Thursday, December 24, 2015

பெரு உதட்டுக்காரி

முன்னேற முன்னேற தீராமல் நீளும் பெருவனம்
சிற்றோடைகள் பின்னிக்கசியும் ஈரநிலம்
நெகிழ்ந்து உள்ளிழுக்கும் ஆற்று மணல்
வண்டுகள் தள்ளாடும் மகரந்தப்படுக்கை

நீங்கள்
என்றேனும்
எரிமலையின் வாசல் நெருங்கியதுண்டா?
ஒளி தீண்டா கடல் அடி நிலம் அறிவீரா?

சிற்றெறும்புகள் மண்டியிட்டு
அருந்திச்சாகும் தேன் குளம்
என்பதாக
இப்பெரு உதட்டுக்காரியின் வரலாறு தேசம் தாண்டுகிறது

' மெனிஞ்சியோமா'



கணேசகுமாரன் அவர்களின் ' மெனிஞ்சியோமா' . வாசித்து வாரங்கள் ஆகியும் இன்னும் நாசியில் உறுத்தும் மருந்து வாடை. சந்துரு என்ற 25 வயது வாலிபனின் நோய்மையை, வலியை ,பாடுகளை சொல்லி நகரும் வரிகள் நம் ஒவ்வொருவரின் காய்ந்து ,ஆறத்தொடங்கிவிட்ட புண்ணின் பொருக்கை பெயர்த்து எடுத்து செந்நிறம் காட்டி பதற வைக்கிறது.

இவரு தலைவலி, காச்சல்னு ஒரு நாளும் ஆஸ்பத்திரி பக்கம் போனதில்ல என்று அதிசயத்திலும் அதிசயமாக நாம் வியந்து பார்க்க ஊருக்கு ஒரு பாட்டியோ, தாத்தாவோ மட்டுமே இன்று நமக்கு மிச்சம் இருக்கின்றனர். நோய் நம் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட வாழ்க்கை முறை நம் சாபக்கேடு.

ஆக , இந்தக்கதையில் காணும் வலியும், வேதனையும் நம்மால் நெருக்கமாக உணரமுடிந்த ஒன்று தான். அதனாலேயே தப்பி ஓட வழியற்று அத்தனை காட்சிகளும் அதனதன் உணர்சிகளை இரக்கமின்றி நம்மீது கொட்டிக் கவிழ்த்துநம்மை மூடுகிறது. திணறித் தவிக்க விடுகிறது.

'மூளை' . இந்த வார்த்தையை எழுதும்போதே தலை சிலிர்த்து அடங்குவதை உணர்கிறேன். சந்துருவின் மூளையில் உண்டாகியிருக்கும் கட்டியும், அது தரும் வலியும், வலிப்பும், தொடரும் சிகிச்சையும், வேதனையும் என கதை நெடுக சற்றும் கண்ணயர விடாத பதற்றம்.

சந்துருவின் ஆபரேஷனுக்கு முந்தைய பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ ஸ்கேன், படிவங்களில் ஒப்புதல் கையெழுத்துகள் இன்ன பிற...

நோயின் சதிராட்டத்தை நானறிவேன். அது தரும் வலியும், வேதனையும் நானறிவேன். 'டேய் ,ஆட்டுக்குட்டி ஒன்னு காலுக்கு குறுக்கால குறுக்கால ஓடுதுடா' என்று சொல்லியபடி துள்ளிக் குதித்த மனிதரது மூளையின் தடுமாற்றத்தை நான் கண்டிருக்கிறேன். ஒரு அரைமணி நேர தூக்கத்தை பிச்சையாக யாசித்தபடி மூளையின் முன் மண்டியிட்டுத் தவித்த கண்களுக்கு ஒரு சாட்சியாக நான் இருந்திருக்கிறேன். குறைந்தபடி இருக்கும் பிளேட்லெட்ஸ் களின் எண்ணிக்கையை கணக்கிட்டபடி அல்லாடித்தவித்திருக்கிறேன். என் குழந்தைத் தனம் மொத்தத்தையும் காவு வாங்கும் ஒரே இடம் மருத்துவமனை மட்டுமே என்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த நாவலை நான் ஏன் வாசிக்கதொடங்கினேன்?புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ஆசிரியரை கெட்டவார்த்தையில் கொஞ்சநேரம் திட்டினேன். பின் மீண்டும் படிக்கத்தொடங்கினேன்.

ஆபரேஷன் அன்று காலையில் சந்துருவுக்கு வயிற்றை சுத்தம் செய்ய இனிமா கொடுக்கப்படுகிறது.மல துவாரத்தில் ரப்பர் டியூப் மூலம் சோப்புத் தண்ணீர் செலுத்தப்படுகிறது. வலி தாங்கமுடியாமல் அப்பா.. என்று அலறுகிறான். தந்தையின் முன் நிர்வாணத்திலும், வலியிலும் குறுகிப்போகிறான்.

