எங்கள் ஊரில் ஒரு லைப்ரரி இருந்தது . பற்றாக்குறை வெளிச்சத்துடன் , மர பெஞ்சுகள் போடப்பட்டு , பழைய கட்டிடத்தில் இயங்கிவந்த அது, ஒரு புராதன லுக்கில் இருக்கும்.போஸ்ட் ஆபீஸ் வுடன் இணைந்த கட்டிடம் அது .போஸ்ட் மாஸ்டர் தான் லைப்ரரிக்கும் பொறுப்பு .
அண்ணனும் மாமாவும் அடிக்கடி அங்கு சென்று வாசித்துக்கொண்டிருப்பார்கள் .நாங்கள் தெருவில் திரிந்துகொண்டிருக்கும் வேளைகளில் லைப்ரரியை கடக்க நேர்கையில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்ப்போம். போஸ்ட் மாஸ்டர் 'படிக்க வரீங்களா ?' என்று கேட்டால் இல்லை என்று தலையாட்டிவிட்டு ஓடிவிடுவோம் . டியூஷன் போவது போல, ஒருமுறை நுழைந்து மாட்டிக்கொண்டால் அப்புறம் தப்பமுடியாது என்பது போல அந்த லைப்ரரி அச்சம் தருவதாக இருந்தது .வாசிப்பு என்பது பாடப்புத்தகம் போலவே ஒரு சுமை என்று நாங்கள் நம்பியிருந்தோம்.
ஆறாம் வகுப்பு சென்றபின் அச்சம் குறைந்து ஆர்வம் பிறந்தது. அதுவும் வாசிப்பு ஆர்வம் அல்ல . அங்கே நுழைவது ஒரு சாகசம் என்பது போல. நானும் தோழன் ,தோழிகளும் கூட்டமாக லைப்ரரிக்குள் நுழைந்தோம் . அந்த புழுக்க வாசனை ,கைவிடப்பட்டது போன்ற அதன் தோற்றம் பதற்றம் தொற்றிக்கொண்டது . அங்கிருந்த நோட்டில் கையெழுத்து போட்டுவிட்டு பின் புத்தகங்களை எடுத்து படிக்கலாம் என்றார் போஸ்ட் மாஸ்டர். நோட்டின் அருகே ஒரு நீளமான பென்சில் அரைஞான் கயிறு போன்ற ஒரு கயிற்றில் பிணைத்து கட்டப்பட்டு இருந்தது. அவரவர் பெயர்களை வரிசையாக எழுதினோம் . ஒரே நாளில் பெரிய மனிதர்கள் ஆகிவிட்டதன் அறிகுறி அனைவர் முகங்களிலும். கைக்கு கிடைத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு வரிசையாக பெஞ்சுகளில் அமர்ந்து வாசிக்கத்தொடங்கினோம்.
அவ்வளவு தான் சாகச த்ரில் எல்லாம் அத்தோடு வடிந்துவிட்டது. இப்போது, இந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது என்ற கவலை பற்றிக்கொண்டது. ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறோம் ஜனங்கள் நடந்துகொண்டும் ,சைக்கிளிலும் தெருவில் சுதந்திரமாக இருக்கின்றனர் .நாங்கள் நன்றாக மாட்டிக்கொண்டோம் . உடனே வெளியே போனால் போஸ்ட் மாஸ்டர் திட்டுவாரோ ? இங்கே வந்திருக்கவே கூடாது .எல்லோரும் பலியாடுபோல புத்தகங்களோடு அமர்ந்திருந்தோம் . போஸ்ட் மாஸ்டர் உள்ளறைக்குள் போனார் . முதல் ஆள் புத்தகத்தை வைத்துவிட்டு ஓட்டம் எடுத்ததும் நாங்கள் அனைவரும் பின்தொடர்ந்து தெறித்து ஓடினோம். காற்று எவ்வளவு சில்லென்று முகத்தில் மோதுகிறது ! அநேகமாக காற்றும் எங்களுடன் கூட ஓடிவந்திருக்கும் என்று நினைக்கிறேன் .அதன் பிறகு எங்கள் கையெழுத்து அங்கு பதிவாகவே இல்லை .
என் வாழ்வில் வெகு தாமதமாகவே லைப்ரரிக்குள் மீண்டும் நுழைந்தேன் .அதுவும் தோழி வீட்டில் இருந்த சிறிய லைப்ரரி. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்துக் கடந்துகொண்டிருந்த நாட்கள் கொஞ்சம் வேகமெடுத்தது அங்குதான்.
என் பிள்ளைகள் சீக்கிரமே வாசிக்கத்தொடங்கி விட்டனர். இப்பெருநகரில் அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் ஏராளம் கொட்டிக்கிடக்கின்றன. பள்ளிகளும் லைப்ரரிக்கென்று ஒரு பீரியட் ஒதுக்கி வாசிப்பைப் பழக்குகின்றனர் . ஆனாலும் எங்கள் ஏரியாவில் நான் லைப்ரரியை கண்டதில்லை .மூன்று நாட்களுக்கு முன் சஞ்சு ஒரு லைப்ரரியை கண்டுகொண்டாள். தினம் கடக்கும் சாலையில் மாடியில் சிறிய அறையில் இருந்த பிரைவேட் லெண்டிங் லைப்ரரியை நான் கவனித்திருக்கவே இல்லை . மூன்று நாளாக இதே நினைப்பாக கிடந்து இன்று மெம்பராக இணைந்துவிட்டாள். அங்கேயே அமர்ந்து படிக்க வசதி இல்லை என்பதொன்றே குறை அவளுக்கு .
தெருவுக்கு தெரு பீட்சா ,பர்கர் , பானிபூரி கடைகளும் பப்களும் நிறைந்த இந்த நகரில், ஒரு ஆள் மட்டுமே ஏறிச் செல்லக்கூடிய படிக்கட்டுகளுடன் சிறிய அறையில் பொக்கிஷம் போல இலக்கியங்கள் காத்திருக்கின்றன . லைப்ரரி நடத்துபவரிடமும் இதைச்சொன்னேன். மனதாரப் பாராட்டினேன். முகம் மலர்ந்த அவர் புன்னகையில் ஒளி கசிந்தது .
********************