Sunday, April 27, 2014

நீர்ச்சுழி




பூனைகளுக்கு அனுமதி இல்லை

என்று சொல்லும் எனது வீட்டின்

முகப்புப் பலகை

வியப்பூட்டுவதாய் இருக்கிறது உனக்கு



வண்ணப்பூச்சுடன் விறைத்து நிற்கும்

இச்சுவர் போல் அல்லாது

பூனையின் உடல்

மிகவும் மென்மை என்கிறாய்



மீசை நனைய உறிஞ்சிக் குடிக்க

இவ்வீட்டின் மௌனத்தை

ஒரு கோப்பையில்

நிறைத்துத்தந்தால்

போதும்

அதற்கு என்கிறாய்



நடுச்சாமத்தில்

பதுங்கி நகரும் அதன் பாதங்களும்

ஒளிர்ந்து நிலைக்கும் அதன் விழிகளும்

சுட்டிக்குழந்தையின் சாயல் என்றும்



அதன் நகக்கீறல்கள்

மஞ்சள்பத்து வேண்டி நிற்கும்

பின்னிரவு ரணங்களை

ஞாபகப்படுத்தாது எனவும்

உறுதி அளிக்கிறாய்



மேலும்

என்இரு பாதங்களுக்கிடையில்

இறங்கும் வெப்பத்தில்

அதன் மிகமென்மையான உடல் 

உயிர் வளர்க்கும் எனவும்..



சமீபிக்கத்தொடங்கினேன்

சமையலறை புகை போக்கியில்

சேகரித்த வர்ணத்துடன்

எழுத்துக்கள் வெளிறத்தொடங்கிய

அறிவிப்புப்பலகை நோக்கி



****

செ.சுஜாதா.

நன்றி : உயிர் எழுத்து இதழ்.



Monday, April 14, 2014

சயனித்திருக்கும் எண்கள்




அகர வரிசையில் 
அடுக்கப்பட்ட எண்களில் 
தலை உயர்த்தி தனித்து நிற்கின்றன 
ஒரு முறை கூட அழைக்கப்படாத 
அவ்எண்கள் 

ஒரு முறை கூட 
தீ விபத்து நிகழ்ந்திராத 
புராதன நூலகத்தின் 
செந்நிற தீயணைப்பான்கள் அவை 

ஒரு விரல் தொடுகையில் 
உயிர் பெற்று எழுந்து வர 
மாயப்புன்னகை ஒன்றை 
நெளியவிட்டபடி 
சயனித்து இருப்பவை.. 

இவை வெறும் எண்கள்தானா ?

ஒரு நட்பை 
ஒரு காதலை 
ஒரு துரோகத்தை 
ஒரு ஆச்சர்யத்தை 
ஒரு நம்பிக்கையை 
ஒரு புறக்கணிப்பை 
ஒரு ஞானத்தை 
தரக்காத்திருப்பவை 

திறக்கப்படாத பரிசுப்பெட்டிகள் 
ஆர்வமும் அவஸ்தையும் 
நிறைந்தவை 

ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் 
பழுத்தக் கிழவியின் 
வெற்றிலை உரலின் கனத்தை 
விரல்களில் ஏற்றியிருக்க 

தொடும் தூரத்தில் 
மிளிர்ந்தபடி இருக்கும் 
அழைக்கப்படாத 
அவ்எண்கள் 


****
செ.சுஜாதா.
நன்றி : உயிர் எழுத்து.