Tuesday, August 7, 2012

பிரியத்தின் இசை







அணை ஓர சிற்றலையாய் -என்
கரை மோதும் உனதன்பை
ஆழிப்பேரலையாய்
அள்ளி எடுத்து  உண்கின்றேன்

நூலின் நுனி என்னிடத்தில் என்றபோதும்
உயர உயர பறந்து விலகும்
காற்றாடியாய் -என்
தனிமையை பதற்றப்படுத்துகிறாய்

நடுங்கும் என் கரை உடைய
புன்னகை ஒன்றை வீசி எறி

வா...
வனம் தொலைவோம்


நன்றி உயிரோசை 

நிசப்தம் உடைக்காதே






அட்டவணையில் சிறை சிக்கி

அழுகிறது நம் காலம்...

கட்டம் கட்டமாய் நகர்ந்து சென்று அடையப்போகும்
உனக்கும் எனக்கும் அறியா அம்முடிவில்
வாழ்தலின் அர்த்தம் தெளிவு பெறுமோ!

அட்டவணை கிழித்தெறிந்து
அம்மணம் தரித்துக்கொண்டு
ஆதிக்கே திரும்பிச் செல்லுதலெனும்
ஒரு பேரர்த்தமுள்ள
அல்லது
ஒரு அபத்தம் நிறைந்த
எனது ஆசையினை
எதிர் நிற்கும் உன்னிடம்
எங்கனமாவது வெளிக்கொணர முனைந்தால்...

எனது கரங்களை இறுகப் பற்றிக்கொள்வாயா
இல்லைஇனி எப்பொழுதுக்குமென
எனைவிட்டு தொலைந்து போவாயா!?

நன்றி உயிரோசை.