Friday, December 18, 2020

காலங்களைக் கடந்து வருபவன்- கவிதை நூல் விமர்சனம்

 சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்

ஜிஃப்ரி ஹாஸன்

 


எழுத்து” பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் சுஜாதா செல்வராஜின் “காலங்களைக் கடந்து வருபவன்” நவீன தமிழ் பெண் கவிதைவெளியில் ஒரு குறிப்பிடத்தக்க வரவு. இக் கவிதைப் பிரதியில் பெண்- ஆண் எனும் இரண்டு தளங்களில் நகர்ந்து செல்லும் சொற்கள் கவிதையை உருவாக்கிச் செல்கின்றன. பெண்ணின் உலகத்தை ஆணின் கரங்கள் எப்படித் தீர்மானிக்கின்றன என்ற நுட்பத்தை சுஜாதா வெளிப்படுத்தும் தருணந்தான் அவரது கவிதைகளின் நிகழ் நேரம்.

தமிழின் நவீன பெண் கவிதைவெளிக்குள்ளிருக்கும் மௌனமும், அழகியலும், தீவிரமும் அப்படியே கிஞ்சித்தும் பிசகாமல் சுஜாதாவின் கவிதைகளுக்குள்ளும் இருக்கின்றன. பெண் குறித்த அவரது கவிதை மனத்தின் பல்வேறு பிரதிபலிப்புகளையும் இந்தத் தொகுதிக் கவிதைகள் பாசாங்குகளற்று வெளிப்படுத்துகின்றன.

இவரது கவிதைகள் பெண்ணைத் தன்னிலைக் கதாபாத்திரமாகவும் ஆணைப் புறநிலைக் கதாபாத்திரமாகவும் கொண்டு பெண்ணின் வாழ்வை அதன் முழு அர்த்தத்தோடும் வாசகனோடு பகிர்ந்துகொள்ள முற்படுகின்றன.

பெண் தனது சராசரி வாழ்வை எப்படி வாழ விரும்புகிறாள் என்ற அவளது சுயவிருப்பத்துக்கும் அவள் எப்படி வாழ வேண்டும் என்ற ஆணின் அதிகார விருப்பத்துக்கும் இடையிலான போராட்டத் தருணங்களே சுஜாதாவின் கவிதைப் புனைவுக்கான அடித்தளமாக ஆகியுள்ளன.

ஆனால் அவரது இந்தப் போராட்டம் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்த ஒன்றாக இருப்பதில்லை.

““நம் இருவருக்குமிடையில்
நிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்
அத்தனை உறுதியானதொன்றும் இல்லைதான்
ஆயினும் நாம் அதைக் கடக்கவோ
உடைக்கவோ முயன்றதில்லை”

என அவர் எழுதுகிறார். இங்கு எதிர்க் கதாபாத்திரமாக ஆண் இருக்கிற போதிலும் இருவருக்குமிடையில் சமரசத்துக்கான சாத்தியங்களே அதிகம் இருப்பதை அவர் கண்டுகொள்கிறார்.

பெண்ணின் இருப்பு, அவளது வாழ்வு, கனவுகள், வேட்கை என விரியும் சுஜாதாவின் கவிதைகள் சிக்கலற்ற எளிமையான குறியீடுகளையே கொண்டுள்ளன. படிமங்கள் மிக மிக குறைவு. சாதாரண பெண்களின் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு மொழியின் கூடுதல் புதிர்த்தன்மை தேவையற்றது என்பதை புரிந்து கொண்டு அதனை இயன்றளவு சுஜாதா தவிர்ந்து கொண்டிருக்கிறார். மிகைக் கற்பனைகளும் அவரது கவிதைக்குள் இருப்பதில்லை. இந்த வகையில், இவரது கவிதைகள் யதார்த்தவாதத்துக்கும், இயல்புவாதத்துக்கும் மிக நெருக்கமாகவுள்ளன.

பெண்ணின் சுதந்திரம் பற்றிப் பேசும்போது கூண்டு, வானம், பறவை போன்ற மிக எளிமையான குறியீடுகளையே பாவிக்கிறார். “வானம் மறுதலிக்கும் சிறகுகள்” எனும் அவரது கவிதையில்,

“என்றுமே நீ அறியப்போவதில்லை
வனம் அளக்கும் பறவையின் சிறகிற்கும்
கூண்டு தாண்டும் பறவையின் சிறகிற்கும்
வானம் வேறு என்பதை

இதுபோன்ற எளிமையான குறியீடுகளைத்தான் அவர் தனது கவிதைகளில் கையாள்கிறார்.

