Sunday, December 29, 2013

இனிமையின் திரிபுபொங்கல் திருநாள் நெருங்கி வருகிறது. கரும்புகள் இப்போதே வரத்தொடங்கிவிட்டன. என் சிறு வயதிலும் இப்படித் தான் பொங்கலுக்கு 20, 25 நாள் இருக்கவே தோட்டத்தில் கரும்புகள் விளைந்து தயாராகி விடும். தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் நான் ,என் அக்கா,தங்கை, எதிர் வீட்டு தோழி என்று கூட்டமாகத்  தோட்டத்திற்கு கிளம்பிவிடுவோம். கரும்புக் காட்டில் வரப்பு ஓரமாக இருக்கும் நல்ல கரும்பாகப் பார்த்து அப்பா வெட்டித்தருவார். சொனை ஒட்டிக்கும் என்று வயலுக்குள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள்.சோவை எல்லாம் கழித்து விட்டு கரும்பை துண்டுப் பண்ணித் தருவார்கள். ஒரு கை நீளத்துக்கு பெரிய,பெரிய துண்டுகளாகப் போட்டு தந்தால் தான் மனசு ஆறும். வரிசையாக வரப்பில் அமர்ந்துகொண்டு வாய் வலிக்க தின்று தீர்ப்போம்.


பொங்கல் நாட்களில் கரும்புகளைக் கொண்டுவந்து மாடியில் போட்டு விடுவார்கள். மேலே போனால் முறம் நிறைய சக்கையை நிரப்பிவிட்டு தான் கீழே வருவோம். திருநாள் அன்று பொங்கல் திங்கமுடியாமல் நிச்சயம் வாய் புண்ணாகி இருக்கும். மனம் கொள்ளா சந்தோசத்துடன் திரிந்த நாட்கள் அவை.


இன்றும் அப்படித் தான். கணவரும், பிள்ளைகளும் கிண்டல் செய்தாலும் இரவு 10 மணிக்குக் கூட அமர்ந்து கரும்பு தின்று கொண்டிருப்பேன். ஆனால் பிள்ளைகளுக்கு கரும்பு பிடித்திருந்தாலும் அதைச் சாப்பிடுவதில் உள்ள சிரமத்தால் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். தோல் எல்லாம் செதுக்கி, சின்ன துண்டங்களாக வெட்டித் தந்தால் தான் சாப்பிடுகிறார்கள். என்னைப்  பொறுத்த வரை அப்படி துண்டுகள் ஆக்கப்பட்ட கரும்புகள் கரும்புகளே அல்ல. தாய் பாலுக்கும் , பால் பவுடருக்கும் உள்ள மிக பெரிய வித்யாசம்  போலத்தான் இதுவும். ஆனாலும் வேறு வழி இல்லை.


என்னதான் தோட்டங்காடுகளுக்கு பிள்ளைகளை அடிக்கடி அழைத்துச் சென்றுகொண்டு இருந்தாலும் கிராமத்திலேயே பிறந்து,வளர்ந்த பிள்ளைகளின் அனுபவ அறிவை, சந்தோசத்தை, தேடலை, ஆர்வத்தை,துணிச்சலை நகர் வாழும் இவர்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் தடுமாறித் தோற்க வேண்டி வருகிறது.


முன்பெல்லாம், எவ்வளவு படித்து ,பெரிய வேலையில் இருந்து, கை நிறைய சம்பாதித்தாலும்  ஒரு ஏக்கர் நிலமாவது இல்லை என்றால் பெண் கொடுக்க மாட்டார்கள். சாப்பாட்டுக்கு அரிசி, கடையில் வாங்குவது என்பது அவலம் என்ற எண்ணம் இருந்தது. தோட்டத்தில் நாலு வாழைமரம் கூட இல்லை, என்னத்த பண்ணையம் பண்றாங்களோ என்று மாப்பிள்ளையை தட்டிக்கழித்த சம்பவம் கூட நிகழ்ந்தது.


இன்று முக்கால் சதவிகிதம் பேர் விவசாயத்தை கைவிட்டுவிட்டு  வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான், வயல்களை விட்டுச்செல்ல மனம் இன்றி முடிந்தவரை பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். விடுமுறைகளுக்கு வந்துபோகும் பிள்ளைகள், பெரியவர்களின் காலத்திற்குப்  பிறகு நிலத்தை என்ன செய்வார்கள்?? பண்ணையாள் வைத்துப் பார்த்து, பின் குத்தகைக்கு விட்டு, இறுதியில் விற்றுவிடும் மனநிலைக்கே வந்து சேர்வார்கள். கரும்புகளைத் துண்டு பண்ணிச் சாப்பிடும் என் பிள்ளைகளின் குழந்தைகள், வரும் காலத்தில் கரும்பை எப்படி உண்பார்கள் ?? கரும்புச்சாறு குடிக்கும் அவர்கள் கரும்பின் நிறம்,அதன் மேல் படர்ந்திருக்கும் வெண்ணிறம் ,கணுக்களில் இருக்கும் கடினத்தன்மை, அடிக்கரும்பிற்க்கும் நுனிக்கரும்பிற்க்கும் உள்ள சுவை வேறுபாடு இவைகளை எல்லாம் எங்கனம் அறிவார்கள் ?!


மொழி உட்பட நம் வாழ்வின் ஊடாகப்  பின்னிக்கிடந்த பல மிக முக்கியமான விஷயங்கள் காலத்தின் முரட்டுப்பாய்ச்சலில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, உருமாறி ,காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. நம் கண் முன்னே நடக்கும் இம்மாற்றங்களை வலியோடு ஏற்றுக்கொள்ள, மனம் பழகிக் கொள்கிறது. மாற்றங்களை தொடங்கியவர்களே நாம் தானே!!. தோட்டத்தை விட்டுவிட்டு ,பெற்றோர்களை விட்டுவிட்டு, மூட்டை முடிச்சுகளோடு நகரத்தில் வந்து இறங்கிய நாளில் தான் அது தொடங்கியது .

                                                 ***************

No comments:

Post a Comment