அவள் இப்பொழுதெல்லாம் அவனை அடிக்கடிப் பார்க்கிறாள். அவன் வரும்போதெல்லாம் அவளுக்குப் பரவசம் தொற்றிக்கொள்ளும். ஜன்னல் திரைச்சீலை விலக்கி அவனை இமை கொட்டாமல் ரசித்துக்கொண்டிருப்பாள். சிலநேரம் துணிந்து வாசல் படிக்கட்டுவரை வந்துப் பார்ப்பாள். அவனின் முதல் தீண்டலின் சிலிர்ப்பை,நெஞ்சுக்குழி வரை நீளும் அவன் அத்துமீறலை அவள் மிகவும் விரும்பினாள். அந்த நாளுக்காக கற்பனையில் உருகி சிரித்துக்கொள்வாள்.
அவளின் மனதை அவன் முழுவதாய் அறிந்திருந்தான். அவள் கண்களின் வரிகளில் அவனுக்கான சேதி இருந்தது. ஒரு சில முறை அவளை வழியில் பார்த்துப் பேச முற்பட்டான். ஆனால் அவள்தான் பதறிக்கொண்டு வீட்டிற்குள் ஓடி விட்டாள். அவன் பொறுமை இழந்திருந்தான். எத்தனைக் காலம்தான் இப்படி எட்டி நின்று காதல் கொள்வது என்று??
அன்று காலையிலேயே அவன் ஒரு முடிவெடுத்திருந்தான். அவள் வெளியில் செல்லும் நேரம் எப்போது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இன்று மாலை அவளையும் அவனையும் இணைக்கும் என்று ஒருமுறை சொல்லிக்கொண்டான், சின்னதாய் புன்னகைத்துக்கொண்டான்.
அவள் வழக்கம்போல அன்றும் மாலை வெளியே வந்தாள். அவன் வருகிறானா என்று ஒரு முறை திசை எங்கும் பார்வையைச் சுழற்றினாள். அவன் இல்லை, கொஞ்சம் ஆசுவாசம் கொண்டவளாக நடக்கத்தொடங்கினாள். அவனற்ற வீதியில் நடப்பது அவளுக்குப் பாரமாக இருந்தது. வெறுமையை முதுகில் சுமந்துகொண்டு நடப்பது மிக கொடுமை. அவன் வந்திருக்கக்கூடாதா ? இல்லை இல்லை அவன் வராமல் இருப்பதே நல்லது. மனம் இங்கும் அங்கும் ஊஞ்சல் ஆடியது!!
இப்போது அவன் தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அவளைப் பின்தொடரத் தொடங்கினான். அவள் உள்ளுணர்வு விழித்துக்கொண்டது. அவன் வருகிறான்.. திரும்பிப்பார்க்காமலே அவன் வருகையை அவள் முதுகில் உணர்ந்தாள். உடலில் குளுமை பரவி, மயிர்கால்கள் சிலிர்த்துக்கொண்டன.
அவளைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. நடையின் வேகத்தைக் கூட்டினாள் . அவனும் வேக வேகமாக நடக்கத்தொடங்கினான். ரோட்டில் ஓடினால் அசிங்கமாக இருக்கும், ஆனாலும் வேறு வழியில்லை. அவள் ஓட்டம் கலந்த நடைக்கு மாறியிருந்தாள். ம்ம்..வேகம் கூட்டக் கூட்ட அவனும் வெறிகொண்டான். இன்று அவளை அடைந்தே தீருவது என்ற விளிம்பிற்கு அவன் வந்திருந்தான்.
அவள் பதறி ஓடிக்கொண்டிருந்தாள். அவன் கோபத்தோடு துரத்திக்கொண்டிருந்தான். அவனின் மூச்சுக்காற்று அவள் புறங்கழுத்தை சில்லென்று தொட்டது. அவள் கால்கள் தளர்ந்தன.. இதயம் குழையத்தொடங்கவும் ஓட்டத்தின் தாளம் மாறிஇருந்தது . ஓடுவதைப் போல் பாசாங்குச் செய்தபடி அவள் நடக்கத்தொடங்கி இருந்தாள்.
அவள் முதுகுப்புறம் மொத்தமும் அவன் பரவத்தொடங்கியிருந்தான்.
அவன் முத்தத்தின் ஈரத்தில் அவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக்கொள்ளத் தொடங்கினாள் .இவ்வாறாக அந்த மழைக்காதலனின் தேசம் அடைந்தாள் அந்தப் பாலைவனக்காரி.
செ.சுஜாதா.
No comments:
Post a Comment