Sunday, January 3, 2016




ஒரு குட்டி அருவி என் தலையில் மட்டும் கொட்டியது போல, அறை நிறைய வண்ண பலூன்களைக் கண்ட குழந்தையைப் போல  மனம், சொல்லவொண்ணாக் குதூகலத்தில் தள்ளாடுகிறது.
கடவுளுக்கும் எனக்குமான உறவு என்பது அனைவரின் நலனும், எல்லாவற்றுக்குமான நன்றியும் என்ற இருவரியில் நிற்பதே. 
எந்த ஒரு எதிர்பார்ப்புமே இதயத்தை வந்து சேர்கையில் கூடவே துன்பம் என்னும் பெரும் பாறாங்கல்லை உடன் உருட்டி வந்துவிடுகிறது. ஆகவே சிறிய ஆசைகளைக் கூட எண்ணி ஏங்கி , பின் பதற்றத்துடன் கடந்துவிடவே மனம் எத்தனிக்கிறது. 

இந்தப் புது வருடத்திலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இன்றைய சந்தோசமும்,நிம்மதியும் எறும்பின் வாய்க்கு கிடைக்கப்பெற்ற உணவென மிகச் சிறிய, ஆனால் நிறைவான ஒன்று. 

ஒரு பெண் இறந்து போகையில் அவளோடு சேர்ந்து அவளது, சொற்களில் கூட அகப்படாத ஓராயிரம் ஆசைகளும் செத்து மடிகின்றன. என் அம்மா ஒரு நாள் என்னிடம் , சுஜி முன்னல்லாம் நெனப்பேன், வேட்டி சட்டை போட்டுக்கிட்டு, தலை முடியை லூசா விட்டுகிட்டு ஜாலியா ரோட்ல அரட்டை அடிச்சுகிட்டு போகணும்னு, என்று தனது மிகச் சிறிய ஆசையை குறு வெட்கத்துடன் சொல்கையில் அவளது பேத்தி பகல் கனவுகளில் திளைக்கும் வயதை எட்டி இருக்கிறாள். பெண்ணின் வாழ்க்கையில் நிகழ்வுகள் என்பது அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே நடந்து முடிகிறது. எந்த அற்புதங்களையும் அவள் வாழ்வில் எதிர்கொள்வதில்லை. ஆகவே தான் ஆண்களைக் காட்டிலும் பெண் அதிக கனவுகளை வளர்ப்பவளாக, அதிலேயே நிறைவும் கண்டு ,பின் ஈரம் கசியும் பசிய கனவுகளை வேருடன் வெட்டி வீசுபவளாக இருக்கிறாள்.

நானும் விதி விலக்கல்ல. ஆசைகளை பெரும் பட்டியலாக இட்டு ,சுருட்டி ஒரு பேழைக்குள் போட்டு வைத்திருக்கிறேன். என்னோடு எரியூட்ட ஏதுவாய் அதை நித்தம் சுமந்து அலைகையிலும், இருப்பதில் நிறைவுருவதாய், எறும்பு, உணவு, நிறைவு என்று முகமூடியை அவசரமாக அணிந்துகொள்கிறேன். 

என் பயணத்தில் நான் வெகு தூரம் கடந்து வந்துவிட்டேன். இன்னும் கடக்க கால் வாசி தூரம் மட்டுமே மிச்சம் என்பதறிவேன். என்றாலும் என் மனம் ஒரு பரதேசி என என் கிராமத்து வீதிகளிலேயே அலைந்துகொண்டு இருக்கிறது. என் பால்யம், பள்ளி, கல்லூரி நாட்களை நித்தம் புரட்டிப்புரட்டி  பழுப்பேறிய அதன் பக்கங்கள் நைந்துகொண்டிருக்கின்றன. அங்கே எனக்கு ஒரு ஆசை உண்டு. லதா. என் பள்ளி, கல்லூரி நாட்களில் தூய நேசத்தை கையளித்தவள். அவளைக்காணவேண்டும். குறைந்த பட்சம் அவள் நலமுடன் இருப்பதாகவேனும் அறியவேண்டும் என்ற எளிய ஆசை. உலகம் ஒரு கைக்குள் அடங்கிவிட்டதாக நம்பும் இந்த இணைய உலகில் ஒரு குருடியைப்போல ஏங்கிக்கிடந்தேன். இன்று 16 வருடங்களுக்குப் பிறகு அவள் குரலைக் கேட்டுவிட்டேன். 

அற்புதங்களை நிகழ்த்த பரமாத்மா வருவதில்லை. எளிய மனிதர்களின்  மிக எளிய மனங்கள் அதை சாத்தியப் படுத்திவிடுகின்றது. மாட மாளிகைகளும், பட்டு விரிப்புகளும், தங்க சிம்மாசனமும் தரமுடியாத மனநிறைவை ஜன்னலில் வந்தமர்ந்து மூக்குரசும் ஒரு சிட்டுக்குருவி தந்துவிடுகிறது. நிறைந்து நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் அத்தனை கசடுகளும் வழிந்து வெளியேறிவிட்டது போல மனம் பளிச்சிடுகிறது. கடவுளுக்கு நன்றி.

                         " குறையொன்றும் இல்லை"