எவ்வளவு அடக்கினாலும் கட்டுப்பாட்டை மீறி சிறுநீர் வெளியாவதைக் கண்டு பதறி ,சிஸ்டர் சிஸ்டர் என்று கூப்பிடுகையில்,' பனிக்கொடம் உடஞ்சு நீர் வருதே இந்த டிரெஸ்ஸ கொஞ்சம் மேல சுருட்டிக்ககூடாதாம்மா?, பார் பூரா நனைஞ்சு போச்சு ' என்று சலித்தபடி உடுத்தியிருந்த ஒற்றை மருத்துவமனை ஆடையையும் சர்வ சாதாரணமாக உருவி எடுத்துக்கொண்டு நர்ஸ் சென்றபோது தான் முதல் முறையாக அழுதேன். அவர் வேறு உடை எடுத்து வரும்வரை அந்த அறைக்குள் யாரும் வந்துவிடக் கூடாதே என்று பதறியபடி கிடந்த கணம் நினைவில் இருந்து என்று, எப்படி அழியும் ? மருத்துவமனையின் கண்கள் வெறித்து நிலைத்தவை. அவைகளில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை.

சந்துருவின் மண்டை திறக்கப்படுகிறது. இந்த மூளையை அடையத்தான் எத்தனை அடுக்குகளைத்தாண்டவேண்டியிருக்கிறது!! தலையின் தோலைக் கிழிக்கையில் ரத்தம்பீறிட்டுக்கொண்டு டாக்டரின் முகத்தில் அடிக்கிறது. ஐயோ... பிறகு எங்கும் ரத்தம் ,ரத்தம்,ரத்தம்.. என் அடிவயிற்றுக்கு தன்னிச்சையாக கை செல்கிறது. ஒரு ஒரு இன்ச் கிழிச்சிருப்பாங்களாம்மா?அப்பா கேட்கிறார்.. இல்லப்பா உள்ளங்கை நீளத்துக்கும் அதிகமா கிழிச்சிருக்காங்கப்பாஎன்று நான் சொன்னபோது ஐயோ சாமி என்று சொன்னவர் அதற்குப்பின் ஒன்றுமே பேசாமல் திண்ணையில் வெய்யிலை வெறித்தபடி அமர்ந்திருந்தது நினைவில் வருகிறது. பிரசவம் ஒரு நோய் அல்ல என்றபோதும் வலியும் அவமானமும் குறைந்ததல்ல. இந்த சந்துருவின் வலியில் என் கடந்த காலம் திறந்துகொண்டு விட்டதே..இனி இந்தப் புத்தகத்தை எப்படி மூடி வைப்பது ?

ஆபரேஷன் முடிந்து ஐ .சி .யூ விற்கு இடம் மாற்றப்படும் சந்துரு தாகத்தில் தவிக்கிறான். தண்ணீர் கடுமையாக மறுக்கப்படுகிறது. இறுதியில் ரப்பர் டியூப் சொருகப்பட்ட தனது ஆணுறுப்பின் நுனியில் லேசாகக் கசியும் சிறுநீரை விரல்களில் சேகரித்து உதடுகளில் தடவுகிறான், நாவால் உதடுகளை தடவுகிறான். பெரும் ஆசுவாசம் கொள்கிறான். தாகித்த உதடுகளில் பாலைத் தீயின் புணர்வு எனவும், சிறுநீர் அத்தீயின் காமத்தை தணிப்பதாகவும் ஆசிரியர் சொல்லுகையில் சந்துருவோடு சேர்ந்து நானும் கண்களை மூடி சற்று ஆசுவசித்தேன்.

சந்துருவின் தந்தை காளிதாஸ் அவர்களின் தவிப்பும், அல்லாட்டமும் எழுத்தின் வழி அப்படியே வாசகனுக்கு கடத்தப்படுகிறது. என்னையறியாமல் கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நோயாளியைக் காட்டிலும் அவனுக்கு அருகே மௌன சாட்சியாக கையறு நிலையில் நிற்கும் பிரியத்திற்கு உரியவர்களின் வேதனையும், அவஸ்தையும் பெரிது.

