Sunday, February 23, 2014

பரிசுத்தம்:



சில இடங்கள், சில நிகழ்வுகள், சில பொருட்கள் நமக்கு யாரையாவது நினைவு படுத்திவிடும். மழை பெய்தால் எனக்கு உடனே என் அம்மா வீடு ஞாபகத்திற்கு வரும். சிறு பிள்ளையாய் நான் விடுதியில் தங்கி படிக்கச் சென்ற நாள் முதல் எனக்கு மழை, வீட்டின் நினைவையும்,அம்மாவின் அருகாமையை தேடிப் பதறும் ஒரு பாதுகாப்பற்ற மனநிலையையும் உண்டு பண்ணும். அதே போல இப்போது சில காலமாக நான் ஆம்லெட் செய்யும் பொழுதுகளில் எல்லாம் எனக்கு அப்பாவின் ஞாபகம் தவறாமல் வந்துவிடுகிறது.

அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அன்று அப்பா நல்ல போதையில் இருந்தார். அம்மா தோட்டத்திற்கு போயிருந்தார்கள். அப்பா ப்ரிட்ஜில் இருந்து இரண்டு முட்டைகளை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் ஆம்லெட் போட்டுத் தரும்படி சொன்னார். எனக்கு அவர் மேல் கடும் கோபம். குடிச்சுட்டு வந்து எவ்ளோ திமிர் இருந்தா என்னை ஆம்லெட் போட்டுத் தர சொல்லுவார்? என்னை என்ன நினைச்சார் அவர் என்று கோபத்தில் அவரை திட்டினேன். அவர் 'சுஜி கண்ணு தயவு செஞ்சி போட்டு தா கண்ணு, அம்மா வேற காட்டுக்கு போய்ட்டா இல்லைனா அவளயாவது கேட்பேன்' என்று கிட்டத்தட்ட என்னிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

சொந்தமாக தண்ணியை கூட எடுத்து குடிக்கமாட்டார் அவர், எனவே அவராக போட்டுச் சாப்பிடவும் வழி இல்லை. சின்ன கிராமத்தில் நினைத்த நேரத்தில் எந்த கடையில் ஆம்லெட் கிடைக்கும்? ஆகையால் வேறு வழியும் இல்லாமல் ஒரு குழந்தையைப் போல் என்னிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். நான் கொஞ்சமும் இறங்கி வராமல் அவரை மீண்டும் மீண்டும் திட்டிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 10 நிமிடமாக என்னிடம் போராடிப் பார்த்துவிட்டு கடைசியில், 'சீ ..நீயெல்லாம் ஒரு பிள்ளையா' என்று திட்டிவிட்டு முட்டையை அப்படியே உடைத்து கீழ மேல எல்லாம் சிந்திக்கொண்டு குடித்துவிட்டு எழுந்து போய் விட்டார்.

என் திருமணத்திற்கு பிறகு அவர் குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவரின் நினைவு வெகுவாக தப்பிப்போன தருணத்தில் பிராந்தி என்று சொல்லி அவரிடம் ஆப்பிள் ஜூசை கொடுத்தபோது அவர் எவ்வளவு ஆசையாக குடித்தார்!! குடிப்பவர்களுக்கு சிகரெட், குட்கா என்று மற்ற கெட்ட பழக்கங்கள் சிலவும் இலவச இணைப்பாக சேர்ந்திருக்கும். ஆனால் அப்பா குடியை தவிர வேறு எதையும் தொடாதவர். குடிப்பவர்களைக் கண்டால் நின்றுகூட பேசாதவர் எப்படி அதில் மீளமுடியாமல் விழுந்தார் என்பது விதி.

குடியை வெல்ல நினைத்து மீண்டும் மீண்டும் பரிதாபமாக தோற்றுப்போன அவரிடம் எனக்கு ஒரு நொடிப்பொழுதும் வெறுப்பு வந்ததே இல்லை. இன்றும் குடித்துவிட்டு தள்ளாடி நடப்பவர்களை பார்த்தால் சொல்லமுடியாத இரக்கமும், பரிதாபமுமே எனக்கு தோன்றுகிறது.

