Tuesday, May 6, 2014

சிறகுகள்

எப்போது ஒன்று மறுக்கப்படுகிறதோ அப்போது தான் அதன் மேல் அதிகப்படியான  ஆசையும், ஆர்வமும் தூண்டப்படும். அதுவரை தூக்கம் என்பதை தினசரி நிகழ்வாக கடந்துபோய்க் கொண்டிருந்த எனக்கு பத்தாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்த நாளில் அபூர்வமாய் கிடைக்கும் ஒன்றாக ஆனது. நாள் முழுதும் வகுப்பில் படித்தது போதாதென்று மாலையில் பள்ளி முடிந்து ஒரு டீ சாப்பிட்ட கையோடு மீண்டும் பாடம் தொடங்கிவிடும். இரவு உணவு இடைவேளை முடிந்து மீண்டும் பாடம். அதுவும் அதே வகுப்பறைக்குள். அமைதியாக படித்தால் நாம் நிஜமாகவே படிக்கிறோமா என்று சந்தேகம் வரும் ஆகையால் வாய்விட்டு வேறு படிக்கவேண்டும். கத்தி கத்தி படித்து,களைத்து, உறக்கத்தை கண் நிறைய தேக்கிக்கொண்டு சுவர் கடிகாரத்தை பரிதாபமாக பார்த்து ,நகராத அதன் முட்களை சபித்தபடி இருப்போம். கடிகாரத்தை நாம் பார்ப்பதை ஆசிரியை  பார்த்துவிட்டால் அவ்வளவு தான், அந்த ராத்திரியில் அடி பின்னி எடுத்துவிடுவார். அன்று மேலும் அரைமணி நேரம் அதிகம் படிக்கவேண்டிவரும்.இப்படி தூக்கம் தொலைத்த ஒரு நாளில் தான் நடந்துகொண்டே தூங்கும் கலை தானாக என்னை வந்து சேர்ந்தது. நடந்தபடி படிக்க ஆசிரியை சொல்லும் நேரங்களில் புத்தகத்தை கையில் திறந்து வைத்துக்கொண்டு, கண்களை மூடி குனிந்தபடி நடக்கப்பழகி இருந்தேன். என் தோழிகளில் நான் தான் சிறியவள் ஆகையால் கொஞ்சம் செல்லம், கொஞ்சம் கண்டிப்பை தரும் தோழிகள். அய்யோ சுஜி தூங்கறாடி என்று பதறி, ஆசிரியை என்னை பார்க்காத வண்ணம் என்னை மறைத்தபடி குறுக்கே நடப்பதும், கையை மெதுவாக தொட்டு உலுக்குவதுமாக போராடிக்கொண்டிருப்பார்கள். இரவு 11 மணிக்கு ஓகே கேர்ள்ஸ் க்ளோஸ் யுவர் புக்ஸ் என்ற வாக்கியத்தை கேட்கும் நிமிடமே வாழ்நாளில் உச்சபட்ச சந்தோசமும், நிம்மதியும் தரும் நேரமாக அப்போது இருந்தது. சுருட்டி வைத்த படுக்கையை அப்படியே ஒரு எத்து எத்திவிட்டு வேரோடு சாயும் மரம் போல விழுந்தால் அடுத்த அரைமணி நேரத்தில் காலை 5 மணி ஆகி இருக்கும். அடப்பாவிகளா அதுக்குள்ள விடிஞ்சுடுச்சா ? பத்தாம் வகுப்பு ஆசிரியையே வந்து எழுப்புவதால் ஒரு நொடி கூட தாமதிக்க வழி இல்லை.அன்று தொடங்கிய தூக்கத்தின் மீதான விருப்பம் இன்றுவரை தீரவே இல்லை. கல்லூரியில் விடுதி அறையில் எல்லோரும் செமஸ்டருக்கு விடிய விடிய படித்துக் கொண்டிருக்கையில் நான் மட்டும் நடுவில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பேன். விடிய விடிய படித்தவளும் நானும் ஒரே சதவிகிதத்தில் தான் மதிப்பெண் வாங்குவோம் ஆகையால் நீ தெரியாம படிக்கிற, ஹாலிடேஸ் ல வீட்ல படிச்சுட்டு வர என்று என்மேல் அவர்களுக்கு எப்போதும் சந்தேகம் உண்டு. இன்றும் எத்தனை மன பாரமானாலும் அரை மணி நேரம் நன்றாக அழுது தீர்த்துவிட்டு, முகம் கழுவிக்கொண்டு போய், நிமிடத்தில் படுத்து உறங்கிப்போவேன்.என் மகள் 10 ஆம் வகுப்புக்குள் நுழைத்திருக்கிறாள். ஏப்ரல் 1 மீண்டும் பள்ளி தொடங்கிவிட்டது. மதியம் வரை வகுப்பு, பின் நீச்சல் பயிற்சி முடிந்து வந்ததும் அடுத்த ஒருமணி நேர ஓய்வுக்கு பின் மீண்டும் கணித, அறிவியல் வகுப்புகள் என்று ஓடத்தொடங்கிவிட்ட அவள் இன்று அம்மா , ஸ்விம் பண்ணினதே டயர்டா இருக்கு மா, i want to sleep என்று சொல்லி வண்டியில் போகும்போதே தோளில் சாய்ந்து கொண்டாள். சரி வீட்டுக்கு போய்விடலாமா என்றால், இல்ல இல்ல கிளாஸ் மிஸ் ஆகிடும் என்று சொல்லி கண்களில் தூக்கத்தை ஏந்திக்கொண்டே வகுப்புக்குள் ஓடி விட்டாள். பார்க்கவே பாவமாகவும், மிகுந்த குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. தமிழ் நாட்டை ஒப்பிடுகையில் இங்கு கொஞ்சம் கெடுபிடி குறைவு தான் என்றபோதும் இப்படி நுரை தள்ள ஓடி நாம் சேரப்போகும் இடம் எது? அது தான் வாழ்தலின் அர்த்தம் காணும் இடமா ? நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைத்தபின்னும் நம் உள்ளே புரண்டுகொண்டிருக்கும் வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்ப ? முகத்திற்கு முன்னே கட்டித்தொங்கவிடப்பட்ட கேரட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் குதிரைக்கு பாதையோர பசும் புற்கள் எப்படிப் புலப்படும்?!                                                   *****************

No comments:

Post a Comment