சந்துருவின் தையல் பிரிக்கப்படுகிறது.முதல் முடிச்சு பிரிக்கப்படுகையில் அப்ப்ப்பா... என அலறுகிறான். ரத்தம் தலையிலிருந்து முகத்தில் வழிகிறது. அவன் தந்தை தாளமாட்டாமல் அறையை விட்டு வெளியேறிச்சென்று அழுகிறார்.
முதல் தையல் வெடுக்கென்று பிரிக்கப்படுகையில் அம்ம்மா என்று நான் அலறினேன். பிரசவ வலி தெரியாது. ஆனால் தையல் பிரிக்கப்படும் வலி அதைக்காட்டிலும் பெரிதா ? தெரியாது. ஆனால் மரண வலி . நீங்க கொஞ்சம் வெளிய நில்லுங்கம்மா என்று அம்மாவை சிஸ்டர் வெளியேற்றி விட்டார். வலி, சொல்லில் அடங்காத வலி.உடல் மொத்தமும் நடுங்குகிறது. கண்ணீர் இருபுறமும் விடாது இறங்குகிறது. ஒவ்வொரு தையல் பிரித்தபின்னும் சிஸ்டர் ப்ளீஸ் ஒரு நிமிஷம் என்று கெஞ்சுகிறேன். அவர் கையையே பிடித்துக்கொண்டு கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொள்கிறேன். பின் அடுத்த தையல் அதே மரண வலி. ஐயோ அம்மா ... தப்பிக்க வழியின்றி அந்த வலிக்கே என்னை பலியாக்குகின்றேன்.

மருத்துவமனை எப்போதும் ஒருவித பதற்றத்தில் நம்மை வைத்திருக்கிறது. பல நூறு வலிகளின் கூட்டுக் கூடாரம் அது . நாம் அமைதியுற நினைத்தாலும் சுற்றி உள்ள வலியும் ஓலமும் நம்மை விடாது துரத்தும். சந்துரு வீட்டிற்கு திரும்பிய நாளில் சொல்லமுடியாத நிம்மதி நமக்கு வருகிறது. வீட்டிலும் அவன் வலிப்பு வந்து விழுகிறான், ஒரு கைவராமல் போகிறது. பார்க்குக்கு சென்று வலிப்பு கண்டு யாருமற்று விழுந்து கிடந்து சேரும், ரத்தமுமாக வீடு வருகிறான். என்றபோதும் மருத்துவமனை தந்த பதற்றம் இங்கே எனக்கு இல்லை. என்னவோ மனம் கொஞ்சம் தைரியமாக இருந்தது.

இறுதியில் சந்துரு முற்றிலும் குணமாகும் அல்லது அப்படி நம்பிக்கை ஏற்படும் நாளில் பெண் ஒருத்தி காதலுடன் வருகிறாள். அங்கே குறிப்புக்காக என்று சிலபக்கங்களை காலியாக விட்டுவிட்டு கதையை முடிக்கிறார் ஆசிரியர். இந்த ஆசிரியரை என்னசெய்யலாம்?? வலியை மட்டும் அணுஅணுவாக வாசகனுக்கு நிதானமாகக் கடத்தும் ஆசிரியர் சந்தோசத்தை நம் கற்பனைக்கே விட்டுவிட்டு போவது என்ன ஒரு வில்லத்தனம் ? அதுவும் வெறும் நான்கே பக்கம். சொல்லாட்டிப்போங்க.. நேசமும், கருணையும்,காதலும், தாய்மையும் பொங்கிப்பூரிக்கும் சந்துருவின் வாழ்வை வாசகர்கள் நாங்கள் செதுக்குவோம். மெல்லிய மலர்கள் கொண்டு வண்ணமயமான ஒரு உலகத்தை அவனுக்காய் நாங்கள் உண்டாக்குவோம். அங்கு வலிகளே இல்லை...

பின் குறிப்பு :
(இந்த நாவலில் முன் பக்கத்தில் ஆசிரியர், நாவல் உருவாக தன்னோடு உழைத்தவர்கள், தோள் கொடுத்தவர்கள், உற்சாகமூட்டியவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். அதுவும் எப்படி ? முத்தங்களாக smile emoticon வேறு வேறு சுவைகளில் முத்தங்கள். வாசிக்கையில் மனம் மிகுந்த சந்தோசம் கொண்டது. இந்த முத்தம் தான் எத்தனை அற்புதமான மொழி!! )

ஒரு துண்டு வானம்



வேட்டு அதிரும் பூமியிலும்
சுள்ளியுடன் பறக்கும் பறவையை
வானம் காண்கிறது

காடு பற்றி எரிகையிலும்
எங்கோ சில மொட்டுகள்
மணத்துடன் அவிழ்கின்றன

உயிர் பதுங்கும் இருளுக்குள்ளும்
ஒரு மெல்லிய முத்தம்
பகிரப்படுகிறது

சப்பாத்துக்கள் நெரியும் நிலத்திலும்
ஒரு மண்புழு
சிரத்தையுடன்
மண்ணைப் புரட்டிக்கொண்டுதான் இருக்கிறது

ஒரு சொல்லின் நெற்றியில்
குண்டு துளைக்கையில்
எங்கோ ஒரு வாக்கியம்
உருவாகிவருகிறது
****
சுஜாதா செல்வராஜ் ,
பெங்களூர் .