இப்பொழுதெல்லாம், அந்த ஆம்லெட்டை தான் நான் போட்டுக் கொடுத்திருக்கக்கூடாதா? என்ன எனக்கு அப்படி ஒரு பிடிவாதம்? அதனால் என்ன சாதித்தேன் நான்? என்று மனம் ரொம்பவும் வேதனைப் படுகிறது. அவரின் சின்ன அந்த நேர சந்தோசத்தை உடைத்துவிடுவதில் எனக்கு அப்படி என்ன ஒரு குரூர மன திருப்தி? அவர் சொன்னதுபோல நானெல்லாம் ஒரு பிள்ளையா ?

என் அப்பாவைப்போல என்னை நேசித்தவர்கள் இல்லை, அவரைப்போல நல்லவர்கள் இல்லை , என் மனதில் அவரது இடத்தை நிரப்பக்கூடியவர்களும் இல்லை. அவரது
குடியால் நாங்கள் இழந்தது ஏராளம் ஆனாலும் அனைவரையும் நேசிக்கும் இதயமும், எளியவர்களுக்காக இறங்கும் குணமும், எந்த நிலையிலும் நியாயம் தவறாத பண்பும் எல்லா இழப்புகளையும் புறம் தள்ளும். அவரை நாங்கள் இழந்துவிட்டதாக எண்ணவே இல்லை. அவரின் குருதி என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் கொஞ்சம் மதுவின் வாடை இருக்கிறது.


                                          **********************

Thursday, February 13, 2014

அக்காள்

அவள் என் அக்கா. சித்தப்பா மகள் என்றபோதும் அவள் என் அக்கா தான். சித்தப்பா வீடும் எங்கள் வீடும் அடுத்தடுத்த வீடுகள் ஆகையால் ஒன்றாக வளர்ந்தோம் என்று சொல்லலாம். எனக்கு ஒரு அண்ணனும் ,அக்காவுக்கு ஒரு தங்கை,ஒரு தம்பியும் உண்டு. அக்காவை என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். கிட்டத்தட்ட எல்லோருக்கும்.

அவள் ரொம்ப பொறுப்பானவள். திருவிழாவுக்கோ, வேறு விசேசங்களுக்கோ உறவினர் வீட்டுக்கு நாங்கள் செல்கையில் கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நானும்,என் தங்கையும் மாட்டு வண்டியிலோ, ட்ராக்டர் வண்டியிலோ இல்லை புளியமரத்தடியிலோ அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கையில் அவள் மட்டும் தேங்காய் துருவிக்கொண்டோ, குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டோ அலைந்து கொண்டிருப்பாள். உறவினர்களிடம் நலம் விசாரித்துக்கொண்டு,அரட்டை அடித்துக்கொண்டு அவர்களோடு வேலை செய்யும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும். பெரியத்தனமாக நடப்பதாக கூறி அவளை எங்களுடன் நாங்கள் சேர்க்கமாட்டோம்.

அதே போல் ரொம்ப சுத்தக்காரி. தினம் உடுத்தும் உடைகளை அன்றன்றைக்கு அயர்ன் செய்து தான் உடுத்துவாள். துணி துவைக்க ஆள் இருந்தாலும் அவள் துணிகளை அவளே தான் துவைத்துக்கொள்வாள். தரையில் உரசி அழுக்காகி இருக்கும் பாவாடை நுனியை பார்த்து பார்த்து தேய்த்து அலசுவாள்.

அடிக்கடி எங்களை திட்டிக்கொண்டே இருப்பாள். ஆனால் எங்கள் மேல் அக்கறையாக இருப்பாள். என் தங்கை அவளை மதிக்கமாட்டாள்.அக்கா என்று கூப்பிடவும் மாட்டாள். நான் அக்கா மேல் மரியாதை கொண்டிருந்தேன். அவளிடம் கொஞ்சம் பயம் வைத்திருந்தேன். அக்கா திருச்சியில் கல்லூரி முதல் வருடம் படிக்கையில் நான் அதே ஊரில் வேறு ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்தேன். அவள் எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவாள். நல்லா படி, பொறுப்பா இரு, பெரியப்பா உன்னை கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறாங்க என்று முழுக்க முழுக்க அறிவுரைகள் தான் இருக்கும். எங்கள் ஐவரில் அவள் தான் நன்றாக படிப்பவள்.

