இன்று தான் அதைப் பார்த்தேன். ஓவியத்தில் தவறி விழுந்த ஒரு சிறு தீற்றல் போல , தூரத்து மலைச்சரிவில் வழிந்து இறங்கும் சிற்றோடைப் போல , முன் தலையில் சரிந்து விழும் ஒற்றை வெண் மயிர். ஒரே நொடியில் கண்ணாடியில் என் பிம்பம் மறைந்து என் தாயின் , பாட்டியின் முகம் தோன்றி மறைகிறது . பின் சட்டென்று காலம் பின்னோக்கி ஓடி ரிப்பன் இறுக்கிக் கட்டப்பட்ட ரெட்டை ஜடைக்காரியின் பிம்பம். மலை உச்சி விளிம்பில் நிற்கும் ஒற்றை மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுகிறேன். ஊஞ்சல் முன்னோக்கிப் போகையில் கால் கூசிச் சிலிர்க்கிறது ,கீழே ஊன்ற நிலமில்லா பள்ளத்தாக்கு. ஊஞ்சல் பின்னோக்கி வருகையில் நிலம் கண்ட நிம்மதி ஆசுவசிக்கிறது.
இப்போது பார்த்தேனே ! எங்கே அதற்குள் ஓடி மறைந்தது அது ?! வியப்பும் பதற்றமுமாக விரல்கள் கூந்தலுக்குள் அலைபாய்கின்றன. என்ன இது கண்ணாமூச்சி விளையாட்டு? என் முதுமைக்கான வருகைசீட்டு ஒரு குறும்புக்கார குழந்தைபோல ஒளிந்து விளையாடுகிறதே! இதோ பிடித்துவிட்டேன். பாதி நிறம் மாறிய ஒற்றை மயிர். மீனாக மாறிக்கொண்டிருந்தவளை பாதியில் கண்டுவிட்டது போன்ற திகைப்பும் ,எழுச்சியும் எனக்கு. மெல்லிதாகப் புன்னகைக்கிறேன் , துள்ளும் முதுமை!! ஹா ஹா .
இந்தக் கண்ணாடி இத்தனை ஞானம் பெற்றது எப்போது ?! கொஞ்சமும் உணர்ச்சி கலவாமல் , சலனமற்று காலத்தை கண்முன்னே காட்டுகிறதே ?! உன்னைவிட உண்மையானவர் யார் இங்கே ? நீ என் செல்லம். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ? ஒரு நரைமுடியை பிடுங்கினால் நிறைய முளைக்கும் எனச் சொல்வார்களே அப்படியா ? இயற்கைக்கு எதிராக நாம் இயங்க முயன்றால் அது வெகுண்டெழுந்து நம்மை தாக்கி வெல்லும் என்பது போலவா ? அந்த ஒற்றை முடியை நான் ஏற்றுக்கொண்டால் இயற்கை என்னிடம் கொஞ்சம் இணக்கமாக இருக்குமோ ?!
இந்த ஒற்றை முடி ஒரு அற்புத தரிசனம். இனி நான் என்னவாக இருக்கவேண்டும் என்ற கேள்வியை எனக்குத் தருகிறது இது. விடையையும் என்னிடமே கோருகிறது. இனி என் ஆட்டம், பாட்டம் எல்லாம் நிறுத்திக் கொண்டு சற்று நிதானமாக வாழ்க்கையை அணுகவேண்டுமா ? அல்லது தீர்ந்துகொண்டிருக்கும் வாழ்வை இன்னும் ஆர்ப்பாட்டமாக ,துள்ளலுடன் கொண்டாட வேண்டுமா ?
நான் இரண்டாவதைத் தான் தேர்ந்தெடுப்பேன். எனது ஆசைகள் கூடைக்குள் இட்டு மூடப்பட்ட ஆமைக் குஞ்சுகளாய் உள்ளே முண்டிக்கொண்டிருக்கின்றன . சில, நெரிசலில் செத்துப்போய்விட்டன. அதன் அழுகல் வாடை என்னை இம்சித்தபடியே இருக்கின்றது. சில குற்றுயிராய் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. சில வளர்சியற்றுப் போயின. சில தன் இயல்பை மீறி வளர்ந்து நிற்கின்றன.
என் தலையே பிளந்துபோகும்படி கொட்டும் அருவின் கீழ் சலனமின்றி நிற்கவேண்டும். மொத்தமாக கரைந்து காணாமல் போகவேண்டும். அடைமழை முன்னிரவொன்றில் சாலையோர டீக்கடையில் தேநீர் அருந்தியபடி புகைக்கவேண்டும். என் அத்துனை அடையாளங்களையும் தொலைத்துவிட்ட ஒரே ஒரு நாளில் இலக்கில்லாப் பயணம் வேண்டும். சத்தமாக சிரிக்கவேண்டும். சாலையற்ற வெளியில் வேண்டும் மட்டும் ஓடவேண்டும். ஊரே தேர் முன் ஆடும் ஆண்களை ரசித்திருந்த ஒரு திருவிழா நாளில் வீட்டுக்குள் அப்பாவின் துண்டை வைத்துக்கொண்டு இசைக்கு தக்கபடி ஆடி மகிழ்ந்த அந்த ஆட்டத்தை அவர்களோடு சேர்ந்து ஆடவேண்டும். இதையெல்லாம் என்று நான் நிகழ்த்திப் பார்ப்பேன்!?
இந்த ஒற்றை முடி என் மகளுக்கும் ஒரு சேதி வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் என் அம்மாவின் நரை முடிகள் என்னை அச்சம் கொள்ளச் செய்தது. என்னையும் அம்மாவையும் பிரிக்கவந்த பெருங்கோடு அது . அது எங்களை இருபுறமும் நகர்த்தியபடி போகிறது. கோட்டிற்கு இந்தப்பக்கம் அம்மாவைப் பற்றி இழுத்துக் காப்பாற்றிவிடவேண்டும். பின் இருவரும் அந்தக் கோடு அறிந்திடாத உலகிற்குள் ஓடி ஒளிந்துகொள்ளவேண்டும். அம்மாவின் மார் சூடு எவ்வளவு சுகம்!!
ஆனால் இன்று நான் அறிவேன் ஓடி ஒழிய முடியாதக் கோடு இது . என் மகள் என்னைப் பற்றி இழுக்கமுடியாது. எங்கள் இருவரிடையே இக்கோடு ஒற்றையாக விழுந்திருக்கிறது. இனி ஒன்று இரண்டாகி ,மூன்றாகிப் பெருகிப் பெருகி இறுதியில் கண் கூசும் பெருவெளிச்சமாய் , வெள்ளை வெளியாய் மாறும். அவ்வொளியில் நான் காணாமல் போவேன். கண் கூசி நீர் வழிய வழிய என் மகள் என்னைத் தேடுவாள். பின் கண்களைத் துடைத்துக் கொள்வாள் , சற்றுக்காலம் அங்கேயே நிற்பாள், பின் நகர்ந்து எதிர் திசையில் நடந்துசெல்வாள். கலையும் மேகம் காட்சிகளை மாற்றியபடியே இருக்கும். அலுப்பு தட்டாத அற்புத காட்சிகள் அவை.
*********************