அந்த நீண்ட வீட்டின் முன்திண்ணையில் கிடந்த பெஞ்சில் வந்து அமர்ந்தாள் நந்தினி. சாப்பிட்டுக் கை கழுவிய ஈரம் கையில் இன்னும் இருந்தது.
பாவாடையில் அழுந்த கைகளைத் துடைத்துக்கொண்டாள். கைகளில் புளிச்சைக் கீரை வாசம். இனி ரெண்டு நாளைக்கு இதே கீரையைச் சூடுபண்ணி போடுவாள் அம்மா . சோற்றில் கொஞ்சம் மோர் விட்டுக் கரைத்து அப்படியே கிண்ணியோடு சாய்த்துக் குடித்துவிட்டுத் தோட்டத்துக்கு கிளம்பிவிடுவாள் அம்மா. அம்மா, சின்ன வயசில் அப்படி ஒரு சாப்பாட்டுப் பிரியையாம்.
"இப்படித் தட்டு வழிய சோறு போட்டுகிட்டுத் திண்ணைல உக்காந்துச் சாப்பிடாத , பாக்கறவங்க கண்ணு வைக்கபோறாங்க "ன்னு பாட்டி அடிக்கடி சொல்லுவாங்களாம்.
ஏதாவது தப்பு பண்ணி,பாட்டி அடிச்சுட்டாக் கூட உக்காந்து நல்லா அழுதுட்டு, கண்ண தொடச்சுக்கிட்டுப் போய் சோறு போட்டு சாப்பிட்டுவாளாம். 'என் மகள் நீ, என்னடான்னா கோபத்த முதல்ல சாப்பாட்டுலத் தான் காட்டுற' என்று நந்தினியிடம் அம்மா எப்பவும் அலுத்துக்கொள்வாள்.
அம்மா, ஒழுங்காச் சமைச்சு ஒரு வாரம் ஆச்சு. ஒருவீட்டின் உயிர்ப்பு, சமையல்கட்டில் இருந்து தான் ஆரம்பமாகிறது. காலையில் எழுந்து காபிக்கு அடுப்பை பற்றவைக்கும்போது தான் அந்த வீடு மூச்சுவிடத் தொடங்குகிறது. நம்மோடு சேர்ந்து அதுவும் பரபரப்புக் கொள்கிறது. நாம் புத்தாடை அணிந்தால் அதற்கும் பொலிவு கூடுகிறது. நாம் அழுதபடி இருந்தால் அதுவும் மூக்குச் சிந்துகிறது.
நந்தினி வீட்டைக் கவனியுங்கள் அதுஅழுக்கேறி இருக்கிறது. கெட்ட வாடை வீசுகிறது. உற்றுக் கவனித்தால் அது லேசாகத் தள்ளாடுவதையும் அறியமுடியும். அவள் வீடு தன் இயல்பைத் தொலைத்துத் தடுமாறிக்கொண்டிருந்தது.
யாரோ ஒருவர் வாசலில் வந்து நின்று, " அப்பா இல்லையா பாப்பா?"என்றார். நந்தினி உள்ளே எட்டிப் பார்த்து , "அம்மா ..யாரோ கூப்பிடுறாங்க .."என்று சத்தமாகச் சொல்லிவிட்டு வந்திருந்தவரை ஒருமுறை பார்த்துவிட்டு தன் கை விரல்களை ஆராயத்தொடங்கினாள். அந்தக் கைவிரல்கள் அவளை அழைத்துக்கொண்டு அவள் அப்பாவிடம் சென்றது.."அப்பா"... நினைக்கும்போதே மனம் கனிந்துபோனது. அப்பா எப்போதும் நந்தினியின் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொதித்துக்கொண்டு தான் பேசுவார்.சாயங்கால வேளையில் தவறாமல் மசால் வடை,போண்டா என்று ஏதாவது வாங்கிவந்து அவள் தின்று முடிக்கும் வரை அருகிலேயே அமர்ந்திருப்பார். மேலும் அதுஎவ்வாறு சுடச் சுட தயாரிக்கப்பட்டது என்பதையும் பூரிப்போடு சொல்லிக்கொண்டிருப்பார். அவருக்கு நந்தினி என்றால் உயிர்.
