அங்கு குழந்தைகள் அச்சமற்று இருந்தோம். பெற்றோர்கள் பிள்ளைகளை ஊர் எல்லைவரை அனுமதித்திருந்தனர் .
அண்ணன், வீட்டில் அமைதியாகப் படித்துக்கொண்டிருக்க, நான் விளக்கு வைக்கும் வரை ஊர்சுற்றிவிட்டு முழங்கால் வரை தெருப்புளுதியை வாரிக்கொண்டு வீடுவந்து சேருவேன். அம்மா வாய்நிறைய வசையுடன் அடிக்கவருகையில் ஒரே ஓட்டமாக படிகளில் தாண்டிக்குதித்து அருகில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு ஓடிவிடுவேன். அப்பா வீட்டுக்கு வந்ததும் ஆள் அனுப்பி அழைத்துவருவார்கள். அப்பா முன்னால் என்னை யாரும் தொட்டுவிட முடியாது . அதனால் அம்மா கொஞ்சநேரம் குற்றப்பத்திரிக்கை வாசித்துவிட்டு சரி சாப்பிட வா என்பாள்.
அன்றும் நான் என் பட்டாளத்துடன் விளையாடப்போனேன். ஒருத்தி சொன்னாள் உடைந்து கிட்டத்தட்ட குட்டிச்சுவராக நிற்கும் அந்த வீட்டின் கூரை இடுக்கில் பூனை குட்டிபோட்டிருக்கிறது என்று. எங்கள் எல்லோருக்கும் ஆசை அதை பார்க்கவேண்டும் என்று. பூனைக் கடித்துவிடுமோ என்று பயம்வேறு. கொஞ்சம் தள்ளி இருந்த சுவர்மேல் ஏறி ஒவ்வொருவராக பார்க்கமுடிவு செய்தோம். மூணுகுட்டி இருக்கு, குட்டி தூங்குது, வெள்ளையா இருக்கு, பூனை பாக்குது சத்தம்போடாத என்று ஒவ்வொருவராக ஏறிப்பார்த்து சொல்லிக்கொண்டிருக்க ,என் முறைக்காக நான் தவித்துக்கொண்டிருந்தேன்.
இப்போது என்முறை. ஆவலும், பயமும் மிக அந்த செந்நிற மண்சுவற்றைப்பற்றி மெல்ல ஏறினேன். பூனைக்குட்டிகள் முண்டிக்கொண்டிருந்தன. தாய் வெறுமனே என்னைப்பார்த்துக்கொண்டிருந்தது. சிலநிமிடங்கள் தான், தொம் என்ற சத்தத்துடன் நான் கீழ்நோக்கி சரிந்துகொண்டிருந்தேன். மண்சுவர் உடைந்து ,கட்டி மண் குவியலும் நானுமாக மொத்தமாகக்குவிந்திருந்தோம்.
நான் கை, கால் எல்லாம் சிராய்ப்பில் ரத்தம் ஒழுக நொண்டிக்கொண்டே அங்கிருந்து எல்லோருடனும் வெளியேறினேன். எதிரே என் அத்தை வீடு அப்போது தான் அஸ்திவாரம் எழுப்பப்பட்ட நிலையில் இருந்தது அங்கு போய் மறைவாக உட்கார்ந்துகொண்டு என் காயங்களை எல்லாம் கவலையோடு ஆராய்ந்தோம். எனக்கு வலியைக் காட்டிலும் அம்மாவுக்கு தெரிந்தால் அடி விழுமே என்ற கவலைதான் அதிகம் இருந்தது. அம்மாவிடம் சொல்லாமல் மறைப்பது என்று ஒருமனதாக முடிவானது. வலி முகத்தில் தெரிகிறது , நடையில் தெரிகிறது. அத்தனையும் வீட்டுவாசலில் நுழைகையில் மறைத்திருந்தேன்.
வீட்டில் பாத் ரூமுக்குப் போய் கைகால்களில் காயத்தில் ஒட்டியிருந்த மண்ணையெல்லாம் கழுவிவிட்டு நேராகச்சென்று படுத்துவிட்டேன். அம்மா சாப்பிடக்கூப்பிட்டாள். அத்தை வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாகச் சொல்லி கண்களை மூடிக்கொண்டேன்.
எத்தனை யோசித்தும் அந்த காயம் எப்போது ஆறியது, மறுநாள் என்னசெய்தேன் என்று ஞாபகமே வரவில்லை. இத்தனை வருடம் கழித்து இப்போது தான் கொஞ்சநாளுக்கு முன் அம்மாவிடம் இதை சொன்னேன்.
மறைக்கப்படும் காயங்களுக்கு மருந்து இடப்படுவதில்லை. மௌனமே காயங்களை விசிறிக்கொண்டிருக்கின்றது. சில காயங்கள் எப்போது ஆறியதென்றறியாமல் மறைந்துபோகின்றன. சில காயங்கள் புரையோடி உயிரைத் தின்கின்றன. எப்படியாகினும் மறைக்கப்படும் காயங்கள் என்றும் மறப்பதற்கில்லை.