Sunday, October 21, 2012

புனைதல்






உன்னை வந்தடைய முடியா
வார்த்தைகள் பெரும் வாதைகள்

உன் மௌனம் செரிக்க
இதயத்தைத் தின்னும் என் சொற்கள்
 
சர்ப்பமென நெளிந்து நழுவுகிறது
நம் காலம்

வா,

மன முகட்டில் உருளும்
எனதிந்த உயிர் ஏந்த

உன் சிறகு துடிப்பின் வெம்மையில்
முகம் புதைக்க வேண்டும்

கனன்றுத் தகிக்க வனம்  
முதல் முகில் வேண்டும்


கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்







பகல் உதிர்க்கும் அனல் பூக்களை
மாலையாகத் தொடுத்துக்கொண்டிருக்கிறேன்

கைவிட்டு விலகும் கதிரவன்
கறுத்த பாறையென
இவ்விரவை
அமிழ்த்திவிட்டு நகர்கிறான்.

அன்றொருநாள்
இடம் கொள்ளாமல்
நிரம்பி வழிந்த உன் முத்தத்தின்
ஈரம் தேடி..

சிறகு உதிர்ந்தப் பட்டாம்பூச்சியென
பதறித் தவித்து அலைகிறது
எனதிந்த இருப்பு

*****

நன்றி:உயிரோசை.