Thursday, May 17, 2018




நம் சந்திப்புகள்  முத்தத்தில் தொடங்கி முத்தத்தில் முடிகின்றன. முதல் முத்தமும் கடைசி முத்தமும் எப்போதும் ஒன்று போல் இருப்பதில்லை.
பிரிவு நிமித்தம் இடப்படும் முத்தம் வலையில் சிக்கிய மீனைப்போல துள்ளித்தவிக்கின்றது.
உன்னை உடன் எடுத்துச்சென்றுவிடும் ஆவலாதியுடன் அல்லது உனக்குள் ஒளிந்துகொண்டுவிடும் படபடப்புடன் இதழ்களுக்குள் பாய்ந்து இறங்குகின்றேன்.தின்று தின்று தீராப்பசியுடன் திரும்ப நேர்கையில்
ஒரு ஒட்டகத்தைப்போல உன் இதழ்நீரை என் பயணத்திற்கென்று சேர்த்துக்கொள்கிறேன்.உதடு,மூக்கு, கன்னம்,காது,கழுத்து,தோள்பட்டை,உள்ளங்கை என்று நகர்ந்து விரல் நுனியில் நழுவி விழும் என் முத்தம் இறுதியில்  கண்களைப்பற்றிக்கொண்டு கதறத்தொடங்குகிறது.

Tuesday, May 9, 2017

அத்தர் மணக்கும் பாலை

வெகு தொலைவு பயணித்து வருகின்றன
உதடுகள்

வறண்ட பாலையில்
முட்களினூடே நெழிதடம்
பதிக்கிறது சர்ப்பம்

செண்பகமரக் குரங்குகள்
மொட்டுக்களை தின்றுத் தாவுகின்றன

லாவகமாய் தோல்உரிக்கிறான்
முயல்கறிக்கு பழகியவன்

புழுதி படிந்த உதடுகள்
தணலில் புரண்டு
சிவக்கின்றன

பாதி வெந்த உதடுகளை
ஒத்தி எடுக்க
காத்திருக்கின்றன
அத்தர்  மணக்கும்
முத்தங்கள்

நினைவுகளை அழித்தல்


நினைவுகளின் தேன்கூட்டை  அழிக்க முடிவெடுத்தபின்
முதலில்
இதயத்தைச் சுற்றி
இறுக்கி மூடுங்கள்

ஓயாமல் ரீங்கரிக்கும்
சின்னஞ்சிறு நினைவுகளை
தீயிட்டுப் பொசுக்குகையில்
நொடிப் பொழுதும்
தயங்கித் தடுமாறாதீர்கள் 

தீயைத் தாண்டிவந்து நினைவுகள் கொட்டுகையில்
பற்கடித்து வலி பொருத்து
முன்னேறுங்கள்

ராணித் தேனீயை கொல்லுதல் என்பது
ஒரு வாழ்வின் குரல்வளையை அறுத்தலாகும்

இப்போது
கைநிறைய நெருப்பை
அள்ளி எடுங்கள்
மிக தீர்க்கமாக அதன்
தலைமேல் கொட்டுங்கள்

புகைப்படத்தை அழித்தல் போல் அல்ல
நினைவுகளை அழித்தல்

அனைத்தையும் எரித்து அழித்துத் திரும்புகையில்
புறங்கையில்
உடன் ஒட்டிவரும் மகரந்தம்
கவனித்தீர்களா?

இப்போது
தீயில்
ஒருமுறை
முங்கிக் கரையேறுங்கள்

பின் இதயத்தை இறுக்கி மூடுங்கள்

***

Sunday, October 2, 2016

அலமாரியில்
அத்தனைப் புத்தகங்கள் மீதும் வருடிக்கடக்கின்றன 
விரல்கள்
மின்விசிறியின் 
பறக்கும் இறக்கைகளை பிடித்துவிட முயன்றுகொண்டிருக்கின்றன கண்கள். 
இக்கோடையின் நிசப்தம்
முன் நெற்றியில் துளிர்த்து வழிகிறது
கால் பெருவிரலை
ஓயாமல் முத்திக்கொண்டிருக்கிறது செம்மீன்
குட்டிச்சுழல் ஒன்று
உருவாகி உள்ளிழுக்கிறது
இப்பிரபஞ்சம்
முழுவதையும்

