இன்று கர்நாடகா சட்டமன்ற தேர்தல்..காலையிலேயே களைகட்டி விட்டது ஊர். தேர்தல் நேரத்து நாடகங்கள்,சடங்குகள் அனைத்தும் கொஞ்சமும் மாற்றமின்றி இங்கும் நடந்தேறியது.எங்கள் பகுதியில் பி .ஜே .பி மட்டுமே ஓட்டு வேட்டையில் சுறுசுறுப்பு காட்டினர். காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் சார்பாக எந்த முன்னெடுப்பையும் காண முடியவில்லை.
காலையில் கூட்டமாக இருக்கும் மெதுவாக போகலாம் என்று நாங்கள் அசிரத்தையாக இருந்தோம். வேலைக்கார அம்மா, வீட்டுக்குள் நுழையும் போதே ஓட்டு போட போகணும், சீக்கிரம் போகணும் என்று பரபரக்கத்தொடங்கினார் .'ஏம்மா சாயங்காலம் வரை டைம் இருக்குல்ல, என்ன அவசரம்' என்றதற்கு 'கை நீட்டி காசு வாங்கி இருக்கு ,சீக்கிரம் போய் ஓட்டு போடவேண்டாமா?' என்று போட்டாரே ஒரு போடு. காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது சரியா,தப்பா என்று அவரோடு விவாதிக்க ஆரம்பித்தேன். எல்லாரும் வாங்கினாங்க நானும் வாங்கினேன்,ஆனா எனக்கு இஷ்டப்பட்ட ஆளுக்குதான் ஓட்டு போடுவேன் ,என் புருஷன்கூட அதில் தலையிட முடியாது என்றார். அந்த பணத்தில் இன்று மகனை கறி வாங்கிவர சொல்லியிருக்கிறாராம் .இந்த ஒரு நாளுக்கான சந்தோசமாக மட்டுமே அந்த பணம் இருக்கிறது.
ஓட்டு போட வரிசையில் நிற்கும் போது ஓட்டு பதிவு இயந்திரத்தின் பீப் சவுண்ட் ஒரு சின்ன பதற்றத்தை ,பரபரப்பை உண்டாக்கியபடியே இருந்தது. சிலர் இயந்திரத்தை பயன்படுத்த தெரியாமல் தடுமாறினர்.ஒரு பட்டனை அழுத்திவிட்டு வருவது தான் என்றாலும் ஒரு இயந்திரம் நம்மிடம் ஒரு அந்நிய தன்மையை, பதற்றத்தை உண்டாக்கத்தான் செய்கிறது. நான் எழுத்தாளர் சுஜாதாவை நினைத்துக்கொண்டேன். பரபரப்பாக இருந்த அந்த கூட்டத்தில் சுஜாதாவை நினைத்துக்கொள்ளும் நபர் யாரேனும் இருப்பார்களா என்று முகங்களில் தேடிய என்னை பின்னால் நின்ற பாட்டி 'கன்னடா கொத்தாகத்தா ?முந்தே ஓகி '..என்று முறைத்தார். ஹ்ம்ம்..வயசானா எரிச்சலும் ,டென்ஷனும் தான் மிச்சமாகும் போல..
நான் முதன்முறையாக ஓட்டு போட்ட நாள் என் நினைவிலேயே இல்லை.அது அத்தனை சுவாரஸ்யமாக இல்லையா?எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் ஓட்டு போடும் வயதை எட்டாத வயதில் வாக்குச்சாவடிக்கு சென்றிருக்கிறேன்.
அவர் முன்னாள் அ .தி .மு.க பெண் MLA. முன்னாள் அமைச்சரும் கூட. எங்க ஊர்காரர். எங்கள் குடும்பத்தோடு நட்பு கொண்டவர். அவர் ஓட்டு போட போகும்போது எங்கள் வீட்டுக்கு வந்து பேசிவிட்டு என்னையும் உடன் அழைத்துச்செல்வார். கட்சியின் கருப்பு ,வெள்ளை,சிகப்பு கரை போட்ட வெள்ளை புடவையில் அவர் கம்பீரமாக நடந்து செல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவர் இடுப்பு உயரம் இருந்த நான் அவர் கையை பிடித்தபடி பூத் வரை செல்வேன்.ஒரு முறை நாங்கள் அவ்வாறு செல்லும்போது எதிர் கட்சி ஆட்கள் சரவெடி பட்டாசை கொளுத்தி அவரின் காலடியிலேயே விசிறிவிட்டார்கள் . அப்போதும் அவர் கொஞ்சமும் அசராமல் தன் கால் செருப்பை கொண்டு நெருப்பை மிதித்து அணைத்தார் .சின்ன கலவரத்துக்குப்பிறகும் நான் அவருடன் பூத்துக்குச் சென்று விட்டு தான் திரும்பினேன். எங்கள் கிராமத்து பெண்கள் போல் அல்லாமல் நெஞ்சு நிமிர்த்தி ,குரல் உயர்த்தி,ஆண்களிடம் துணிச்சலாக பேசும் அவர் மேல் எனக்கு பெரிய ஈர்ப்பு இருந்தது. நானும் பெரியவளாகி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன்.[ இப்போது நினைத்தால் செம காமெடியாக இருக்கிறது].
அரசியலையும் ,சினிமாவையும் சாக்கடை என்று தான் நாம் எப்போதும் விமர்சிக்கிறோம். ஆனால் அதிகாரத்திற்கும்,புகழுக்குமான ஏக்கம் ஒன்று நம் அடி மனதிலும் தேங்கிக்கிடப்பதை நாம் ஒப்புக்கொள்ளவோ,நம்பவோ மறுக்கிறோம். கோபுரத்தில் ஏற்றவோ,குப்புற தள்ளவோ தயங்காத ,அனுமானிக்கமுடியாத அதன் நிலையற்ற தன்மை தான் நமக்கு அத்துறைகள் மேல் ஓர் அச்சத்தை ,வெறுப்பை உண்டாகி வைத்திருக்கிறது.
ஓர் இரவில் அமைச்சர் பதவி பறிபோய் ,மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படாத அவர், வீட்டு வாசற்படியில் அமர்ந்துகொண்டு 'என்னடி சுஜாதா, பாக்காம போற?'என்று கேட்ட அந்த நாள் அதற்கு ஒரு சாட்சி. சுஜாதா வந்திருக்கா பாருங்க என்று வீட்டுக்குள் குரல் கொடுத்து அவர் கணவரை அழைத்தபோது ,'எந்த சுஜாதா?உன்ன பாக்க எத்தனையோ VIP ங்க வராங்க,அதுல எந்த சுஜாதா?எழுத்தாளர் சுஜாதாவா?'என்று அவர் கணவர் கெத்து காட்டி,வேட்டியை இறுக்கிக் கட்டியபடி வந்த அந்த காட்சி இன்னுமொரு சாட்சி..
*********************
No comments:
Post a Comment