அடுத்தவருடம்  நான் அக்கா படித்த அதே கல்லூரிக்கு வந்து சேர்ந்ததும் அவள் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் என்னை கொண்டுவந்தாள். என் செலவுக்கான பணத்தை அப்பா அவளிடம் தான் தருவார். தேவைப்படும்போது காரணத்தை சொல்லி அவளிடம் காசு வாங்கிக்கொள்ள வேண்டும். பணத்தை அவளிடம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். 

அடிக்கடி என் ரூமுக்கு வந்து என் பெட்டி, அலமாரி எல்லாவற்றையும் திறந்து பார்த்துவிட்டு ஒரு ரவுண்டு திட்டி முடித்துவிட்டு எல்லாவற்றையும் நீட்டாக அடுக்கி தந்துவிட்டு போவாள். துணி துவைக்க போனால் அங்கும் இருப்பாள். ஏன் இத்தனை துணி சேர்த்திருக்க? அன்றன்றைக்கு துவைக்கலாம்ல என்று ஒரு சுற்று வசை விழும். நான் எதிர்த்தே பேசமாட்டேன். வெளியில் இருந்து ஏதாவது தின்பண்டம் வாங்கினால் மறக்காமல் என்னை அழைத்து தருவாள். 

புடவை, நகைகளில் மிகுந்த விருப்பம் உள்ளவள். திருமணத்திற்கு பிறகு ஒருமுறை அவள் வீட்டிற்கு சென்றபோது ஒரு பீரோ நிறைய தினம் உடுத்தும் புடவைகள்,அதற்கு மேட்ச்சான ரவிக்கை,உள் பாவாடை என வரிசையாக ஒழுங்கு குலையாமல் அடுக்கி இருந்தாள். மற்றொரு பீரோ, வெளியில் போனால் உடுத்தும் புடவைக்காம். தோடுகள் கிட்டத்தட்ட ஒரு 20,25 செட் இருக்கும். பெரிய பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். மாமாவை ஆண்டி ஆக்கிவிடாதே என்று நான்கூட கிண்டல் பண்ணினேன். இப்பவும் எங்காவது என்னை சந்திக்கையில் முதலில் புடவையை தான் விசாரிப்பாள் எங்க வாங்கின, என்ன புடவை இது ?என்று .

நான் ஏன் இதை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ?! 

ஆறு மாதம் முன்பு என் தோழி ஒருத்தியின் அண்ணி விபத்தில் இறந்துபோனார். அவருக்கு 6 வது படிக்கும் பையனும் உண்டு. அண்ணன் இனி எப்படி மீதி வாழ்க்கையை வாழ்வாரோ என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தார். இதோ அவருக்கு நாளை மறு கல்யாணம். பையனை பார்த்துக்கொள்ள, அவரின் சுமைகளை தாங்கிக்கொள்ள என்று 6 மாதத்திற்குள் அலைந்து தேடி ஒரு பெண்ணை கண்டுவிட்டார்கள். ஏழை பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் எந்த ஆணுக்கும் துணை இன்றி வாழ அவசியம் நேர்வதில்லை. இந்த திருமணத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.ஏன் எனக்கும் கூட மிக்க மகிழ்ச்சியே. 

