சில இடங்கள், சில நிகழ்வுகள், சில பொருட்கள் நமக்கு யாரையாவது நினைவு படுத்திவிடும். மழை பெய்தால் எனக்கு உடனே என் அம்மா வீடு ஞாபகத்திற்கு வரும். சிறு பிள்ளையாய் நான் விடுதியில் தங்கி படிக்கச் சென்ற நாள் முதல் எனக்கு மழை, வீட்டின் நினைவையும்,அம்மாவின் அருகாமையை தேடிப் பதறும் ஒரு பாதுகாப்பற்ற மனநிலையையும் உண்டு பண்ணும். அதே போல இப்போது சில காலமாக நான் ஆம்லெட் செய்யும் பொழுதுகளில் எல்லாம் எனக்கு அப்பாவின் ஞாபகம் தவறாமல் வந்துவிடுகிறது.
அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அன்று அப்பா நல்ல போதையில் இருந்தார். அம்மா தோட்டத்திற்கு போயிருந்தார்கள். அப்பா ப்ரிட்ஜில் இருந்து இரண்டு முட்டைகளை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் ஆம்லெட் போட்டுத் தரும்படி சொன்னார். எனக்கு அவர் மேல் கடும் கோபம். குடிச்சுட்டு வந்து எவ்ளோ திமிர் இருந்தா என்னை ஆம்லெட் போட்டுத் தர சொல்லுவார்? என்னை என்ன நினைச்சார் அவர் என்று கோபத்தில் அவரை திட்டினேன். அவர் 'சுஜி கண்ணு தயவு செஞ்சி போட்டு தா கண்ணு, அம்மா வேற காட்டுக்கு போய்ட்டா இல்லைனா அவளயாவது கேட்பேன்' என்று கிட்டத்தட்ட என்னிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.
சொந்தமாக தண்ணியை கூட எடுத்து குடிக்கமாட்டார் அவர், எனவே அவராக போட்டுச் சாப்பிடவும் வழி இல்லை. சின்ன கிராமத்தில் நினைத்த நேரத்தில் எந்த கடையில் ஆம்லெட் கிடைக்கும்? ஆகையால் வேறு வழியும் இல்லாமல் ஒரு குழந்தையைப் போல் என்னிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். நான் கொஞ்சமும் இறங்கி வராமல் அவரை மீண்டும் மீண்டும் திட்டிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 10 நிமிடமாக என்னிடம் போராடிப் பார்த்துவிட்டு கடைசியில், 'சீ ..நீயெல்லாம் ஒரு பிள்ளையா' என்று திட்டிவிட்டு முட்டையை அப்படியே உடைத்து கீழ மேல எல்லாம் சிந்திக்கொண்டு குடித்துவிட்டு எழுந்து போய் விட்டார்.
என் திருமணத்திற்கு பிறகு அவர் குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவரின் நினைவு வெகுவாக தப்பிப்போன தருணத்தில் பிராந்தி என்று சொல்லி அவரிடம் ஆப்பிள் ஜூசை கொடுத்தபோது அவர் எவ்வளவு ஆசையாக குடித்தார்!! குடிப்பவர்களுக்கு சிகரெட், குட்கா என்று மற்ற கெட்ட பழக்கங்கள் சிலவும் இலவச இணைப்பாக சேர்ந்திருக்கும். ஆனால் அப்பா குடியை தவிர வேறு எதையும் தொடாதவர். குடிப்பவர்களைக் கண்டால் நின்றுகூட பேசாதவர் எப்படி அதில் மீளமுடியாமல் விழுந்தார் என்பது விதி.
குடியை வெல்ல நினைத்து மீண்டும் மீண்டும் பரிதாபமாக தோற்றுப்போன அவரிடம் எனக்கு ஒரு நொடிப்பொழுதும் வெறுப்பு வந்ததே இல்லை. இன்றும் குடித்துவிட்டு தள்ளாடி நடப்பவர்களை பார்த்தால் சொல்லமுடியாத இரக்கமும், பரிதாபமுமே எனக்கு தோன்றுகிறது.
இப்பொழுதெல்லாம், அந்த ஆம்லெட்டை தான் நான் போட்டுக் கொடுத்திருக்கக்கூடாதா? என்ன எனக்கு அப்படி ஒரு பிடிவாதம்? அதனால் என்ன சாதித்தேன் நான்? என்று மனம் ரொம்பவும் வேதனைப் படுகிறது. அவரின் சின்ன அந்த நேர சந்தோசத்தை உடைத்துவிடுவதில் எனக்கு அப்படி என்ன ஒரு குரூர மன திருப்தி? அவர் சொன்னதுபோல நானெல்லாம் ஒரு பிள்ளையா ?
என் அப்பாவைப்போல என்னை நேசித்தவர்கள் இல்லை, அவரைப்போல நல்லவர்கள் இல்லை , என் மனதில் அவரது இடத்தை நிரப்பக்கூடியவர்களும் இல்லை. அவரது
குடியால் நாங்கள் இழந்தது ஏராளம் ஆனாலும் அனைவரையும் நேசிக்கும் இதயமும், எளியவர்களுக்காக இறங்கும் குணமும், எந்த நிலையிலும் நியாயம் தவறாத பண்பும் எல்லா இழப்புகளையும் புறம் தள்ளும். அவரை நாங்கள் இழந்துவிட்டதாக எண்ணவே இல்லை. அவரின் குருதி என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் கொஞ்சம் மதுவின் வாடை இருக்கிறது.
**********************