Tuesday, May 9, 2017

அத்தர் மணக்கும் பாலை

வெகு தொலைவு பயணித்து வருகின்றன
உதடுகள்

வறண்ட பாலையில்
முட்களினூடே நெழிதடம்
பதிக்கிறது சர்ப்பம்

செண்பகமரக் குரங்குகள்
மொட்டுக்களை தின்றுத் தாவுகின்றன

லாவகமாய் தோல்உரிக்கிறான்
முயல்கறிக்கு பழகியவன்

புழுதி படிந்த உதடுகள்
தணலில் புரண்டு
சிவக்கின்றன

பாதி வெந்த உதடுகளை
ஒத்தி எடுக்க
காத்திருக்கின்றன
அத்தர்  மணக்கும்
முத்தங்கள்

நினைவுகளை அழித்தல்


நினைவுகளின் தேன்கூட்டை  அழிக்க முடிவெடுத்தபின்
முதலில்
இதயத்தைச் சுற்றி
இறுக்கி மூடுங்கள்

ஓயாமல் ரீங்கரிக்கும்
சின்னஞ்சிறு நினைவுகளை
தீயிட்டுப் பொசுக்குகையில்
நொடிப் பொழுதும்
தயங்கித் தடுமாறாதீர்கள் 

தீயைத் தாண்டிவந்து நினைவுகள் கொட்டுகையில்
பற்கடித்து வலி பொருத்து
முன்னேறுங்கள்

ராணித் தேனீயை கொல்லுதல் என்பது
ஒரு வாழ்வின் குரல்வளையை அறுத்தலாகும்

இப்போது
கைநிறைய நெருப்பை
அள்ளி எடுங்கள்
மிக தீர்க்கமாக அதன்
தலைமேல் கொட்டுங்கள்

புகைப்படத்தை அழித்தல் போல் அல்ல
நினைவுகளை அழித்தல்

அனைத்தையும் எரித்து அழித்துத் திரும்புகையில்
புறங்கையில்
உடன் ஒட்டிவரும் மகரந்தம்
கவனித்தீர்களா?

இப்போது
தீயில்
ஒருமுறை
முங்கிக் கரையேறுங்கள்

பின் இதயத்தை இறுக்கி மூடுங்கள்

***