Tuesday, September 1, 2015

வழிகாட்டி வெளிச்சம்


அடுத்த திருவிழாவுக்கு வருவதாக 
சொல்லிச்  செல்லும்
ராட்டினக்காரனின் வண்டிச்சக்கரத்தில்
நெரிபட்டுச் சிதைகிறது
சிறுமியின் வானம் 

கனக்கும் பாடல் ஒன்றை
உரக்கப்பாடியபடி
ஒற்றையடிப் பாதையில்
வண்டியை திருப்பும்அவன்
போய்சேரும் இடம் வரை
நிலாக்களை கணக்கெடுப்பான் 

'களுக்' என்ற ஒலியுடன்
விழுந்து
மூழ்கும் கூழாங்கல்
தரை தட்டி வெறிக்கிறது 

தனது சிறகுகளைப் பிடுங்கி
தினம் ஒன்றெனெ
நாட்காட்டியில் சொருகத்தொடங்குபவளின்
வானம் கரைந்து புள்ளியாகிறது  

கிளிகள் கீச்சிடத் தொடங்கும்
மற்றுமொரு விழாநாளில்
பசிய சிறகுகள் ஏந்தி
இங்கு வந்து சேரும்
அந்நீண்ட பாதை

***
நன்றி : கணையாழி இதழ் 

சொற்கள் உறங்கும் காடு


ப்ரொபசர் கடத்தப்பட்டதோடு
புத்தகத்தை மூடிவைக்கிறேன் 

பரபரப்பு நிமிடத்தில்
வாகனம்
உறைந்து நின்றுவிட
பதற்றம் கொள்கின்றனர்
கடத்தல்காரர்கள் 

ப்ரொபசர்
நிதானமாக
புகை இழுக்கிறார் 

அவரின் குறுந்தாடி
மெள்ள கன்னம் ஏறுகிறது 

அடிவயிற்றில்
மின்னலொன்று முட்டுகிறது
கடத்தல்காரர்களுக்கு 

வாரம் கடந்து
புத்தகத்தை திறக்கிறேன் 
'ஒரு சிகரெட் கிடைக்குமா ?'
என்கிறார் ப்ரொபசர் 

வாகனத்தின் கதவு திறந்து
அவசரமாய் ஓடுகின்றனர்
கடத்தல்காரர்கள்
ஒரு சின்ன முறைப்புடன்

ரத்தினக்கற்கள் பற்றிய
ரகசியங்கள்
ஒரு மூலையில் கிடக்கின்றன
கேட்பாரற்று 

****
நன்றி : சிலேட்டு இதழ் 

*தப்புத் தாளங்கள்*


வேற்று கிரகம் 
அங்கு
நீல உடலுடன் 
வால்முளைத்த மனிதர்கள் இல்லை
உன்னைப்போல் தான் அவர்கள்
அல்லது
அவர்களைப் போல்  நீ 

இருண்ட தேசம் அது 

கிளர்ச்சி மிகுந்தது
இருள் தரும் துணிச்சல் 

அங்கு
காதல் கனி அழுகி மிதிபடும்
வழியெங்கும் 

நடுச்சாலையில்
கரமைதுனம் மிக சகஜம் 

உடனடி ஒப்பாரியும்
உடனடி ஆரவாரமும் கூட 

கருணை மழை
சொட்டுச் சொட்டாய்
வழிந்தபடியே இருக்கும் அங்கு 

புஜம் புடைக்க
கண் சிவக்க
கர்ஜிக்கையில்
உங்கள் மயிரும்
வீறிட்டுக்கொண்டு நிற்கும் அறிவீரா?!

கண் விழித்ததும் காட்சி மாறும்
கனவு லோகம் அது 

பச்சை நிறத்தில்
மின்னும் விழிகளை 
பார்க்கும் வேளையில்
உன் விழி நிறமும்
அதுவே என்பதறிவாய்  

அத்தனையும் வெளிச்சமிட்டுக் காட்டும்
அற்புத இருள் அது 

***
நன்றி :திணை இதழ் 

* தோகை மயில் *

முத்தங்கள் சொரியும் 
அடர் மேகம்
நான்

உறங்கும் பிள்ளையின் தலை கோதி
வழங்கும் முத்தம்
மழைநீரின் நிறம் 

நெடுநாள் பிரிவில்
ப்ரிய நண்பனை அணைத்துத் தரும் முத்தம்
மாலை வெயிலின் நிறம்

சிற்பத்தில் மனம் லயித்து
சிற்பியின் காய்ப்பேறிய கைகளில்
முகம் புதைத்துத் தரும் முத்தம்
புரளும் காட்டாறின் நிறம்

காதலனை
மடிசாய்த்து
புருவம் நீவி
நாசி நுனியில் கோர்க்கும் முத்தம்
முன்னிரவுக் கடலின் நிறம் 

இதழ் மென்று
நா தின்று
சுவாசம் உண்ணும் நீள் முத்தம்
அலையாடும்
அடர் பாசி நிறம் 

வர்ணங்கள் சிந்தித் தெறிக்கும்
முத்த மழை நான் 

நிறக்குருட்டு நிலத்தின் மேல்
தினமும்
பெய்து மரிக்கும்
மாரியும்
நான் 

***
நன்றி :திணை இதழ் .