கடலைக் களவாடுபவள்


கடலாடி மகிழும் மகள்
நம்ப மறுக்கிறாள்
கடலை 
உடன் எடுத்துச்செல்லுதல்
இயலாதென்பதை
தூக்கணாங்குருவிக் கூட்டிற்குள்
குடிபுக முடியாதென்பதையும்
ஆமை ஓட்டிற்குள் மழைக்கு
ஒதுங்கமுடியாதென்பதயும்
பதறப் பதற
கிளிஞ்சல்களைப்
பொறுக்கத் தொடங்குபவள்
அரற்றிக்கொண்டு வருகிறாள்
வீடுவரை
உணவை மறுதலித்து
விழிகளை நிறைத்தபடி
உறங்கிப்போகுமவள்
விரலிடுக்கில் உறுத்தும்
மணலும்
உள்ளங்கைக்குள் புதையும்
கிளிஞ்சல்களும்
கடலுக்கு
வலைவீசிக்கொண்டிருக்கும்
நடுநிசிப் பொழுதில்
நடுங்கும் நட்சத்திரங்கள்
இமை தாழ்த்தி
உறைகின்றன
****
நன்றி: மலைகள். காம்
மிகுந்த
சந்தோசப்பதற்றத்துடன்
தேர்வு அறைக்குள் நுழைகிறீர்கள்
அச்சிடப்பட்ட விடைத்தாள்
உங்கள் கைகளில் தரப்படுகிறது
உங்கள் மண்டைக்குள்
வேறு விடைகள் இருக்கின்றனவா?!
நன்றாக அதை சுருட்டிக் கசக்குங்கள்
கடைமூளையில்
ஒரு குப்பைத்தொட்டித் தெரிகிறதா?
எழுதுகோலும், அழிப்பானும்
உடனெடுத்து வந்தீரா?!
இத்தனை விளையாட்டுத்தனத்திற்கு
அனுமதி இல்லை
மேலும்
குப்பைத் தொட்டி நிறைவதில்
ஆட்சேபனை இல்லை
மறைத்து வைத்திருக்கும்
தூரிகையை
வெளியில் எடுங்கள்
கடைசிமணி அடிக்கும் வரை
முதுகு சொறியுங்கள்
அல்லது
மணிக்கட்டு நரம்பை
அறுக்கத்தொடங்குங்கள்
மிக மெதுவாய்.

மனம் ஒரு மிருகம்


வால் குழைத்து மண்டியிடும்
தோள் தாவி முகம் நக்கும்
மென் உதிரம் கசிய நகம் பதிக்கும்
தருணம் அறியாத் தருணம் ஒன்றில்
குரல்வளைக் கவ்வும்
மனமொரு வளர்ப்பு மிருகம்
சீழ் தழும்பிக் குடைந்து கொண்டிருந்த
நெடுநாள் ரணமொன்று
உடைந்தது
அல்லது
உடைத்தேன்
வெள்ளை ஆடை முழுதும் பரவும்
செந்நிறக் குருதி
பிரபஞ்சத்தின் கதவுகளைத்
திறந்துவிடுகிறது
அத்தனை ஆசுவாசமாய்
அத்தனை சுதந்திரமாய்
வகுப்பில் நெருங்கிய தோழன், தோழிகள் என்று சில ஜோடிகள் உண்டு. நிதீஷ் + மோனிஷ் , சோனாக்ஷி + ப்ரியான்ஷு , குருசரண் + ச்சார்வி. இவர்களை எப்படி பிரித்து அமரவைத்தாலும் அடுத்த அரைமணி நேரத்தில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். இதில் குருசரண், ச்சார்வி மட்டும் வெவ்வேறு பாலினம் என்பதால் சுவாரஸ்யம் கூடுதல்.

பள்ளிக்கு வந்த புதிதில் குரு தான் ச்சார்வி மேல் ரொம்ப பிரியமாக இருப்பான். அவள் ரொம்ப பந்தா பண்ணுபவளாக, அவனை பெரிதாக கவனத்தில் கொள்ளாதவளாக இருப்பாள். ஒரு முறை குரு பென்சில் முனை உடைந்துவிட்டதென்று ஷார்ப் பண்ண எழுந்தான். இவள் உடனே என் பென்சிலையும் ஷார்ப் பண்ணிட்டு வா என்று அமர்ந்தபடி கட்டளை இட்டாள். இவன் உடனே, இரு என்னோட பென்சில ஷார்ப் பண்ணிட்டு வந்து உன்னோடத ஷார்ப் பண்றேன் அப்படின்னு சொன்னதும் இவ முகத்த பாக்கணும், ம்ஹ்ம் முதல்ல என் பென்சில ஷார்ப் பண்ணிக்கொடு, இல்லன போ பேசமாட்டேன் என்று சிணுங்கிக்கொண்டு சொல்கிறாள். இருவரும் முதல் பெஞ்ச் ஆகையால் இந்த உரையாடல் , முக பாவனை எல்லாம் துல்லியமாக கண்டு நான் ரசித்துக்கொண்டிருந்தேன். அவன் சரி கொடு என்று அவள் பென்சிலை வாங்கி ஷார்ப் பண்ணிக்கொடுத்ததும் வேக வேகமாக அவனுக்கு முன்னால் எழுதி முடித்து நான் தான் first என்று நோட்டுடன் என்னிடம் ஓடி வந்தாள். இதுவே குரு முதலில் எழுதி முடித்தால் அவளுக்காக காத்திருந்து ரெண்டுபேரும் சேர்ந்து தான் வருவார்கள். நான் கூட அவனிடம் சொல்வேன், அவ உனக்காக வெயிட் பண்றாளா ? இல்லதானே ,அப்புறம் நீ மட்டும் ஏண்டா வெயிட் பண்ற என்று. அதற்கு அவனிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வரும். மேம், சார்வி சாப்பிடாம பாக்ஸ் ஐ மூடிட்டா என்று ஒரு முறை தீரஜ் என்னிடம் சொன்னபோது, இந்த குரு அவனை முறைத்துப் பார்த்து, உன்கூட காய் என்று செய்கை செய்தான். அவளை அப்படி பாதுகாப்பாக பார்த்துக்கொள்வான். ஆனா அவ பெருசா அலட்டிக்க மாட்டா.