நான் ஏழு வருடம் பின்னோக்கி பார்க்கிறேன். என் பொறுப்பான, அன்பான, எல்லோருக்கும் பிடித்தமான என் அக்காவின் கணவர் ஒரு விபத்தில் இறந்தபோது அக்கா தன் இரண்டாவது பிள்ளையை இடுப்பில் சுமந்திருந்தாள். பெரியது மிட்டாய் தின்றுகொண்டு இழவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால் யாருமே அவளின் மறு மணத்தை பற்றி எண்ணிக்கூட பார்க்கவில்லை. மாறாக, தாலி ஒன்னு தான் கழட்டி இருக்கா, தோடு,வளையல் எல்லாம் போட்டுக்கிட்டு புருஷன் இல்லாதவ  மாதிரியே தெரியல என்று விமர்சிக்க தான் ஆள் இருந்தது. 

Bsc யோடு கல்யாணம் செய்துகொண்டவள் இந்த இழப்புக்கு பின் Msc B.Ed முடித்தாள். ரெஜிஸ்டர் பண்ணிருக்கேன் .விடோ கோட்டாவுல டீச்சர் வேலை கிடைக்கும் என்று அவள் சொன்ன போது சாட்டையை சொடுக்கியது போல மனம் துடித்தது. அவளுக்கு சம்பாதித்து தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சொந்தமாக பஸ், வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் என்று ஏராளம் உண்டு. ஆனாலும் ஏன் அவள் படித்து ,வேலைக்கு பதிந்துவிட்டு காத்திருக்கிறாள் ? 

உடலளவிலும்,மனதளவிலும் மிகுந்த திடம் கொண்டவர்கள் என்று எண்ணப்படும் ஆண்களால் துணை இல்லாமல் 6 மாதத்தை கூட கடக்க முடியாது எனும்போது பெண்ணால் மட்டும் அது முடியும் என்று நம்பும் இந்த சமூகம் என்று மாறும் ? பற்றுகோலாக பற்றிக்கொள்ள ஆண் பெண்ணையே நாடுகையில்,தனித்து விடப்பட்ட  பெண்ணுக்கு தன் இரு கால்களே போதுமானதாக இருக்கிறது . 

                               ********

Sunday, December 29, 2013

இனிமையின் திரிபு







பொங்கல் திருநாள் நெருங்கி வருகிறது. கரும்புகள் இப்போதே வரத்தொடங்கிவிட்டன. என் சிறு வயதிலும் இப்படித் தான் பொங்கலுக்கு 20, 25 நாள் இருக்கவே தோட்டத்தில் கரும்புகள் விளைந்து தயாராகி விடும். தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் நான் ,என் அக்கா,தங்கை, எதிர் வீட்டு தோழி என்று கூட்டமாகத்  தோட்டத்திற்கு கிளம்பிவிடுவோம். கரும்புக் காட்டில் வரப்பு ஓரமாக இருக்கும் நல்ல கரும்பாகப் பார்த்து அப்பா வெட்டித்தருவார். சொனை ஒட்டிக்கும் என்று வயலுக்குள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள்.சோவை எல்லாம் கழித்து விட்டு கரும்பை துண்டுப் பண்ணித் தருவார்கள். ஒரு கை நீளத்துக்கு பெரிய,பெரிய துண்டுகளாகப் போட்டு தந்தால் தான் மனசு ஆறும். வரிசையாக வரப்பில் அமர்ந்துகொண்டு வாய் வலிக்க தின்று தீர்ப்போம்.


பொங்கல் நாட்களில் கரும்புகளைக் கொண்டுவந்து மாடியில் போட்டு விடுவார்கள். மேலே போனால் முறம் நிறைய சக்கையை நிரப்பிவிட்டு தான் கீழே வருவோம். திருநாள் அன்று பொங்கல் திங்கமுடியாமல் நிச்சயம் வாய் புண்ணாகி இருக்கும். மனம் கொள்ளா சந்தோசத்துடன் திரிந்த நாட்கள் அவை.


