Sunday, March 22, 2020

வாடி வாசல்

இந்தத் தனித்திருத்தல் மீண்டும் என்னை புத்தகங்களின் பக்கம் திருப்பி இருக்கிறது.

சி.சு.செல்லாப்பாவின் 'வாடி வாசல்'.
பதினெட்டு பதிப்புகளைக் கண்டுவிட்ட இந்தக் குறுநாவல் இன்னும் என் போன்ற சோம்பேறிக்காக காத்துக் கொண்டுதான் இருக்கிறது.

பாதியில்விட்டிருந்த நாவலை இன்று மீண்டும் முதலில் இருந்து தொடங்கினேன்.

சிறுவயதில் எங்கள் வீட்டு வாசலில் தான் வாடிவாசல் கட்டப்படும். அனுமதியை மீறி பக்கத்து வீட்டிலிருந்து தாவி ஏறி மாடி நிறைய திமிரும் மக்கள் கூட்டமும், ஆறிப்போன பொங்கலைத் தின்றபடி என் வீட்டில் எனக்கே நின்று வேடிக்கைப் பார்க்க இடமில்லையா என்ற பெருமிதம் கலந்த அங்கலாய்ப்பும் என்று என் நினைவில் சேகரமாகியுள்ள ஜல்லிக் கட்டு வேறு. அசலான ஜல்லிக்கட்டு இந்த வாடி வாசல் நாவலில் இருக்கிறது.

அத்தனை அருமையான விவரணைகள். அந்தக் கூட்ட நெரிசலும், வெயிலும், மனிதக்குரல்களும், வியர்வை மணமும், புழுதி நெடியும் அசலான ஒரு வாடிவாசலில் நம்மைக் கொண்டு வந்து இறக்கிவிடுகிறது. காளைகள் வரத்தொடங்குகையில் அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து நம்மையும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. வெறுமனே உடல் பலமும் துணிச்சலும் மட்டுமல்ல , ஒரு மாடுபிடி வீரனின் வெற்றி எதிர்வரும் காளையின் இயல்பை, அதன் மனவோட்டத்தைக் கணித்து இயங்குவதில் இருக்கிறது. பிச்சி அத்தகைய ஒரு அசலான வீரன். தளபதி போல அவனுடன் கூட நிற்கும் மருதனும் சளைத்தவன் அல்ல.

ஜல்லிக்கட்டைப் பற்றியே அதிகப் பக்கங்களுக்கு விவரணைகள் உள்ள இந்நாவலில் ஆசிரியர் போகிற போக்கில் மனித மனங்களின் இயங்கு திசையை,அதன் நிறங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார்.

வெற்றி.. அதை நோக்கித் தான் அத்தனை மனிதனும் இயங்கிக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் வெற்றவர்களுக்கானது. தோல்வியுற்றவனின் மனம் அவனை தூங்கவிடுவதில்லை. குப்பற விழுந்தவன் மீண்டும் எழுந்து ஓடியே ஆகவேண்டும். தோல்வியில் நின்று விட்டவன் பிணத்திற்குச் சமம்.

பிச்சியும் அப்படித்தான். தகப்பன் தோற்ற இடத்தில் வெற்றியை நாட்ட வருகிறான். வருடங்கள் கடந்தபின்னும் அவன் தகப்பனின் தோல்வி அங்கே அழியாத கறையாக இருக்கிறது. அதைத் துடைத்தே ஆகவேண்டும் என்று அடுத்த தலைமுறை வருகிறது. ஆம் தோல்வி மனிதனை தூங்கவிடுவதில்லை. அவன் எளியவனோ வலியவனோ. அதனால் தான் தன் தகப்பனைக் கொன்ற ஜமீன் காளையை அடக்க பிச்சி வருகிறான். ஜமீன்தார் முன் நிமிர்ந்து நிற்க கூசும் உடல் தான், அவரிடம் யாசகம் வாங்கும் கைகள் தான், அவர் கண் நோக்கத் தாழும் விழிகள் தான், ஆனால் மனம் ஓயாது வெல்லத் துடிக்கும். வற்றிய வயிறும் தோல்வியை செரிக்க ஒப்பாது. ஜமீன் காளை, எதற்கு பொல்லாப்பு என்று ஒதுங்கும் மக்கள் மத்தியில் அவன் களமிறங்குகிறான். களத்தில் அவன் அத்தனையும் மறக்கிறான், சமூக அடுக்கில் அவன் நிலை, ஜமீன்தார், பின் விளைவுகள் அத்தனையும். அவன் கண்முன்னே தகப்பனின் தோல்வி மட்டுமே சீறிக் கொண்டு வருகிறது. அத்தனை நிதானமாக, அத்தனை தீர்க்கமாக இறங்கி அடிக்கிறான். உயிரை வெற்றிக்குப் பணயமாக வைத்து ஆடுகிறான். வெல்கிறான்..

தோல்வி மனிதனை தூங்கவிடுவதில்லை. எளியவனையே அமரவிடாத தோல்வி வலியவனை என்ன செய்யும்? பணம், செல்வாக்கு, அதிகாரம், திமிர் கொண்ட ஒரு மனிதனை தோல்வி என்ன செய்யும்? பிச்சியைப் போல் வருடங்கள் காத்திருக்க விடாது. அந்தக் கறையை அன்றே துடை. தோற்ற மனம் ஒரு மிருகமாக மாறிவிடுகிறது. அதற்கு எந்த நியாயங்களும் தேவை இல்லை. இரக்க மனம் தோற்றவனுக்கு ஆபத்து. ஜமீன்தார் வென்றவனுக்குப்  பரிசு தருகிறார். காயம் பட்ட அவனுக்கு உதவுகிறார். பின் மிக நிதானமாகத் தன் பெருமை மிகு காளையைத் தேடிப்போகிறார், பலரைக் குத்திக் கிழித்தும் ,இன்னும் ஆத்திரம் அடங்காமல் திமிரிக் கொண்டிருக்கும் காளையைப் பார்க்கிறார்,ஊரே அதன் ஆக்ரோஷம் கண்டு அஞ்சி நிற்கிறது, ஆனால் ஜமீன்தாருக்கு அது இப்போது ஒரு தோல்வியின் சின்னம் மட்டுமே. நேற்று வரை கௌரவத்தின் சின்னமாக இருந்த ஒன்று இன்று வெறும் ஒரு விலங்காக எஞ்சிவிடுகிறது. தூப்பாக்கியை எடுக்கிறார், இரண்டு முறை சுடுகிறார். அவர் கைகளில் நடுக்கமில்லை, அத்தனை உறுதி. இறந்து விழும் மிருகத்தின் குருதியில் தோல்வியை கழுவியதாய் ஒரு நிம்மதி. ஆம் தோற்றவன் வென்றே ஆகவேண்டும், வழிகள் தான் வெவ்வேறு. இந்த உலகம் இதைத்தான் கோருகிறாதா?! ஆம் அல்லது இல்லை அவரவர் விருப்பம்.

மனிதனின் இந்த ஆட்டத்தில் அந்த மிருகத்திற்கு என்ன சம்பந்தம்? அதற்கு இந்த விளையாட்டு பற்றி தெரியாது. ஊட்டப்பட்ட ரோசம் தான் அதற்கு. இல்லையெனில் அது ஒரு எளிய மிருகம். மனிதனுக்கு வரும் ரோசம் தான் ஆபத்தானது , அது தயவு தாட்சண்யம் பார்க்காது .



No comments:

Post a Comment