பெண் பற்றிய அறிவிப்புகளை தமது கவிதைகளில் வெளியிடுவது நவீன தமிழ் பெண் கவிதைகளின் பொதுப்போக்காகவே இருக்கிறது. ஆயினும் அந்தப் பொதுப் போக்கிலிருந்து ஒரு நுண்ணிய வித்தியாசத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் சுஜாதா. பெண் பற்றிய சுஜாதாவின் அறிவிப்பு அவரது “மருதானிக் காடுகளின் உன்மத்தம்” எனும் கவிதையில் நிகழ்கிறது.

“நாங்கள் துடுப்புகளற்ற படகு செலுத்தும்
கலை அறிந்தவர்கள்

என்கிறார். இன்னொரு வரியில்,

”ஆதிக்கனவுகளை திருத்தி எழுதிக் கொண்ட
முனை மழுங்கிய பேனைகள்

என்கிறார்.

”மேலும் உங்கள் செங்கோல்
ஆட்சியின் கீழ் வராத குடிகள் நாங்கள்

என்கிறார்.

இந்த அறிவிப்பு தமிழ்க் கவிதைவெளியின் பொதுப்போக்கிலிருந்து எப்படி வேறுபடுகிறதென்றால், தமிழ் பெண்கவிகள் தன்னிலை ஒருமையில்தான் பெண்களை அறிமுகப்படுத்துவதோ அல்லது அவர்களின் அனுபவங்களைப் பேசுவதோ வழக்கம். ஆனால் சுஜாதா தன்னிலைப் பன்மையில் பெண்களை அறிமுகம் செய்வது அவருக்கான தனித்துவத்தை அர்த்தப்படுத்துகிறது.

சமூகத்தில் பெண்ணுக்குள்ள பிரச்சினைகளாக சுஜாதா அடையாளங் கண்டிருப்பவை எவையும்  கற்பிதமாகத் தெரியவில்லை. இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அவற்றைப் புனைவுகளில் பூதாகரப்படுத்தி தனக்கான பிம்பங்களையும் ஒளிவட்டங்களையும் சூடிக்கொள்ள அவர் பிரயாசைப்படுவதாகவுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

ஒரு ஆண் வீட்டில் தனிமையை உணரும்போது அவன் வெளியில் சென்று தனது தனிமையையும் வெறுமையையும் போக்கிக் கொள்ள முடியும். இதே நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்படும்போது அவளால் வெளியில் சுதந்திரமாக உலவிவிட்டு வருவதற்கான சூழல் இன்று இல்லை என்பது பெண்களின் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். இது உண்மையில் உள்ள பிரச்சினைதான். இது கற்பிதமல்ல.

“ஆளற்ற வீட்டின் முன்
எத்தனை நேரம்தான் வெறித்திருப்பாய்

என்ற வரிகள் இந்த அவலச் சூழலைப் பற்றித்தான் சொல்கிறது.

இப்படியான ஒரு சூழலில் பெண்ணின் வாழ்வு தோல்வியுற்றிருப்பதாக கருதுகிறார் சுஜாதா.

“கண்மூடிக்கிடப்பதங்கே தோற்ற வாழ்வென்று
ஈக்கள் ஆர்ப்பரித்து அறிவிக்கும்

என்று தோல்வியை அறிவிக்கும் அவர், திடீரென்று இன்னுமொரு கவிதையில்

“வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க
கள்வெறி கொள்கிறேன்

என வெற்றியைக் கொண்டாடுகிறார். இவ்வாறு முரண்பட்ட உணர்வுகளை ஒரே நேரத்திலும் ஒரே வாழ்விலும் அனுபவிக்கும் பெண்கள்தான் சுஜாதாவின் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

நமது சமூக அடுக்கமைவு பாரபட்சமானதாக, ஆண்கள் தமது சொந்த விருப்புக்கேற்ற விதத்தில் வடிவமைத்துக் கொண்டதான ஒரு தோற்றப்பாட்டையே கொண்டிருக்கிறது.  பெண்ணுக்கும்- ஆணுக்கும் என பகிரப்பட்டிருக்கும் பணிகள் எந்தவொரு தர்க்க ஒழுங்குகளையோ, அடிப்படைகளையோ கொண்டிருப்பதில்லை என்ற பார்வையை நமது பெண் கவிகள் தொடர்ந்தும் வலியுறுத்திக்  கொண்டே வருகின்றனர்.