நந்தினியோடு 6ம் வகுப்பு படிக்கும் தோழிகள் எல்லாம் வீடு கூட்டுவது, பாத்திரம் துலக்குவது என்று வீட்டு வேலை செய்யத்தொடங்கி இருந்தனர்.அதை அவர்கள் பெரியமனுசி ஆகிவிட்ட தோரணையில் சொல்லத்தொடங்கவும் நந்தினிக்கும் ஆசையாய் இருந்தது. அம்மாவிடம் நச்சரித்துப் பாத்திரம் துலக்க அனுமதி வாங்கி விட்டாள். தட்டுத் தடுமாறி அவள் இரண்டாவது பாத்திரத்தை கழுவிக்கொண்டிருக்கும் போதே
'கண்ணு' ...?!!இங்க என்ன பண்ற?
'பாத்ரம் கழுவறயா ? உங்க அம்மா எங்க போனா'?
'மொதல்ல கையக் கழுவிக்கிட்டு எழுந்திரி' ..
'பச்சப் புள்ளைய வேல செய்ய உட்டிருக்காப் பாரு' ..
'நீ ஏம்மா இந்த வேலையெல்லாம் பாக்குற?' என்று அலுத்தபடி தன் மேல் துண்டால் அவள் கைகளின் ஈரத்தை அப்பா துடைத்துவிட்டார்.
'அம்மா ஒண்ணும் சொல்லல.. எனக்குத்தான் ஆசையா இருந்துச்சுப்பா'. என் பிரண்ட்ஸ் எல்லாம் வீட்டு வேலை செய்யறாங்க தெரியுமா? நானும் கத்துக்கறேன்பா...' நந்தினி சிணுங்கிகொண்டிருக்க அவருக்குப் பெருமை.
'போகப் போகக் கத்துக்கலாம்மா ..பாரு பிஞ்சுக் கையி ..பாத்திரம் கழுவினா என்னத்துக்கு ஆகறது'?? கைகளை எடுத்து முகத்தில் ஒற்றிக்கொண்டார்.அவர் அப்படிதான், தன் சந்தோசம், துக்கம் யாவற்றையும் தன் மகளின் கைகளில் கொண்டு சேர்த்துவிடவே விரும்புவார்.அந்தப் பிஞ்சுக் கைகளில் தன் தாய் மடியின் வெம்மையை அவர் அறிந்திருந்தார். அவள் கைகளில் முகம் ஒற்றி நிமிரும் ஒவ்வொரு முறையும் அவர் கண்களில் ஈரம் படர்ந்திருப்பதைத் தவறாமல் பார்க்கமுடியும்.
பஞ்சாயத்துகளில் அவர் பேசத் தொடங்கினால் யாரும் மறுபேச்சுப் பேசமாட்டார்கள். அவர் பேச்சு அத்தனை கம்பீரமாக, நியாயமாக இருக்கும். ரொம்பக் கோபக்காரர் . அவரின் இந்த மென்மையான மறுபக்கம் ரொம்பவும் ஆச்சர்யம் தான்.
அவர் கையும் அப்படித் தான் ஒருஆணின் கைகள் போல் அல்லாமல் மிக மென்மையாக இருக்கும்.. நந்தினி , 'அம்மா... உங்க கை தான் சொரசொரன்னு இருக்கு, அப்பா கையப் பாருமா எவ்ளோ பஞ்சாட்டம் இருக்கு' என்று வியந்துக் கூறினாள்.
'ஆமாம்.. காடு கரையில எறங்கி வேல பாத்தா தானே கையி சொரசொரங்கும் . வேலயாளுங்கள ஏவி உட்டுட்டு மைனரு வரப்புலேயே சுத்திவந்தா கையி பின்ன எப்படி இருக்கும்?ஊட்டுக்கு மொதப் பிள்ளைனு உங்க ஆயா ஒரேயடியாச் செல்லம் குடுத்து வளர்த்திருக்கு' - அம்மா அலுத்துக்கொண்டாலும் கூடவே ஒரு பெருமை இழையோடும்.
'தலைவர் இல்லீங்களா ?' வந்து நின்றிருந்த ஆள் மீண்டும் குரல் கொடுக்க நந்தினி சுயநினைவுக்கு வந்தாள். மறுபடி அம்மாவைக் கூப்பிட அவள் உள்ளே எட்டிப் பார்க்கவும் அம்மா கூடையோடு வெளியே வரவும் சரியாக இருந்தது.
'சோளசோத்தார் வீட்ல அப்பனுக்கும், மவனுக்கும் தகராறு ..
பஞ்சாயத்து வச்சுதான் தீரும் போல'..