இன்றும் அப்படித் தான். கணவரும், பிள்ளைகளும் கிண்டல் செய்தாலும் இரவு 10 மணிக்குக் கூட அமர்ந்து கரும்பு தின்று கொண்டிருப்பேன். ஆனால் பிள்ளைகளுக்கு கரும்பு பிடித்திருந்தாலும் அதைச் சாப்பிடுவதில் உள்ள சிரமத்தால் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். தோல் எல்லாம் செதுக்கி, சின்ன துண்டங்களாக வெட்டித் தந்தால் தான் சாப்பிடுகிறார்கள். என்னைப்  பொறுத்த வரை அப்படி துண்டுகள் ஆக்கப்பட்ட கரும்புகள் கரும்புகளே அல்ல. தாய் பாலுக்கும் , பால் பவுடருக்கும் உள்ள மிக பெரிய வித்யாசம்  போலத்தான் இதுவும். ஆனாலும் வேறு வழி இல்லை.


என்னதான் தோட்டங்காடுகளுக்கு பிள்ளைகளை அடிக்கடி அழைத்துச் சென்றுகொண்டு இருந்தாலும் கிராமத்திலேயே பிறந்து,வளர்ந்த பிள்ளைகளின் அனுபவ அறிவை, சந்தோசத்தை, தேடலை, ஆர்வத்தை,துணிச்சலை நகர் வாழும் இவர்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் தடுமாறித் தோற்க வேண்டி வருகிறது.


முன்பெல்லாம், எவ்வளவு படித்து ,பெரிய வேலையில் இருந்து, கை நிறைய சம்பாதித்தாலும்  ஒரு ஏக்கர் நிலமாவது இல்லை என்றால் பெண் கொடுக்க மாட்டார்கள். சாப்பாட்டுக்கு அரிசி, கடையில் வாங்குவது என்பது அவலம் என்ற எண்ணம் இருந்தது. தோட்டத்தில் நாலு வாழைமரம் கூட இல்லை, என்னத்த பண்ணையம் பண்றாங்களோ என்று மாப்பிள்ளையை தட்டிக்கழித்த சம்பவம் கூட நிகழ்ந்தது.


இன்று முக்கால் சதவிகிதம் பேர் விவசாயத்தை கைவிட்டுவிட்டு  வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான், வயல்களை விட்டுச்செல்ல மனம் இன்றி முடிந்தவரை பாடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். விடுமுறைகளுக்கு வந்துபோகும் பிள்ளைகள், பெரியவர்களின் காலத்திற்குப்  பிறகு நிலத்தை என்ன செய்வார்கள்?? பண்ணையாள் வைத்துப் பார்த்து, பின் குத்தகைக்கு விட்டு, இறுதியில் விற்றுவிடும் மனநிலைக்கே வந்து சேர்வார்கள். கரும்புகளைத் துண்டு பண்ணிச் சாப்பிடும் என் பிள்ளைகளின் குழந்தைகள், வரும் காலத்தில் கரும்பை எப்படி உண்பார்கள் ?? கரும்புச்சாறு குடிக்கும் அவர்கள் கரும்பின் நிறம்,அதன் மேல் படர்ந்திருக்கும் வெண்ணிறம் ,கணுக்களில் இருக்கும் கடினத்தன்மை, அடிக்கரும்பிற்க்கும் நுனிக்கரும்பிற்க்கும் உள்ள சுவை வேறுபாடு இவைகளை எல்லாம் எங்கனம் அறிவார்கள் ?!


மொழி உட்பட நம் வாழ்வின் ஊடாகப்  பின்னிக்கிடந்த பல மிக முக்கியமான விஷயங்கள் காலத்தின் முரட்டுப்பாய்ச்சலில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, உருமாறி ,காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. நம் கண் முன்னே நடக்கும் இம்மாற்றங்களை வலியோடு ஏற்றுக்கொள்ள, மனம் பழகிக் கொள்கிறது. மாற்றங்களை தொடங்கியவர்களே நாம் தானே!!. தோட்டத்தை விட்டுவிட்டு ,பெற்றோர்களை விட்டுவிட்டு, மூட்டை முடிச்சுகளோடு நகரத்தில் வந்து இறங்கிய நாளில் தான் அது தொடங்கியது .