சுஜாதாவின் “இருப்பின் ஒரு பிரதி” எனும் கவிதைக்குள் இந்தக் குரல் மேலும் ஆழமாக ஒலிக்கிறது-

“பெண்ணின் புகைப்படங்கள் தொங்கும்
பூஜையறைகளுக்குப் பின்னால்தான்
ஜன்னல்கள் ஏதுமற்ற
வழுக்கும் சமயலறைகளும்
தூமைத் துணிகள் சொருகப்பட்ட
புழக்கடை வெளிகளும் பரந்து கிடக்கின்றன
” 

இங்கு “சமையலறை“ என்பது ஆதியிலிருந்தே பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட ஒரு இடமல்ல. ஆதி நிலையிலிருந்த சமூகம் குடும்பமாக மாறி ஒரு மனையை நிர்மாணித்துக் கொண்டதன் பின்னர்தான் அதற்குள் பெண்ணுக்கென பிரத்தியேகமாக சமையலறையையும் உருவாக்கிக் கொண்டான். அன்றிலிருந்து அநேக பெண்களுக்கு “சமையலறை” மீட்சியற்ற ஒரு பணி அறையாகவே மாற்றப்பட்டு விட்டது. இதனால் நமது பெண்கவிகள் “சமையலறை“ மீதான தமது அதிருப்தியை தொடர்ந்தும் தமது கவிதைகளில் பதிவு செய்தே வருகின்றனர்.

ஆனால் தூமைத் துணிகள் சொருகப்பட்ட புழக்கடைவெளிகள் பெண்ணின் இயல்பான தன்மைக்காக பெண்ணே ஏற்படுத்திக் கொண்ட ஒரு அறையாக இருக்கிறது. இதற்கெதிராக பெண்கவிகள் கலகம் செய்யத் தேவை இல்லை என்பது என் அபிப்ராயம்.

பெண்ணின் இருப்பு குறித்த அர்த்தங்களைத் தேடியலைபவையாகவும் சுஜாதாவின் கவிதைகள் வடிவங்கொள்கின்றன. பெண்ணின் இருப்புக்கான சுதந்திரத்தின் எல்லைகள் எப்படி ஆண்களால் ஈவிரக்கமற்றுக் குறுக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுஜாதா வெளிப்படுத்தும் வரிகளில் பெண் அனுதாபத்துக்குரியவளாகவும், ஆண் அதிகாரத்துக்குரியவனாகவும் வாசக மனதில் பதிவாகின்றனர்.

”புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு

“ஆசுவாசம்” எனும் கவிதையில்,

“இருள் அப்பிப் பிசுபிசுக்கும் என் இருப்பெங்கும்
அலறி ஓடும் ஓர் அம்மணம்

என்ற வரிகளில் மட்டுமல்ல

“என் திசை எங்கும்
நீ வனம் பரப்பி வைத்திருக்கிறாய்
உன் பாதை தோறும்
நான் முள் பொறுக்கி்க்கொண்டிருக்கிறேன்

என்று நெகிழ்கிறார்.

அதேநேரம் “கொத்தித் துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்” என்ற அவரது கவிதையிலும்

“சிறகுதிர்ந்த பட்டாம் பூச்சியென
பதறித் தவித்தலைகிறது எனதிந்த இருப்பு

எனத் துயருறுகிறார்.

மேலோட்டமான வாசிப்பில் இத்தகைய அனுபவமற்ற ஒரு ஆண் வாசகனோ அல்லது வாசகியோ இந்தத் துயரம் செயற்கையாய் உருவாக்கப்பட்டிருப்பதாக உணர்வதற்கு சாத்தியமுள்ளது.

பெண் பற்றிய புரிதலில் நமது பாரம்பரிய தமிழ்மொழிச் சமூகங்களிலிருந்து நவீன தமிழ் மொழிச் சமூகங்கள் பெரிதளவுக்கு முன்னேற்றங்களைக் காண்பிக்கவில்லை. இத்தகையதொரு அபத்தமான சமூக சூழலில் பெண்ணின் இருப்பு சுஜாதா விபரிப்பது போன்ற கையறுநிலைக்குள்ளும், தகிப்புக்குள்ளும் இருப்பது இயல்பானதே. இந்தவரிகள் கவிஞர் வாழும் சமூகத்துக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. எனவே பெண்ணின் இருப்பு பற்றிய சுஜாதாவின் இந்த வரிகள் மேலைத்தேய நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு அங்குள்ள சமூக சூழலில் ஒரு அர்த்தத்தை வழங்குவதில் தோல்வியடையக் கூடும். இதனால் இக்கவிதை நிலையான அர்த்தத்தைக் கொண்டதாகவன்றி ஒரு நிலைமாறும் அர்த்தப்பிரதியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகிறது.

ஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கும் “கலாசாரம்“ பெண்ணின் இருப்பு மீதும், அவளின் சுதந்திரத்தின் மீதும் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பதை ஓரளவு அடக்கி வாசிக்கும் பாணியில் வெளிப்படுத்துகிறார் சுஜாதா.  தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் பெண் மீதான கலாசார இறுக்கங்களை துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

அவரது “அவ்வளவே” என்ற கவிதைக்குள் இந்தக் குரலை நீங்கள் கேட்கமுடியும்.