'அதான் அய்யாவக் கேட்டுவரசொன்னாங்க' ..வந்தவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
கிராமங்களில் தான் இந்த மாதிரி விசித்திரமான பட்டைப் பெயர்களைக் கேட்கமுடியும். சோளசோத்தார் , செம்மூஞ்சி, கூலமுத்து, காக்கா முடிக்கி என்று சுவாரஸ்யமான பட்டை பெயர்கள் உண்டு. அவர்களின் நிஜப் பெயர்கள் மறைந்துபோய் பட்டைப் பெயர்களே நிலைத்துவிடும். வந்திருந்தவருக்குச் சோளசோத்தாரின் நிஜப்பெயர் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றியது.
"உங்க தலைவரு ஒரு நிலையில இல்ல.நேத்தே மலை ஏறியாச்சு.
அங்க கடைகிட்ட விழுந்துக் கிடந்து அறிவு தான் கூட்டியாந்து விட்டுட்டுப் போனான்" அம்மா சாதாரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளுக்கு இதெல்லாம் பழகி விட்டிருந்தது.அவள் தன் துக்கத்தை அடுத்தவர்களிடம் மறைக்க பழகிக்கொண்டாள் .தோட்டத்து வரப்புகளில் மௌனமாய் மேய்ந்துகொண்டிருக்கும் மாடுகள் அறியும் அவள் கண்ணீரை, மண்ணை கொத்தி விதையை இட்டு மூடும்போதே தன் கண்ணீரையும் அதனுள் இட்டு விதைத்து விடுவாள்.
"நேத்துக் காலைல பாத்தேன் நல்லா தானே இருந்தாரு.நாலஞ்சு மாசமா விட்டிருந்தாரு.. மறுக்க ஆரம்பிச்சுட்டாரே."
'சரிமா ..நான் சொல்லிடறேன்' ,வந்தவர் சங்கடத்துடன் கிளம்பத்தொடங்கவும்,
'வேணும்னா சின்னப் பண்ணைகாரக் கூப்பிட்டுப் பாரு'. பேச்சுக்குச் சொல்லிவைத்தாள் . அவளுக்குத் தெரியும் தன் கணவன் தெளிந்து வரும்வரை அவர்கள் காத்திருப்பார்கள் என்று. மூன்று, நான்கு மாதத்திற்கு ஒருமுறை இப்படிப் போதையில் விழுந்து ஒரு வாரம், பத்துநாள் கழித்து மீண்டு வரும் அவரின் மேல் இந்த ஊர் மக்கள் வைத்த நம்பிக்கையைஒருநாளும் குறைத்துக்கொண்டதே இல்லை.
'வீட்ட பாத்துக்கப் பாப்பா ..நான் தோட்டத்துக்குப் போயிட்டு வந்துடறேன். அப்பா வந்தா சோறு போடு' . அம்மா போய்விட்டாள். இன்று குச்சிக்காடு களை வெட்டு. பொழுது சாயத்தான் வருவாள்.
நந்தினியின் மனம் மீண்டும் அப்பாவிடம் சென்றது. முன்பொருமுறை இப்படிதான் அப்பா ஒரு வாரமாய் நல்ல குடி .
அப்போது பள்ளியில் வகுப்புத் தொடங்கி இரண்டாவது பீரியட் நடந்துகொண்டிருந்தது.ப்யூன் வந்து நந்தினியைத் தலைமை ஆசிரியர் கூப்பிடுவதாகச் சொன்னார் .
ஐயோ...நான் ஒரு தப்பும் பண்ணலையே !! எதுக்குக் கூப்பிடறாங்க ??