இதெல்லாம் வருடத்தின் ஆரம்ப மாதங்களில் தான். தற்போது ஒரு நாள் குருவையும் சார்வியையும் வேறு வேறு இடத்தில் உட்கார வைத்திருந்தேன். பிள்ளைகள் எல்லாம் பழங்களின் படத்திற்கு கலர் அடித்து ஒவ்வொருவராக பேப்பரை என் மேசை மேல் வந்து வைத்துக்கொண்டிருந்தார்கள். குருவுக்கு கலர் அடிப்பதே பிடிக்காத வேலை.எப்பொழுதும் மெதுவாகத்தான் செய்வான், பலமுறை பாதியிலேயே நேரமில்லாமல் பேப்பரை வாங்கிவிடுவேன். அன்றும் அப்படி தான் முடிக்காத வெகு சிலரோடு அவனும் இருக்க, இந்த சார்வியும் குனிந்து கலர் அடித்தபடியே இருக்கவும் , இவளுமா இன்னும் முடிக்கவில்லை? என்று ஆச்சர்யத்துடன் அருகில் சென்று பார்க்கிறேன், கலர் அடித்து முடித்துவிட்டு சும்மாவாச்சும் கலர் அடிப்பது போல பென்சிலை வைத்துக்கொண்டு பாவனை செய்துகொண்டிருக்கிறாள்.

இப்பொழுதெல்லாம் அவன் கோவப்படுகிறான், அவளைப் பற்றி என்னிடம் புகார் சொல்கிறான், ஆனால் அவள் நேர் மாறாக மாறிவிட்டாள். எனினும் இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். இன்று குரு, வாயில் ரப்பரை போட்டு சப்பிக்கொண்டிருந்தான். நான் கோவமாக அவனை அருகில் அழைத்து, எப்ப பாரு எதையாவது வாய்ல கடுச்சிகிட்டே இருக்க, இரு வாய்க்கு ஸ்டேப்லர் போட்டு மூடுறேன்னு சொல்லி, இரண்டு உதட்டையும் பிடித்து இனி இப்படி செய்வியா? செய்வியா ? என்று கேட்டபடி ஸ்டேப்ளரை உதட்டருகில் கொண்டு சென்றேன். அதற்குள் பிள்ளைகள் சிலரும் கூடி விட்டனர். குரு பயந்தபடி செய்யமாட்டேன் ,செய்யமாட்டேன் என்கிறான். பார்க்கிறேன், இந்த சார்வியும், இனி அப்படி செய்யமாட்டான் ,செய்யமாட்டான் என்று அவளும் என் கை அருகில் நின்று தவித்தபடி கெஞ்சிக்கொண்டிருக்கிறாள். அவள் கண்ணெல்லாம் கலங்கி விட்டது. அந்த காட்சியை கண்ட நொடி என் மனம் அடைந்த உணர்வை எழுத்தில் சொல்லவே முடியாது. அவன் வாய்க்கு ஸ்டேப்ளர் போட்டா உனக்கு வலிக்குமா என்கிறேன் ,சார்வி ஆமாம் என்று கலங்கிய கண்ணும், சிரித்த முகமுமாய் சொல்கிறாள். அப்படியே அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, பின், எனக்கு முத்தம் ,எனக்கு முத்தம் என்று ஓடி வந்த எல்லா பிள்ளைகளுக்கும் முத்தம் தந்து.... வாழ்க்கை மிக அழகானது.

ஒரு பெண் நேசிக்கத்தொடங்கிவிட்டால் அதன் எல்லை அளவிட முடியாதது. பேரலையென அடித்துச் சுருட்டி தன்னுள் புதைத்துக்கொள்ளும் மூர்க்கமும் அதுவே, பொத்தி அணைத்து அடைகாக்கும் கதகதப்பும் அதுவே. மேற்சொன்ன நிகழ்வுகளை குரு, சார்வியின் குழந்தை மனம் மறந்து போகும். ஆனால் எனக்கு, கடவுள் தோன்றி மறைந்த கணமென இக்காட்சி நினைவில் ஒளி கூட்டும்.

*****