”நெஞ்சுக்கூட்டில் முட்டி அழும் இதயத்தின் குரல்
தலைமயிர் சிதைக்கப்பட்ட
பெண்ணின் கூக்குரலாய் ஒலிக்கிறது

என்று அவர் எழுதும் போது கலாசாரத்தின் இறுக்கப்பிடியிலிருந்து பெண்ணின் மீட்சிக்காக வாசக மனம் அவாவுறுகிறது.

எனினும் பிரதி முழுவதையும் நுணுக்கமாகப் பரிசீலனை செய்யும்போது தமிழ் கலாசாரத்தின் மீது மிகவும் அவதானமான ஒரு வரையறுக்கப்பட்ட விமர்சனத்தையே கவிஞை சுஜாதா செல்வராஜால் முன்வைக்க முடிந்திருக்கிறது. இந்த சுயதணிக்கை அவரது கவிதைகளுக்கு மேலும் ஒரு நடைமுறைசார் அர்த்தத்தை வழங்கிவிடுகிறது.

ஒரு வாசகனுக்கு அற்புதமான கற்பனைகளி்ன் தரிசனமும் சுஜாதாவின் கவிதைகளுக்குள் கிடைக்கிறது.

நினைவைக் கலைத்துக் கலைத்து
அடுக்கிப் பாரக்கிறேன்

தவறாமல் என் வாசல் வரும்
இளமாலை வெயிலுக்கு என்
மௌனங்களை நுரைக்க ஊற்றித் தருகின்றேன்

போன்ற வரிகளில் அதீத கற்பனையின் தரிசனத்தை வாசகன் கண்டுகொள்கிறான்.

பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படுபவர்களின் மனவுணர்வுகள் பற்றி நமது தமிழ்க் கவிகள் அவ்வளவாக கவனத்திற்கொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் கண்களுக்கு அவர்கள் உண்மையான குற்றவாளிகளாகவே தெரிகின்றனர். ஒரு இடத்தில் ஒரு பொருள் திருடப்பட்டிருந்தால் அங்கு யாராவது ஒருவர் பொது மக்களால் சந்தேகிக்கப்படுகிறார். ஏற்கனவே சும்மா குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நிரபராதியின் மீது எப்போதும் சமூகத்தின் சந்தேகக் கண்கள் மொய்த்தபடிதான் இருக்கும்.

அப்படிப்பட்ட விளிம்புகள் மீதும் சுஜாதாவின் கவிதை மனம் கவனங்கொள்கிறது. “சுதந்திரத்தின் முடிச்சு” என்ற கவிதையில்,

காணாமல் போகும் “ஒன்று“
அதன் வாசனையை அடையாளத்தை
இரக்கமின்றி அவன் மீதே விட்டுச்செல்கிறது

தெளிந்த தனது கைகளை மீண்டும் மீண்டும்
அவன் கழுவியபடியே இருக்கிறான்

என்று சுஜாதா எழுதும்போது சந்தேகிக்கப்பட்ட ஒரு நிரபராதியின் மனத்தின் வலி தன் உடலெங்கும் பரவுவதை வாசகன் தீவிரமாக உணர்கிறான்.

இந்தக் கவிதைக்குள் வருபவன் ஒரு ஆணாக இருப்பினும் அவன் ஒரு விளிம்பாக இருக்கிறான் அல்லது அவ்வாறு சமூகத்தால் உணர வைக்கப்பட்டவனாக இருக்கிறான்.

ஆயினும் சுஜாதா சித்தரிக்கும் பெண்ணின் எதிர்நிலைக் கதாபாத்திரமான ஆண் காலங்களைக் கடந்து வருபவனாக இருக்கிறான். மிக மிகத் தொன்மையான காலத்திலிருந்து இன்று வரை பெண் மீதான அவனது செயற்பாடுகளில் காலம் எந்தப்பெரிய உடைப்புகளையும் நிகழ்த்தி விடவில்லை என்ற உண்மையின் பல்வேறு பிரதிபலிப்புகளே சுஜாதாவுக்குள் ஒரு எதிர்ப்பாக வடிவங்கொண்டு, மொழியின் அழகியலோடு வெளிப்பட்டுள்ளன.

சுருங்கக்கூறின் சுஜாதா செல்வராஜின் கவிதைகளின் அகம் ஒரு ஆணிண் வன்மத்தோடும் புறம் ஒரு பெண்ணின் மென்மையோடும் இருக்கின்றன. எனினும் எனது இந்த சுருங்கிய பார்வைக்கும் அப்பாலுள்ளது அவரது கவிதை.

 

No comments:

Post a Comment