பள்ளிக்குப் பின்னால் ஒரு சிறு ஓடை இருக்கிறது.ஓடை என்றால் நீர் சலசலத்து ஓடும் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.முன்னொரு காலத்தில் அங்கு நீர் புரண்டு ஓடியதற்கானச் சாட்சியாக மட்டுமே அந்த ஓடை இருந்தது. அந்த ஓடையில் கொஞ்ச தூரம் போனால் ஒரு பெரிய மரம் இருக்கும். அதுஎன்ன மரம் என்றெல்லாம் தெரியாது. பள்ளிப் பிள்ளைகள் அந்த மரத்தடி வரை சென்று விளையாடுவது வழக்கம். சரவணன் சரியான அறுந்த வால். நேற்று பள்ளி முடிந்துக் கிளம்பும் நேரம் அந்த மரத்தடியில் ஒரு சிறு கூட்டத்தைக் கூட்டி இருந்தான் அவன். நந்தினியும் என்ன என்று பார்க்கும் ஆவலில் அந்தக் கூட்டத்திற்குள் எட்டிப்பார்த்தாள். அவன் ஒருஓணானை சிறு குச்சியால் அழுத்திப் பிடித்துக்கொண்டு அதன் வாலை கையால் பிடித்திருந்தான். அதை என்ன பாடுபடுத்தினானோ அது துவண்டுபோய் அரை மயக்கத்தில் இருந்தது. இப்போது அவன் குச்சியை ஓணானின் கழுத்திலிருந்து லேசாக அழுத்தியவாறே கீழ் நோக்கி நகர்த்தவும் வெள்ளையாய் ஒரு முட்டை வெளியே வந்து விழுந்தது. கூடி இருந்த அத்தனை பிள்ளைகளின் கண்களும் பெரும் ஆச்சர்யத்தில் விரிந்தன. 'ஐயோ ..பாவம்டா விட்டுடுடா' என்று பாதிப்பேரும் , 'மறுபடி நசுக்குடா முட்டை வருதானுப் பாப்போம்' என்று ஆவலாய் பாதிப்பேரும் சத்தம் போட்டுக்கொண்டிருக்க ப்யூன் அண்ணன் வந்து கத்தத்தொடங்கினார்.
'ஸ்கூல் விட்டு எவ்ளோ நேரமாச்சு இன்னும் இங்க என்னடாப் பண்றீங்க'??
'உங்களக் காணோம்னு வீட்லர்ந்து ஆள் வரதுக்கா'??
'டேய் சரவணா..நீதான் கூட்டம் கூட்டி வச்சிருக்கியா'?
'இருங்க வாத்தியார்கிட்ட சொல்றேன்.. ஓடுங்கடா வீட்டுக்கு'.. ப்யூன் துரத்திவிடவும் எல்லோரும் ஸ்கூலுக்கு ஓடி பையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு ஓடினர்.
ஒருவேளை அதற்குதான் தலைமை ஆசிரியர் கூப்பிடறாரோ?? அப்படினா சரவணனத் தானே முதல்ல கூப்பிடனும்?!! நந்தினிக்குக் குழப்பமாக இருந்தது.நந்தினி யோசனையோடு ப்யூன் பின்னால் நடந்துகொண்டிருந்தாள். தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பு இருந்த இலவமரத்தின் கீழ் அப்பா நிற்பதை நந்தினி தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள். தலைமை ஆசிரியர் அப்பாவிடம் எதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவள் அப்பாவை நெருங்கவும் அவரின் அழுக்கேறிய சட்டையும், வறண்டுக் கலைந்த தலைமயிரும் அவளுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்தது.
'இதோ உங்க பொண்ணு வந்துடுச்சுங்க' ..
'நந்தினி.. அப்பாவ வீட்ல விட்டுட்டு வாம்மா '
தலைமை ஆசிரியர் குரலில் அசௌகர்யம் சேர்ந்திருந்தது.
தலைமை ஆசிரியருக்கு அப்பாவுடன் நல்ல பழக்கம். அவருக்கு வேறு ஊர். தினமும் பஸ்சில் தான் ஸ்கூல்க்கு வருகிறார். நந்தினியை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வரும்போது தான் அவருடன் அப்பாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. நந்தினி பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அப்பா எல்லா ஆசிரியர்களுக்கும் டீ பார்ட்டி கொடுத்தார். அன்று டீயுடன் சாப்பிட்ட ஏலக்காய் பிஸ்கட் ரொம்பவும் வாசனையாக இருந்ததாக ப்யூன் அண்ணன் அடிக்கடி சொல்லும்.
அப்பா நிற்க முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தார். நந்தினி எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அப்பா கையைத் தன் கையோடு கோர்த்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள்.
'ஏன்பா ,வீட்ல அம்மா இல்லையா ?'
'இல்ல கண்ணு'.. உங்கம்மா காட்டுக்குப் போய்ட்டா..நான் உன்னப் பாக்கலாம்னு வந்தேன்'..
'சாப்டீங்கலாப்பா ?..தள்ளாடி ரோட்டின் ஓரத்திற்கு நகரும் அவரை இழுத்துப் பிடித்தபடி நடந்துகொண்டிருந்த அவள் மிக இயல்பாய் பேசியபடி நடந்துகொண்டிருந்தாள். தெருவின் இருபுறமும் இருந்த வீடுகளில் இருந்து ஒன்றிரண்டு பேர் இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். நந்தினி தன் பேச்சிலே பாதை அமைத்து,அதில் அவரை நடத்திக்கொண்டு போனாள் . வீடு பூட்டி இருந்தது. சாவியை அந்த ஜன்னலில் வைப்பது தான் வழக்கம். நந்தினி ஜன்னலில் கைவிட்டுப் பார்த்தாள். சாவி இருந்தது.