                                                 ***************

Thursday, October 24, 2013

வாழ்ந்து கெட்ட வீடு





மின் விசிறிக்கு  நேர் கீழே 
அடம்பிடித்துப் பெற்ற என் படுக்கை 
இனி அங்கில்லை 

இரவு விளக்கின் முனகல் ஒளியில் 
அம்மாவுடன் அளவளாவ வரும் 
சிவசங்கரியும், பாலகுமாரனும் 
இனி ஏமாந்து திரும்புவர் 

குருதியெங்கும் சர்க்கரை ஓடும் அப்பா 
ஒளித்து தின்ற ஜிலேபி ரசம் 
அந்த ஜன்னலோரம் இனி சாட்சியாகாது

ஒருஎழுத்தாளரை உருவாக்கிவிட 
எழுதுகோலோடு போராடும் 
அண்ணனின்  அடையாள மரமேஜை 
பாதிவிலைக்கு வீடு மாறியாயிற்று 

தவறாமல் குளித்து தயாராகும் 
வாசல் திண்ணை அழுக்கேறும் 
அரட்டைக் கச்சேரி அற்று 

ஜல்லிக்கட்டு நாளில் 
திமிரித்திணறும் மொட்டை மாடி இனி 
வடகம் பிழிந்த வடுக்கள் தோறும் 
சொல்லி அழும் 

வர்ணங்கள்  உதிர்த்து 
தன் ரகசியங்கள் காட்டி நிற்கும் 
அவ்வீட்டின் கூரை மேல்
இன்னும்  காத்திருக்கும் காகங்கள் 

***
செ.சுஜாதா.

நன்றி: ஆனந்தவிகடன் 







Saturday, September 28, 2013

மஞ்சள் ப்ஃராக் கடவுளும் நானும்






கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையைத் தளர்த்திக்கொண்டிருந்தது
அந்த நீண்ட தரிசன வரிசை
கட்டப்பட்ட கால்களைக் கைவிட்டு
பிரகாரத்தைச் சுற்றத்தொடங்கின கண்கள்
களவுபோகும் கழுத்துச்சங்கிலிக்கு
கடவுள் பொறுப்பல்ல என்று
அறிவித்தபடி இருந்தது ஒலிப்பெருக்கி
வானில்
வால்நட்சத்திரம் தோன்றிய தருணம் ஒன்றில்
என் முந்தானையைப் பிடித்து இழுத்தார் கடவுள்
பால்ஊறும் கன்னக்குழியில்
என் பார்வையைப் பறித்து அமிழ்த்திவிட்டு
அந்த தோள்களுக்குப் பின்னே மறைந்துகொண்டார்
அவரது உள்ளங்கை தழுவி
இதழ் பதித்த வேளையில்
என் ஊழ் தீர்ந்ததாய் உறுதி சொன்னார்
பின் கடவுளும் நானும் சேர்ந்து சென்று
கற்சிலை ஒன்றைக் கண்டு வந்தோம்

***
செ.சுஜாதா
நன்றி: சொல்வனம்.

Tuesday, September 3, 2013

கண் கூசும் வெயில்




வர்ணஜாலங்கள் காட்டிய 
நீர்க்குமிழிகள் 
வலுவற்று உடைந்து சிதறுகின்றன 

வீடற்ற வெற்று கதவுக்கு
இத்தனை வேலைப்பாடுகள் ஏன்?

நம்பிக்கை உடைசல்கள் மண்டிய 
அவ்இடத்தைவிட்டு விலகி நடக்கிறேன் 

அழுந்த சாயம்பூசிய உதடுகளும் 
வீச்சம் ஒழுகும்
குறிகளும் 
மலக்காடென
வழியெங்கும் சிதறிக்கிடக்கின்றன 

மிதித்துக்கொள்ளாமல் கடக்க 
ப்ரயத்தனங்களை
கால் கட்டைவிரல் நுனியில்
நிறுத்தி இருக்கிறேன் 

கூக்குரலிட்டு அழும் 
மனசாட்சி எனும் மண்ணாங்கட்டியை 
உருட்டி 
குட்டிச்சுவரில் அடித்துவிட்டுத் தொடர்கிறேன் 

மேலும்  
படகுக்குள் துள்ளும் மீனாய் 
சுவாசம் கேட்டுத் தவிக்கும்  
இருப்பு 
எந்தக் கண்ணாடியிலும் பிம்பமாக இல்லை.

