால் தான் என்றும் அந்த டிவி நிகழ்ச்சியில் சொன்னார்கள்.

நம் நினைவுகளில் நில்லாமல் நாம் கடந்துவிட்ட நாட்கள் அப்படி எத்தனை எத்தனை!! நம் குழந்தைப்பருவம் முதல் நேற்று நடந்தது வரை யோசித்துப் பார்த்தோமானால், குழந்தைப்பருவத்து நினைவுகள் அதிகமாகவும், வளர வளர நினைவில் நிற்கும் விஷயங்கள் குறைந்து போயிருப்பதையும் உணரமுடியும். கல்லூரி நாட்களுக்குப் பிறகு வாழ்க்கை ஒரு நிரந்தரமான பாதையில் பொருத்தப்பட்டு வேகமெடுத்து விடுகிறது. ஒரே மாதிரியான தாள கதியில் உருளும் வாகன ஒலி காதுகளுக்குப் பழகி பின் அதன் இருப்பே கவனமற்றுப் போகிறது.

எல்லா நினைவுகளையும் நிகழ்வுகளையும் புகைப்படத்தில் அடைத்து வைத்து விட்டு, வேண்டிய நேரத்தில் புரட்டிப் பார்த்துவிடும் சவுகர்யம் வாய்த்துவிட்ட நாம், நினைவுகளை அதன் குணமும் மணமும் மாறாமல் இறுதிவரை மூளைக்குள் பொத்திவைத்து எடுத்துவந்து நம் அடுத்த தலைமுறைக்கு காட்சி பிசகாமல் சொல்லும் சுவாரஸ்யத்தை இழந்துவருகிறோம்.என் அம்மா வாய்வழி நான் கேட்ட நிகழ்வுகளைப் போல நான் என் பிள்ளைகளுக்கு, பேரக் குழந்தைகளுக்கு சொல்ல எவ்வளவு விஷயம் இருக்கும்? அது எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்று கேள்வி எழுகிறது.

*****
அரக்கு மாளிகையில்
வீற்றிருக்கும்
மகாராணியின் கைக்குள் 
நனைந்து கொண்டிருக்கிறது
ஒரு தீக்குச்சி

*****

இறுதி முத்தம்

தொப்புள் கொடியை
அறுப்பதென
இறுதி முத்தத்தின்
செந்நிற வலிக்கு
ஆரஞ்சு மிட்டாயின் சுவை
ஒரு மலரைப்பறித்து
மாலையுடன் சேர்க்கும்
இறுதி முத்தக்காம்பு
ஒலிப்பெருக்கியாகி இசைக்கிறது
Yவடிவப் பாதை என்றறிந்தே
தொடங்கியது
இரட்டை நிழல்களின் பயணம்
இறுதி விருந்தில்
மோதிச் சிணுங்கும் கோப்பைகளில் மிதக்கின்றன
செர்ரி பழங்கள்
நீயே அணிவிக்கிறாய்
ஆடைகளை
இறுதிக் கலவிக்குப் பின்னும்
ஆதாரச் சொல் ஒன்று
விடைபெற்றுப் பறக்கிறது
வாக்கியத்திலிருந்து
****


ஊருக்குச் செல்லும் 
குழந்தைகள்
வீட்டைப் பிரித்து
சுவர்களை மிச்சம் விட்டுச் செல்கிறார்கள்
நிறங்களை அள்ளிக் கூந்தலில் சொருகிக்கொண்டு
வெற்றுச் சதுரத்தைக்
கையளிக்கிறார்கள்
உலகம்
ரோஸ் நிற பலூனாகி
அவர்கள் பின்னே பறந்து
மறைகின்றது
திசை தொலைத்த குருடனின்
கைத்தடியினூடே நெளிகின்றன
பாம்புகள்
ஒலியைப் பறிகொடுத்த
வனம்
ஓர் காட்சிப்பிழை
விழுந்து எழும் கதிரவனுக்கு
முடவனின் சாயல்

****

Saturday, April 2, 2016





ஆட்டிசம்:

புதிய பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்த முதல் நாள். புது இடம் ,சூழ்நிலைக்கு பயந்து குழந்தைகள் எல்லாம் அழுதுகொண்டிருக்க ஒரு பையன் மட்டும் தரையில் உருண்டுகொண்டும், சத்தமாக ஒலி எழுப்பிக்கொண்டும், வகுப்பை விட்டு வெளியில் ஓடிக்கொண்டும் இருந்தான். எனக்கும் அப்பள்ளியும், சூழ்நிலையும் புதுசு ஆகையால் நானே கொஞ்சம் பதட்டத்தில் இருக்கையில் இவன் இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்க அவனை எப்படி அமைதிப் படுத்தி , ஒரு இடத்தில் அமரவைப்பதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன். எல்லா பிள்ளைகளிலும் அவன் மட்டும் தனித்து தெரிந்தான். என்னவோ பிரச்சனை என்று மட்டும் புரிந்திருக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் அப்படியே சென்றது. ஒரு வழியாக வகுப்புகள் செட்டில் ஆகி பாடங்கள் தொடங்குகையில் இவனைப்பற்றி தலைமை ஆசிரியரிடம் சொல்லி , பள்ளி கவுன்சிலரிடம் அவன் பெற்றோர் சகிதம் அழைத்துச் சென்றேன். 


