Friday, August 28, 2020

மீறிச் செல்லும் கால்கள்

 ஒரே நாளில் உலகம் 

பாதியாக மடிக்கப் பட்டுவிட்டது


வலது பக்கம் தூங்கி

வலது பக்கமாய் உண்டு

வலது பக்கமாகவே கழிக்கவேண்டுமாம்


தலையில் குறுக்கிடும் தையல்

கோட்டைத் தாண்டி வராதே என்கிறது


ஒரு பாதி நான் எனில் 

மறுபாதி யார்?


என் மறுபாதியின் நினைவுகளை

எங்ஙனம் கைவிட


இடது முலையில் தான்

முதல் அமுதம் பருகினாள் 

மகள்


மடி உறங்கும் காதலை

இடக்கையே தலைகோதும்


இடது கால் இன்றும் காட்டும்

முதல் விபத்தின் மிச்சங்களை


நான் ஒரு பக்கமாய் ஒருக்களித்துப் படுத்திருக்கிறேன்

என் முதுகுக்குப் பின்னே 

இடது உலகம் இரைச்சலுடன் சுற்றுகிறது


ரங்கராட்டினமும்

பொம்மை மிட்டாயும்

கலர் கண்ணாடியும்

காத்தாடியுமாய் மினுக்குகிறது


குறுக்கிட்டு நிற்கும் மின்னல்கோடு 

வெட்டி அதிர்கிறது


நான் 

வலம் விட்டு 

மெல்ல நழுவி

இடப்புறம் நுழைகிறேன்


மீறிச்செல்லும் கால்கள் மட்டுமே

திருவிழாக் காண்கின்றன

Tuesday, August 25, 2020

பதில்

 எனக்கு பதிலாக பிள்ளைகள்

தொலைபேசி அழைப்புகளுக்கு 

பதிலளிக்கிறார்கள்


அம்மாவுக்கு பதிலாக பிள்ளைகள்

உணவூட்டுகிறார்கள்


அப்பனுக்கு பதிலாக பிள்ளைகள்

மடியில் தான் தலை சாய்கிறேன்


கணவனுக்கு பதிலாக பிள்ளைகள்

கரம் பற்றி நடக்கிறேன்


தோழிக்குப் பதிலாக பிள்ளைகளிடம்

ரகசியங்களைப் பகிர்கிறேன்


தோழனுக்கு பதிலாக பிள்ளைகளிடம்

திமிறிச் சண்டையிடுகிறேன்


ஆசானுக்குப் பதிலாக அவர்களே அறிவுரைகள் 

வழங்குகிறார்கள்


எல்லாவற்றுக்கும் 

பிள்ளைகளே 

பதிலாக இருக்கிறார்கள்

Friday, August 21, 2020

இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்

பாதி கனவில் விழிப்பு வந்து விடுவது

ஓடும் ரயிலில் இருந்து வெளியே வந்து விழுவது போல

ப்ளாட்பாரத்தில் நாம் மட்டும் அனாதையாய் நிற்கிறோம்

பின் எவ்வளவு முயன்றும் உள்ளே ஏற்க மறுக்கிறார்கள்


ஒரு முறை பாதி திருமணத்தில் வெளியேற்றி கதவடைத்து விட்டார்கள்

திருமணம் முடிந்ததா முறிந்ததா


தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து தூக்குகையில் விழிப்பு வந்துவிட்டது 

நல்லதா கெட்டதா 


நன்றாக பேசிக்கொண்டிருந்தவன்

பள்ளி பெயரைக் கேட்கையில் உறைந்து நின்று விட்டான்

எத்தனை கெஞ்சியும்

கடை பொம்மை போல விரைத்துக் கொண்டு நிற்கிறான்


மொச்சக்கொட்ட கண்ணழகி

முத்து முத்து பல்லழகி

சீமையில பேரழகி

செஞ்சுவச்ச மாரழகி


நாக்கைக் கடித்துக்கொண்டு

சரியாட்டம் போட்டுவருகையில்

நடுவீதியில் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்களே!!


இப்பொழுது 

ஏற்றிக்கட்டிய லுங்கியும் டவுசருமாய்

புழுதிக் கால்களுடன்

நான் எந்தப் பக்கம் செல்ல?!


இரவெனும் சவப்பெட்டி

காலோடு மூத்திரம் போவது கூட தெரியாமல்

அப்படி என்ன தூக்கம் 

தவக்களைய கட்டிவிடறேன்

தூக்கம் ஒரு கேலி இவர்களுக்கு


விடுதியே விழித்திருக்கும்

பரீட்சை இரவில் 

கால் பரப்பி தூங்கும் இவளுக்காய்

தலையில் அடித்துக் கொள்கிறது இரவு


முதலிரவில் தூங்கிவிட்டவளை

எப்படித் தான் வைத்து வாழ்வது


அப்பன் பிணம் கிடக்க

அடுத்த அறையில் தூங்கியவளை

ஊர் ஏசியிருக்கக் கூடும்


இரவில் விழித்திருந்து காண

என்ன அதிசயம் இருக்கிறது?!


இன்று சாட்சிக்கு யாருமில்லை

உடனிருந்த  தூக்கமுமில்லை

நான் விழி விரிய காத்திருக்கிறேன்


உறைந்த சவப்பெட்டியாய் கிடக்கிறது இரவு

ஒலிகள் தூக்கில் தொங்குகின்றன

வரிசையாய்


விடியும்மட்டும் காண 

ஒரே காட்சி


இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்?!!

வனம் தொலைந்த இரவு

 என் ஐந்து வயதில்

அம்மா இல்லாத இரவொன்றைக் கண்டேன்

எதிர்வீட்டுப் படுக்கையை நனைத்துவிட்டு

அம்மா வரவிற்காக

விடியும் வரை நடுங்கி இருந்தேன்


பதிமூன்று வயதில் 

மீண்டுமொரு அம்மா அற்ற இரவு

தூரத் தெரியும் விடுதி நிலா

அத்தனை பயமுறுத்தியது அன்று தான்


பின்

வனம் தொலைந்த சிறுமி போல்

என் தனித்த இரவுகள்

கிளைக்கு கிளை தாவின


அடம்பிடிச்சியாப்பிள்ள என்று 

அம்மா கடிந்துகொண்ட

முதலிரவு முடிந்த காலையோடு

அம்மாவைத் தேடும் இரவு

உறைந்து போனது


காலத்தின் கடைசி சுற்றில்

மரம் கொத்திப் பறவை ஒன்று

ஓயாமல் தலையில் கொத்தும்

இவ்வலி மிகு இரவு

அம்மாவைத் தேடி மீண்டும் அசைகிறது

இன்னும் கொஞ்சம்

 இறுதியாக கண் மூடுகையில்

யார் முகத்தைப் பார்க்க ஆசை


தோழியா தோழனா

பிள்ளையா பெற்றோரா

காதலனா கணவனா


முகம் பார்த்தால் போதுமா


குரலைக் கொஞ்சம் கேட்டுக்கொள்கிறேனே

கைகளை மட்டும் பற்றிக் கொள்ளவா

உடன் அழைத்துப் போகமுடியுமா


இங்கேயே தங்கி விடவா

இன்னும் கொஞ்சம்?!