பச்சை வாசனை வீசும் 
விரிந்த மரத்தின் வேர்களில் 
என் தலை சாயும் காட்சி
கால்கள் தள்ளாட 
தளர்ந்து சரியும் 
இந்நினைவில் கடைசியாய் நிற்கிறது 

****
செ .சுஜாதா .
நன்றி: நவீனவிருட்சம் .






Friday, August 30, 2013

அத்தனை ஆதூரமாய் என்னை அணைக்கும் இரவு 





என் முகமூடியைக் கழற்றி எறிகிறாய்
நான் நிர்வாணம் தரித்துக்கொள்கிறேன்
என் கூந்தல் கட்டவிழ்க்கிறாய் 
இனி மின்மினிகள் நுழைந்தாடட்டுமென  
அத்தோடு தென்றலையும் கொணர்கிறாய் 
பெரும் அமைதியிழக்கிறேன்

மேலும் தனித்த வனம் தருகிறாய் 
பசியைப் பறித்துக்கொள்கிறாய்

நான்
ஆப்பிள் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டுகிறேன்
இரவே,  
புரவி ஏறி வருகிறான் நிலாக்காதலன்
இனி 
என் பாடு அவன் பாடல்!

*****
செ.சுஜாதா,
நன்றி: உயிரோசை.காம் .

Monday, August 26, 2013

அங்கிருந்த காட்சிப்பிழை




வலிய உன் கரங்கள் 
மேகத்தை உருட்டி இறுக்குகின்றன 

மற்றுமொரு
இரவை
அடிவயிற்றில் எத்தி முடுக்குகிறாய் 

அழுந்தும் உன் ஆள்காட்டி விரலில்
கசியத்தொடங்குகின்றன
நட்சத்திரங்கள் 

கங்காரு நடையின் தோற்றமுடைய
உனது 
இப்பயணத்தில்
சிதைகின்றன
பறவையின் வழித்தடங்கள் 

மருண்டு தேயும் பிறைநிலவை 
நீ நிமிர்ந்து காண எத்தனிக்காதே 

எறும்புகள் ஊரும்
விறைத்த  காட்டு மானின் 
விழிகளை அங்கே நீ காணக்கூடும்

***
செ.சுஜாதா,
நன்றி: நவீனவிருட்சம் .

Friday, August 23, 2013

மழைக்காதலனின் தேசம் அடைந்தப் பாலைவனக்காரி





அவள் இப்பொழுதெல்லாம் அவனை அடிக்கடிப் பார்க்கிறாள். அவன் வரும்போதெல்லாம் அவளுக்குப் பரவசம் தொற்றிக்கொள்ளும். ஜன்னல் திரைச்சீலை விலக்கி அவனை இமை கொட்டாமல் ரசித்துக்கொண்டிருப்பாள். சிலநேரம் துணிந்து வாசல் படிக்கட்டுவரை வந்துப் பார்ப்பாள். அவனின் முதல் தீண்டலின் சிலிர்ப்பை,நெஞ்சுக்குழி வரை நீளும் அவன் அத்துமீறலை அவள் மிகவும் விரும்பினாள். அந்த நாளுக்காக கற்பனையில் உருகி சிரித்துக்கொள்வாள்.

அவளின் மனதை அவன் முழுவதாய் அறிந்திருந்தான். அவள் கண்களின் வரிகளில் அவனுக்கான சேதி இருந்தது. ஒரு சில முறை அவளை வழியில் பார்த்துப் பேச முற்பட்டான். ஆனால் அவள்தான் பதறிக்கொண்டு வீட்டிற்குள் ஓடி விட்டாள். அவன் பொறுமை இழந்திருந்தான். எத்தனைக் காலம்தான் இப்படி எட்டி நின்று காதல் கொள்வது என்று??

