Thursday, November 22, 2012

துரோகத்தின் முதல் துளி



இருள் திணறும் சாமம் ஒன்றில்
தீட்டுத்துணியுடன்
அவன் வீசும் அர்த்தப்படாதப் பார்வை ஒன்றையும்
சுருட்டிக்கொண்டு
கழிவறை நுழைகிறாள் 

கருவறை நிராகரித்த மழலை ஒன்று 
கனவுகள் உடைத்து வெளியேற
காலம் குருதியாய் கசியத்தொடங்கும் 

விடியலில் முற்றம் பிளக்கும் 
ஓலம் எண்ணி
போர்வைக்குள் சுருண்டுப் படுக்கும் இரவு 

ரட்சிக்கும் கருப்பை ஒன்றை
அவர்கள் தேடத்துவங்கும் தருணம்
 
அவன் கனவுக்குள்ளும் விரியலாம் 
மற்றும் ஒரு யோனி
அவள் கண்களை மறுதலித்தவாறே

*****
நன்றி:உயிரோசை.

Sunday, October 21, 2012

புனைதல்






உன்னை வந்தடைய முடியா
வார்த்தைகள் பெரும் வாதைகள்

உன் மௌனம் செரிக்க
இதயத்தைத் தின்னும் என் சொற்கள்
 
சர்ப்பமென நெளிந்து நழுவுகிறது
நம் காலம்

வா,

மன முகட்டில் உருளும்
எனதிந்த உயிர் ஏந்த

உன் சிறகு துடிப்பின் வெம்மையில்
முகம் புதைக்க வேண்டும்

கனன்றுத் தகிக்க வனம்  
முதல் முகில் வேண்டும்


கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்







பகல் உதிர்க்கும் அனல் பூக்களை
மாலையாகத் தொடுத்துக்கொண்டிருக்கிறேன்

கைவிட்டு விலகும் கதிரவன்
கறுத்த பாறையென
இவ்விரவை
அமிழ்த்திவிட்டு நகர்கிறான்.

அன்றொருநாள்
இடம் கொள்ளாமல்
நிரம்பி வழிந்த உன் முத்தத்தின்
ஈரம் தேடி..

சிறகு உதிர்ந்தப் பட்டாம்பூச்சியென
பதறித் தவித்து அலைகிறது
எனதிந்த இருப்பு

*****

நன்றி:உயிரோசை.

Tuesday, August 7, 2012

பிரியத்தின் இசை







அணை ஓர சிற்றலையாய் -என்
கரை மோதும் உனதன்பை
ஆழிப்பேரலையாய்
அள்ளி எடுத்து  உண்கின்றேன்

நூலின் நுனி என்னிடத்தில் என்றபோதும்
உயர உயர பறந்து விலகும்
காற்றாடியாய் -என்
தனிமையை பதற்றப்படுத்துகிறாய்

நடுங்கும் என் கரை உடைய
புன்னகை ஒன்றை வீசி எறி

வா...
வனம் தொலைவோம்


நன்றி உயிரோசை 

நிசப்தம் உடைக்காதே






அட்டவணையில் சிறை சிக்கி

அழுகிறது நம் காலம்...

கட்டம் கட்டமாய் நகர்ந்து சென்று அடையப்போகும்
உனக்கும் எனக்கும் அறியா அம்முடிவில்
வாழ்தலின் அர்த்தம் தெளிவு பெறுமோ!

அட்டவணை கிழித்தெறிந்து
அம்மணம் தரித்துக்கொண்டு
ஆதிக்கே திரும்பிச் செல்லுதலெனும்
ஒரு பேரர்த்தமுள்ள
அல்லது
ஒரு அபத்தம் நிறைந்த
எனது ஆசையினை
எதிர் நிற்கும் உன்னிடம்
எங்கனமாவது வெளிக்கொணர முனைந்தால்...

எனது கரங்களை இறுகப் பற்றிக்கொள்வாயா
இல்லைஇனி எப்பொழுதுக்குமென
எனைவிட்டு தொலைந்து போவாயா!?

நன்றி உயிரோசை.