அங்கு பெற்றோர்களிடம் பேசியபின் எனக்கும் அவனை எப்படிக் கையாள்வது என்று சில டிப்ஸ் வழங்கப்பட்டது. அதன்படி அவனை ஓரளவு கட்டுக்குள் வைக்கமுடிந்தது. வருடம் முடிந்துவிட்டது ஆனாலும் இன்றுவரை அவனுக்கு மருத்துவரின் உதவியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது என்பதை பெற்றோர்கள் உணரவில்லை, பள்ளியும் அதை வலியுறுத்தவில்லை. பெரும்பாலும் பள்ளிகளைப் பொறுத்தவரை ஒரு மாணவன் என்பவன் ஒரு அட்மிசன் எண்ணிக்கை தான். உன் குழந்தை இப்படி இருக்கிறான் , இவ்வளவு தான் இவனால் முடிகிறது என்பதை பெற்றோருக்கு தெரிவிப்பதோடு வேலை முடிகிறது. ஒரு விதையை நட்டுவளர்ப்பது போல பிள்ளையின் ஒவ்வொரு கட்டத்தையும் கண்ணும் கருத்துமாக கவனித்து பராமரிப்பது பெற்றோர்கள் கையில் இருக்கிறது. 

வகுப்பிற்கு இரண்டு,மூன்றென ஆட்டிசம் , கற்றல் குறைபாடு, ஹைப்பர் என்று நாம்  சென்ற தலைமுறை வரைக் கேட்டறிந்திடாத குறைபாடுகளுடன் பிள்ளைகள் இருக்கிறார்கள். பெரும்பாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இச்சின்ன குறைபாட்டை உணர்ந்து, அதை களைவதற்கான முயற்சியில் ஈடுபடாமல் அதை மறைக்க முயல்பவர்களாக, போகப் போக சரியாகிவிடும் என்று விட்டுவிடுபவர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு தேவை தனி கவனமும், பயிற்சியும்(individual attention and practice).
கிட்டத்தட்ட 30 குழந்தைகள் இருக்கும் வகுப்பில் ஒரு பிள்ளை மேல் மட்டும் தனிகவனமும், வேறு வகையான கற்பித்தல் முறையும் என்பது நடைமுறையில் சாத்தியப்படாதது. மேலும் ஆசிரியருக்குமே இந்தக் குறைபாடுகள் பற்றிய அறிதல் இருப்பதில்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில் இக்குழந்தைகள் புறக்கணிப்பிற்கும், கேலிக்கும் ஆளாகின்றனர்.

என் நெருங்கிய தோழியின் மகன் ஆட்டிசம் பாதிப்பிற்கு உள்ளானவன். அவன் பிரச்சனை அறிந்தே PreKG, LKG, UKG வரை படிக்க அனுமதித்த பள்ளி, ஒன்றாம் வகுப்பில் அவனால் மற்றபிள்ளைகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து படிக்கமுடியதென்று சொல்லி UKG யிலேயே மீண்டும் தொடரச் சொன்னார்கள். சரி  அடுத்த வருடத்திற்குள் அவனை ஒன்றாம் வகுப்பில் மற்றவர்களோடு போட்டிபோட தயார்படுத்திவிடுவார்களா, அதற்காக சிறப்பு கவனம் அவன் மேல் செலுத்தப் போகிறார்களா என்றால் அதுவும் இல்லை. 

இன்று அவன் வேறு பள்ளியில் படிக்கிறான். மற்றபிள்ளைகளின் புறக்கணிப்பு , ஆட்டிசம் பற்றிய எந்த புரிதலுமற்ற ஆசிரியை என்று பல தடைகளைத் தாண்டி பெற்றோரின் தனி கவனத்திலும், பயிற்சியிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறான். 

குழந்தைகள் அனைவருமே கடவுளுக்குச் சமம். எந்தத் திறமையும் அற்றக் குழந்தை என்று யாருமே இல்லை. அவர்களின் திறனைக் கண்டறிய முடியாத குருடர்கள் நாம் தான். இந்த இணைய யுகம் அவர்களை மேலும் மேலும் தனிமைக்கும், புறக்கணிப்பிற்கும் ஆளாக்கி வருகின்ற நிலையில் கிழமைகளை வெறும் விழிப்புணர்வு தினமாகக் கடக்காமல் கொஞ்சம் நம் முதுகெழும்பை வளைத்து குனிந்து குழந்தைகளின் சிறிய உலகிற்குள் நுழைந்து கவனிக்க வேண்டும். நாம் காட்டும் அக்கறையிலும் பராமரிப்பிலுமே இருக்கிறது ஒரு விதை வேர் பிடித்து விருட்சமாவது. 

*******