அன்று காலையிலேயே அவன் ஒரு முடிவெடுத்திருந்தான். அவள் வெளியில் செல்லும் நேரம் எப்போது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இன்று மாலை அவளையும் அவனையும் இணைக்கும் என்று ஒருமுறை சொல்லிக்கொண்டான்,  சின்னதாய் புன்னகைத்துக்கொண்டான்.

அவள் வழக்கம்போல அன்றும் மாலை வெளியே வந்தாள். அவன் வருகிறானா என்று ஒரு முறை திசை எங்கும் பார்வையைச் சுழற்றினாள். அவன் இல்லை, கொஞ்சம் ஆசுவாசம் கொண்டவளாக நடக்கத்தொடங்கினாள். அவனற்ற வீதியில் நடப்பது அவளுக்குப் பாரமாக இருந்தது. வெறுமையை முதுகில் சுமந்துகொண்டு நடப்பது மிக கொடுமை. அவன் வந்திருக்கக்கூடாதா ?  இல்லை இல்லை அவன் வராமல் இருப்பதே நல்லது. மனம் இங்கும் அங்கும் ஊஞ்சல் ஆடியது!!

இப்போது அவன் தன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அவளைப் பின்தொடரத் தொடங்கினான். அவள் உள்ளுணர்வு விழித்துக்கொண்டது. அவன் வருகிறான்.. திரும்பிப்பார்க்காமலே அவன் வருகையை அவள் முதுகில் உணர்ந்தாள். உடலில் குளுமை பரவி, மயிர்கால்கள் சிலிர்த்துக்கொண்டன. 

அவளைப் பதற்றம் தொற்றிக்கொண்டது. நடையின் வேகத்தைக் கூட்டினாள் . அவனும் வேக வேகமாக நடக்கத்தொடங்கினான். ரோட்டில் ஓடினால் அசிங்கமாக இருக்கும், ஆனாலும் வேறு வழியில்லை. அவள் ஓட்டம் கலந்த நடைக்கு மாறியிருந்தாள். ம்ம்..வேகம் கூட்டக் கூட்ட அவனும் வெறிகொண்டான். இன்று அவளை அடைந்தே தீருவது என்ற விளிம்பிற்கு அவன் வந்திருந்தான்.

அவள் பதறி ஓடிக்கொண்டிருந்தாள். அவன் கோபத்தோடு துரத்திக்கொண்டிருந்தான். அவனின் மூச்சுக்காற்று அவள் புறங்கழுத்தை சில்லென்று தொட்டது. அவள் கால்கள் தளர்ந்தன.. இதயம் குழையத்தொடங்கவும் ஓட்டத்தின் தாளம் மாறிஇருந்தது . ஓடுவதைப் போல் பாசாங்குச் செய்தபடி அவள் நடக்கத்தொடங்கி இருந்தாள்.

அவள் முதுகுப்புறம் மொத்தமும் அவன் பரவத்தொடங்கியிருந்தான்.
அவன் முத்தத்தின் ஈரத்தில் அவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக்கொள்ளத் தொடங்கினாள் .இவ்வாறாக அந்த மழைக்காதலனின் தேசம் அடைந்தாள் அந்தப் பாலைவனக்காரி.

செ.சுஜாதா.

Tuesday, August 20, 2013

கண்ணாடி மீன்கள்




கொஞ்சம் இமைகளை இலகுவாக்கு 

பெண்ணின் முதுகுத்தண்டாய் சரிந்து இறங்கும்
இந்த ஒற்றையடிப்பாதை
அழகிய தாமரைத் தடாகத்திற்கு
உன்னை அழைத்துச்செல்லும்

கொழுத்த செந்நாரைகள்
நீந்தப்பழகும் கண்ணாடி மீன்களை
தின்று திளைத்தபடி இருக்கின்றன

கண்டுகளிக்கலாம்
முடிந்தால்
உன் தூண்டிலையும் உடன் எடுத்து வா

ஆளற்ற வீட்டின்முன்
எத்தனைநேரம் தான் வெறித்திருப்பாய்

****
செ .சுஜாதா.
நன்றி: நவீன விருட்சம்.