இந்நேரம் மூன்றாவது பீரியட் முடிந்திருக்கும். அப்பா பாதிச் சாப்பிட்டு, பாதிச் சிந்திவைத்த சாப்பாட்டைத் தட்டோடு எடுத்துசென்று பாத்திரம் கழுவும் இடத்தில் போட்டுவிட்டு வந்தாள். அப்பா கட்டிலில் சரிந்திருந்தார். நந்தினி கதவைப் பூட்டிச் சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு, பள்ளி நோக்கி ஓடினாள்.
"நந்தினி விளையாட வரியா?" வாசலில் மலர் நின்றுகொண்டிருந்தாள். நந்தினி மீண்டும் சுயநினைவுக்கு வந்தாள். ஓ ! இன்று சனிக்கிழமை.. சனி , ஞாயிறுகளில் நந்தினி பள்ளித் தோழிகளைச் சேர்த்துக்கொண்டு விளையாடக் கிளம்பிவிடுவாள். வடக்கே பள்ளிக்கூடத்திலிருந்து தெற்கே சுடுகாடு வரை அவர்கள் எல்லை. சுடுகாட்டுக்கு அருகில் விளையாடுவது கொஞ்சம் பயம் தான் என்றபோதும், சுடுகாட்டை ஒட்டித்தான் கவிதாவின் தோட்டம் இருக்கிறது. அங்குப் போனால் கொய்யா மரத்தில் ஏறி விளையாடலாம். புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி வைத்திருக்கிறார்கள். உனக்குப் பத்து தடவை, எனக்குப் பத்து தடவை என்று முறை போட்டுக்கொண்டு எல்லோரும் ஊஞ்சல் ஆடலாம் . சமயத்தில் கவிதா அப்பா இருந்தால் இளநி கூட வெட்டித் தருவார். ஆக, விளையாடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நகர்ந்து சுடுகாடு வரை சென்றாயிற்று. அங்குக் கிடந்த மாலை, உடைந்த சட்டி இத்யாதிகளைக் கிளறிப்பார்த்துவிட்டு வந்தது அவர்களின் உச்சபட்சத் தைரியத்திற்குத் சான்றாக இருக்கிறது.
மற்ற நாளாக இருந்தால் நந்தினி தான் முதலில் விளையாடக் கிளம்புவாள். இன்று நிலை வேறாக இருப்பதால்
'நான் வரல மலர்.. அப்பா வருவாங்க'
'நாளைக்கு வரேன் '...அவள் குரல் அவளுக்கே பரிதாபமாக இருந்தது.
மலருக்கும் தெரியும் அவள் வரமாட்டாள் என்று. இருந்தாலும் அவளைக் கூப்பிடாமல் செல்ல மனமின்றி வந்திருந்தாள்.
'சரி அப்போ நாளைக்குக் கண்டிப்பா வரணும்' சொல்லிவிட்டு அவள் ஓடிவிட்டாள்
நந்தினி மீண்டும் தனியானாள். அவள் ரோட்டை வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அப்பா எப்போதான் குடியை நிறுத்துவாரோ?அவள் கவலையுடன் தன் கைகளைப் பார்த்துவிட்டு நிமிரவும் அப்பா வாசலில் வந்து நின்றார். வாசலில் இருந்து இரண்டு படி ஏறி தான் திண்ணைக்கு வரவேண்டும். அவர் படியேற முடியாமல் தடுமாறவும் நந்தினி அவர் கையைப் பிடிக்கலாம் என எழுந்துப் போனாள். அவரின் அழுக்கேறிய வெள்ளை வேட்டி செத்து விழும் ஒரு பிராணி போல அவர் இடுப்பிலிருந்து நழுவிச்சரிந்து தரையில் விழுந்தது. முதல் படிக்கட்டில் அப்பாவின் முகத்திற்கு நேரே நின்றிருந்த நந்தினி தன் பிஞ்சுக் கையை விசிறி அவரின் கன்னத்தில் ஓங்கி ஒருஅறை விட்டாள் .படீர் என்ற அந்தச் சத்தத்தில் அவள் வீடு விதிர்விதிர்த்து நிமிர்ந்தது.
செ .சுஜாதா.
நன்றி: கல்கி வார இதழ் (7.7.2013)